புதன், ஜூலை 22, 2015

கவிக் காளமேகப் புலவர் பாடல்கள்         காளமேகப் புலவர் பாக்களில் சிலேடைகளுக்கும் , கிண்டல்களுக்கும் பஞ்சமிருக்காது , இகழ்வது போல் புகழ்வதும் புகழ்வது போல் இகழ்வதும் இவருக்கு கை வந்த கலை . நிறைய பாடல்களை எடுத்துக் காட்டலாம் ஆனால் அடியேன் அவர் சிவனை பற்றி பாடிய பாக்களில் எனக்கு பிடித்த பாடல்களை மட்டும் சிலவற்றை இங்கே தொகுத்துள்ளேன் இவருடைய பாடல்களில் கவிதை நயத்தோடு , தமிழை அழகாக அவர் கையாடல் செய்து இருப்பதும் நமக்கு பெரும் வியப்பை தரும் . 

நச்சரவம் பூண்டதில்லை நாதரே; தேவரீர்
பிச்சையெடுத் துண்ணப் புறப்பட்டும் - உச்சிதமாம்
காள மேன்? குஞ்சர மேன்? கார்க்கடல்போ லேமுழங்கும்
மேள மேன்? ராசாங்க மேன்?

சுவாமியை கேலி செய்வது போல பாடுகிறார் நல் அரவம் பூண்டு பிச்சை எடுத்து உண்ணப் போகும் உனக்கு அரசன் போல இந்த ராசாங்கம் ஏன் என்று கேட்கிறார் .

காலனையும் காமனையும் காட்டுசிறுத் தொண்டர்தரு
பாலனையும் கொன்ற பழிபோமோ? - சீலமுடன்
நாட்டிலே வீற்றிருந்த நாதரே; நீர் திருச்செங்
காட்டிலே வீற்றிருந்தக் கால்.

தாண்டி ஒருத்தி தலையின்மேல் ஏறாளோ?
பூண்டசெருப் பால்ஒருவன் போடானோ? - மீண்டு ஒருவன்
வையானோ? விவ்முறிய மாட்டானோ? தென்புலியூர்
ஐயா, நீ ஏழைஆ னால்.

ஆனர் இலையே அயனும் திருமாலும்
கான்ஆர் அடிமுடிமுன் காண்பதற்கு - மேல்நாள்
இரவுதிரு ஆருரில் எந்தைபிரான் சென்ற
பரவைதிரு வாயிற் படி.

சிரித்துப் புரம்எரித்தான் சிந்துரத்தைப் பற்றி
உரித்துஉதிரம் பாய உடுத்தான் - வருத்தமுடன்
வாடும்அடி யாருடனே வானவரும் தானவரும்
ஓடுபயம் தீர்த்தநஞ்சு ணி

கண்டீரோ பெண்காள் கடம்பவனத் தீசனார்
பெண்டீர் தமைச்சுமந்த பித்தனார் - எண்டிசைக்கும்
மிக்கான தங்கைக்கு மேலே நெருப்பையிட்டார்
அக்காளை ஏறினாராம்.

இவரோவீ ரட்டர் எனும் நாமம் உள்ளோர்?
இவரோ வழுவூரில் ஈசர்? - இவரோ
கடத்தடக்க தக்கரிப்பி டித்துஇழுத்து அழுத்திமெத்த
அடித்துஅறுத்து உரித்துஉடுத்த வர்?

முக்கண்ணன் என்றுஅரனை முன்னோர் மொழிந்திடுவார்
அக் கண்ணற்கு உள்ள தரைக் கண்ணே - மிக்க
உமையாள்கண் ஒன்றரைமற்று ஊன்வேடன் கண்ஒன்று
அமையும் இதனால்என்று அறி.

நீறுஆவாய் நெற்றி நெருப்பு ஆவாய் அங்கம்இரு
கூறுஆவாய் மேனி கொளுத்துவாய் - மாறாத
நட்டம்ஆ வாய்சோறு நஞ்சுஆவாய் நாயேனை
இட்டமாய்க் காப்பாய் இனி.


                           சிவமேஜெயம் - திருவடி முத்துகிருஷ்ணன் 


  சிவத்தை போற்றுவோம் !! சித்தர்களை போற்றுவோம் !!


                      
               

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக