வியாழன், ஜூலை 30, 2015

                                                    சிவமயம் 

குருவே துணை                பட்டினத்தாரே சரணம்         குருவே சரணம்                             

பட்டினத்தார் பாடல்களும் விளக்கமும்

முதலாவது கோவில் திருவகவல் 

நினைமின் மனனே ! நினைமின் மனனே
சிவபெரு மானைச் செம்பொனம் பலவனை
நினைமின் மனனே ! நினைமின் மனனே
அலகைத் தேரின் அலமரு காலின்
உலகப்பொய் வாழ்க்கையை உடலை ஓம்பற்க 


மனமே சிவபெருமானை , பொன்னால் ஆகிய சபையின் கண் எழுந்தருள் செய்யும் சிவனை எந்நேரமும் சிந்தனை செய்வாயாக . பேய்த் தேரினையும் சுழலும் காற்றினையும் ஒத்த பொய்யாம் உலக வாழ்க்கையில் உழலும் உடலை பேணுவதை விடுத்து சிவபெருமானை எண்ணுவாயாக . 


பிறந்தன இறக்கும், இறந்தன பிறக்கும்;
தோன்றின மறையும், மறைந்தன தோன்றும்;
பெருத்தன சிறுக்கும், சிறுத்தன பெருக்கும்;
உணர்ந்தன மறக்கும், மறந்தன உணரும்;
புணர்ந்தன பிரியும், பிரிந்தன புணரும்;


இந்த உலகில் பிறந்தது எல்லாம் ஒரு நாள் இறக்கும் , இறந்தது மீண்டும் பிறக்கும் , தோன்றின மறையவும் மறைந்தன தோன்றவும் செய்யும் . பெரிதாய் இருப்பது ஓர் நாள் சிறுத்துப் போகும் , சிறியதாய் உள்ளது பெருத்துப் போகும் . அறிந்தது எல்லாம் மறந்து போகும் , மறந்தது மீண்டும் நினைவில் தோன்றும் . சேர்ந்தது ஒரு நாள் பிரிந்து போகும் பிரிந்தது மீண்டும் சேரும் இது நிதர்சனமாம் .


                       இன்னும் பாடல்கள் அடுத்த பதிவில் ......


              சிவமேஜெயம் - திருவடி முத்துகிருஷ்ணன் 


சிவத்தை போற்றுவோம் !! சித்தர்களை போற்றுவோம் !!


              



























புதன், ஜூலை 22, 2015

கவிக் காளமேகப் புலவர் பாடல்கள் 



        காளமேகப் புலவர் பாக்களில் சிலேடைகளுக்கும் , கிண்டல்களுக்கும் பஞ்சமிருக்காது , இகழ்வது போல் புகழ்வதும் புகழ்வது போல் இகழ்வதும் இவருக்கு கை வந்த கலை . நிறைய பாடல்களை எடுத்துக் காட்டலாம் ஆனால் அடியேன் அவர் சிவனை பற்றி பாடிய பாக்களில் எனக்கு பிடித்த பாடல்களை மட்டும் சிலவற்றை இங்கே தொகுத்துள்ளேன் இவருடைய பாடல்களில் கவிதை நயத்தோடு , தமிழை அழகாக அவர் கையாடல் செய்து இருப்பதும் நமக்கு பெரும் வியப்பை தரும் . 





நச்சரவம் பூண்டதில்லை நாதரே; தேவரீர்
பிச்சையெடுத் துண்ணப் புறப்பட்டும் - உச்சிதமாம்
காள மேன்? குஞ்சர மேன்? கார்க்கடல்போ லேமுழங்கும்
மேள மேன்? ராசாங்க மேன்?

சுவாமியை கேலி செய்வது போல பாடுகிறார் நல் அரவம் பூண்டு பிச்சை எடுத்து உண்ணப் போகும் உனக்கு அரசன் போல இந்த ராசாங்கம் ஏன் என்று கேட்கிறார் .

காலனையும் காமனையும் காட்டுசிறுத் தொண்டர்தரு
பாலனையும் கொன்ற பழிபோமோ? - சீலமுடன்
நாட்டிலே வீற்றிருந்த நாதரே; நீர் திருச்செங்
காட்டிலே வீற்றிருந்தக் கால்.

தாண்டி ஒருத்தி தலையின்மேல் ஏறாளோ?
பூண்டசெருப் பால்ஒருவன் போடானோ? - மீண்டு ஒருவன்
வையானோ? விவ்முறிய மாட்டானோ? தென்புலியூர்
ஐயா, நீ ஏழைஆ னால்.

ஆனர் இலையே அயனும் திருமாலும்
கான்ஆர் அடிமுடிமுன் காண்பதற்கு - மேல்நாள்
இரவுதிரு ஆருரில் எந்தைபிரான் சென்ற
பரவைதிரு வாயிற் படி.

சிரித்துப் புரம்எரித்தான் சிந்துரத்தைப் பற்றி
உரித்துஉதிரம் பாய உடுத்தான் - வருத்தமுடன்
வாடும்அடி யாருடனே வானவரும் தானவரும்
ஓடுபயம் தீர்த்தநஞ்சு ணி

கண்டீரோ பெண்காள் கடம்பவனத் தீசனார்
பெண்டீர் தமைச்சுமந்த பித்தனார் - எண்டிசைக்கும்
மிக்கான தங்கைக்கு மேலே நெருப்பையிட்டார்
அக்காளை ஏறினாராம்.

இவரோவீ ரட்டர் எனும் நாமம் உள்ளோர்?
இவரோ வழுவூரில் ஈசர்? - இவரோ
கடத்தடக்க தக்கரிப்பி டித்துஇழுத்து அழுத்திமெத்த
அடித்துஅறுத்து உரித்துஉடுத்த வர்?

முக்கண்ணன் என்றுஅரனை முன்னோர் மொழிந்திடுவார்
அக் கண்ணற்கு உள்ள தரைக் கண்ணே - மிக்க
உமையாள்கண் ஒன்றரைமற்று ஊன்வேடன் கண்ஒன்று
அமையும் இதனால்என்று அறி.

நீறுஆவாய் நெற்றி நெருப்பு ஆவாய் அங்கம்இரு
கூறுஆவாய் மேனி கொளுத்துவாய் - மாறாத
நட்டம்ஆ வாய்சோறு நஞ்சுஆவாய் நாயேனை
இட்டமாய்க் காப்பாய் இனி.


                           சிவமேஜெயம் - திருவடி முத்துகிருஷ்ணன் 


  சிவத்தை போற்றுவோம் !! சித்தர்களை போற்றுவோம் !!


                      
               

செவ்வாய், ஜூலை 07, 2015


சித்தர்கள் நோக்கில் .........

              கோபம் பற்றி சித்தர்கள் 

  கோபத்தை அழித்தால் யாவும் சித்திக்கும் என்று அழகான அடிகளில் இடைக்காட்டு சித்தர் நமக்கு கூறுகிறார் .

சினமென்னும் பாம்பிறந்தாற் தாண்டவக்கோனே யாவுஞ்,
சித்தியென்றே நினையேடா தாண்ட வக்கோனே.


கடுவெளி சித்தர் இன்னும் கொஞ்சம் தெளிவாக நல்லோர் நட்பு  கொண்டு பொல்லாத கோபத்தை கொல்ல  வேண்டும் என்று அறிவுரை கூறுகிறார் . 

வேத விதிப்படி நில்லு - நல்லோர்
மேவும் வழியினை வேண்டியே செல்லு
சாதக நிலைமையே சொல்லு - பொல்லாச்
சண்டாளக் கோபத்தைச் சாதித்துக் கொல்லு
.

              கோபமே அறிவுக்கு சத்ரு , கோபம் வெளிப்படும் போது விவேகம் மறைந்து மூர்க்கத்தனம் வருகிறது .  முடிவுகள் சரியாக இல்லாமல் நாம் தவறு செய்ய நேர்கிறது ஆகவே கோபம் அழிவுக்கு வழி வகுக்கும் . தியானம் செய்வதின் மூலம் மனம் அமைதி பெறும் . மனம் அமைதியின் மூலம் கோபம் கட்டுப்படும் . கோபத்தை தவிர்த்து எப்போதும் ஆனந்தத்தில் நிலைத்து இருப்போம் . சிவசிந்தனை ஒன்றே நம்மை எப்போதும் ஆனந்தத்தில் நிலைக்கச் செய்யும் . 


                                சிவமேஜெயம் - திருவடி முத்துகிருஷ்ணன் 


        சிவத்தை போற்றுவோம் !! சித்தர்களை போற்றுவோம் !!


                  

திங்கள், ஜூலை 06, 2015

அடியேன் படித்ததில் பிடித்த சிறு கதைகள் ..




      ஒரு ஊரில் ஒரு செல்வந்தர் வாழ்ந்து வந்தார் . அவருக்கு ஒரு மகன் அவன் ஊதாரித்தனமாக தனது தந்தை சேர்த்த செல்வத்தை எல்லாம் செலவழித்து வந்தான் . அதனால் கவலை அடைந்த செல்வந்தர் அந்த ஊருக்கு வந்த துறவியிடம் தமது கவலையை கூறினார் . அதற்கு அந்த துறவி உங்கள் மகனை இங்கு அனுப்பி வையுங்கள் என்று கூறினார் . செல்வந்தர் தம் மகனிடம் நமது ஊருக்கு வந்திருக்கும் துறவி மிகவும் சக்தி வாய்ந்தவர் அவரை பார்த்து ஆசி வாங்கி வா என்று அனுப்பி வைத்தார் . அவனும் வேண்டா வெறுப்பாக சரி என்று ஒப்புக் கொண்டு துறவியை பார்க்க சென்றான்


                   துறவியை சந்தித்து தம் தந்தையார் உங்களைக் காண அனுப்பினார் என்று கூறினான் . துறவியும் , நல்லது என் பின்னால் அந்த மலைக்கு வா உனக்கு ஒரு உபதேசம் செய்ய சொல்லி இருக்கிறார் உன் தந்தை . அவனும் துறவியை பின் தொடர்ந்து மலை மீது ஏறத் தயாரானான் அப்போது துறவி ஒரு சிறய பாறாங்கல்லை சுமந்து வருமாறு கூறினார் . அவனும் சரி என்று அந்த கல்லை தூக்கிக் கொண்டு கஷ்டப் பட்டு மலை மீது ஏறினான் மேலே வந்தவுடன் அந்த கல்லை உருட்டிவிடும் படி துறவி கூறினார் . அவனுக்குக் கோவம் வந்தது , என்ன விளையாடுகிறீர்களா என்று கேட்டான் அதற்கு துறவி  இல்லை மகனே எதனால் உனக்கு இந்த கோபம் வந்தது என்று கேட்டார் , அவன் , எவ்வளவோ கஷ்டப்பட்டு கொண்டு வந்த என் உழைப்பை ஒரு நொடியில் வீணடிக்க சொல்கிறீர்கள் பிறகு கோபம் வராதா என்று கேட்டான் . அதற்கு துறவி உன் தந்தை மிகவும் கஷ்டப்பட்டு சேர்த்த செல்வமும் அவருக்கு இருக்கும் நன்மதிப்பும் இப்படித்தான்  கஷ்டப்பட்டு சேர்த்தது ஆனால் நீ அதையெல்லாம் பாழ் செய்வது எந்த விதத்தில் நியாயம் என்று கேட்டவுடன் அவன் வெட்கித் தலைகுனிந்து துறவியிடம் நன்றி சொல்லி விட்டு தனது தந்தையிடம் சென்று மன்னிப்பு கேட்டான் .

                  இந்தக் கதை போலத்தான் நாமும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் முன்னோர்கள் , சித்தர்கள் வகுத்த நெறி முறைகளை பின்பற்றாது ஏனோ தானோ என்று வாழ்ந்து அவர்கள் நமக்கு விட்டுச் சென்ற விலையில்லா தத்துவங்களை மறந்து கடவுளை போற்றாது முடிவில் இறந்தும் போகிறோம் இறைவன் நமக்கு அளித்த ஞானம் என்னும் செல்வத்தை பாதுகாத்து அவன் திருவடி நீழலில் இருப்போமேயானால் நமக்கு என்றும் துன்பமில்லை . 


                        சிவமேஜெயம் - திருவடி முத்துகிருஷ்ணன் 


       சிவத்தை போற்றுவோம் !! சித்தர்களை போற்றுவோம் !!