வியாழன், மார்ச் 22, 2018

மகான்களின் வாழ்வில்

மகான்களின் வாழ்வில் .....

மகான் ரிபு முனிவர் 


                                                       முனிவர்க்கெல்லாம் முனிவரான ரிபு முனிவர் தன் சீடன் நிதாங்கனை அழைத்தார் . " நிதாங்கா " நீ உன்னுடைய ஊருக்கு திரும்பி சென்று உலக வாழ்க்கை அனுபவத்தை உணர்ந்து வா என்று பணித்தார் . குரு பக்தியில் சிறந்து விளங்கிய நிதாங்கன் குருவை வணங்கி , உங்களை விட்டு நீங்கி எப்படி சுவாமி அடியேன் ஞானம் பெற முடியும் என்று வினவி நான் இந்த குருகுலத்தை விட்டு செல்ல மாட்டேன் என்று பிடிவாதமாய் இருந்தான் .

                ரிபு முனிவர் தன் சீடனிடம் , நிதாங்கா நான் கூறுவதைக் கேள் நான் எப்பொழுதும் உன்னுடன் இருக்கிறேன் கவலை கொள்ளாதே நீ சில அனுபவம் பெறவே உன்னை போகச் சொல்லுகிறேன் சென்று வா உன்னை நான் விரைவில் வந்தடைவேன் என்றார் . அவரை பணிவுடன் வணங்கி குரு வார்த்தைக்கு கட்டுப்பட்டு தன் ஊருக்கு திரும்பினான் . இயல்பு வாழ்க்கையில் ஈடுபட்டான் காலங்கள் பல கடந்தது . 

                      ஒரு நாள் அந்த நாட்டு அரசன் தன்னுடைய பட்டது யானை மீது ஊர்வலம் வந்தான் அங்கு மக்கள் மேளதாளத்துடன் ஆடிப்பாடி மகிழ்ச்சியுடன் வந்தனர் அவ்வழியே வந்த நிதாங்கன் அக்காட்சியை கண்டு ரசித்துக்கொண்டிருந்தான் . அப்போது ஒரு கை அவனுடைய தோளைத் தொட்டது . உடனே திரும்பி பார்த்தான் அழுக்கு ஆடையும் , கலைந்த கேசமுமாக ஒரு பெரியவர் நிதாங்கனை பார்த்து தம்பி , இங்கே என்ன கூட்டமாக இருக்கிறது என்று கேட்டார் . நிதாங்கன் அந்த பெரியவரின் தோற்றத்தை பார்த்து ஏளனமாய் சிந்தித்து இவருடன் என்ன சொல்ல என்று , அதுவா .. ராஜ யானை மேலே ஊர்வலம் போறார் என்று வேண்டா வெறுப்பாக சொல்லி நகர்ந்தான் .                        
                              ஓஹோ என்று இழுத்த பெரியவரை பரிதாபமாக பார்த்து , என்ன ஓஹோ .. நான் சொன்னது புரிஞ்சுதா என்று கேட்டான் . அதற்கு அந்த பெரியவர் ஹ்ம் புரியுது தம்பி ஊர்வலம் வருது சரிதான் இதுல எது ராஜா ? எது யானை ? என்று கேள்வி கேட்டார் . இதைக் கேட்டு சற்றே திகைத்த நிதாங்கன் என்னய்யா இது கூடவா தெரியவில்லை மேலே இருப்பவர் ராஜா கீழே இருப்பது யானை என்றான் . இந்த பதிலைக் கேட்ட கிராமத்துப் பெரியவர் சந்தோசமாய் கைகளை தட்டி குதூகலமாய் சிரித்து ஆர்ப்பரித்தார் . நிதாங்கன் இப்படியும் ஒரு மனிதனா என்று வேறுபக்கம் செல்ல ஆயத்தமானான் . அந்த பெரியவர் இவனை திரும்பவும் சீண்டுவது போல் தம்பி எனக்கொரு சந்தேகம் என்றார் .

                           மிகவும் கோபத்துடன் திரும்பிய நிதாங்கனை பார்த்து தம்பி , ராஜாவும் , யானையும் யாருன்னு எனக்கு புரியுது ஆனா மேலே , கீழே ன்னு சொன்னீங்களே அதுதான் புரியலை என்றார் . பெரியவர் தன்னை வம்புக்கு இழுப்பதாக எண்ணிக்கொண்டு அவர் எதிர்பார்க்காத வேளையில் சட்டென அவர் தோள் மீது ஏறி  அமர்ந்து கொண்டு சொன்னான் நீ எனக்கு கீழே , நான் உமக்கு மேலே இப்போது புரிகிறதா என்றான் . உடனே பெரியவர் புரியுது தம்பி மேல் , கீழ் இரண்டும் நன்கு விளங்கிற்று . நீ , நான் அப்படின்னு சொன்னீங்களே அந்த நீ , நான்  என்ன அதை மட்டும் விளக்குங்கள் போதும் என்றார் .  முதலில் ' நான் ' என்பது என்ன அதை சொல்லிவிட்டு பின்பு ' நீ ' பத்தி சொல்லுங்க என்றார் . 


                                   கேள்வியின் ஆழத்தில் தன்னை மறந்து சிந்திக்க தொடங்கினான் நிதாங்கன் . " நான் " என்பது என்ன ?  நிதாங்கன் என்பதா இல்லை அது எனது பெயர் ... இந்த உடலாக இருக்குமோ ? இருக்காது தூக்கத்தில் அந்த உணர்வு இருப்பது இல்லையே ... அப்படியானால் நான் என்பது .....? இவ்வாறாக சிந்தித்துக் கொண்டிருக்கும் போது அவனுக்குள் ஒரு ஒளிக்கீற்று ஊடுருவியதை உணர்ந்தவனாக வந்திருந்த பெரியவரை நோக்கினான் . அவர் இவனையே பார்த்துக்கொண்டிருந்தார் சட்டென்று அவர் காலில் நெடுஞ்சாண்கிடையாக விழுந்தான் . கண்ணீர் பெருக சுவாமி நீங்கள் எனக்குள் மிகப்பெரிய தெளிவை கொடுத்து விட்டீர்கள் .  என் குருநாதரை தவிர வேறு யாரும் அடியேனுக்கு இந்த உபதேசம் கொடுக்க முடியாது என்று கூறினான் . 
                       வந்திருந்த அந்த பெரியவர் தன் சுய உருவத்திற்கு வந்திருந்தார் வேறு யார் சாட்ஷாத் ரிபு முனிவர் தான் தன்னுடைய சீடன் தெளிவு பெற வேண்டும் என்று இந்த நாடகத்தை நடத்தி உள்ளார் . நிதாங்கனை தன்னுடன் அனைத்துக் கொண்டார் மகரிஷி ரிபு . அன்று முதல் அத்வைத பாடத்தை நிதாங்கனுக்கு போதித்தார் .  

                       சிவமேஜெயம் - திருவடி முத்துகிருஷ்ணன் 
சிவத்தை போற்றுவோம் !! சித்தர்களை போற்றுவோம் !!




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக