வியாழன், நவம்பர் 28, 2013



சித்தர் பாடல்களில் இருந்து .....................




                            
மணிவாசக பெருமான் அருளிய 
        
திருவாசகத் தேனிலிருந்து............

                                                                       சில துளிகள் 


உம்பர்கட்கரசே! ஒழிவற நிறைந்த யோகமே! ஊத்தையேன் தனக்கு
வம்பெனப் பழுத்து, என் குடி முழுமாண்டு, வாழ்வற வாழ்வித்த மருந்தே!
செம் பொருள் துணிவே! சீருடைக் கழலே! செல்வமே! சிவபெருமானே!
எம்பொருட் டுன்னைச் சிக்கெனப் பிடித்தேன்; எங்கெழுந் தருளுவதினியே ?


தேவர்களுக்கு அரசே அனைத்துப்பொருள்களோடும் கலந்துநிற்கும் பொருளே,மலஅழுக்குகள் உடையவனாகிய என்னை வலியவந்து ஆட்கொண்டு வாழ்வித்த அருமருந்தானவனே,யாராலும் வரையறுக்கஇயலாத செம்பொருளானவனே,வீடுபேற்றினை நல்கும் திருவடிகளை உடையவனே செல்வமே சிவபெருமானே நான்உய்யும்பொருட்டு நின்திருவடியைச் சிக்கெனப்பிடித்துவிட்டேன்.இனி எம்மைவிட்டு எங்குஎழுந்தருளமுடியும்?.

அம்மையே!அப்பா! ஒப்பில்லா மணியே! அன்பினில் விளைந்த ஆரமுதே!
பொய்ம்மையே பெருக்கி, பொழுதினைச் சுருக்கும், புழுத்தலைப் புலையனேன் தனக்கு,
செம்மையே ஆய சிவபதமளித்த செல்வமே! சிவபெருமானே!
இம்மையே, உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்; எங்கெழுந் தருளுவதினியே ?


உலக உயிர்களுக்கு அம்மையாகவும் அப்பனாகவும் விளங்குபவனே, இணையில்லாத  மணியே , உள்ளம்எனும் பெருங்கோயிலில் எழும் தூயஅன்பினில் விளைந்த அமிழ்தம் போன்றவனே, பொய்மையே உருவமாகக் கொண்டு ,பிறப்பின் நோக்கம் அறியாது வீணே பொழுதினைக் கழித்துத்திரியும் புழுத்த உடலோடுதிரிகின்ற கீழானவன் எனக்கும் , யாருக்கும் கிடைக்காத செம்மையான சிவபதத்தை அளித்தவனே ,செல்வமே சிவபெருமானே இப்பிறப்பிலேயே உன்னைச் சிக்கெனப் பிடித்துக்கொண்டேன்.இனி என்னைவிட்டு வேறு எங்கும் செல்ல முடியாது.

பால்நினைந் தூட்டும் தாயினும் சாலப் பரிந்து, நீ, பாவியேனுடைய
ஊனினை உருக்கி, உள் ஒளி பெருக்கி, உலப்பிலா ஆனந்தம் ஆய
தேனினைச் சொரிந்து, புறம் புறம் திரிந்த செல்வமே! சிவபெருமானே!
யானுனைத் தொடர்ந்து, சிக்கெனப் பிடித்தேன்; எங்கெழுந் தருளுவதினியே ?


குழந்தை அழுவதற்கு முன்பே அதன்பசியைநினைந்து பால்ஊட்டும் தாயைவிடவும் இரங்கி நீ பாவங்களின் உருவமான என்னுடைய உடலும் உருகுமாறுசெய்து உள்ளத்தில் ஒளிபெருகுமாறும் வற்றாத இன்பமாகிய தேனைப்பொழிந்து எங்குசென்றாலும் என்னுடனேவந்து உதவிய செல்வமே சிவபெருமானே நான்உனை உரியநேரத்தில் உறுதியாகப் பற்றிக்கொண்டேன் இனி என்னைவி்ட்டு எங்கும் செல்லமுடியாது.

அத்தனே! அண்டர் அண்டமாய் நின்ற ஆதியே! யாதும் ஈறில்லாச்
சித்தனே! பத்தர் சிக்கெனப் பிடித்த செல்வமே! சிவபெருமானே!
பித்தனே! எல்லா உயிரும் ஆய்த் தழைத்து, பிழைத்து, அவை அல்லை ஆய் நிற்கும்
எத்தனே! உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்; எங்கெழுந் தருளுவதினியே ?


தந்தையே விண் உலகத்தவர்க்கும்ஆதாரமாய் நின்ற முதல்வனே, முடிவு என்று ஒன்று இல்லாத ஞானமயமானவனே ,பத்தர்களால் உறுதியாகப் பற்றப்பட்ட ஞானச் செல்வமே, சிவபெருமானே அன்புடையவனே,  எல்லாஉலகங்களையும் படைத்துக் காப்பவனே,உலகங்களோடு பொருந்தாது நிற்பவனே சூழ்ச்சியானவனே உன்னை உறுதியாகப் பற்றிக்கொண்டேன் இனி எம்மைவிட்டு எங்கும் செல்ல முடியாது.


                                                  இறை பணியில் 

                                                                               பெ.கோமதி 

                                                                  சிவமேஜெயம் !!

                   சிவத்தை போற்றுவோம் !! சித்தர்களை போற்றுவோம் !!

புதன், நவம்பர் 27, 2013


   சித்தர்கள் வரலாறு ...................


                                            சாந்தலிங்கர் தாண்மலர் வாழ்க
                                                   
                                         




                         அருள்மிகு சாந்தலிங்கப் பெருமான் அருள்வரலாறு   


  இன்பமாயது அறாதிடை ஓங்கவும் 
  துன்பமாயது தூரத்துள் நீங்கவும்           
  முன்பராபரன் மொய்குழலோடு அணைந்து 
  அன்பின் ஈன்ற ஓர் ஆனையைப் போற்றுவாம்.

இன்பங்கள் இடையறாது  ஓங்கவும்  துன்பங்கள் நம்மைவிட்டு நீங்கவும் சிவபெருமான் பராசக்தியுடன் கூடி அன்புடனே ஈன்றருளிய ஒப்பில்லாத விநாயகப்பெருமானைப் போற்றுவோம்.
      
         வாழையடி வாழையென வந்த திருக்கூட்ட மரபில் சமயக்குரவர் நால்வர்பெருமக்களின் வழியைப்பின்பற்றிய அருளாளர்கள் நாடெங்கும் திருமடங்கள் அமைத்து அருள்நெறியை வளர்த்தனர்.அவ்வகையில் 17 ம் நூற்றாண்டில் தோற்றுவிக்கப்பட்ட திருமடம் பேரூராதீனம் தவத்திரு சாந்தலிங்கர் திருமடம்.இதை நிறுவியவர் தவத்திரு சாந்தலிங்கர் அடிகளார் ஆவார்.இவருடைய நாடும் ஊரும் இன்னது என்று தெளிவாக அறிவதற்கில்லை.பலரும் சாந்தலிங்கர் தொண்டைநாட்டைச் சார்ந்தவர் என்று கருதுகின்றனர்.

          இளமையிலேயே சமயநெறி மேற்கொண்டு நாடும் நகரமும் நற்றிருக் கோயிலும் நாடி நற்சற்குருவைநாடியருந்தார்.“முர்த்தி தலம் தீர்த்தம் முறையாய்த் தொடங்கினோர்க்கு ஓர் வார்த்தைசொலச் சற்குரவும் வாய்க்கப்பெருமே”என்ற அருள்மொழி வழியில் துறையுார் சிவப்பிரகாசரது தவவலிமையும் அருட்பொலிவும் நாடு போற்றும் சீலமும் கோலமும் உணர்ந்த திரவண்ணாமலைத் திருமடத்தையணுகி சாந்தலிங்கர் குருநாதரின் திருவுளக்குறிப்புகண்டு வழிபட்டார்.

           சிவப்பிரகாசர் கும்பகோணத்தில்தோன்றி 7 வயதிலேயே செம்பொருள் உணரும் சீலத்தராகித் திருவாவடுதுறை ஆதீனநிறுவனர் ஆதிகுருமுதல்வர் சீர் வளர் சீர் நமசிவாயதேசிகரின் அணுக்க சீடரானார்.அவர் தம் அருள் நோக்கில்  “இதனை இதனால் இவன் முடிக்கும்” என நினைந்து ஆதீன இளவரசராக அமைத்தார்.தன்னேரில்லாத் திறமையால் தில்லைக்கோயிலில் முட்டுப்பட்டிருந்த வழிபாட்டைத் தொடரச்செய்தார்.இறைவன் திருவருளால் வீரசைவநெறிக்கு ஆட்பட்டார்.

வேலூர் அமைச்சர் இலிங்கண்ணன் இவர்பால் அளவிலாப்பத்திமை பூண்டு திருவண்ணாமலையில் திருமடம் அமைத்துத் தந்தார்.“ஐம்புல வேடரின் அயர்ந்தனை வளர்ந்தெனத் தம்முதல் குருவுமாய்த் தவத்தினில் உணர்த்த”எனும் சிவஞானபோத சூத்திரத்தின் செம்மை நெறியில் தம்குருநாதர் சிவப்பிரகாசரைச் சாந்தலிங்கர் அத்திருமடத்திலே கண்டு வீரசைவ தீக்கைபெற்று குருவைச் சிவமாகக்கொண்டு குருவுடன் பலகாலம் தலப்பயணம் மேற்கொண்டார்.திருவண்ணாமலையில் தங்கியகாலத்து கற்பனைக்களஞ்சியம் சிவப்பிரகாசருடன் நட்புப் பூண்டார்.குருவருளும் திருவருளும் உள்நின்றுணர்த்த ”கொங்குநாட்டில் மேலைச்சிதம்பரமாம் மிக்கபுகழ்ப் பேரூரில் சீலத்தவர் போற்றும் திருமடம்” அமைத்தார்.சிலகாலம் சுந்தரமூர்த்திசாமிகள் முதலையுண்ட பாலகனை மீட்டதலமான அவிநாசியிலும் தங்கி அருள்பாலித்துள்ளார்.




