வெள்ளி, ஜூன் 26, 2015

திருநீலகண்ட நாயனார் வரலாறு 





         ஆடல்வல்லான் நின்றாடும் பெருமை மிக்க சிதம்பரத்திலே குயவர் குலத்திலே திரு அவதாரம் செய்தவர் திருநீலகண்ட நாயனார் . தம் குலத் தொழிலான மண்பாண்டங்கள் செய்து விற்று வாழ்க்கை நடத்தினார் . சிவ பக்தியில் சிறந்து விளங்கினார் சிவனடியார்களுக்கு திருவோடுகள் வழங்குவதை தம் தொண்டாக செய்து வந்தார் . ஆலகால விஷத்தை அருந்தி அவ்விஷத்தை தமது கழுத்திலே நிறுத்தி உலகத்தை காத்த காரணத்தால் சிவபெருமானது  கழுத்து நீல நிறமானது அதைக் குறிக்கும் வண்ணம் அடியார் திருநீலகண்டம் என்று சுவாமியை அழைப்பார் . கண்டம் என்றால் கழுத்து என்று பொருள் படும் . அடியார் நம்பெருமானை திருநீலகண்டம் என்று அழைப்பதை போன்று ஊர் மக்கள் நாயனாரை திருநீலகண்டர் என்று அழைத்தனர் . பக்தி நெறியில் வழுவாது தம் தொண்டையும் சரிவர செய்து இனிய இல்லறம் நடத்தி வந்தார் . 

                     அவ்வூரில் வசித்த நடன மங்கையிடம் அவருக்கு பழக்கம் ஏற்பட்டது , இது நாயனாரின் மனைவியாருக்கு பிடிக்கவில்லை ஒரு நாள் மனைவியாரைக் கூட எண்ணி அவரைத் தீண்டப் போனார் . அம்மையார் திருநீலகண்டத்தின் மேல் ஆணையாக எம்மைத் தீண்டாதீர் என்றார் . திருநீகண்டத்தின் மேல் தாம் கொண்ட பக்திக்கு பங்கம் நேரக்கூடாது என்பதினால் மனையாளை தீண்டாது நீங்கினார் . மனைவி எம்மை என்று பன்மையாக கூறியதால் இவரை மாத்திரம் அல்ல பிறிதொரு மாதரையும் மனதினால் கூட தீண்டேன் என்று அவரும் திருநீலகண்டத்தின்மேல் ஆணையிட்டு கூறினார் . அவர்கள் இருவரும் ஒரே வீட்டில் இருந்து கொண்டு தாம் கொண்ட விரதம் பிறர் அறியா வண்ணம் வாழ்ந்து வந்தனர் .



                               வருடங்கள் பல கடந்தது இருவரும் வயோதிகப் பருவம் அடைந்தனர் . உடல் தான் வயோதிகம் அடைந்ததே அன்றி அவர்கள் கொண்ட பக்தியும் , உறுதியும் தளராது அப்படியே இருந்தது . எம்பெருமான் அவர்களின் பக்தியையும் தன் மேல் ஆணையிட்ட காரணத்தால் அவர்கள் உடலின்பம் தவிர்த்து வாழ்ந்ததையும் உலகத்தார் அறிய திருவுளம் கொண்டார் . காமம் கடப்பது அரிது அதுவும் மனையாளுடன் வசித்து காமம் தவிர்ப்பது என்பது இயலாத காரியம் சிவ பக்தியினால் மட்டுமே காமத்தையும் வெல்ல முடியும் என்பதை உலகுக்கு உணர்த்தும் திருநீலகண்டர் புராணம் . சரி கதைக்கு வருவோம் , ஈசனார் சிவனடியார் வேடம் தாங்கி திருநீலகண்டர் இல்லம் எழுந்தருளினார் . வந்தவரை அமர வைத்து பணிவோடு தங்களுக்கு அடியேன் செய்யும் பணி யாது பெருமானே என்று வினவினார் .

                         ஆலங்காட்டாரும் அன்பரே, யாம் தொலைதூர பயணம் செய்ய வேண்டி உள்ளது ஆகையால் என்னுடைய இந்த திருவோட்டை பத்திரமான இடத்தில் சேர்க்கும் பொருட்டு உம்மை நாடி வந்தேன் , இது சாதாரண ஓடு அல்ல பொன்னும் , ரத்தினங்களும் கொடுத்தாலும் பெற முடியாத , விலை மதிப்பில்லாத ஓடு ஆகும் , ஆதலால் இந்த திருவோட்டை பத்திரமாக பாதுகாத்து யாம் திரும்பி வருகையில் எம்மிடம் சேர்க்க வேண்டும் என்று ஓட்டை திருநீலகண்டரின் கையில் கொடுத்தார் . அடியேனின் பாக்கியம் என்று திருநீலகண்டர் பகவானை பணிந்து அதை பெற்றுக்கொண்டார் . அந்த திருவோட்டை ஒரு பெட்டிக்குள் மிகவும் பாதுகாப்பாக வைத்து பூட்டினார் நெடு நாட்கள் கழித்து சிவபெருமான் திருநீலகண்டர் இல்லத்து எழுந்தருளினார் .யாம் உம்மிடம் கொடுத்த திருவோட்டை வாங்கிச் செல்ல வந்திருக்கிறோம் என்றார் . திருநீலகண்டரது பக்தியின் திறத்தை உலகுள்ளோர் அறியும் வண்ணம் செய்வதற்கு நீலகண்டர் வைத்த பெட்டியில் இருந்து திருவோடு மறையும் படி செய்தார் . சுவாமி திருவோட்டை கேட்டவுடன் திருநீலகண்டர் சென்று வைத்த இடத்தில் தேடினார் ஓட்டைக் காணவில்லை  திகைப்புடன் மனைவியாரிடமும் விசாரித்தார் வீட்டின் எல்லா இடத்திலும் தேடித் பார்த்து விட்டார் திருவோட்டைக் காணவில்லை . 


                          சிவபெருமான் நடப்பதையெல்லாம் ஏதுமறியார் போல வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார் . பின் என்னவாயிற்று திருநீலகன்டரே என்று வினவினார் நாயனாரும் சுவாமி அடியேன் திருவோட்டை மிகவும் பத்திரமாக இப்பெட்டியுனுள் பூட்டி வைத்திருந்தேன் ஆனால் ஓட்டைக் காணவில்லை , அடியேன் செய்த தவறை தேவரீர் பொறுத்தருள வேண்டும் அந்த பழைய ஓட்டுக்கு ஈடாக அடியேன் புது ஓடு தருகிறேன் ஐயா மன்னிக்க வேண்டும் என்றார் .  அதைக்கேட்டு கோபம் கொண்ட சிவயோகியார் நீர் வேண்டும் என்றே பொய் கூறுகிறீர் அந்த ஓட்டுக்கு ஈடாக தங்கஓடு கொடுத்தாலும் எனக்கு வேண்டாம் , என்னுடைய ஓடு தான் வேண்டும் யாம் அதன் சிறப்பை உம்மிடம் கூறியதால் நீர் அதை வைத்துக் கொண்டு தொலைந்து விட்டது என்று பொய் கூறுகிறீர் , உம்மிடம் அடைக்கலமாய் வந்த பொருளை கவர்ந்து கொண்டு எம்மிடம் மறைக்கிறீர் , என்று சிவயோகியார் சொல்லக் கேட்டதும் சுவாமி , அடியேன் பிறர் பொருளுக்கு ஆசைப்படுபவன் அல்லன் வீட்டின் எல்லா இடத்திலும் தேடிப்பார்த்து விட்டேன் என்னை நம்புங்கள் சுவாமி என்றார் அடியேன் திருடவில்லை என்பதை எவ்வாறு உங்களுக்கு நிரூபிக்க வேண்டும் வேண்டும் என்று கூறுங்கள் என்றார் . 

            சுவாமியும் , சரி நீர் கூறுவதை யாம் ஏற்க வேண்டும் என்றால் உமது மைந்தனை அழைத்து அவன் கையை நீர் பற்றிக்கொண்டு குளத்தில் மூழ்கி சத்தியம் செய்து கொடு நம்புகிறேன் என்றார் . நாயனார் , சுவாமி அடியேனுக்கு மைந்தன் இல்லை என்றார் . அப்படியானால் உம மனையாளின் கரம் பற்றி சத்தியம் செய்து கொடு என்றார் . நாயனாரும் பெருமானே , நாங்கள் திருநீலகண்ட பெருமானின் மேல் ஆணையிட்டு தீண்ட மாட்டோம் என்ற உறுதிப் பாட்டில் இருக்கிறோம் யான் யாது செய்வேன் என்று செய்வதறியாது நின்றார் . சிவயோகியார் , என்னப்பா நீ ஓட்டையும் தர மாட்டேன் என்கிறாய் எடுக்கவில்லை என்று சத்தியம் செய்து தா என்றால் அதுவும் முடியாது என்றால் என்ன செய்வது வா தில்லை வாழ் அந்தணர்கள் இருக்கும் சபைக்கு செல்வோம் அங்கே என்ன சொல்கிறார்களோ அதன் படி செய்வோம் என்று சபைக்கு சென்றார் . அவரைப்பின் தொடர்ந்து நாயனாரும் அவர் மனையாளும் சென்றனர் . 

                      சபைக்கு சென்று அந்தணர்கள் இடத்திலே சுவாமி முறையீடு செய்தார் . இங்கே நிற்கும் திருநீலகண்டரிடம் எம்முடைய திருவோட்டை பத்திரமாக காத்து தரும்படி கொடுத்து விட்டு யாம் பயணம் மேற்கொண்டோம் முடித்து வரும் போது எம்முடைய திருவோட்டைக் கேட்டால் , திருடி வைத்துக் கொண்டு அதைக் காணவில்லை என்று பொய் கூறுகிறார் . உணமையிலே இவர் திருடவில்லை என்றால் மனையாள் கரம் பற்றி குளத்திலே மூழ்கி சத்தியம் செய்து கொடு என்றாலும் அதையும் செய்வில்லை , ஒன்று என்னுடைய ஓட்டை வாங்கித்தாருங்கள் அல்லது அவரை யாம் சொன்னது போல சத்தியம் செய்து கொடுக்கச் சொல்லுங்கள் என்றார் . அதைக் கேட்ட அந்தணர் பெருமக்கள்  திருநீலகன்டரே இப்போது நீர் சொல்லும் என்றனர் . பெருமக்களே , அடியேனிடம் இவர் திருவோட்டைக் கொடுத்தார் நானும் அதை பெட்டிக்குள் வைத்துப் பூட்டினேன் இப்போது காணவில்லை வீட்டில் அனைத்து இடங்களிலும் தேடியும் காணவில்லை நான் வாங்கினேன் என்பது எந்த அளவு உண்மையோ அதைக் காணவில்லை என்பதும் உண்மை என்றார் . 
                       
                        தில்லை வாழ் அந்தணர்களும் அப்படியானால் சிவனடியார் சொல்வது போல சத்தியம் செய்து கொடுத்தலே நீதி என்று கூறினர் . நாயனாரும் தம்மனைவியாரை தீண்டாதிருத்தலை அங்கே கூற முடியாமல் , மனையாளுடன் குளத்தில் மூழ்கி சத்தியம் செய்து கொடுக்க தின்னமானார் . அந்தணர்கள் , ஊர்பெருமக்கள் என அனைவரம் சூழ்ந்திருக்க ஒரு மூங்கில் கம்பை ஒரு முனையை தாம் பிடித்து மற்றொரு முனையை மனையாளை பிடிக்க சொன்னார் குளத்திலே இறங்கினார் . அதற்கு சிவயோகியார் உன் மனைவியின் கையை பிடித்துத் தான் சத்தியம் செய்து கொடுக்க வேண்டும் என்றார் . திருநீலகண்டர் தாம் வேசியினிடத்து சென்ற காரணத்தால் தன மனையாள் செய்த சபதமும் அதனால் தாமும் திருநீலகண்டத்தின் மேல் ஆணையிட்டதை உலகத்தார் அறியும் வண்ணம் எடுத்துரைத்து அந்த சத்தியத்தின் படி நடந்து வருவதானால் தம்மால் இயலாது என்று குளத்தில் மூழ்கினார் . நீருக்குள் மூழ்கி வெளியே வரும் போது அவர்களுடைய முதுமை நீங்க பெற்று இளமையாய் வந்தார்கள் அதைக்கண்ட ஊரார் திகைத்து நிற்க ஆகாயத்தினின்றும் மலர் தூவினார்கள் தேவர்கள் . 

              அங்கு நின்ற சிவயோகியாரை காணாது தேட விடை வாகனத்தில் உமையாளொடு சிவபெருமான் தோன்றினார் . அங்கிருந்த அனைவரும் தரை விழுந்து நமஸ்காரம் செய்தனர் , நாயனாரும் , அவர்தம் மனைவியாரும் திக்கெல்லாம் நிறைந்தவனை தொழுது பணிந்து நின்றனர் .  அப்பொழுது சிவபிரான் அவர்களை நோக்கி " ஐந்து புலன்களையும் அடக்கி தம் பக்தியும் பொருட்டு மேன்மை நிலை அடைந்த அன்பர்களே , இனி என்றும் இந்த இளமை நீங்காது எம்மிடத்தில் இருப்பீர்களாக என்று அருளிச் செய்து மறைந்தார் . பின் நாயனாரும் , அவர் மனையாளும் இல்லறத்தை இனிதே நடத்தி சிவ பக்தியில் சிறந்து யாருக்கும் கிட்டாத பேரின்ப நிலையை அடைந்து அவன் பதத்திலே இருக்கும் பெரும்பேறு பெற்றார்கள் .


                      சிவமேஜெயம் - திருவடி முத்துகிருஷ்ணன் 



         சிவத்தை போற்றுவோம் !! சித்தர்களை போற்றுவோம் !! 




     

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக