செவ்வாய், மே 30, 2017

சித்தர் என்பவர் யார் ?

            மகான் ஸ்ரீ பட்டினத்தார் திருவடிகள் போற்றி !!



கடவுளை புறத்தில் கண்டு பூசை செய்பவர்கள் பக்தர்கள் , கடவுளை அகத்தில் கண்டு தெளிந்தவர்கள் சித்தர்கள் . சித் என்ற சொல்லிற்கு அறிவு என்று பொருள். அறிவு தெளிய பெற்றவர்கள் சித்தர்கள் . இவர்கள் சமயத்திற்கும் , சடங்குகளுக்கும் அப்பாற்பட்டவர்கள் . இறைவனை இடைவிடாது தியானித்து சித்தத்தை சிவத்தில் நிறுத்தி பேரின்பத்தில் இருப்பவர்கள் .

மௌனத்தை பிரதானமாகக்கொண்டு சித்தி அடைந்தவர்கள் , இரும்பை பொன்னாக்கும் ரசவாத கலையை அறிந்தவர்கள் , நினைத்த இடத்திற்கு நினைத்த நேரத்தில் செல்லும் ஆற்றல் படைத்தவர்கள் , கூடு விட்டு கூடு பாயும் சித்து போன்ற எட்டு சித்துக்கள் கைவர பெற்றவர்கள் .

சித்தர்கள் என்றால் சித்து செய்பவர்கள் என்று அர்த்தம் , சித்து என்றால் எல்லாவற்றையும் உணர்ந்து கொள்ளும் தன்மை என்று பொருள் . பாம்பாட்டி சித்தர் தன்னுடைய பாடல்களில் சித்தர் வல்லபங் கூறல் என்ற பகுதியில் சித்தர்கள் பெருமைகளை கூறி இருக்கிறார் .


தூணைச்சிறு துரும்பாக தோன்றிடச் செய்வோம்
துரும்பைப் பெருந்தூணாகத் தோற்றச் செய்குவோம்
ஆணைபெண்ணும் பெண்ணை யாணு மாகச் செய்குவோம்
ஆரவாரித் தெதிராய் நின்றாடு பாம்பே.

எட்டு மலைகளைப் பந்தா யெடுத்தெறி குவோம்
ஏழுகட லையுங்குடித் தேப்ப மிடுவோம்
மட்டுப் படா மணலையும் மதித்திடுவோம்
மகாராஜன் முன்பு நீ நின்றாடு பாம்பே.


செப்பரிய மூன்றுலகுஞ்செம் பொன்னாக்குவோம்
செங்கதிரைத் தண்கதிராய்ச் செய்து விடுவோம்
இப்பெரிய உலகத்தை இல்லாமற் செய்வோம்
எங்கள் வல்லபங் கண்டு நீ யாடு பாம்பே.

வேதன்செய்த சிருஷ்டிகள்போல் வேறுசெய்குவோம்
வேதனையு மெங்கள் கீழே மேவச் செய்குவோம்
நாதனுடன் சமமாக நாங்களும் வாழ்வோம்
நாங்கள் செய்யும் செய்கை யிதென்றாடு பாம்பே.



சிறுபுலி யானையாளி சிங்க முதலாய்ச்
சிற்றடிக்குக் குற்றேவல் செய்யச் சொல்லுவோம்
வீறுபெருங் கடவுளை எங்களுடனே
விளையாடச் செய்குவோமென் றாடு பாம்பே.
                                      - பாம்பாட்டி சித்தர் 

தங்களுடன் விளையாட இறைவனை அழைப்போம் என்கிறார்.
பாம்பாட்டியார் நாதனுடன் சமமாக நாங்களும் வாழ்வோம் என்று கூறுகிறார் ஈசனோடு கலந்த பின்பு இருவரும் வேறா . ஆற்று நீர் கடலில் கலந்து விட்டால் கடல்நீர் ஆவது போல ஈசனுடன் கலந்த பின் நாங்களும் சமம் என்று கூறுகிறார் . 

பல யுகங்கள் வாழ்ந்தவர்கள் உடலை அழியாமல் வைக்கும் வகை அறிந்தவர்கள் . ஈசனோடு இரண்டறக்கலந்து சிவமாய் ஆகி மண்ணில் என்றும் அருள் புரிந்து கொண்டு இருக்கும் சித்தர்கள் ஏராளம் . சித்தர்கள் தரிசனம் பாவங்களை நாசம் செய்யும் ஞான நிலையை மேம்படுத்தும் .

                         சிவமேஜெயம் - திருவடி முத்துகிருஷ்ணன் 


சிவத்தை போற்றுவோம் !! சித்தர்களை போற்றுவோம் !!

மகான் ஸ்ரீ பட்டினத்தார் தியான நிலையம் 
ஸ்ரீ பட்டினத்தார் குடில் 
6/400 வண்ணார் பேட்டை 
தாளமுத்து நகர் 
தூத்துக்குடி 2 
9944091910 






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக