புதன், டிசம்பர் 21, 2011

திருவாசகத்தில் இருந்து

          மணிவாசக பெருமான் அருளிய
   திருவாசகத் தேனிலிருந்து சில துளிகள்
       திருவாசகத்துக்கு உருகார் ஒரு வாசகத்துக்கும் உருகார் 




மெய்தான் அரும்பி விதிர் விதிர்த்து உன் விரையார் கழற்கு என்
கைதான் தலை வைத்துக் கண்ணீர் ததும்பி வெதும்பி உள்ளம்
பொய்தான் தவிர்ந்து உன்னைப் போற்றி சயசய போற்றி என்னும்
கைதான் நெகிழ விடேன் உடையாய் என்னைக் கண்டு கொள்ளே .


உடம்பு மயிர்க் கூச்செறிந்து நடுநடுங்குகிறது உன் நறுமணம் கமழும் மலர்ப் பதத்தைக் கை தலைமேல் வைத்து வணக்கம் செலுத்துகிறது . கண்கள் பேரானந்தத்தில் கண்ணீர் ததும்புகிறது . உள்ளம் வெதும்பி பொய் நீங்கி சயசய என்று உனைப் போற்றுகிறது . அப்பனே உன் அடியைப் போற்றுவதை நான் கைவிட மாட்டேன் . என்னை உடையவனே என்னை ஏற்றுகொள் .


கொள்ளேன் புரந்தரன் மால் அயன் வாழ்வு குடிகெடினும்
நள்ளேன் நினது அடியாரொடு அல்லால் நரகம் புகினும்
எள்ளேன் திருவருளாலே இருக்கப் பெறின் ; இறைவா
உள்ளேன் பிறதெய்வம் உன்னை அல்லாது எங்கள் உத்தமனே .


இந்திரன் , திருமால் , நான்முகன் ஆகிய இவர்களுடைய பதவிகள் நான் விரும்ப மாட்டேன் . என் குடி கெட்டு விடுவதாக இருந்தாலும் உன் அடியவர் அல்லாதவருடன் பேச மாட்டேன் . கொடிய நரகம் போவதாக இருந்தாலும் வெறுக்காமல் உன் திருவருளாலே அங்கே இருந்துவிடுவேன் . எம்பெருமானே எல்லாவற்றிற்கும் உயர்ந்த , சிறந்த உன்னை அல்லாது ஒரு தெய்வத்தை ஒரு போதும் என் மனது நினைக்காது .


நாடகத்தால் உன் அடியார் போல் நடித்து நான் நடுவே 
வீடகத்தே புகுந்திடுவான் மிகப் பெரிதும் விரைகின்றேன் 
ஆடகச்சீர் மணிக்குன்றே இடையறா அன்பு உனக்கு என் 
ஊடகத்தே நின்று உருகத் தந்தருள் எம் உடையானே 


நாடகத்தில் நடிப்பது போல உன் அடியார் போல் நடித்து அவர்களுக்கு நடுவில் இருந்து வீடு அடைவதற்கு ஆயத்தமாக உள்ளேன் பொன்பதிந்த மணிகளுடைய குன்று போன்றவனே , உன்றன் மேல் நீங்காத அன்பு என் மனதில் நிலைத்து இருக்குமாறு உன் அடிமையாகிய எனக்கு அருள் செய்ய வேண்டும் அப்பனே .



           என்றும் இறை பணியில் 



                                                     திருவடி முத்துகிருஷ்ணன் 

1 கருத்து: