வியாழன், டிசம்பர் 05, 2013

சித்தர் பாடல்களிலிருந்து  ..........








     மணிவாசக பெருமான் அருளிய  

                          திருவாசகத் தேனிலிருந்து .........




                                              சில துளிகள்



விடை விடாது உகந்த விண்ணவர் கோவே! வினையனேனுடைய மெய்ப் பொருளே!
முடை விடாது, அடியேன் மூத்து, அற மண் ஆய், முழுப் புழுக் குரம்பையில் கிடந்து,
கடைபடாவண்ணம் காத்து, எனை ஆண்ட கடவுளே! கருணை மா கடலே!
இடைவிடாது, உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்; எங்கு எழுந்தருளுவது, இனியே?

இடபவாகனத்தை விடாது அதன்மீது ஏறிவரும் வேந்தே தீயவினைகளையுடையவனான என்னுடைய மெய்ப்பொருளே துர்நாற்றம் நீங்காது மூப்புஎய்தி மண்ணோடு மண்ணாகும் இக்கொடிய உடம்பில் கிடந்து வீணாகமல் எனைக்காத்து ஆண்ட கடவுளே கருணையின் பெருங்கடலே இடையீடு இல்லாமல் உனை சிக்கெனப் பிடித்து விட்டேன் என்னைவிட்டு எங்கும் செல்ல முடியாது எம்பெருமானே.

அருள் உடைச் சுடரே! அளிந்தது ஓர் கனியே! பெரும் திறல் அரும் தவர்க்கு அரசே!
பொருள் உடைக் கலையே! புகழ்ச்சியைக் கடந்த போகமே! யோகத்தின் பொலிவே!
தெருள் இடத்து அடியார் சிந்தையுள் புகுந்த செல்வமே! சிவபெருமானே!
இருள் இடத்து, உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்; எங்கு எழுந்தருளுவது, இனியே?

அருளே வடிவமான பேரொளியே பழுத்த பழமே அருந்தவம் ஆற்றும் பெரும்திறன் உடையவர்களுக்கு  அரசே ,ஞானத்தின் பொருளோனே.புகழ்மொழிகளைக் கடந்தவனே,யோகத்தின் பயனான பொலிவே.உன்னை அறிந்த தெளிந்த அறிவினை உடைய அடியார்களின் சிந்தையில் வீற்றிருக்கும் செல்வமே,சிவபெருமானே அறியாமை எனும் இருள்நிறைந்த இவ்வுலகத்தில் உன்னைச் சிக்கெனப் பற்றிக்கொண்டேன் இனி எங்கும் செல்ல இயலாது ஐயனே.

ஒப்பு உனக்கு இல்லா ஒருவனே! அடியேன் உள்ளத்துள் ஒளிர்கின்ற ஒளியே!
மெய்ப் பதம் அறியா வீறு இலியேற்கு, விழுமியது அளித்தது ஓர் அன்பே!
செப்புதற்கு அரிய செழும் சுடர் மூர்த்தீ! செல்வமே! சிவபெருமானே!
எய்ப்பு இடத்து, உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்; எங்கு எழுந்தருளுவது, இனியே?

நினக்கு நிகரானவன் டின்று ஒப்புமை கூற இயாத தனி முதல்வனே,அடியேன் என்உள்ளத்திலும் சுடர்விட்டு எரிகின்ற சோதியே,நின்னை அடையும் உண்மை நெறி  அறியாத எனக்கும் உயர்ந்தநெறியளித்த அன்பே உருவானவனே,சொல்லிற் அளந்து சொல்லற்கியலா பேரொளியான மூர்த்தியே சிவபெருமானே  வலியற்ற நான் உனைச்செிக்கெனப்  பிடித்துக் கொண்டேன்.இனி என்னைவிட்டு உன்னால் எங்குசெல்லமுடியும் எம்பெருமானே. 

அறவையேன் மனமே கோயிலாக் கொண்டு, ஆண்டு, அளவு இலா ஆனந்தம் அருளி,
பிறவி வேர் அறுத்து, என் குடி முழுது ஆண்ட பிஞ்ஞகா! பெரிய எம் பொருளே!
திறவிலே கண்ட காட்சியே! அடியேன் செல்வமே! சிவபெருமானே!
இறவிலே, உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்; எங்கு எழுந்தருளுவது, இனியே?

இவ்வுலகில் ஆதரவற்ற என்னுடைய மனதையும் கோயிலாகக் கொண்டு அமர்ந்து என்னை ஆட்கொண்டு எல்லையற்ற ஆனந்தத்தை அருளி தொடர்வினையான என்பிறவியை வேர்அறுத்து  என்குடும்பம் முழுவதையும் ஆண்ட பெருமானே பெறற்கரிய பெரும்பொருளே,எமக்குஎளிவந்து காட்சி நல்கியவனே என்செல்வமே சிவபெருமானே தக்க சமயத்தில் உனைச் சிக்கெனப் பிடித்துக்கொண்டேன் இனி என்னைவிட்டு எங்கும் செல்ல இயலாது என் செல்வமே.

புன்புலால் யாக்கைபுரை புரைகனிய பொன்நெடும் கோயிலாப்புகுந்தென் 
என்புஎலாம் உருக்கி, எளியை ஆய், ஆண்ட ஈசனே! மாசு இலா மணியே!
துன்பமே, பிறப்பே, இறப்பொடு, மயக்கு, ஆம் தொடக்கு எலாம், அறுத்த நல் சோதீ!
இன்பமே! உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்; எங்கு எழுந்தருளுவது, இனியே?

இழிந்த தசையால் ஆகிய உடம்பிலுள்ள மயிர்க்கால்களிலும் நெகிழ்ச்சியை உண்டாக்கி இவ்வுடம்பையே பொற்றகோயிலாக ஆக்கி என் உள்புகுந்து என் எலும்புகள் அனைத்து உருகும்படிசெய்து என்னை எளிமையாக ஆட்கொண்டவனே. குற்றமற்ற மணியே , என் துன்பம் பிறப்பு இறப்பு அறியாமை முதலிய தொடர்புகளை எல்லாம் அறுத்த தூய ஒளிப்பிழம்பே பேரின்பமே  உனைச்சிக்கெனப் பிடித்துவிட்டேன் இனி என்னைவி்ட்டு எங்கு எழுந்தருளிச்செல்வாய் எம்பெருமானே.


                    இறை பணியில் 
                                                                 பெ.கோமதி 

                                    சிவமேஜெயம் !!

       சிவத்தை போற்றுவோம் !! சித்தர்களை போற்றுவோம் !!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக