வியாழன், அக்டோபர் 20, 2011

சித்தர் பாடல்களில் இருந்து 11

ஞானகுரு பட்டினத்தார்
        பாடல்களில் இருந்து .....



மானார் விழியைக் கடந்தேறி வந்தனன் வாழ்குருவும்
கோனாகி என்னைக் குடியேற்றிக் கொண்டனன் குற்றமில்லை
போனாலும் பேறு இருந்தாலும் நற்பேறிது பொய் யன்றுகாண்
ஆனாலும் இந்த உடம்போடு இருப்பது அருவருப்பே !



மான் போன்று மயக்கும் கண்களை உடைய மாதரின் பார்வையிலே தப்பித்து துறவு எனும் மேட்டை அடைந்து வந்தேன் . சிவமும் எனக்கு குருவாகி என்னை ஆண்டு கொண்டு என் உளம் குடியேறி அவன் உள்ளத்தில் என்னை குடியேற்றி விட்டான் . இனி எனக்கு பாதகமில்லை ஏனென்றால் இவ்வுலகம் அழிந்தாலும் எனக்கு திருவடிப்பேறு கிடைத்து விடும் , அழியாமல் போனாலும் திருவடிப்பேறு கிடைக்கும் என்பது பொய்யில்லை ஆனால் அழியப் போகிற இந்த நாற்றமெடுக்கும் உடம்போடு இருக்கவே அருவருப்பாக உள்ளது .



கல்லால் எறியுண்டும் காலால் உதையுண்டும் காளைகையில்
வில்லால் அடியுண்டு முன்னால் விடமுண்டு மேலளித்துப்
பல்லால் புரமெரிஏ கம்பவாணர் பாதாம்புயத்தின்
சொல்லால் செவியினில் கேளாதிருந்ததென தொல்வினையே.



 சாக்கிய நாயனார் எறிந்த கல்லை மலராக ஏற்றாய் .கண்ணப்ப நாயனார் காலால் மிதித்ததையும் குழந்தை தந்தையை மிதிப்பது போல சந்தோசமாக ஏற்றாய் ,அர்ஜுனன் உன்னை வில்லால் அடித்ததையும் ஏற்றாய் , தேவர்களும் அசுரர்களும் பாற்கடலை கடைந்து ஆலம் என்னும் கொடிய விஷத்தினால் செய்வதறியாது கலங்கியபோது அவ்விஷத்தை உண்டு அனைவரையும் காத்தாய் , முப்புரங்களை மெள்ளச் சிரித்தே எரித்தாய் அவ்வளவு பெருமை வாய்ந்த ஏகம்பவாணர் பாத பெருமைகளை பேசாமல் இருந்ததும் , பேசுபவர்களின் பேச்சு கேட்காமல் இருந்ததும் முற்பிறவியில் செய்த ஊழ்வினையே ஆகும் .


ஓடு விழுந்து சீப்பாயும் ஒன்பதுவாய்ப் புண்ணுக்கு
இடு மருந்தை யான் அறிந்து கொண்டேன் - கடு அருந்தும்
தேவாதி தேவன் திருவொற்றியூர்த் தெருவில்
போவார் அடியிற் பொடி !



எம்பெருமான் ஈசன் குடிகொண்டிருக்கும் திருவொற்றியூர் தெருவில் நடப்பவர்களின் பாதம் பட்ட மண்ணே ஒன்பது துவாரங்களை கொண்ட உடம்பென்னும் புண்ணிற்கு இடும் அருமருந்து என நான் அறிந்து கொண்டேன் .


எத்தனை ஊர்? எத்தனை வீ(டு) எத்தனை தாய் ? பெற்றவர்கள்
எத்தனை பேர் இட்டழைக்க ஏன் என்றேன் - நித்தம்
எனக்குக் கலையாற்றாய் ஏகம்பா கம்பா
உனக்குத் திருவிளையாட்டோ?



பிறந்த பிறவிகளில் , எத்தனை ஊரில் பிறந்தேனோ , எத்தனை வீடுகளில் குடியிருந்தேனோ , எத்தனை தாயாரோ , எத்தனை பெற்றவர்கள் எனக்கு பெயர் வைத்து அழைத்த போது என்ன வென்று கேட்டேனோ , இவ்வாறு என்னை சுழல வைத்து களைப்படைய வைப்பதுதான் ஏகம்ப நாதனே உனது திருவிளையாடலோ , இறைவா இப்பிறவி பிணியை ஒழித்து என்னை உனது திருவடிகளில் சேர்த்து இளைப்பாறுதல் தர மாட்டாயா .


அத்திமுதல் எறும்பீ றானவுயிர் அத்தனைக்கும் 
சித்தமகிழ்ந் தளிக்கும் தேசிகா - மெத்தப்
பசிக்குதையா பாவியேன் பாழ்வயிற்றைப்பற்றி
இசிக்குதையா காரோண ரே.

யானை முதல் சிறு எறும்புவரைக்கும் உள்ள அனைத்து உயிர்களுக்கும் திருவுளம் மகிழ்ந்து உணவளிக்கும் சிதம்பர தேசிகனே , எனக்கு மிகவும் பசி எடுக்குதே இந்த பாழ் வயிற்றை பிடித்து இழுக்குதே திருக் காரோணத்தில் எழுந்தருள் செய்யும் சிவபெருமானே .

பொய்யை ஒழியாய் புலாலை விடாய் காளத்தி
ஐயரை எண்ணாய் அறம் செய்யாய் - வெய்ய
சினமே ஒழியாய் திருவெழுத்தைந்து ஓதாய்
மனமே உனக்கென்ன மாண்பு ?

பொய் பேசுவதை நிறுத்த மாட்டாய் , மாமிசம் உண்பதை தவிர்க்க மாட்டாய் திருக்காளத்தியில் உயையும் பெருமானை நினைக்க மாட்டாய் தருமம் செய்ய மாட்டாய் விஷத்தை விட கொடுமையான கோபத்தை ஒழிக்க மாட்டாய் பஞ்சாட்சரம் ஓத மாட்டாய் வீணாய் காலம் கழிக்கும் என் மனமே உனக்கு என்ன பெருமை கிடைத்து விடும் .

மாதா உடல் சலித்தாள் வல்வினையேன் கால்சலித்தேன்
வேதாவும் கைசலித்து விட்டானே - நாதா
இருப்பையூர் வாழ் சிவனே இன்னம்ஓர் அன்னை
கருப்பையூர் வாராமற் கா .

என்னை பல பிறவிகளில் பெற்ற , எண்ணற்ற தாயாரும் பெற்று உடல் தளர்ந்து விட்டார் , வலிய வினையினை உடைய நானும் கால் தளர்ந்து விட்டேன் , பிரமனும் எனை படைத்து ஓய்ந்து போனான் . போதுமையா இருப்பையூரில் வாழும் சிவபெருமானே அடுத்து இன்னுமோர் அன்னை வயிற்றில் பிறவாமல் என்னை காத்தருள் செய்ய வேண்டும் ஐயனே .

காலன் வருமுன்னே கண் பஞ்சடை முன்னே
பாலுண் கடைவாய்ப்படுமுன்னே மேல்வி ழுந்தே
உற்றார் அழுமுன்னே ஊரார் சுடுமுன்னே
குற்றாலத் தானையே கூறு !

எமன் வருவதற்கு முன்னதாக கண்களில் பஞ்சடைத்து பார்வை குறையும் முன்னாக பால் உனது கடைவாயில் பட்டு வழிந்தோடும் முன்பாக உன் உடல் மீது உறவினர் விழுந்து அழும் முன்னால் மாயானம் கொண்டு ஊரார் சுடுவதற்கு முன்னால் குற்றால நாதனை துதித்து நற்கதியை அடைவாய் .

சிற்றம் பலமும் சிவனும் அருகிருக்க
வெற்றம் பலம் தேடி விட்டோமே - நித்தம்

பிறந்த இடத்தைத் தேடுதே பேதை மட நெஞ்சம்
கறந்த இடத்தை நாடுதே கண் .



சிற்றம்பலத்திலாடும் சிவபெருமானும் சிற்றம்பலமும் நமதருகினில் இருப்பதை மறந்து ஒன்றும் இல்லாத மாயையை தேடி அலைந்து அல்லல் பட்டுக் கொண்டிருக்கிறோமே ,மாயை ஒழிய உனது திருவடியைத் தேடாமல் இந்த மட நெஞ்சமானது தான் பிறந்த இடத்தின் மீது கொண்ட மோகத்தால் அந்த இடத்தை தேடி ஓடிகொண்டிருக்கிறது , கண்கள் பசியாறிய தனங்களையே நாடி தேடி கொண்டிருக்கிறது .


நச்சரவம் பூண்டானை நன்றாய்த் தொழுவதுவும்
இச்சையிலே தான் அங் கிருப்பதுவும் - பிச்சைதனை
வாங்குவதும் உண்பதுவும் வந்துதிரு வாயிலிலே
தூங்குவம் தானே சுகம்.



ஞ்சினை உடைய நாகத்தினை அணிந்தவனை மனமுருகி தொழுவதும் , அவனை வணங்கும் ஆசையிலே அங்கேயே இருப்பதுவும் , பசித்தால் பிச்சை வாங்கி பசி போக்கி பின் ஆலய வாசலிலே உறங்குவதும் தான் சொல்வதற்கரிய சுகம் எனக்கு . 


விட்டுவிடப் போகுதுயிர் விட்ட உடனே உடலைச்
சுட்டுவிடப் போகின்றார் சுற்றத்தார் பட்டது பட்(டு)
எந்நேரமும் சிவனை ஏந்துங்கள் போற்றுங்கள்
சொன்னேன் அதுவே சுகம்.



இந்த உடலை விட்டு உயிர் நீங்க போகிறது . நீங்கினால் உடனே உடலைச் சுட்டு விடப் போகிறார் உறவினர்கள் பட்டதெல்லாம் போதும் இனியும் துன்பப் படாமல் இருக்க சிவபெருமானை சிந்தித்து சிந்தையிலே அவனை ஏற்றி எப்போதும் அவனை நினைந்து இருங்கள் . போற்றி வணங்குங்கள் அதுதான் பிறவிப்பிணி நீக்கி சுகமான பேரு வாழ்வு அளிக்கும் .


இன்னம் பிறக்க இசைவையோ நெஞ்சமே ?
மன்னர் இவர் என்றிருந்து வாழ்ந்தாரை - முன்னம்
எரிந்தகட்டை மீதில் இணைக்கோ வணத்தை
உரிந்துருட்டிப் போட்டது கண்டு !



மன்னர் என்று வாழ்ந்து அவர் இறந்து போய்விடும் போது முன்னம் எரித்த சவத்தின் மீந்த எரி கட்டையில் கோவணத்தையும் உரிந்து அக்கட்டையின் மேல் உடலை உருட்டிப் போட்டது கண்டும் , நிலையில்லாத வாழ்வென்று அறிந்தும் இன்னும் பிறவி எடுக்க ஆசை கொள்வாயா மனமே .  


இருப்பதுபொய் போவதுமெய் என்றெண்ணி நெஞ்சே
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்ததொந்தி
நம்மதென்று நாமிருப்ப நாய்நரிகள் பேய்கழுகு
தம்மதென்று தாமிருக்கும் தான் !



மனமே இவ்வுடலோடு வாழ்வது என்பது பொய் , உடலை விட்டு நீங்குவதுதான் உண்மை . வயிறாய் வளர்க்க வேண்டி பிறருக்கு தீங்கு செய்யாமல் இருப்பாயாக , பருத்த தொந்தி உனதென்று வளர்த்து கொண்டிருப்பாய் ஆனால் நாய் , நரி , பேய் , கழுகு தமக்கு விருந்து வளர்ந்து கொண்டிருக்கிறது என்று எண்ணிக் கொண்டிருக்கும் . என் நெஞ்சமே ஒருவருக்கும் தீங்கு செய்யாமல் இரு .


 நாப்பிளக்கப் பொய் உரைத்துநவநிதியம் தேடி 
   நலன் ஒன்றும் அறியாத நாரியரை கூடிப்
பூப்பிளக்க வருகின்ற புற்றீசல் போலப்
   புலபுலெனக் கலகலெனப் புதல்வர்களைப் பெறுவீர்
காப்பதற்கும் வகையறியீர்; கைவிடவும் மாட்டீர்
   கவர்பிளந்த மரத்துளையில் கால் நுழைத்துக் கொண்டே
ஆப்பதனை அசைத்துவிட்ட குரங்கதனை போல
   அகப்பட்டீர் கிடந்துழல அகப்பட்டீரே !

பொருள் தேடும் பொருட்டு நாக்கு பிளவு படும் அளவிற்கு பொய் உரைத்து நன்மை என்பது சிறிதும் இல்லாத பெண்களை மணந்து பின் அவர்களோடு இன்பம் துய்த்து அதன் மூலமாக அவள் கருவுற்று பின் திரும்பவும் ஆசை கொண்டு அதாவது பூமியிலே புற்று வைத்து புற்று பிளவு பட்டால் வெளி வரும் புற்றீசல் போன்று இப்படியே நிறைய குழந்தைகளை பெற்று மனைவியையும் குழந்தைகளையும்  காப்பதற்கும் வழிதெரியாமல் கைவிடவும் மனம் இல்லாமல் நீங்கள் செய்யும் கூத்து எப்படி இருக்கிறதென்றால் மரத்தை பிளந்து வைத்த ஆப்பை தன் காலை அந்த பிளவினுள் நுழைத்து ஆப்பையும் அசைத்து எடுத்து அந்த பிளவினில் கால் மாட்டிக் கொண்டு விழி பிதுங்கும் குரங்கின் நிலை போல இருக்கிறது .

மண்ணும் உருகும் மரம் உருகும் மாயை உருகும் மால்உருகும்
பெண்ணும் உருகும் ஆண் உருகும் பேதாபேத வகை உருகும்
அண்ணல் உருகும் இடத்தமர்த்த ஆத் தாள் உருகும் அரவணையான்
எண்ணி உருகும் குருநாதன் என்பால் உரைத்த ஓர் மொழியே.

எனக்கு குருவாக இருந்து சிவபெருமான் உபதேசித்த ஒரு வாக்கியத்தில் இந்த மண்ணும் உருகும்  மரமும் உருகும் மாய வாழ்வும் உருகும் மாயையின் காரியமாகிய மோகமும் உருகும் ஆண் பெண் பேத வகையும் உருகும் அண்ணலாகிய எம்பெருமானும் உருகுவார் அவர் இடம் அமர்ந்த உலக அன்னையாகிய உமையாளும் உருகுவாள் பாம்பின்மேற் பள்ளி கொள்ளும் பரந்தாமனும் உருகுவான் அனைத்தையும் உருக வைக்கும் ஒரு அமுத மொழியை உபதேசித்து என்னை ஆண்டு கொண்டு விட்டான் ஈசன் .  

பாடல்கள் முற்று பெற்றது .

சிவத்தை போற்றுவோம் !! சித்தர்களை போற்றுவோம் !!

            - திருவடி முத்துகிருஷ்ணன் 








புதன், அக்டோபர் 19, 2011

சித்தர் பாடல்கள் (ராமலிங்க சுவாமிகள் ஞானம்)

ராமலிங்க சுவாமிகள் ஞானம் 
பாங்கியர்க்கு அறிவுறுத்தல் 

அம்பலத்தில் ஆடுகின்றார் பாங்கிமாரே - அவர்
ஆட்டங்கண்டு நாட்டங்கொண்டேன் பாங்கிமாரே

ஆடுகின்ற சேவடிமேற் பாங்கிமாரே - மிக
ஆசைகொண்டு வாடுகின்றேன் பாங்கிமாரே

இன்பவடி வாய்ச்சபையிற் பாங்கிமாரே - நட
மிட்டவர்மே லிட்டம்வைத்தேன் பாங்கிமாரே

ஈனவுடற் கிச்சைவையேன் பாங்கிமாரே - நட
னேசர்தமை யெய்தும்வண்ணம் பாங்கிமாரே

உத்தமர்பொன் னம்பலத்தே பாங்கிமாரே - இன்ப
உருவாகி ஓங்குகின்றார் பாங்கிமாரே

ஊனவுல கைக்கருதேன் பாங்கிமாரே - மன்றில்
உத்தமருக் குறவாவேன் பாங்கிமாரே

கற்பனையெல் லாங்கடந்தார் பாங்கிமாரே - என்றன்
கற்பனைக்குட் படுவாரோ பாங்கிமாரே

கண்டிலர்நான் படும்பாடு பாங்கிமாரே - மூன்று
கண்ணுடையா ரென்பாரையோ பாங்கிமாரே

கன்மனமெல் லாங்கரைப்பார் பாங்கிமாரே - மனங்
கரையாரென் னளவிலே பாங்கிமாரே

கள்ளமொன்று மறியேனான் பாங்கிமாரே - என்னைக்
கைவிடவுந் துணிவாரோ பாங்கிமாரே

கற்பழித்துக் கலந்தாரே பாங்கிமாரே - இன்று
கைநழுவ விடுவாரோ பாங்கிமாரே

கண்டவரெல் லாம்பழிக்கப் பாங்கிமாரே - என்றன்
கன்னியழித் தேயொளித்தார் பாங்கிமாரே

காமனைக்கண் ணாலெரித்தார் பாங்கிமாரே - என்றன்
காதலைக்கண் டறிவாரோ பாங்கிமாரே

காவலையெல் லாங்கடந்து பாங்கிமாரே - என்னைக்
கைகலந்த கள்ளரவர் பாங்கிமாரே

காணவிழைந் தேனவரைப் பாங்கிமாரே - கொண்டு
காட்டுவாரை யறிந்திலேன் பாங்கிமாரே

கிட்டவர வேண்டுமென்றார் பாங்கிமாரே - நான்
கிட்டுமுன்னே யெட்டநின்றார் பாங்கிமாரே

கின்னரங்கே ளென்றிசைத்தார் பாங்கிமாரே - நான்
கேட்பதன்முன் சேட்படுத்தார் பாங்கிமாரே

கிள்ளையைத்தூ தாவிடுத்தேன் பாங்கிமாரே - அது
கேட்டுவரக் காணேனையோ பாங்கிமாரே

கீதவகை பாடிநின்றார் பாங்கிமாரே - அது
கேட்டுமதி மயங்கினேன் பாங்கிமாரே

கீழ்மைகுறி யாமலென்னைப் பாங்கிமாரே - மனக்
கேண்மைகுறித் தாரேயன்று பாங்கிமாரே

கீடமனை யேனெனையும் பாங்கிமாரே - அடிக்
கேயடிமை கொண்டாரன்று பாங்கிமாரே

குற்றமெல்லாங் குணமாகப் பாங்கிமாரே - கொள்ளுங்
கொற்றவரென் கொழுநர்காண் பாங்கிமாரே

குற்றமொன்றுஞ் செய்தறியேன் பாங்கிமாரே - என்னைக்
கொண்டுகுலம் பேசுவாரோ பாங்கிமாரே

குஞ்சிதப்பொற் பாதங்கண்டாற் பாங்கிமாரே - உள்ள
குறையெல்லாந் தீருங்கண்டீர் பாங்கிமாரே

கூற்றுதைத்த பாதங்கண்டீர் பாங்கிமாரே - நங்கள்
குடிக்கெல்லாங் குலதெய்வம் பாங்கிமாரே

கூறரிய பதங்கண்டு பாங்கிமாரே - களி
கொண்டுநிற்க விழைந்தேனான் பாங்கிமாரே

கூடல்விழைந் தேனவரைப் பாங்கிமாரே - அது
கூடும்வண்ணம் கூட்டிடுவீர் பாங்கிமாரே

        வெண்ணிலா கண்ணிகள் 

தன்னையறிந் தின்பமுற வெண்ணிலாவே - ஒரு
தந்திரநீ சொல்லவேண்டும் வெண்ணிலாவே

நாதமுடி மேலிருந்த வெண்ணிலாவே - அங்கே
நானும்வர வேண்டுகின்றேன் வெண்ணிலாவே

சச்சிதானந் தக்கடலில் வெண்ணிலாவே - நானுந்
தாழ்ந்துவிழ வேண்டுகின்றேன் வெண்ணிலாவே

இராப்பகலில் லாவிடத்தே வெண்ணிலாவே - நானும்
இருக்கவெண்ணி வாடுகின்றேன் வெண்ணிலாவே

தேசுநிற மாய்நிறைந்த வெண்ணிலாவே - நானுஞ்
சிவமயம தாய்விழைந்தேன் வெண்ணிலாவே

போதநடு வூடிருந்த வெண்ணிலாவே - மலப்
போதமற வேண்டுகின்றேன் வெண்ணிலாவே

ஆருமறி யாமலிங்கே வெண்ணிலாவே - அரு
ளாளர்வரு வாரோசொல்லாய் வெண்ணிலாவே

அந்தரங்க சேவைசெய்ய வெண்ணிலாவே - யெங்கள்
ஐயர்வரு வாரோசொல்லாய் வெண்ணிலாவே

வேதமுடி மேலிருந்த வெண்ணிலாவே - மல
வேதையுள வேதுசொல்லாய் வெண்ணிலாவே

குண்டலிப்பால் நின்றிலங்கும் வெண்ணிலாவே - அந்தக்
குண்டலிப்பால் வேண்டுகின்றேன் வெண்ணிலாவே

ஆதியந்த மென்றுரைத்தார் வெண்ணிலாவே - அந்த
ஆதியந்த மாவதென்ன வெண்ணிலாவே

வித்திலாம லேவிளைந்த வெண்ணிலாவே - நீதான்
விளைந்தவண்ண மேதுசொல்லாய் வெண்ணிலாவே

முப்பொருளு மொன்றதென்பார் வெண்ணிலாவே - அந்த
மூன்றுமொன்றாய் முடிந்ததென்ன வெண்ணிலாவே

நானதுவாய் நிற்கும்வண்ணம் வெண்ணிலாவே - ஒரு
ஞானநெறி சொல்லுகண்டாய் வெண்ணிலாவே

ஞானமய மாய்விளங்கும் வெண்ணிலாவே - என்னை
நானறியச் சொல்லுகண்டாய் வெண்ணிலாவே

வாசிவாசி யென்றுரைத்தார் வெண்ணிலாவே - அந்த
வாசியென்ன பேசுகண்டாய் வெண்ணிலாவே

ஐந்தலைப்பாம் பாட்டுகின்றார் வெண்ணிலாவே - அவர்
அம்பலத்தில் நின்றதென்ன வெண்ணிலாவே

ஓரெழுத்தி லைந்துண்டென்பார் வெண்ணிலாவே - அது
ஊமையெழுத் தாவதென்ன வெண்ணிலாவே

அம்பலத்தில் ஆடுகின்றார் வெண்ணிலாவே - அவர்
ஆடுகின்ற வண்ணமென்ன வெண்ணிலாவே

அந்தரத்தில் ஆடுகின்றார் வெண்ணிலாவே - அவர்
ஆடும்வகை எப்படியோ வெண்ணிலாவே

அணுவிலணு வாயிருந்தார் வெண்ணிலாவே - எங்கும்
ஆகிநின்ற வண்ணமென்ன வெண்ணிலாவே

அண்டபகி ரண்டமெல்லாம் வெண்ணிலாவே - ஐயர்
ஆட்டமென்று சொல்வதென்ன வெண்ணிலாவே

அம்பரத்தி லாடுகின்றார் வெண்ணிலாவே - என்னை
ஆட்டுகின்றார் இம்பரத்தே வெண்ணிலாவே

             காட்சிக்கண்ணி 

ஆணிப்பொன் னம்பலத் தேகண்ட காட்சிகள் 
அற்புத காட்சியடி - அம்மா 
அற்புத காட்சியடி !

சோதிமலை யொன்று தோன்றிற் றதிலொரு
வீதியுண்டாச்சுதடி - அம்மா 
வீதியுண்டாச்சுதடி !

வீதியில் சென்றேன்அவ் வீதி நடுஒரு
மேடை இருந்ததடி - அம்மா
மேடை இருந்ததடி !

மேடைமேல் ஏறினேன் மேடைமேல் அங்கொரு
கூடம் இருந்ததடி - அம்மா
கூடம் இருந்ததடி !

கூடத்தை நாடஅக் கூடமேல் ஏழ்நிலை
மாடம் இருந்ததடி - அம்மா
மாடம் இருந்ததடி !

ஏழ்நிலைக் குள்ளும் இருந்த அதிசயம்
என்னென்று சொல்வனடி - அம்மா
என்னென்று சொல்வனடி !

ஓர்நிலை தன்னில் ஒளிர்முத்து வெண்மணி
சீர்நீலம் ஆச்சுதடி - அம்மா
சீர்நீலம் ஆச்சுதடி !

பாரோர் நிலையில் கருநீலம் செய்ய
பவளம தாச்சுதடி - அம்மா
பவளம தாச்சுதடி !

மற்றோர் நிலையில் மரகதப் பச்சைசெம்
மாணிக்கம் ஆச்சுதடி - அம்மா
மாணிக்கம் ஆச்சுதடி !

பின்னோர் நிலையில் பெருமுத்து வச்சிரப்
பேர்மணி ஆச்சுதடி - அம்மா
பேர்மணி ஆச்சுதடி !

வேறோர் நிலையில் மிகும்பவ ளத்திரள்
வெண்மணி ஆச்சுதடி - அம்மா
வெண்மணி ஆச்சுதடி !

புகலோர் நிலையில் பொருந்திய பன்மணி
பொன்மணி ஆச்சுதடி - அம்மா
பொன்மணி ஆச்சுதடி !

பதியோர் நிலையில் பகர்மணி எல்லாம்
படிகம தாச்சுதடி - அம்மா
படிகம தாச்சுதடி !

ஏழ்நிலை மேலே இருந்ததோர் தம்பம்
இசைந்தபொற் றம்பமடி - அம்மா
இசைந்தபொற் றம்பமடி !

பொற்றம்பம் கண்டேறும் போதுநான் கண்ட
புதுமைஎன் சொல்வனடி - அம்மா
புதுமைஎன் சொல்வனடி !

ஏறும்போ தங்கே எதிர்ந்த வகைசொல
என்னள வல்லவடி - அம்மா
என்னள வல்லவடி !

ஆங்காங்கே சத்திகள் ஆயிரம் ஆயிரம்
ஆகவந் தார்களடி - அம்மா
ஆகவந் தார்களடி !

வந்து மயக்க மயங்காமல் நான்அருள்
வல்லபம் பெற்றனடி - அம்மா
வல்லபம் பெற்றனடி !

வல்லபத் தால்அந்த மாதம்பத் தேறி
மணிமுடி கண்டேனடி - அம்மா
மணிமுடி கண்டேனடி !

மணிமுடி மேலோர் கொடுமுடி நின்றது
மற்றது கண்டேனடி - அம்மா
மற்றது கண்டேனடி !

கொடுமுடி மேல்ஆயி ரத்தெட்டு மாற்றுப்பொற்
கோயில் இருந்ததடி - அம்மா
கோயில் இருந்ததடி !

கோயிலைக் கண்டங்கே கோபுர வாயிலில்
கூசாது சென்றனடி - அம்மா
கூசாது சென்றனடி !

கோபுர வாயிலுள் சத்திகள் சத்தர்கள்
கோடிபல் கோடியடி - அம்மா
கோடிபல் கோடியடி !

ஆங்கவர் வண்ணம்வெள் வண்ணம்செவ் வண்ணமுன்
ஐவண்ணம் ஆகுமடி - அம்மா
ஐவண்ணம் ஆகுமடி !

அங்கவ ரெல்லாம்இங் கார்இவர் என்னவும்
அப்பாலே சென்றனடி - அம்மா
அப்பாலே சென்றனடி !

அப்பாலே சென்றேன்அங் கோர்திரு வாயிலில்
ஐவர் இருந்தாரடி - அம்மா
ஐவர் இருந்தாரடி !

மற்றவர் நின்று வழிகாட்ட மேலோர்
மணிவாயில் உற்றேனடி - அம்மா
மணிவாயில் உற்றேனடி !

எண்ணும்அவ் வாயிலில் பெண்ணோ டாணாக
இருவர் இருந்தாரடி - அம்மா
இருவர் இருந்தாரடி !

அங்கவர் காட்ட அணுக்கத் திருவாயில்
அன்பொடு கண்டேனடி - அம்மா
அன்பொடு கண்டேனடி !

அத்திரு வாயிலில் ஆனந்த வல்லிஎன்
அம்மை இருந்தாளடி - அம்மா
அம்மை இருந்தாளடி !

அம்மையைக் கண்டேன் அவளருள் கொண்டேன்
அமுதமும் உண்டேனடி - அம்மா
அமுதமும் உண்டேனடி !

தாங்கும் அவளரு ளாலே நடராஜர்
சந்நிதி கண்டேனடி - அம்மா
சந்நிதி கண்டேனடி !

ந்நிதி யில்சென்று நான்பெற்ற பேறது
சாமி அறிவாரடி - அம்மா
சாமி அறிவாரடி !

ஆணிப்பொன் னம்பலத் தேகண்ட காட்சிகள்
அற்புதக் காட்சியடி - அம்மா
அற்புதக் காட்சியடி !

          சிவதரிசனம் காணல்

திருவுடையாய் சிற்சபைவாழ் சிவபதியே எல்லாம்
செய்யவல்ல தனித்தலைமைச் சித்தசிகா மணியே
உருஉடைஎன் உயிர்க்குயிராய் ஒளிர்கின்ற ஒளியே
உன்னுதொறும் என்னுளத்தே ஊறுகின்ற அமுதே
அருவுடைய பெருவெளியாய் அதுவிளங்கு வெளியாய்
அப்பாலு மாய்நிறைந்த அருட்பெருஞ்சோ தியனே
மருவுடையாள் சிவகாம வல்லிமண வாளா
வந்தருள்க அருட்சோதி தந்தருள்க விரைந்தே

சொல்லவனே பொருளவனே துரியபதத் தவனே
தூயவனே நேயவனே சோதிவுரு வவனே
நல்லவனே நன்னிதியே ஞானசபா பதியே
நாயகனே தாயகனே நண்பவனே அனைத்தும்
அல்லவனே ஆனவனே அம்மையப்பா என்னை
ஆண்டவனே தாண்டவனே அருட்குருவே எல்லாம்
வல்லவனே சிவகாம வல்லிமண வாளா
மன்னவனே என்னவனே வந்தருள்க விரைந்தே

துரியநிலை துணிந்தவரும் சொல்லரும்மெய்ப் பொருளே
சுத்தசிவா னந்தசபைச் சித்தசிகா மணியே
பெரியசிவ பதியேநின் பெருமைஅறிந் திடவே
பேராசைப் படுகின்றேன் பித்தர்களில் பெரியேன்
கரியமணித் திறத்தினையும் காணவல்லேன் அல்லேன்
கண்மணியே நின்திறத்தைக் காணுதல் வல்லேனோ
அரியபெரும் பொருளா முன் அருட்சோதி எனக்கே
அளித்தனையே லறிந்துகொள்வே னளித்திடுக விரைந்தே

மறப்பறியாப் பேரறிவில் வாய்த்தபெருஞ் சுகமே
மலைவறியா நிலைநிரம்ப வயங்கியசெம் பொருளே
இறப்பறியாத் திருநெறியில் என்னைவளர்த் தருளும்
என்னுடைய நற்றாயே எந்தாயே நினது
சிறப்பறியா உலகமெலாம் சிறப்பறிந்து கொளவே
சித்தசிகா மணியேநீ சித்திஎலாம் விளங்கப்
பிறப்பறியாப் பெருந்தவரும் வியப்பவந்து தருவாய்
பெருங்கருணை அரசேநீ தருந்தருண மிதுவே

முன்னுழைப்பால் உறும்எனவே மொழிகின்றார் மொழியின்
முடிவறியேன் எல்லாம்செய் முன்னவனே நீஎன்
தன்னுழைப்பார்த் தருள்வாயேல் உண்டனைத்தும் ஒருநின்
தனதுசுதந் தரமே இங்கெனது சுதந்தரமோ
என்னுழைப்பால் என்பயனோ இரங்கி அருளாயேல்
யானார்என் அறிவெதுமேல் என்னைமதிப் பவரார்
பொன்னுழைப்பால் பெறலு மரிதருள் இலையேல் எல்லாம்
பொதுநடஞ்செய் புண்ணியநீ எண்ணியவா றாமே

விழித்துவிழித் திமைத்தாலும் சுடர்உதயம் இலையேல்
விழிகள்விழித் திளைப்பதலால் விளைவொன்றும் இலையே
மொழித்திறஞ்செய் தடிக்கடிநான் முடுகிமுயன் றாலும்
முன்னவநின் பெருங்கருணை முன்னிடல்இன் றெனிலோ
செழித்துறுநற் பயன்எதுவோ திருவுளந்தான் இரங்கில்
சிறுதுரும்போர் ஐந்தொழிலும் செய்திடல்சத் தியமே
பழித்துரைப்பார் உரைக்கஎலாம் பசுபதிநின் செயலே
பரிந்தெனையும் பாடுவித்துப் பரிசுமகிழ்ந் தருளே

மாநிருபா திபர்சூழ மணிமுடிதான் பொறுத்தே
மண்ணாள வானாள மனத்தில்நினைத் தேனோ
தேனோருவா மொழிச்சியரைத் திளைக்கவிழைந் தேனோ
தீஞ்சுவைகள் விரும்பினனோ தீமைகள் செய்தேனோ
நானொரு பாவமு மறியேன் நன்னிதியே எனது
நாயகனே பொதுவிளங்கும் நடராஜ பதியே
ஏன்ஒருமை இலர்போல்நீ இருக்கின்றாய் அழகோ
என்ஒருமை அறியாயோ யாவும்அறிந் தாயே

பாவிமனக் குரங்காட்டம் பார்க்கமுடி யாதே
பதிவெறுத்தேன் நிதிவெறுத்தேன் பற்றனைத்தும் தவிர்ந்தேன்
ஆவிஉடல் பொருளைஉன்பாற் கொடுத்தேன்உன் அருட்பே
ராசைமய மாகிஉனை அடுத்துமுயல் கின்றேன்
கூவிஎனை ஆட்கொள்ள நினையாயோ நினது
குறிப்பறியேன் பற்பலகால் கூறிஇளைக் கின்றேன்
தேவிசிவ காமவல்லி மகிழும்மண வாளா
தெருள்நிறைவான் அமுதளிக்கும் தருணமிது தானே

கட்டவிழ்ந்த கமலம்எனக் கருத்தவிழ்ந்து நினையே
கருதுகின்றேன் வேறொன்றும் கருதுகிலேன் இதுதான்
சிட்டருளம் திகழ்கின்ற சிவபதியே நினது
திருவுளமே அறிந்ததுநான் செப்புதல்என் புவிமேல்
விட்டகுறை தொட்டகுறை இரண்டும்நிறைந் தனன்நீ
விரைந்துவந்தே அருட்சோதி புரிந்தருளும் தருணம்
தொட்டதுநான் துணைந்துரைத்தேன் நீஉணர்த்த உணர்ந்தே
சொல்வதலால் என்அறிவால் சொல்லவல்லேன் அன்றே

காட்டைஎலாம் கடந்துவிட்டேன் நாட்டைஅடைந் துனது
கடிநகர்ப்பொன் மதிற்காட்சி கண்குளிரக் கண்டேன்
கோட்டைஎலாம் கொடிநாட்டிக் கோலமிடப் பார்த்தேன்
கோயிலின்மேல் வாயிலிலே குறைகளெலாம் தவிர்ந்தேன்
சேட்டைஅற்றுக் கருவிஎலாம் என்வசம்நின் றிடவே
சித்திஎலாம் பெற்றேன்நான் திருச்சிற்றம் பலமேல்
பாட்டைஎலாம் பாடுகின்றேன் இதுதருணம் பதியே
பலந்தரும்என் உளந்தனிலே கலந்துநிறைந் தருளே

சித்திஎலாம் வல்லசிவ சித்தன்உளம் கலந்தான்
செத்தாரை எழுப்புகின்ற திருநாள்கள் அடுத்த
இத்தினமே தொடங்கி யழியாதநிலை அடைதற்
கேற்றகுறி ஏற்றவிடத் திசைந்தியல்கின் றனநாம்
சத்தியமே பெருவாழ்வில் பெருங்களிப்புற் றிடுதல்
சந்தேகித் தலையாதே சாற்றியஎன் மொழியை
நித்தியவான் மொழிஎன்ன நினைந்துமகிழ் தமைவாய்
நெஞ்சேநீ அஞ்சேல்உள் அஞ்சேல்அஞ் சேலே

  தொகுப்பு : திருவடி முத்துகிருஷ்ணன்