          சாந்தலிங்கர் வீரசைவநெறியில் நின்றவர்.வீரசைவர்கள் தங்களது இட்டலிங்கப்பெருமானைக் கையில் வைத்து வழிபாடுசெய்யும் வழக்கம் உடையவர்கள்.இந்நெறியினர் இட்டலிங்கத்தைக் கணப்பொழுதும் அங்கத்தின் வேறாகப் பிரிந்திருப்பதையறியார்.இலிங்காங்க சம்பந்தமே இந்நெறியினரின் தலையாய ஒழுக்கம்.இவர்தம் கைத்தலத்து வைத்து வழிபட்ட இட்டலிங்கத்திற்குச் சாந்தலிங்கம் என்றுபெயர்.அப்பெயராலேயே இவரும் அழைக்கப்பெற்றார்.சாந்தன்,சாந்தையன்,சாந்தநாயகன்,சாந்தலிங்கேசன் , சாந்தமுனி எனப்பலவாறு இவருடைய பெயரைப் பின்னுள்ளோர்கள் வழங்கினர்.  இவரை வீரசைவர் என ஒருசமயத்தைச்சார்ந்தவராகக் கூறலாமோ என்று எண்ணலாம் ஆனால் அறுவகைச் சமயங்களையும் அவற்றின் பேதங்களையும் மருவி உயர்ந்த அனுபவக்கொள்கையே வீரசைவம். இதனாலேயே சாந்தலிங்கர் “தவிராத விரோத சமய நூலன்று அவிரோத உந்தியார்”என்று தெள்ளத்தெளிவாகக் குறிப்பிட்டார்.சமய நூல் எனில் விரோதம் தவிர்க்கப்பெற இயலாது என்பதே சாந்தலிங்கர் கண்ட உண்மை.

       சாந்தலிங்கர் மயிலம் ஆதீனம் ஆதிகுருமுதல்வர் சிவஞானபாலைய சாமிகளைக் காண்பதற்குப் பொம்மபுரம் சென்றார்.வழியில் துறைமங்கலம் சிவப்பிரகாச சாமிகளைக்ககண்டு அவரையும் உடனழைத்துக்கொண்டு சிவஞான பாலையசாமிகளைத் தரிசித்தார்.சிவஞானபாலைய சாமஜகளின் திருக்குறிப்புப்படி கற்பனைக்களஞ்சியம் சிவப்பிரகாசரின் தங்கையைச் சாந்தலிங்கர் திருமணம் செய்து கொண்டார்.பேரூரில் தங்கியிருந்தபொழுதும் மனைவிஞானாம்பிகையுடனே இருந்தார்.பின்னரே துறவு மேற்கொண்டார்.

       சாந்தலிங்கர் தம்மனைவியுடன் இருந்தே தவநெறியில் தவறாது ஒழுகினாலும் தம்மிடம் பயில்வோர் தவநெறியை உறுதியுடன் கடைபிடித்தற்பொருட்டாக தாம் தன் மனைவியையும் துறந்து வாழ்தல் வேண்டும் எனக்கருதினார். அதனையும் திருவருட்குறிப்பின்படியே செய்யவிழைந்து இறைவனிடம் இன்று திருவமுதுக்குச் செல்லும் பொழுது முதலில் பாலண்ணம் கிடைத்தால் இன்றுமுதல் மனைவியைநீத்து வாழ்வேன் என்று வேண்டியவராய் திருவமுதுக்குச் சென்றார்.அவர் வேண்டுதலின் படி முதல் அன்னம் பாலன்னமாகவே வந்தது. அன்றுமுதல் மனைவியைத்துறந்தார் சாந்லிங்கர்.


இந்நிகழ்வுககுப் பின்னர் ஞானாம்பிகை அம்மையார் தன்கணவரின் உளக்குறிப்பை உணர்ந்தவராய் தானும் துறவு மேற்கொண்டு திருவண்ணாமலைசென்று குடில்அமைத்து அருள்நெறியில் வாழ்ந்து பலருக்கும் வழிகாட்டினார்.  இன்றும் அங்கு இருக்கும் ஞானாம்பிகை பீடம்  இதற்குச்  சான்றாக இருக்கின்றது.

       சாந்தலிங்கரது அருட்தோற்றத்தையும் தவப்பொலிவையும் உணரும் அடியவர் கூட்டம் நாளுக்குநாள் பெருகியது.கொங்குநாட்டில் பேரூராதீனம் பொலிவுற்றது. திருமடத்தில பணிபுரியும் தொண்டர்கள் குழுமினர். இத்திருமடத்தில் பணியாளர்களின்றித் தொண்டர்களே பணிசெய்யும் தூயவாழ்வு பெருகியது.நிறைந்த கல்வியும் ஒழுக்கமும் உடைய அடியார்கள் பிறப்பெனனும் பேதமை நீங்கிச் சிறப்பென்னும் செம்பொருள்காணும் சிந்தையராய்த் தொண்டாற்றினர்.இதைப் புலவர்புராணத்தில் தண்டபாணி அடிகள் சிறப்பித்துக்கூறுவார்.சாந்தலிங்கர் “எழுதிய விளக்கென” ஒன்றிய நிலையில் அடியார்கள் திருவருள் விளக்கம்பெறப் பொலிவுடன் வழிகாட்டியருளினார்.

       சாந்தலிங்கரின் அருட்திறம் அண்டை மாநிலங்களிலும் விளங்கித் தோன்றியது .கன்னட நாட்டில் மன்னராகத் திகழ்ந்த குமாரதேவர் எனும் மன்னர் சாந்தலிங்கப் பெருமானின் திருவடியே முத்திக்குத் திருந்தியநெறி என உணர்ந்தவராய் சாந்தலிங்கரை வந்தடைந்தார்.சாந்தலிங்கரிடம் தம்மை மாணவராக ஏற்றுக்கொள்ளும் படி வேண்ட அடிகள்,“நீர் வாளேந்திப் போர்புரியும் மன்னர் உமக்கு இந்நெறி பொருந்தாது ”என்று கூறிவிட்டார் . ஆனால் குமாரதேவர் மனம் தளராதவராய் திருமடத்திலேயே தங்கி மாணவராய் ஏற்றுத்தான்ஆகவேண்டும் என்று கூறுமளவிற்கு உறுதியுடன் போராடினார்.இவரின் மனஉறுதியை உணர்ந்த சாந்தலிங்கப்பெருமான் கையில் புல் அறுக்கும் கருவியைக் கொடுத்து “நீசென்று பசுக்களுக்குப் புல் அறுத்து வா ” என்று கூறினார்.வாள்பிடித்த கைக்கு சிறு கத்தி கொடுக்கவும் சரியாகப் பயன்படுத்தத் தெரியவில்லை.இருப்பினும் அடிகளின் ஆணை என்று  கருதியவராய் புல் அறுத்துக் கொணர்ந்தார்.

                சாந்தலிங்கர்  குமாரதேவரின் கோலங்கண்டு அவரின் பக்குவத்தை உணர்ந்தார்.   காரணம் புல் அறுக்கச் சென்றவர் புற்களைமட்டும் அறுக்கவில்லை தனது கை கால்களிலும் இரத்தக்காயங்களுடன் வந்தார்.இதனைப்பார்த்த அடிகள் தனக்கேற்ற மாணவன் என்று குமாரதேவரை மாணவராக ஏற்றுக்கொண்டார். குமாரதேவரும் தன்குருநாதருடன் பல தலங்களுக்குத்  தலப்பயணம் மேற்கொண்டு மெய் பொருள் அறிவைப் பெற்றார்.மாணவனின் பக்குவம் அறிந்த சாந்தலிங்கர் விருப்பப்பட்ட தலம்சென்றுதங்கி அருள்நெறிபரப்புக என்று அருள்வழங்கினார்.அவரும் குருநாதரின் வழிகாட்டலின்வண்ணம்  திருமுதுகுன்றம் சென்று மடம் அமைத்து அருள்பணியாற்றினார். 

          சாந்தலிங்கரின் அருளாளணையின்வண்ணம்  சிதம்பரசாமிகளைச் சீடராக ஏற்றுக்கொண்டார்.சாந்தலிங்கர் சிதம்பரசாமிகளைக்கொண்டு தான் இயற்றியருளிய நான்கு நூல்களான கொலைமறுத்தல் ,வைராக்கிய சதகம்,வைராக்கிய தீபம்,அவிரோதஉந்தியார் ஆதிய நான்கு நூல்களுக்கும் செம்மையான உரைசெய்வித்தார்.பின் சிதம்பரசாமிகள் தீருப்போரூரில் இதேபோன்று திருமடத்தைநிறுவினார்.

        சாந்தலிங்கப்பெருமான் அருளியநான்கு நூல்களும் முத்திப்பேற்றுக்கு வழிகாட்டும் பாங்குடையன.இந்நூல்கள் அளிககும்  பயனை வண்ணச்சரபம் தண்டபாணி சாமிகள்,
        “கூசல் அறக்கருணைகூட்டும் கொலை மறுப்பும்
          ஈசனது பத்திக்கு இனிதாம் சதகமும் பொய்ப்
          பாசமுழுவதும் பறித்தொழிக்கும் தீபமும் நெஞ்சு
          ஊசல் நிகர் ஆட்டொழிக்கும் உந்தியுமாம் நூற்பெயரே”

                                                                           என்று பாடிப்பரவுகின்றார்.இப்பாடலில்                                                                                             தண்டபாணிசாமிகள், 

                         சாந்தலிங்கர் அருளிய கொலைமறுத்தல் உயிர்களின்மேல் கருணைகொண்ட கொல்லாமையை வற்புறுத்துவது,வைராக்கியசதகம் இறைவனிடத்து பக்திமையை வளர்ப்பது,பாசத்தைநீக்குவது தீபம்,சமயப்பொதுமையை விளக்குவது அவிரோதஉந்தியார் என்று கூறியுள்ளார்.மேலும் இவர் சாந்தலிங்கரை “முழுஞான வீரனம்மா”என்றும் போற்றியுள்ளார்.

        இவ்வாறு உலகம் உய்ய நான்கு நூல்களை அருளிச்செய்த சாந்தலிங்கப்பெருமான் பல அருட்தொண்டுகளை ஆற்றிவிட்டு மாசிமாதம் மகம் நட்சத்திரத்தன்று இறைவனது பேரொளியில் கலந்தார்.இவர் சீவசமாதியான  இடத்தில் திருக்கோயில் அமைத்து வழிபட்டனர். காலப்போக்கில் அயல்ஆதிக்கத்தால் பலமாற்றங்களை இத்திருமடம் கண்டாலும் இன்றும் சாந்தலிங்கப்பெருமானின் திருவருட்கருணையால்
சிறந்து பொலிவுடன் விளங்குகிறது.இன்று அருளாட்சி செய்துவரும் தவத்திரு சாந்தலிங்க இராமசாமி அடிகளாரின் பெரும்முயற்சியால் தமிழ்ப்பணியும் சைவப்பணியும் சிறப்பாக நடைபெற்றுக்கொண்டு வருகின்றது. சாந்தலிங்கப்பெருமானின் அருள் வரலாற்றினைச் சுருக்கமாக எழுத அடியேனுக்குத் திருவருள்   கூட்டியமையைநினைந்த பெருமகிழ்வு அடைகிறேன்.



                சுவாமிகளின் ஜீவசமாதி கோவை மாநகரத்தில் பேரூர் என்னும் திருத்தலத்தில் அமைந்திருக்கிறது .

      சாந்தலிங்கரின் தாள் பணிந்து அனைவரும் ஈசனடி அடைவோம் .


                                                                      திருச்சிற்றம்பலம்.          


                    இறை பணியில்    
           

                                  பெ .கோமதி              





                                    சிவமேஜெயம் !!

   சிவத்தை போற்றுவோம் !! சித்தர்களை போற்றுவோம் !!

                 
                                                    
        





           

   சித்தர் பாடல்களில் இருந்து ..................





                                                திருமூலர் அருளிய 



                                            திருமந்திரத்திலிருந்து சில மந்திரங்கள் ....

சிந்தை அது என்னச் சிவன் என்ன வேறு இல்லை
சிந்தையின் உள்ளே சிவனும் வெளிப்படும்
சிந்தை தெளியத் தெளிய வல்லார் கட்குச்
சிந்தையின் உள்ளே சிவன் இருந்தானே.


அரசன் வீற்றிருக்கும் அரசுகட்டிலிலும் அரசனென மதிக்கப்படும். அதுபோல சிவபெருமான் எழுந்தருளியிருக்கும்  சிந்தையும் சிவனெனவே மதிக்கப்படும்.சிந்தையினுள்ளே சிவம் வெளிப்படும். யாருக்கு வெளிப்படும்? சிந்தை தெளிந்தவர்களுக்குத்தான்.சிந்தை தெளிந்தவர்கள் யார்?கேட்டல், சிந்தித்தல்,தெளிதல்,நிட்டைகூடல் ஆகியமுறையில் தெளிந்தவர்கள்.இவ்வாறுசிந்தை தெளிந்தவர்களின் சிந்தையில் சிவபெருமான் வீற்றிருப்பார்.அச்சிந்தையும் சிவனெனவே மதிக்கப்படும்.

வாக்கும் மனமும் மறைந்த மறைப் பொருள்
நோக்குமின் நோக்கப்படும் பொருள் நுண்ணிது
போக்கு ஒன்றும் இல்லை வரவு இல்லை கேடு இல்லை
ஆக்கமும் அத்தனை ஆய்ந்து கொள்வார்க்கே.


இறைவன் வாக்கும் மனமுங் கடந்த மாற்றம் மனம் கழியநின்ற மறையோன்.அவனை அவனது திருவருளால் மட்டுமே நோக்கமுடியும்.அவன் நம் நோக்கத்திற்கு உரியவன்தான் ஆனால் நுண்ணியவன்.போக்கும் வரவுமில்லாப் புண்ணியன்.பிறப்பு இறப்பு என்ற கேடுகளுக்கு அப்பாற்பட்டவன்.எனவே இத்தகைய  இறைவனை அவனருள்கொண்டே நோக்க வேண்டும்.இத்தகைய அத்தனை ஆய்ந்து அறிந்தவர்களுக்கு அதுவே ஆக்கமாகிய பிறவிப்பயனாகும்.

பரனாய்ப் பராபரன் ஆகி அப்பால் சென்று
உரனாய் வழக்கு அற ஒண் சுடர் தானாய்த்
தரனாய் தனாது எனவாறு அறி ஒண்ணா
அரனாய் உலகில் அருள் புரிந்தானே.


முழுமுதற்பொருளாம் சிவபெருமான் அனைத்திற்கும் மேலானவன். இதனையே பரன், பராபரன் அதற்கும் அப்பாலான் என்று பாடியுள்ளார். உரன் என்பது இறைவனின் ஆற்றலைக் குறிக்கின்றது.பேரறிவும் பேராற்றலும் உடையவனான இறைவன் பேரூழிக்காலத்து அனைத்து ஒளிகளும் மங்கியபொழுதும் குன்றாத பேரொளியாய் விளங்குபவன். தான் தனது என்று உரிமை கொண்டாடும் ஆறறிவினாலும் அறிய ஒண்ணா  அரனானவன் இறைவன்.இவ்வாறு ஏகமாய் இருந்து இன்னருள்  தந்து இடையறாது ஓம்புகின்ற தாயிற்சிறந்த தயாவான தத்துவன் இறைவன்.


                                   இறை பணியில் 

                                                          பெ.கோமதி 

                                    சிவமேஜெயம் !!

சிவத்தை போற்றுவோம் !! சித்தர்களை போற்றுவோம் !!


செவ்வாய், நவம்பர் 26, 2013


        சித்தர் பாடல்களில் இருந்து ................




                 


ஏட்டுச்சுரைக் காய்கறிக்கிங் கெய்தி டாதுபோல்
எண்டிசைதி ரிந்துங்கதி யெய்த லிலையே
நாட்டுக்கொரு கோயிற்கட்டி நாளும் பூசித்தே
நாதன்பாதங் காணார்களென் றாடாய் பாம்பே.


இறைவனிடத்து உண்மையான அன்பும் , பக்தியும் இல்லாதவர்கள் நாடோடியாய் எட்டு திசைகளில் அலைந்து திரிந்தாலும் . நாட்டில் நிறைய கோவில்கள் கட்டி  , சிறப்பாக பூசை செய்தாலும் , அவர்கள் பக்தி என்பது ஏட்டு சுரைக்காய் போன்றது அது கறிக்கு உபயோகபடாது . இவர்கள் யாவரும் மெய்யான சிவ பதத்தை அடைய மாட்டார்கள் என்று ஆடுவாய் பாம்பே என்று கூறுகிறார்  

தன்னையறிந் தொழுகுவார் தன்னை மறைப்பார்
தன்னையறி யாதவரே தன்னைக் காட்டுவார்
பின்னையொரு கடவுளைப் பேண நினையார்
பேரொளியைப் பேணுவாரென் றாடாய் பாம்பே.


தான் யாரென்று உணர்ந்தவர் நான் என்ற அகந்தை விடுத்து உலக வாழ்வில் தன்னை மறைத்து வாழ்வார் .தன்னை உணராதவர் இவ்வுலகில் தான்மட்டுமே உயர்ந்தவர் என்ற  அகந்தையைக்  காட்டுவர்.குறிப்பிட்ட கடவுளை வணங்கிப் பேண  நினையாதவர்கள்  அருவமும் உருவமும் இல்லாத அநாதியான அருட்பெருஞ் சோதியைப் பேணுவர் என்று ஆடுவாய் பாம்பே என்று பாடியுள்ளார் .


                                                              இறை பணியில் 
                               
                                                                                                           பெ.கோமதி 

                                                                         சிவமேஜெயம் !!

                       சிவத்தை போற்றுவோம் !!     சித்தர்களை போற்றுவோம் !!

                                  




வெள்ளி, நவம்பர் 15, 2013


சித்தர் பாடல்களில் இருந்து  .............................


                         பாம்பாட்டி சித்தர் 






நாறுமீனைப் பலதரம் நல்ல தண்ணீரால் 
நாளுங் கழுவினு மத னாற்றம் போமோ 
ஊறுமுடல் பலநதி பாடிக் கொண்டதால் 
கொண்டமல நீங்கா தென்றா டாய் பாம்பே.


நாறுகின்ற மீனை சுத்தமான நீரினால் எவ்வளவு நேரம் கழுவினாலும் அதன் மணம் நல்லமணமாகாது . பாவம் பல செய்துவிட்டு பல புண்ணிய நதிகளில் எதனை நாள் நீராடினாலும் பாவத்திற்கான பரிகாரம் நிச்சயம் உண்டு அது நம்மை விட்டு நீங்காது என்று ஆடு பாம்பே என்று நமக்கு சொல்கிறார் .  

இருவர் மண்சேர்த்திட வொருவர் பண்ண 
ஈரைந்து மாதமாய் வைத்த சூளை 
அருமையா யிருப்பினு மந்தச்சூளை 
அரைக்காசுக் காகா தென் றாடாய்ப் பாம்பே’


ஆணும் பெண்ணும் கூடி கரு தரித்து பத்து மாதம் அவள் அதை பாதுகாத்து பக்குவம் பார்த்து முடிவில் பிறக்கும் அந்த பிறப்பும் நிலைக்காது என்று மிக அழகாக உதாரணம் காட்டுகிறார் .இரண்டு  பேர் மண் சேர்த்துப் பிசைய ஒருவர் பானை செய்து அவரே பத்து மாதம் சூளையில்  வைத்துப் பக்குவமாய்  இறக்கி வைத்தாலும் அந்தப் பானையானது இறுதியில்  அரைக்காசுக்குக்கூட  உதவாது என்று  எவ்வளவு அழகாக இந்த உடல் நிலையாமையைக் கூறுகின்றார் பாம்பாட்டிச் சித்தர்.

                        இறை பணியில் 

                                            திருவடி முத்துகிருஷ்ணன் 

       சிவத்தை போற்றுவோம் !!!  சித்தர்களை போற்றுவோம்  !!!

                                        சிவமேஜெயம் !!
                                





                                                 சிவமேஜெயம் 

        குருவே சரணம்    பட்டினத்தாரே சரணம்  குருவே துணை 



காம்பிணங் கும்பணைத் தோளார்க்கும் பொன்னுக்குங் காசினிக்கும்
தாம்பிணங் கும்பல ஆசையும் விட்டுத் தனித்துச் செத்துப்
போம்பிணந் தன்னைத் திரளாகக் கூடிப் புரண்டு இனிமேற்
சாம்பிணங் கத்துது ஐயோ! என் செய்வேன் தில்லைச் சங்கரனே!


முடிசார்ந்த மன்னரும் மற்றுமுள் ளோரும் முடிவிலொரு 
பிடிசாம்ப ராய்வெந்து மண்ணாவ துங்கண்டு பின்னும் இந்தப்
படிசார்ந்த வாழ்வை நினைப்பதல் லால்பொன்னின் அம்பலவர்
அடிசார்ந்து நாம்உய்ய வேண்டுமென்றே அறி வாரில்லையே!



பத்தும் புகுந்து பிறந்து வளர்ந்து பட்டாடைசுற்றி,
முத்தும் பவளமும் பூண்டுஓடி ஆடி முடிந்தபின்பு
செத்துக் கிடக்கும் பிணத்தருகே இனிச் சாம்பிணங்கள்
கத்துங் கணக்கென்ன? காண் கயிலாபுரிக் காளத்தியே!


                                                                                                             ஞான குரு ஐயா 
                                                                                                                    பட்டிணத்தார் 

இறை பணியில் 
                                       திருவடி முத்துகிருஷ்ணன் 

                                               சிவமேஜெயம் !!!

சிவத்தை போற்றுவோம்  !!! சிததர்களை போற்றுவோம் !!!


புதன், நவம்பர் 13, 2013


                                                    சிவமே ஜெயம் !!

        சிவத்தை போற்றுவோம் !! சித்தர்களை போற்றுவோம் !!


திரை இசையில் ........... (என்னை கவர்ந்த) பக்திபாடல்கள்

பாடல் வரிகள் : பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் 

கங்கை அணிந்தவா 
கண்டோர் தொலும் விலாசா 
சதங்கை ஆடிடும் பாத வினோதா 
லிங்கேஸ்வரா நின் தாள் துணை நீ தா 

தில்லையம்பல நடராஜா 
செழுமை நாதனே பரமேசா 
அல்லல் தீர்த்தாடவா வா வா
அமிழ்தானவா ( தில்லையம்பல )

எங்கும் இன்பம் விளங்கவே ...
எங்கும் இன்பம் விளங்கவே
அருள் உமாபதே 
எளிமை அகல வரம் தா வா வா
வளம் பொங்க வா வா ( தில்லை )
              
பலவித நாடும் கலை ஏடும்
பணிவுடன் உனையே துதி பாடும் 
கலையலங்கார பாண்டியராணி நேசா 
மலை வாசா மங்கா மதியானவா ( தில்லை)



படம். சிவகவி
பாடல். பாபநாசம் சிவன்
பாடியர் : M K தியாகராஜ பாகவதர் 

சொப்பன வாழ்வில் மகிழ்ந்து................
சொப்பன வாழ்வில் மகிழ்ந்து.............. - 
சுப்ரமணிய  சுவாமி உனை மறந்தார் - அந்தோ.............
சொப்பன வாழ்வில் மகிழ்ந்து............... - சுப்ரமணிய
சுவாமி உனை மறந்தார்.............. - அந்தோ
 அற்பப் பணப் பேய் பிடித்தே............... அறிவிழந்து
அற்பர்களைப் புகழ்வார்
அற்பப் பணப் பேய் பிடித்தே............. அறிவிழந்து
அற்பர்களைப் புகழ்வார்...........

நாவால் பொய் மொழிவார் - பொருள் விரும்பி
நாவால் பொய் மொழிவார் - தனது வாழ்
நாளெல்லாம் பாழ் செய்வார் - அந்தோ.............
நாவால் பொய் மொழிவார் - தனது வாழ்
நாளெல்லாம் பாழ் செய்வார் - உந்தன்
பாவன நாமத்தை ஒரு பொழுதும் பாவனை செய்தறியார்

அந்தோ விந்தையிதே............... அறிந்தறிந்து
ஆழ்நரகில் உழல்வாரே - மாந்தர்
அந்தோ விந்தையிதே............. அறிந்தறிந்து
ஆழ்நரகில் உழல்வாரே - இவர்
சிந்தை திருந்தி உய்ய - குகனே உந்தன்
திருவருள் புரிவாயோ............... 

சிந்தை திருந்தி உய்ய - குகனே உந்தன்
திருவருள் புரிவாயோ................ ஓ........................





படம். அசோக்குமார்
பாடல். பாபநாசம் சிவன்

பாடியவர் : M K தியாகராஜ பாகவதர் 


பூமியில் மானிட ஜென்ம மடைந்து மோர்
புண்ணிய மின்றிவிலங்குகள் போல்
பூமியில் மானிட ஜென்மமடைந்துமோர்
புண்ணிய மின்றி விலங்குகள் போல்
காமமும் கோபமும் உள்ளம் நிரம்பவே
காமமும் கோபமும் உள்ளம் நிரம்பவே
காலமும் செல்ல மடிந்திடவோ.........
காலமும் செல்ல மடிந்திடவோ..........
உத்தம மானிடராய்ப் பெரும் புண்ணிய
நல்வினையால் உலகில் பிறந்தோம்
உத்தம மானிடராய்ப் பெரும் புண்ணிய
நல்வினை யால் உலகில் பிறந்தோம்
சத்திய ஞான தயா நிதியாகிய
சத்திய ஞான தயா நிதியாகிய
புத்தனை போற்றுதல் நம் கடனே..............
புத்தனை போற்றுதல் நம் கடனே......








படம்.திருநீலகண்டர்
பாடல்.பாபநாசம் சிவன்
பாடியவர் : M K தியாகராஜ பாகவதர் 


தீன கருணாகரனே நடராஜா..........................நீலகண்டனே!
தீன கருணாகரனே நடராஜா..........................நீலகண்டனே!




நின்னருள் புகழ்ந்து பணியும்
என்னையும் இரங்கி யருளும்
நின்னருள் புகழ்ந்து பணியும்
என்னையும் இரங்கி யருளும்
மௌன குருவே ஹரனே எனையாண்ட நீலகண்டனே
மௌன குருவே ஹரனே எனையாண்ட நீலகண்டனே
தீன கருணாகரனே நடராஜா...............நீலகண்டனே


மீன லோச்சனி மணாளா
தாண்டவமாடும் சபாபதே
மீன லோச்சனி மணாளா
தாண்டவமாடும் சபாபதே
ஞானிகள் மனம் விரும்பும் நீலகண்டனே
மௌன குருவே, மௌன குருவே, மௌன குருவே,
மௌன குருவே.........ஹரனே
எனையாண்ட நீலகண்டனே
தீன கருணாகரனே நடராஜா...........நீலகண்டனே


ஆதியந்தம் இல்லா ஹரனே.......ஆ...........
............ஆ.............ஆ............
ஆதியந்தம் இல்லா ஹரனே
அன்பருள்ளம் வாழும் பரனே
ஆதியந்தம் இல்லா ஹரனே
அன்பருள்ளம் வாழும் பரனே
பாதி மதி மேனியனே பரமேஸா நீலகண்டனே
பாதி மதி மேனியனே பரமேஸா நீலகண்டனே
தீன கருணாகரனே நடராஜா..........நீலகண்டனே..........




                       இறை பணியில் 
        
                     திருவடி முத்துகிருஷ்ணன்