சனி, அக்டோபர் 08, 2011

சித்தர் பாடல்களில் இருந்து 9

  ஞானகுரு பட்டினத்தார் 
               பாடல்களில் இருந்து .......
சீயும் குருதிச் செழுநீர் வழும்பும் செறிந்தெழுந்து
பாயும்; புடவை ஒன்றில்லாத போது பகல் இரவாய்

ஈயும் எறும்பும் புகுகின்ற யோனிக்கு இரவுபகல்
மாயும் மனிதரை மாயாமல் வைக்கமருந்தில்லையே !



சிற்றின்பத்திற்காக பகல் இரவாய் கர்மத்தை மறந்து காமத்திற்காக சீழும் உதிரமும் பாய்ந்திடும் துர்நாற்றம் வீசக்கூடிய புடவை கொண்டு மூடாது விட்டால் ஈயும் எறும்பும் அமரும் புண்ணிற்கு அல்லல் பட்டு பெருங் குழியில் மாய்ந்திடும் மனிதரை மாயாமல் வைக்க மருந்து இல்லையே .


சீதப் பனிக்குண்டு சிக்கெனக் கந்தை; தினம் இரந்து
நீ துய்க்கச் சோறு மனைதோறும் உண்டு, நினைவெழுந்தால்
வீதிக்கு நல்ல விலைமாதர் உண்டு; இந்த மேதினியில்
ஏதுக்கு நீசலித்தாய் மனமே என்றும் புண்படவே?



குளிர் கூடி வந்தால் கந்தை துணி இருக்கிறது பசி எடுத்தால் வீடுகள் தோறும் சோறு உள்ளது காம இச்சை ஏற்பட்டால் அதைத் தணிப்பதற்கு பொது மகளிர் உண்டு . மனமே ,இதை அனுபவிப்பதற்கு
ஒரு பிறவி எடுத்து ஏன் அல்லல் படுகிறாய் . 


ஆறுண்டு; தோப்புண்டு; அணிவீதி அம்பலம் தானு முண்டு;
நீறுண்டு; கந்தை நெடுங்கோ வணமுண்டு; நித்தம் நித்தம்
மாறுண்டு உலாவி மயங்கும் நெஞ்சே! மனைதோறும் சென்று
சோறுண்டு தூங்கிப் பின் சும்மா இருக்கச் சுகமும் உண்டே!



புற அழுக்கை நீக்குவதற்கு ஆறு உள்ளது , நடந்து களைப்படைந்தால் களைப்பாற தோப்பும் உள்ளது , படுத்து உறங்கப் பொதுச்சாவடி உள்ளது , தரிக்க திருநீறுண்டு , உடுத்துவதற்கு நீண்ட கோவணமும் உண்டு , தினந்தினம் மாற்றங்களில் சிக்கி மயங்கும் மனமே , மனை தோறும் சென்று அன்னத்தை இரந்து வாங்கி உண்டு , எந்த கவலையும் இல்லை ஆதலால் உண்ட மயக்கத்தால் தூங்கி அதன் பின் சும்மா இருந்து சுகமடைவாய் .


உடுக்கக் கவிக்கக் குளிர்காற்று வெய்யில் ஒடுங்கி வந்தால்
தடுக்கப் பழையவொரு வேட்டியுண்டு; சகம் முழுதும்
படுக்கப் புறந்திண்ணை யெங்கெங்கு முண்டு; பசித்து வந்தால்
கொடுக்கச் சிவனுண்டு; நெஞ்சே! நமக்குக் குறைவில்லையே!



உடுத்துவதற்கும் குளிர் காற்று வெய்யில் போன்ற தட்ப வெப்ப நிலைகளில் இருந்து காத்துக் கொள்ள பழைய ஒரு வேட்டி உண்டு . உலகம் முழுதும் படுத்துறங்க புறந்திண்ணை எங்கெங்கும் உள்ளது . பசி ஏற்பட்டால் நமது பசி அறிந்து உணவளிக்க சிவபெருமான் இருக்கிறார் ,நெஞ்சே எதை நினைத்து கலங்குகிறாய் நமக்கு ஒரு குறையும் இல்லை .


மாடுண்டு; கன்றுண்டு; மக்களுண்டு என்று மகிழ்வதெல்லாம்
கேடுண்டு எனும்படி கேட்டு விட்டோம் இனிக் கேள்மனமே!
ஓடுண்டு; கந்தையுண் டுள்ளேயெழுத் தைந்தும் ஓதவுண்டு
தோடுண்ட கண்டன் அடியார் நமக்குத் துணையு முண்டே!



மாடு உண்டு கன்று உண்டு மக்கள் உண்டு என்று சந்தோசமாய் இருந்தாயே , இவை அனைத்தும் கேடு என்று தெரிந்து துறந்து விட்டாயே . இனி நான் சொல்வதைக் கேள் மனமே , இரந்து உண்பதற்கு திருவோடு உண்டு , உடுத்த கந்தைத் துணி உண்டு , நினைந்து இருப்பதற்கு பஞ்சாட்சரம் எனும் ஐந்தெழுத்து உண்டு , துணைக்கு தோடு அணிந்த திருநீலகண்டன் அடியாரும் உண்டு வேறு என்ன வேண்டும் மனமே .
  
மாத்தா னவத்தையும் மாயா புரியின் மயக்கத்தையும்
நீத்தார் தமக்கொரு நிட்டையுண்டோ? நித்தன் அன்பு கொண்டு
வேர்த்தால் குளித்துப் பசித்தால் புசித்து விழி துயின்று
பார்த்தால் உலகத் தவர்போல் இருப்பர் பற்று அற்றவரே !



மாயையின் மயக்கத்தையும் , போகப் பொருள்களின் வனப்பையும் இவையெல்லாம் மாயை என்று இறைவன் அருளால் உணர்ந்தவர்க்கு பின்பும் மயக்கம் வருமோ ? சிவன் திருவடியே சரணம் என்று பற்று கொண்டு இருப்பவர்கள் உலகத்தில் இருக்கும் சராசரி மனிதரைப் போன்று வேர்த்தால் குளிப்பார் , பசித்தால் உண்பார் , உறக்கம் வந்தால் உறங்குவார் , அனைத்திலுமே சராசரி மனிதரை போன்று இருந்தாலும் அவன் பற்று அற்றவன் சிவனடிக்கு பாத்திரமானவன் .
என்று ஞானத்தெளிவு உள்ளவர்களை அடையாளம் சொல்கிறார் .
  
ஒன்றென்றிரு தெய்வம் உண்டென்றிரு உயர் செல்வமெல்லாம்
அன்றென்றிரு பசித்தோர் முகம் பார் நல்லறமும் நட்பும்
நன்றென்றிரு நடு நீங்காமலே நமக்கு இட்டபடி
என்றென்றிரு மனமே உனக்கே உபதேச மிதே.



தெய்வம் உண்டு என்பதை உறுதியாக நம்புவாயாக , தெய்வமும் ஒரே தெய்வம் தான் என்ற தெளிவுடன் இரு , எவ்வளவு செல்வங்கள் இருந்தாலும் நிலையில்லை என்கிற கூற்றில் உறுதியுடன் இரு , யாரேனும் பசி என்று உன்னிடம் கேட்டால் எப்பாடு பட்டேனும் பசி தீர்த்து விடு ,இல்லறத்து கடமைகளை செவ்வனே முடித்து இருப்பதே நல்லறமாகும் , நல்லவர்களின் நட்பை வேண்டி விரும்பிப் போக வேண்டும் , இறைவன் கொடுப்பதை விருப்பு வெறுப்பு இல்லாமல் நமக்கு உள்ளபடி இவ்வளவுதான் போதும் என்று நடு நிலையில் இரு மனமே , இது தான் உனக்கு நான் செய்யும் உபதேசம் .


நாட்டமென் றேயிரு சற்குரு பாதத்தை நம்பு பொம்மல்
ஆட்டமென் றேயிரு பொல்லா வுடலை அடர்ந்த சந்தைக்
கூட்டமென் றேயிரு சுற்றத்தை வாழ்வைக் குடங்கவிழ்நீர்
ஓட்டமென் றேயிரு நெஞ்சே உனக்கு உபதேசமிதே !



நிலையில்லாத பொருள்கள் மீது இருக்கும் நாட்டத்தை விடுத்து சத்குருவாகிய சிவபெருமான் திருவடிகளை நம்பி இரு , அப்படி இருந்தால் உனக்கு சில உண்மைகள் விளங்கும் அது என்னவெனில் இந்த உடலை நீ இயக்க வில்லை எம்பெருமான் இயக்குகிறான் அவன் ஆட்டி வைக்கிறான் நீ ஆடுகிறாய் நூல் அவனிடம் . ஆதலால் இந்த உடல் ஆடும் ஆட்டமெல்லாம் பொம்மலாட்டம் என்று தெளிந்து இரு . சுற்றத்தையும் உறவினர்களையும் சந்தையில் கூடும் கூட்டமென்று எண்ணி இருப்பாய் . அவரர் தேவை முடிந்தவுடன் கலைந்து விடுவர் நிலையில்லாத சுற்றமும் அப்படியே . குடத்தில் இருக்கும் வரை தான் நீர் அப்படியே இருக்கும் கவிழ்ந்து விட்டால் , இருந்த இடம் தெரியாது போய் விடும் வாழ்வும் அப்படியே என்ற என்னியிருப்பாய் என் நெஞ்சமே இது தான் உனக்கு உபதேசம் .
        
என் செய லாவது யாதொன்றும் இல்லை இனித் தெய்வமே
உன் செய லேயென்று உணரப்பெற்றேன் இந்த ஊனெடுத்த
பின் செய்த தீவினை யாதொன்றும் இல்லைப் பிறப்பதற்கு
முன் செய்த தீவினையோ இங்ஙனமே வந்து மூண்டதுவே.



இறைவா என்னால் நடத்தக் கூடிய செயல் என்று எதுவும் இல்லை எனக்கு வரும் துன்பங்களை ஒழிக்கவும் என்னால் இயலாது , எனக்கு வரும் துன்பத்தினை ஒழிப்பதற்கு உன்னால் மட்டுமே முடியும் இந்த உண்மையை அறிந்து கொண்டேன் இப்பிறப்பில் நான் செய்த தீவினை என்று எதுவும் இல்லை , முன்வினைப் பயன் தான் இங்ஙனம் என்னை வருத்திக் கொண்டு இருக்கிறது.ஆகவே பெருமானே தயை கூர்ந்து என்   தீவினையை நீக்கி அருள வேண்டும் ஐயனே . 
(இந்த பாடல் அடிகளை கழுவேற்றும் போது தன் வினையை நொந்து பாடிய பாடல்) 


திருவேடம் ஆகித் தெருவில் பயின் றென்னைத் தேடிவந்த
பரிவாகப் பிச்சை பகருமென் றானைப்பதம் பணிந்தேன்
கருவாகும் ஏதக் கடற்கரை மேவக் கருதும் என்னை
உருவாகிக் கொள்ள வல்லோ இங்ங னேசிவன் உற்றதுவே



ஐயனே , நீ பிச்சாடனர் வேடம் பூண்டு நான் பிச்சை எடுக்கும் நேரத்தில் என்னிடம் வந்து இருப்பதைப் பகிர்ந்து கொடு என்று கேட்டாய் வந்தது நீ என்றறியாமல் நானும் பகிர்ந்தேன் , வந்தது நீ என்று அறிந்தவுடன் அவ்விடத்திலேயே உன் திருவடி பட்ட இடத்தில் என் தலை படுமாறு பணிந்தேன் . எதற்காக வந்தாய் என்று எனக்கு தெரிந்துவிட்டது பிறவிக்கடல் என்னும் பெரும் கடலின் கரையறியாது இருக்கும் என்னை கரை அறிய வைத்து , என் பிறவிப் பயனை அடைய வைப்பதற்காகவே இங்கே சிவபெருமான் வந்தார் .
    
விட்டேன் உலகம் விரும்பேன் இருவினை வீணருடன்
கிட்டேன் அவர் உரை கேட்டும் இரேன் மெய் கெடாத நிலை
தொட்டேன் சுகதுக்க மற்றுவிட்டேன் தொல்லை நான் மறைக்கும்
எட்டேன் எனும்பரம் என்னிடத்தே வந்து இங்கு எய்தியதே!



இந்த உலக இன்பங்களை விட்டுவிட்டேன் , இருவினைகளையும் எனக்கு புறம் தள்ளி விட்டேன் அடியவர் அல்லாத வீணருடன் நட்பு கொண்டாட மாட்டேன் , அவர்கூறும் சொற்களை கேட்க விரும்பவும் மாட்டேன் நிலையான இன்பம் என்ன என்பதை அறிந்து கொண்டேன் , இன்ப துன்பங்களை அற்றுவிட்டேன் , வேதங்களுக்கும் நான்மறைகளுக்கும் அப்பற்பட்டு நிற்கும் பரசிவத்தை அடைந்து தொல்லை இல்லாத இடத்தில் இருக்கிறேன் . 


அட்டாங்க யோகமும் ஆதாரம் ஆறும் அவத்தை ஐந்தும்
விட்டேறிப் போன வெளிதனிலே வியப் பொன்று கண்டேன்
வட்டாகிச் செம்மதிப் பாலூறல் உண்டு மகிழ்ந் திருக்க
எட்டாத பேரின்பம் என்னை விழுங்கி இருக்கின்றதே.



எட்டு (இயமம் , நியமம் , ஆதனம் , தாரணம் , பிராணாயாமம் , பிரத்தியாகாரம் , தியானம் , சமாதி என்னும் ) யோகங்களும் , ஆறு (மூலாதாரம் , சுவாதிட்டானம் , மணிபூரகம் , அனாதகம் , விசுத்தி , ஆக்ஞா ) ஆதாரங்களையும் , ஐந்து ( சாக்கிரம் , சொப்பனம் , சுழுத்தி , துரியம் ,துரியாதீதம் ) ஆகிய அவத்தைகளையும் கடந்து போன வெட்ட வெளி தன்னில் ஆச்சர்யம் ஒன்று கண்டேன் , வட்டக் கருப்புக்கட்டியை விட இனிமையான சந்திர கலாமிர்தம் எனும் அமிர்தம் பருகி மகிழ்ந்திருக்கும் வேளையில் யாருக்கும் கிட்டாத பேரின்பமானது என்னைத் தனக்குள் கொண்டு அழிவில்லா பெரு வாழ்வு எனக்கு அளித்தது .


பாடல்கள் இன்னும் தொடரும்.............


சிவத்தை போற்றுவோம் !! சித்தர்களை போற்றுவோம் !!


                    - திருவடி முத்து கிருஷ்ணன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக