புதன், டிசம்பர் 21, 2011

திருவாசகத்தில் இருந்து

          மணிவாசக பெருமான் அருளிய
   திருவாசகத் தேனிலிருந்து சில துளிகள்
       திருவாசகத்துக்கு உருகார் ஒரு வாசகத்துக்கும் உருகார் 




மெய்தான் அரும்பி விதிர் விதிர்த்து உன் விரையார் கழற்கு என்
கைதான் தலை வைத்துக் கண்ணீர் ததும்பி வெதும்பி உள்ளம்
பொய்தான் தவிர்ந்து உன்னைப் போற்றி சயசய போற்றி என்னும்
கைதான் நெகிழ விடேன் உடையாய் என்னைக் கண்டு கொள்ளே .


உடம்பு மயிர்க் கூச்செறிந்து நடுநடுங்குகிறது உன் நறுமணம் கமழும் மலர்ப் பதத்தைக் கை தலைமேல் வைத்து வணக்கம் செலுத்துகிறது . கண்கள் பேரானந்தத்தில் கண்ணீர் ததும்புகிறது . உள்ளம் வெதும்பி பொய் நீங்கி சயசய என்று உனைப் போற்றுகிறது . அப்பனே உன் அடியைப் போற்றுவதை நான் கைவிட மாட்டேன் . என்னை உடையவனே என்னை ஏற்றுகொள் .


கொள்ளேன் புரந்தரன் மால் அயன் வாழ்வு குடிகெடினும்
நள்ளேன் நினது அடியாரொடு அல்லால் நரகம் புகினும்
எள்ளேன் திருவருளாலே இருக்கப் பெறின் ; இறைவா
உள்ளேன் பிறதெய்வம் உன்னை அல்லாது எங்கள் உத்தமனே .


இந்திரன் , திருமால் , நான்முகன் ஆகிய இவர்களுடைய பதவிகள் நான் விரும்ப மாட்டேன் . என் குடி கெட்டு விடுவதாக இருந்தாலும் உன் அடியவர் அல்லாதவருடன் பேச மாட்டேன் . கொடிய நரகம் போவதாக இருந்தாலும் வெறுக்காமல் உன் திருவருளாலே அங்கே இருந்துவிடுவேன் . எம்பெருமானே எல்லாவற்றிற்கும் உயர்ந்த , சிறந்த உன்னை அல்லாது ஒரு தெய்வத்தை ஒரு போதும் என் மனது நினைக்காது .


நாடகத்தால் உன் அடியார் போல் நடித்து நான் நடுவே 
வீடகத்தே புகுந்திடுவான் மிகப் பெரிதும் விரைகின்றேன் 
ஆடகச்சீர் மணிக்குன்றே இடையறா அன்பு உனக்கு என் 
ஊடகத்தே நின்று உருகத் தந்தருள் எம் உடையானே 


நாடகத்தில் நடிப்பது போல உன் அடியார் போல் நடித்து அவர்களுக்கு நடுவில் இருந்து வீடு அடைவதற்கு ஆயத்தமாக உள்ளேன் பொன்பதிந்த மணிகளுடைய குன்று போன்றவனே , உன்றன் மேல் நீங்காத அன்பு என் மனதில் நிலைத்து இருக்குமாறு உன் அடிமையாகிய எனக்கு அருள் செய்ய வேண்டும் அப்பனே .



           என்றும் இறை பணியில் 



                                                     திருவடி முத்துகிருஷ்ணன் 

வியாழன், டிசம்பர் 15, 2011

ஆன்மீகத்தில்

                                                  அத்திசூடி

        ( அனுதினமும் சூடுவது , 
ஆன்மீகத்தில் கடைபிடிப்பது )





அமைதியான பேச்சு ; அழகாகும் உன் மூச்சு .

ஆழமான இறை உணர்வு ; ஆளுமை உண்டாக்கும் .

இறைவனை வெளிப்படுத்தும் பண்பு ; இசையாகும் நம் சொல் .


ஈசனிடம் மட்டுமே கேட்பது ; ஈடில்லா வாழ்வு தரும் .


உண்மைக்கு உரைகல்லாக இரு ; உரைப்பது சிவமாகும் .

ஊக்கமுடன் குரு சிவனை சொல் ; ஊதியமாய் சிவ பேறு பெறு .

எண்ணமெல்லாம் சிவமாக இரு ; எதிலும் அன்பு தோன்றும் .

ஏகாந்தம் கான் ; எல்லாம் அவன் (சிவன் ) செயல் என்பது புரியும் .

" ஐயா " என வேதங்கள் போற்றும் சிவனை ஐயமற நம்பு .

ஒற்றீஸ்வரர் பாதம் பற்று ; வெற்றி உனக்கு .

ஓங்காரம் உன்னில் உள்ளது ; ஒருமித்து பிரகாசி .

" ஔஷதம் " என்பது குருவின் திருமந்திரமாகும் .


                          உலகின் மகான் "சதாஸ்ரீததா "


                   உலகின் ஞானகுரு "ஸ்ரீததா பிஜாபபா"


                    நிறுவனர் சதாஸ்ரீததா ஆன்மீக அறக்கட்டளை 

திங்கள், டிசம்பர் 12, 2011

63 நாயன்மார்கள் (திருநாவுக்கரசர்)

திருநாவுக்கரச நாயனார் 







திருமுனைப்பாடி பல்லவ நாட்டில் அமைந்துள்ளது. இத்தலத்தில் ஓங்கி உயர்ந்த மாடங்களும், கூடகோபுரங்களும், பண்டக மாலைகளும், மணிமண்டபங்களும் சிவத் தலங்களும் நிறைந்துள்ளன. புத்தம் புதுமலர்க் கொத்துக்களைத் தாங்கிக் கொண்டு பெருகி ஓடிவரும் பெண்னண ஆற்றின் பெருவளத்திலே செந்நெல்லும், செங்கரும்பும் செழித்து காணப்பட்டன. இங்கு வாழும் மக்கள் நல்லொழுக்கத்திலும், நன்னெரியிலும் வாழ்ந்து வந்தனர். உலகமெங்கும் சைவநெறியை நிலைநிறுத்திய சமயக்குரவர் நால்வருள் அப்பர், சுந்தரர் என்னும் இரு நாயன்மார்கள் தோன்றிய பெருமை கொண்டது இத்தலம் . இவ்வளவு பெருமை வாய்ந்த திரு‌முனைப்பாடியில் திருவாமூர் என்னும் சிவத்தலம் உள்ளது .  வேளாண் மரபிலே குறுக்கையர்குடி மிகச் சிறந்த தொன்றாக விளங்கி வந்தது. அக்கு‌டியிலே புகழனார்சிவத்தொண்டு புரிந்து தன் மனைவி மாதினியார் அம்மையாருடன் வாழ்ந்து வந்தார் . இவர்கள் இல்லறமெனும் நல்லறத்தை இனிது நடத்தி வரும்பொழுது இறைவன்‌ அருளால் மாதினியார் கருவுற்றாள்.

அம்மையார் வயிற்றில் திருமகளே வந்து பிறந்ததை போல் அழகிய பெண்மகவு பிறந்தது அக் குழந்தைக்குத் திலகவதி என்று பெயர் சூட்டிப் பெற்றோர்கள் வளர்த்து வரும் நாளில் அம்‌மையார் மீண்டும் கருவுற்றார். சைவம் ஓங்க தமிழ் வளர கலைகள் செழிக்க மருள் எல்லாம் போக்கும் அருள் வடிவமாக கோடி சூரியப் பிரகாசத்துடன் கூடிய ஆண் குழந்தை பிறந்தது . பெறோர்கள் அந்த ஆண் குழந்தைக்கு மருள் நீக்கியார் என்று பெயர் சூட்டினர். மருள் நீ்ககியார் முற்பிறப்பில் வாகீச முனிவராக இருந்தார். இவர் திருக் கைலாயத்திதல் அமர்ந்து எம்பெருமானின் திருவடியை அடைய அருந்தவம் புரிந்து வந்தார்.

                      ஒரு சமயம் இராவணன் புஷ்பக விமானத்தில் வந்து கொண்டிருந்தான். கைலாய மலையைப் புஷ்பக விமானம் அணுகியதும் அங்கு எழுந்தருளியிருந்த நந்தியெம் பெருமான் ராவணனிடம், இப்புண்ணிய மலை எம்பெருமான் எழுந்தருளியிருக்கின்ற திருமலை. அதனால் நீ வலப் பக்கமாகப் போய்விடு என்று பணித்தார். மதியற்ற ராவணன் நந்தியெம்பெருமானுடைய பெரு‌மையையும் அவர் எம்பெருமானிடம் கொண்டுள்ள பக்தியின் திறத்தினையும் எண்ணிப் பார்க்க இயலாத நிலையில மந்தி போல் முகத்தை வைத்துக் கொணடிருக்கும் நீ இந்த மாவீரன் இராவணனுக்கா அறிவுரை கூறுகின்றாய் ? என்று சினத்தோடு செப்பினான். அளவு கடந்த கோபம் கொண்ட நந்தியெம்பெருமான் அப்படி என்றால் உன்நாடும், உன் வீரமும் குரங்கினாலேயே அழிந்து போகக்கடவது ! என்று கூறி சாபம் கொடுத்தார்.இராவணன் ஆத்திரத்தோடு என்னைத் தடுத்து நிறுத்திய இந்த கைலாய மலையை அடியோடு பெயர்த்து தூக்கி எறிகிறேன் பார் என்று கூறித் தனது வலிமை பொருந்திய இருபது கரங்களாலும் மலையை அசைத்தான். அது சமயம் ஈசுவரியுடன் நவமணி பீடத்தில் எழுந்தருளியிருந்த எம்பெருமான் தமது தண்டை சிலம்பணிந்த சேவடி பாதப் பெருவிரல் நுனி நகத்தால் லேசாக அழுத்தினார். அக்கணமே இராவணனது இருபது கரங்களும் மலையினடியில் சிக்கியது. இராவணன் கரங்களை அசைக்க முடியாமல் துடித்துக் கொண்டிருந்தான். ஓலக்குரல் எழுப்பினான். 

                          அத்திருமலையில் தவமிருந்து வந்த அருந்தவசி‌யான வாகீசரின் செவிகளில் இராவ்ணனின் ஓலக் குரல் வீழ்ந்தது. இராவணின் நிலைக்கண்டு மனம் இளகினார் முனிவர். அவனது துயரம் நீங்குவதற்கு நல்லதொரு உபாயம் சொன்னார். எம்பெருமான் இசைக்குக் கட்டுப்பட்டவர். அவரை இசையால் வசப்படுத்தினால் இத்துயரத்திலிருந்து விடுபடுவதற்கு உகந்த மார்க்கும் பிறக்கும்.வாகீசமுனிவரின் அருளுரை கேட்ட ராவணன் தனது நரம்பை யாழாக்கி பண் இசைத்தான். பரமனின் பாதகமலங்களைப் போற்றி பணிந்தான். பக்தனின் இசைவெள்ளம் ஈசனின் செவிகளில் தேனமுதமாய்ப் பாய்ந்தது. சிவனார் சிந்தை குளிர்ந்தார். அவன் முன்னால் பெருமான் பிரசன்னமானார்.இராவணின் பிழையைப் பொறுத்தார். சந்திஹாஸம்ய என்னும் வாள் ஒன்றை அவனுக்கு அளித்ததோடு ஐம்பது லட்சம் ஆண்டுகள் உயிர்வாழும் பெரும் பேற்றினையும் அளித்தார். இராவணன் எம்பருபெருமானைத் தோத்திரத்தால் மேலும் வழிபட்டான். பேரின்பப் பெருக்குடன் இலங்கைக்குச் சென்றான்.அதே சமயம் நந்தி தேவருக்கு வாகீச முனிவரின் செயல் சினத்தை மூட்டியது. இராவணனுக்கு உதவிசெய்த வாகீச முனிவரை பூலோகததில் பிறக்குமாறு சாபம் கொடுத்தார். 

               அவரும் மாதினியார் மணிவயிற்றில் அவதரித்தார். நாவின் நலத்தினால் நாடு போற்ற அவதரித்த வாகீசரும் மருள்நீக்கியார் என்னும் நாமத்தை பெற்றார். மருள் நீக்கியாரும் நற்பண்புகளு‌க்கெல்லாம் திலக்ம் போன்ற திலகவதியும் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து குழந்‌தைப் பருவத்தைக் கடந்தனர். இருவரும் கல்வி கேளிவிகளில் மேம்பட்டு சகல கலா வல்லவர்களாக விளங்கினர். அப்பொழுது திலகவதியாருக்கு பன்னிரண்டாவது பிராயம். பெற்றோர்கள் திலகவதியை அரசனிடம் சேனாதிபதியாக பணியாற்றும் கலப்பகையார் என்னும் வீரருக்கு மணம் முடிப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்தனர். இத்தருணத்தில் புகழனார் விண்ணுலகை எய்தினார். கணவன் இறந்து போன துயரத்தைத் தாங்கமுடியாத மாதினியாரும் தொடர்ந்து அவரோடு எம்பெருமானின் திருவடியில் ஒன்றினாள்.பெற்றோர்கள் விண்ணுலகு எய்திய துக்கத்தைத் தாளமுடியாமல் திலகவதியாரும், மருள்நீக்கியாரும்‌ பெருந்துயரத்தில் ஆழ்‌ந்தனர். இந்த நிலையில்தான் ஊழ்வினை அவர்களை மேலும் துன்புறுத்தியது. திலகவதியாருக்கு நிச்சயித்திருந்த கலிப்பகையார், போர்க்களத்தில் வீர சொர்க்கம் அடைந்தார் ! இந்தச் செய்தியைக் கேள்வியுற்ற திலகவதியாரும் மருள்நீக்கியாரும் வெந்த புண்ணில் வேல் பாய்ந்தாற்போன்ற வேதனையை அடைந்தார்.

                                  கலிப்பகையார் உயிர் துறந்த பின்னர் திலகவதியார் உ‌யிர் வாழ விரும்ப வில்லை, கலிப்பகையாருக்கும் தனக்கும் திருமணமாகாவிட்டாலும் அவரை மனதில் கணவராக வரிந்துவிட்ட நிலையில் திலகவதியார் இந்த முடிவுக்கு வந்தாள். நான் என் கணவர் சென்ற இடத்திற்கே சென்றுவிடப் போகிறேன் என்று திலகவதியார் உலகை வெறுத்து உயிர் துறக்க எண்ணினாள். அம்முடிவைக் கண்ட மருள்நீக்கியார் தமக்கை யாரிடம் பணிந்து வேண்டினார்.அருமைச் சகோதரி ! தாயும் நம்மைவிட்டு மறைந்த பின் உம்மையே அவர்களாக எண்ணி நான் ஓரளவு மன உறுதியுடன் வாழ நினைத்தேன். எனக்கு தந்தையும் தாயுமாக உள்ள தாங்களும் என்னை தனியே விட்டுச் செல்வதனால் நான் தங்களுக்கு முன்பே உயிர் துறப்பது உறுதி என்று கூறி அழுதார். உடன்பிறந்தோன் மீது தாம் கொண்டுள்ள அளவற்ற கருணையினாலும், அன்பினாலும் திலகவதியார் மனம் மாறினாள். மருள் நீக்கியாருக்காக வேண்‌டி மண்ணுலகில் வாழ முடிவு செய்தார் .

           அம்மையார் மங்கள அணிகளையும் மின்னும் வைரங்களையும், பளபளக்கும் பட்டாடடைகளையும் களைந்து உலக பற்று அற்று, எல்லா உயிர்களிடத்தும் கருணை பூண்டு மனைத்தவம் புரியும் மங்கையராக வாழ்த் தலைப்பட்டாள்.தமக்கையார் தமக்காக உயிர்வாழத் துணிந்தது கண்டு மருள்நீக்கியார் துயரத்தை ஒழித்து மனமகிழ்ச்சி பூண்டார். மருள்நீக்கியார் உலகில் யாக்கை நிலையாமை இளமை நிலையாமை செல்வ நிலையாமை ஆகியவற்றை சிந்தித்துத் தெளிந்து அறிந்து நல்ல அறங்களைச் செய்வதில் மிகுந்த ஈடுபாடு கொண்டார். திருவாமூரில் பொன்னும் மணியும் வேண்டிய அளவிற்குப் செலவு செய்து அறச்சாலைகளையும், தண்ணீர்ப் பந்தல்களையும் அமைத்தார். சாலைகளைச் செப்பனிட்டார். அழகிய சோலைகளை வளர்த்தார். நீர் நிலைகள் பல வெட்டினார். விருந்தினரை உபசரித்து, உண்பித்து வகையோடு வழிபட்டு வேண்டியதை ஈந்து மகிழ்ந்தார் ! தம்மை நாடிவந்த புலவர்கள், பாடி மகிழக் கேட்டு அவர்களது வாடிய முகம் மாறப் பரிசு‌கள் பல அளித்துப் பெருமை பூண்டார். இவ்வாறாக, மருள்நீக்கியார் பற்பல தருமங்களைப் பாகுபாடின்றி வாரி வாரி வழங்கி வற்றாத பெருமையை சீரோடு பெற்றுச் சிறப்போடு வாழ்ந்து வந்தார். இத்தகைய அறநெறி ஒழுக்கங்களை இடையறாது நடத்தி வந்த மருள்நீக்கியார் பற்றற்ற உலக வாழ்க்கைகய விட்டு விலகுவதற்காக வேண்டி சமண சமய‌‌‌‌மே சிறந்த என்று கருதினார். அச்சமயத்தில் ‌சேர்ந்தார். ஐந்தெழுத்து மந்திரத்தின் மகிமையையும், திருவெண்ணீற்றின் திறத்தினையும் உணர்ந்தவருக்கு சமண நூல்களை எல்லாம் கற்க வேண்டும் என்ற எண்ணம் எழுந்தது.

       சமண நூல்களைக் கற்றறிந்து வரும் பொருட்டு, அருகிலுள்ள பாடலிபுரத்திற்கு சென்று அங்குள்ள ஓர் சமணப் பள்ளியில் சேர்ந்தார். அங்கு சில, நாட்கள் தங்கியிருந்து சமண நூல்களைக் கற்றுணர்ந்து வல்லுனர் ஆனார். மருள்நீக்கியார் சமண மதத்தில் பெற்‌ற பெரும் புலமையைப் பாராட்டி மகிழந்த சமணர்கள் அவருக்கு தருமசேனர் என்னும் சிறப்புப் பட்டத்தைக் கெõடுத்து கெளரவித்தனர். மருள்நீக்கியார் சமண மதத்தில் பெற்ற புலமையின் வல்லமையால் ஒரு முறை பெளத்திர்களை வாதில் வென்று, சமண சமயத்தின் ‌தலைமைப்பதவியையும் பெற்றார். சமண மதத்தில் மிகுந்த ஈடுபாடு உடையவராக மருள் நீக்கியார் வாழ்ந்து வந்ததற்கு நேர்மாறாக அவரது தமக்கையாரான திலகவதியார் சைவ சமயத்தில் மிகுந்த பற்றுடையவராய் சிவநெறியைச் சார்ந்து ஒழுகலானாள். சித்தத்தை சிவனார்க்காக அர்ப்பணித்த திலகவதியார் திருக்கெடிலத்தின் வடகரையில் அமைந்துள்ள திருவதிகை வீரட்டானத்தில் மடம் ஒன்றை அமைத்துக் கொண்டாள். வீரட்டானேசுரர்க்குத் திருத்தொண்டுகள் பல புரியத் தொடங்கினாள். தினந்தோறும் திலகவதியார் வைகரைத் துயிலெழுந்து தூய நீராடி ‌கோயிலின் முன்னே அலகிட்டு கோமாய நீரால் சுத்தமாக மெழுகிக் கோலமிடுவாள். மலர்வனம் சென்று, நறுந்தேன் மலர்களைக் கொய்து வந்து மாலைகள் தொடுத்து எம்பெருமானுக்குச் சாத்தி வணங்கி வழிபடுவாள் திலகவதி !இவ்வாறு அம்மையார் கோயிலில் அருந்தவம் புரிந்து வரும் நாளில் மருள்நீக்கியார் சமண சமயத்தில் புலமை பெற்று அச்சமயத்திலேயே மூழ்கி வாழ்கிறார் என்ற செய்தி கேட்டாள். அளவு கடந்த துயரமடைந்தார் . சகோதரனை எப்படியாகிலும் சமணத்தைத் துறந்து சைவத்தில் சேரச் செய்ய முயற்ச்சித்தாள். நாள்தோறும் எம்பெருமானிடம் விண்ணப்பம் செய்தாள். 

       ஒருநாள் இறைவன் திலகவதியின் கனவிலே எழுந்தருளி, திலகவதி ! கலங்காதே ! முற்பிறப்பில் மருள்நீக்கியார் ஓர் முனிவனாக இருந்து என்னை அடைய அருந்தவம் புரிந்தவன். இப்பிறப்பில் அவனைக் சூலை ‌நோயால் தடுத்தாட்கொள்வோம் என்றார். எம்பெருமானின் அருள்மொழி கேட்டுத் திலகவதியார் துயில் நீங்கினாள். துயர் மறந்தாள். சிவநாம சிந்தை பூண்டாள். மன அமைதி கொண்டாள். உடன் பிறந்தோன் உளம் திருந்தி வரும் நன்னாளை எதிர்ப்பார்த்து இருந்தாள். எம்பெருமான் மருள் நீக்கியாரை தடுத்தாட் கொள்ளத் திருவுள்ளம் கொண்டு அவர் உடலில் சூலை நோய் உண்டாகச் செய்தார். சூலை நோ‌ய் அவரது வயிற்றுள் புகுந்து அதனது உக்கிரத்தைத் தொடங்கியது.வடவைத்தீயும், கொடிய நஞ்சும், வச்சிரமும் ‌போல் புகுந்த சூலைநோ்ய் மருள்நீக்கியாரின் குடலைக் குடைந்து தாங்க முடியாத அளவிற்கு அவருக்குப் பெரும் ‌‌வேதனையைக் கொடுத்தது. வெந்தணல் ‌போல் மேனியைச் சுட்டெரித்துக் கொண்டிருந்த சூலை நோயின் கொடிய துயரத்தைத் தாங்க முடியாத மருள்நீக்கியார் சேõர்ந்து கீழே சாய்ந்தார். அவர் தாம் சமணச் சமயத்தில் பயின்ற மணி மந்திரங்களைப் பயன்படுத்தி, நோயினைத் தீர்க்க முயன்றார். நோயின் உக்ரம் சற்றும் குறையவில்லை. வினாடிக்கு வினாடி வலி அதிகரித்துக் கொண்டே இருந்தது. வேதனையைத் தாங்க முடியாத அவர் தணலிடைப் புழுப்போல் துடித்தார். சற்று நேரத்தில் மயக்கமுற்றார்.

                       மருள் நீக்கியாரின் மயக்க நிலையைக் கண்ட சமண குருமார்கள் அக்கணமே ஒன்றுதிரண்டார்கள். பற்பல சமண நெறிவழிகளைக் கையாண்டு நோயைக் குணமாக்க முயன்று பயன் ஒன்றும் காணாது தோற்றுப் போயினர். சமண குருமார்கள் நடத்திய வழிமுறைகளால் மருள் நீக்கியாரைப் பற்றிக் கொண்டிருந்த சூலைநோய் முன்னைவிட அதிகப்பட்டதே தவிர சற்றுக்கூடக் குறையவில்லை. சமண குருமார்களோ அவருக்குத் தொடர்ந்து மயிற்பீலியைக் கொண்டு தடவுவதும், குண்டிகை நீரை மந்திரித்து அவரைக் குடிக்கச் செய்வதுமாகவே இருந்தனர். இறுதியில், சமண குருமார்கள் தங்களால் இக்கொடிய நோயைத தீர்க்க முடியாது என்று தங்களது தோல்வியை ஒப்புக்கொண்டனர். அவரைக் கைவிட்டு விட்டுச் சென்றனர்.மருள்நீக்கியார் வேறு வழியின்றி தமக்கையாரிடம் செல்லத் தீர்மானித்தார். சமையற்காரனை அழைத்தார் . தமக்கு ஏற்பட்டுள்ள துயரத்தைப் பற்‌றித் திலகவதியாரிடம் சென்று அறிவிக்குமாறு ‌சொல்லி அவனை அனுப்பி வைததார். சமயற்காரனும் திருவதிகையை வந்து அடைந்து . நான் தங்கள் உடன் பிறந்தவரால் அனுப்பப்பட்டவன். அவருக்குக் கடுமையான சூலை நோய் கண்டுள்ளது. 

                      சமண குருமார்கள் அனைவரும் அந்நோயின் கொடுமையைப் போக்க முடியாத நிலையில் அவரைக் கைவட்டு போயினர். தமது இத்த‌கைய துயர நிலையைத் தங்களிடம் அறிவித்து வரும்படி என்னை அனுப்பியுள்ளார்கள். சமையற்காரன் சொன்ன செய்தி அம்மையாருக்குத் ‌தீயாகச் சுட்டது. அம்மையார் மன வருத்தங் கொண்டார்கள். இருந்தும் சமணர்களை வெறுக்கும் அம்மையார், அப்பா! சமணர்கள் தங்கியிருக்கும் இடத்திற்கு நான் ஒருபோதும் வர‌மாட்டேன் என்று அவனிடம் சென்று உரைப்பாயாக ! என்று விடை பகர்ந்து அவனைத் திரும்ப அனுப்பி வைத்தாள் திலகவதி ! சமையற்காரன் விடை பெற்றுப் புறப்பட்டான். சமையற்காரன் பாடலிபுரத்தை வந்‌தடைந்தான். மருள்நீக்கியார் ஆவலோடு அவனை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார். அவன் மருள்நீக்கியாரிடம் திலகவதியார் கூறியவற்றைக் கூறினான். தமக்கையாரின் பதிலைக் கேட்டு மருள் நீக்கியார் மனம் வாடிச் சோர்வுற்றார். வேறு வழியின்றி திருவதிகைக்குப் புறப்பட முடிவு செய்தார்.இத்தகைய எண்ணம் எழுந்த‌ை மாத்திரத்தி‌லேயே, நோயின் உக்கிரம் உடம்பில் சற்று தணிந்தாற்போல் இருந்தது அவருக்கு! பாயினால் அணியப்பட்ட உடை களைந்தார். கமண்டலத்தையும், மயிற்பீலியையும், ஒ‌ழித்தார். தூய வெண்ணிற ஆடையைத் தரித்தார். சமணர்கள் எவரும் அறியாவண்ணம் இரவோடு இரவாக அங்கிருந்து தமது பணியாளுடன் புறப்பட்டுத்ச திருவதிகையை அடைந்தார். அம்மையார் தங்கியிருக்கும் மடத்துள் புகுந்தார் மருள்நீக்கியார். 

                       மடத்துள் ஐந‌்தெழுத்து மந்திரத்தை மனதிலே தியானித்தவாறு அமர்ந்திருந்த தமக்கையை நமஸ்கரித்தார் மருள்நீக்கியார். திலகவதியார் ஒருபுறம் மகிழ்ச்சியும், மறுபு றம் வேதனையும் கொண்டாள். மருள்நீக்கியார் மனவேதனையுடன் திலகவதியாரிடம் தமக்கு ஏற்பட்டுள்ள துன்பத்தை பற்றிக் கூறினார். நம்குலம் செய்த அருந்தவத்தால் அவதாரம் செய்த தமக்கையே ! என் குடலுள் புகுந்து உடலை வருத்தும் இக்கொடி‌ய சூலை நோயினைத் தீர்த்துக் காத்திடல் வேண்டும் என்று கண்களில் நீர் மல்க வேண்டி நின்றார்  மருள்நீக்கியார் ! திலகவதியார் சகோதரனைப் பார்த்து மேலும் உளம் உருகினாள். புரமெரித்த புண்ணியரது பொன்னடிகளை நினைத்து மலர்க்கைக் கூப்பித் தொழுது இறைஞ்சினான் திலகவதி. மருள்நீக்கியார் திருமேனியைத் தொட்டு நல்ல கொள்கையில்லாது புறச்சமயப் படுகுழியில் விழ்ந்து அறியாது அல்லூற்றாய். எழுந்திருப் பாயாக ! என்று மொழிந்தாள். அம்மையாரின் அமுத மொழிக்கேட்டு மருள்நீக்கியார் தாம் பற்றிக் கொண்டிருந்த சகோதரியின் கால்களை இரு கைகளாலும் கண்களில் ஒற்றிக்கொண்டு பிணியின் துன்பம் சற்று குறைந்த நிலையில் மெதுவாக எழுந்தார். திலகவதியார் கண் கலங்க சகோதரா ! வருந்தாதே ! இச்சூலை நோய் உனக்கு ஏற்பட்டதற்குக் காரணம் எம்பெருமானின் அருளேயாகும். மீண்டும் உன்னை அவரது அடியாராக ஏற்றுக்கொள்வதற்காக இம்முறையில் உன்னை ஆட்கொண்டார். பற்றற்ற சிவனடியார்களை நினைத்து வழிபட்டுச் சிவத்தொண்டு புரிவாயாக! உன்னைப் பற்றிய மற்ற நோயும் அற்றுப்ப‌‌ோகும் என்று கூறினாள். 

          மருள்நீக்கியாருக்கு சமய மாற்றம் வேண்டித் திலகவதியார், திருவெண்ணீ்‌ற்றினை எடுத்து ஐந்தெழுத்து மந்திரத்தை ஓதியவண்ணம் கொடுத்தாள். அம்மையார் அருளிக் கொடுத்த திருவெண்ணீற்றினைத் தாழ்ந்து பணிந்து பெற்றுக்கொண்ட மருள்நீ்க்கியார், எனக்குப் பற்றற்ற பெருவாழ்வு கிட்டிற்று. பரமனைப் பணிந்து மகிழும் திருவாழ்வு பெற்றேன் என்று கூறிக் திருவெண்ணீற்றை நெற்றியிலும் மேனி முழுவதும் தரித்துக் கொண்டார். திருவெண்ணீற்றின் மகிமையால் மருள்நீக்கியார் நோய் சற்று நீங்கப்பெற்ற நிலை கண்டார். அதுகண்டு அத்திருத்தொண்டர் மனம் குளிர்ந்தார். பெருவாழ்வு பெற்ற மருள்நீக்கியார் முன்போல் சைவராய்த் திகழ்ந்தார். அம்மையார் தம்பியாரை அழைத்துக் கொண்டு திருவலகும், திருமெழுகுத் தோண்டியும் எடுத்துக் கொண்டு கோயிலுக்கு வந்தாள். மருள்நீக்கியார், தமக்கையோடு கோயிலை வலம் வந்து, எம்பெருமான் திருமுன் வணங்கி நின்றார். சிவச்சந்நதியில் சைவப்பழமாக நின்று கொண்டிருந்தார் மருள் நீக்கியார் ! பேரொளிப் பிழம்பான எம்பெருமானின் திருவருள் அவர் மீது பொழிந்தது. தமிழ்ப் பாமாலை சாத்தும் உணர்வு அவருக்கு உதித்தது . உணர்ச்சி ஊற்றெடுத்துப் பெருகியது.

 மருள்நீக்கியார், தம்மைப் பற்றிக்கொண்டு படாத பாடுபடுத்திய சூலைநோயினையும், மா‌யையினையும் அறுத்திடும் பொருட்டு கூறிறாயினைவாயு விலக்கிலீர் என்று தொடங்கும் பதிகத்த‌ினைப் பாடினார்.பாடி முடித்ததும் அவரைப் பற்றிக் கொண்டிருந்த சூலை நோய் அறவே நீங்கியது. எம்பெருமானின் திருவருளை வியந்து போற்றி, திலகவதி கண்ணீர் விட்டாள். மருள்நீக்கியார் சிரமீது கரம் குவித்து நின்று மெய்யருவி பிரார்த்தித்தார். ஐயனே ! அடியேன் உயிரையும், அருளையும் பெற்று உய்ந்தேன் என்று மனம் உருகக் கூறினார் மருள்நீக்கியார் ! அப்‌பொழுது விண்வழியே அசரீரி கேட்டது. இனிய செந்தமிழ்ப் பாக்களால் திருப்பதிகத் தொகையை பாடியருளிய தொண்டனே ! இனி நீ நாவுக்கரசு என்று நாமத்தால் ஏழுலகமும் ஏந்தப் பெறுவாய். மருள்நீக்கியார் திருநாவுக்கரசு என்னும் திருநாமத்தைப் பெற்றார். எம்பெருமானின் திருவருளை எண்ணிப் பூரித்துப் போன திலகவதியார் தமது உடன்பிறந்தோர் சமணப் பித்து, சூலைப் பிணியும் நீங்கியது கண்டு உவகை பூண்டாள். திருநாவுக்கரசர் சைவத்திருத் தோற்றம் பூண்டார். அவரது தலையிலும், கழுத்திலும், கையிலும் உருத்திராட்ச மாலைகள் அணியெனத் திகழந்தன. திருவெண்ணீறு அவரது மேனியில் பால் போல் பிரகாசித்துது. அவரது மனம் ஐந்தெழுத்து மந்திரத்தை நினைக்க - மொழி திருப்பதிகமாக காயம் திருத்தொண்டுகள் புரியத் தொடங்கின. இங்ஙனம நாவுக்கரசர் எம்பெருமானின் சேவடிக்கு மனத்தாலும், வாக்காலும், ‌‌காயத்தாலும் சைவத் தொண்டு புரிந்து பரலானார். சைவ நெறியைப் பின்பற்றி மருள்நீக்கியார் வாழ்வதைக் கேள்வியுற்ற சமண குருமார்கள் கொதித்தெழுந்தார்கள். வெகுண்டார்கள். ஒழித்துக் கட்டுகிறோம் என்று அவர்கள் வீண் சபதம் எடுத்துக் கொண்டார்கள். கெடுமதி படைத்த அச்சமணர்‌கள், பெருங்கூட்டமாகக் கூடி, மன்னனைக் காண வி‌ரைந்தார்கள். அரண்மனை‌யை அடைந்த சமணர்கள், மன்னனை வணங்கி, அரசே, அரசே ! தருமசேனர் தம்மைச் சூலைநோய் பற்றி கொண்டதாகப் பொய் கூறி, நம்மைவிட்டு அன்றதோடல்லாமல் அவரது தமக்கையாரிடம் சென்று சைவத்தைச் சரணடைந்து விட்டார் . நம் சமண சமயத்தை புறக்கணித்துவிட்டார் என்று கூறினார். அவர்கள் மொழிந்‌ததைக் கேட்ட மன்னன், அருந்தவ முனிவர்க‌ளே ! அஞ்சாதீர்! சொல்லுங்கள்! தருமசேனருக்குத் தண்ட‌னை கொடுக்க நான் ஒருபோதும் தயங்கமாட்டேன் ! என்று ஆறுதல் பகர்ந்தான். 

         அரசன் அமைச்சரை நோக்கி, உடனே அவைக்களத்திற்‌கு மருள்நீக்கியாரை அழைத்து வாருங்கள் என்று கட்டளையிட்டான். மன்னனின் ஆணைக்கு அடிபணிந்த அமைச்சர்கள், ‌சேனைகள் சூழ, நாவுக்கரசர் எழுந்தருளியிருக்கும் திருவதிகையை அடைந்தனர். திருவெண்ணீற்றைப் பொலிவுடன் அமர்ந்திருந்த நாவுக்கரசரை அணுகி, தருமசேனரே! மன்னன் மகேந்திரவர்மன் தங்களை உடனடியாக அழைத்து வருமாறு எங்களுக்குக் கட்டளையிட்டுள்ளார். ஆதலால் நீவிர் இக்க‌ணமே எங்களுடன் புறப்பட்டு வரவேண்டும் என்று அரச தோரணையில் ஆணையைப் பிறப்பித்தனர், நஞ்சை அமுதாக உண்ண நீலகண்டரின் திருவடியில் தஞ்சம் புகுந்த திருநாவுக்கரசர், சற்றும் அஞ்சாது நெஞ்சு நிமிர்ந்து, நாமார்க்கும் கு‌டியல்லோம்; நமனை‌‌யஞ்சோம் எனத் தொடங்கும் மறுமாற்றத் திருத்தாண்டகத் திருப்பதிகத்தைப் பாடினார். அமைச்சர்கள் நாவுக்கரசரின் திருப் பதிகத்தில் மெய் உருகினார். அவரது மலர்த்தாளினைப் போற்றி வணங்கினர். ஐயனே தயவுசெய்து எங்களுடன் எழுந்தருளல் வேண்டும் என்று பணிவன்போடு வேண்டிக் கொண்டனர். அமைச்சர்கள் இவ்வாறு வினவியதும் நாவுக்கரசர்ல இங்குவரும் வினைகளுக்கு எம்பிரான் எம்‌மோடு துணை உள்ளார் என மொழிந்தாவாறு அவர்களுடன் புறப்பட்டார். நாவுக்கரசர் பல்லவன் அரண்மனையை அடைந்தார். பல்லவன் முன்னால் சிவஜோதி வடிவான நாவுக்கரசர் தலைநிமிர்ந்து நின்றார். நாவுக்கரசரைக் கண்டதும் சமணர்கள் பொங்கி எழுந்தனர். அருள் வடிவாய் நின்றுகொண்டிருந்த நாவுக்கரசர் முன்னால் அக்கிரமமே உருவெடுத்தாற் போல் அறந்துறந்து சமணர்கள் நின்று கொண்டிருந்தனர். 

        சமணத்தை நம்பிய பல்லவ மன்னன் அறம் மறந்து அரியாசனத்தில் அமர்ந்திருந்தான். அக்கொற்றவன் சமணர்களிடம் தருமசேனரை யாது செய்யவேண்டும் ? என்று கேட்டான். மன்னன் மொழிந்‌ததைக் கேட்டு மதியற்ற சமண மத குருமார்கள் சினத்துடன் அரசரைப் பார்த்து, அரசே! திருவெண்ணீற்றை அணியும் இத் தருமசேனரைச் சுண்ணாம்புக் காளவாயில் தள்ள வேண்டும் என்று கூறினார். அரசன் எவ்வித விசாரணையுமின்றி சமண மயக்கத்தில் அமைச்சர்களிடம் தருமசேனரை சுண்ணாம்புக் காளவாயில் தள்ளுமாறு கட்டளையிட்டான். மன்னன் ஆணைப்படி ஏவலாளர்கள் நாவுக்கரசரைக் கொழுந்து விட்டெரியும் தீயுடன் கூடிய நீற்றறையில் விடுத்து கதவை அடைந்து வெளியே காவல் புரிந்தனர். நீற்றறையில் அடைபட்ட நாவுக்கரசர் எம்‌பருமான் நாமத்தை மனத்தால் தியானித்த வண்ணமாகவே இருந்தார். இறைவனின் அருளால், வெப்பம் மிகுந்த அந்த சுண்ணாம்பு நீற்று, இளவேனிற் காலத்தில் வீசும் குளிர்த் தென்றலைப் போல் குளிர்ச்சி பொருந்திய தடாகம் ‌போல் யாழின் மெல்லிமை போல் தண்மை மிகும் குளிர் நிலவு போல் நாவுக்கரசருக்கு இன்பத்தைக் கொடுத்தது. பிறைமுடி வேணியரை நினைத்து மகிழ்ந்து, மாசில் வீணையும் மாலை மதியும் எனத் தொடங்கும் திருப்பதிக்ம் ஒன்றைப் பாடினார். ஏழு நாட்கள் செனற பின்னர், பல்லவ மன்னனின் கட்டளைப்படி சமண குருமார்கள் அறையைத் திறந்து பார்க்க வந்தனர்.கரியமேகக் கூட்டம் திரண்டு வந்தாற் போல் நீற்றறையை வந்‌தடைந்த சமணர்கள் கதவுகளைத் திறந்ததும் அங்கு அவர்கள் கண்ட காட்சி அவர்களைப் பெரும் வியப்பில் ஆழ்த்தியது. திருநாவுக்கரசர் பேரின்ப வெள்ளத்தில் மூழ்கி அம்பலவாணராது பாதமலர்க் கமலங்களில் ஊறுகின்ற தேனமுதத்தை உண்டுகளித்து, எவ்வகையான ஊனமும் ஏற்படாமல் உவகை பொங்க எழுந்தருளியிருப்ப‌தைக் கண்டனர். ஆத்திரத்தோடு கொதித்தெழுந்த சமணர்கள், மன்னனிடம் விரைந்து சென்று, அரசே தருமசேனர், நமதுசமண நூல்களில் இறவாமல் இருப்பதற்கு கூறப்பட்டுள்ள மந்திரங்களை, ஜபித்து சாகாமல் உயிர் தப்பியுள்ளார் என்று கூறினர். 

அது கேட்ட பல்லவ மன்னன், அங்ஙனமாயின் இப்பொழுது தருமசேனரை யாது செய்தல் வேண்டும் ? என்று கேட்க சமணர்கள், தருமசேனரைக் கொடிய நஞ்சு ஊட்டிக் கொல்லவேண்டும் என்று கூறினார். பல்லவ வேந்தனும் அநத பாவிகளின் கூற்றிற்கு இணங்கி, அவ்வாறே தண்டனை கொடுப்போம் என்று கூறி, தரு‌மசேனரைக் கொல்ல ஆணையிட்டார். சமணர்கள், நஞசு கலந்த பால் சோற்றை எடுத்துக் கொண்டு நாவுக்கரசரை அணுகி, அவரை உண்ணுமாறு செய்தனர். நாவுக்கரசர், பால்சோற்றினை வாங்கிக் கொண்டு, எங்கள் நாதருடைய அடியாருக்கும் நஞ்சும் அமுதமாகும் என்று கூறியவாறு உண்டார். அமரரைக் காக்க ஆலகாலத்தை அமுதம் போல் அள்ளிப் பருகிய நீலகண்டர், நாவுக்கரசர் உண்ணும் நஞ்சு கலந்த பால் சோற்றையும் திருவமுதாக்கி அருளினார். முன்னைவிடப் புதுப்பொலிவுடன், மகிழ்ச்சி ‌பொங்கக் காணப்பட்டார் நாவுக்கரசர்! சமணர்கள் அஞ்சினர். தங்கள் சமயத்திற்கு அந்திம காலம் நெருங்கிவிட்டது என்பதை உணர்ந்தனர். மீண்டும் அக்கொடியவர்கள் பல்லவ மன்னனை அணுகி, விவரத்தை விளக்கிக் கூற, மூன்றாவது முறை அவரை, மத யானையால் இடறச் செய்து கொன்றுவிடுவது என்று உபாயத்தைச் சொல்லினர். மன்னனும் அங்ஙனமே மதங்கொண்ட யானையால் மாய்த்துவிடுவோம். உடனே மத ‌யானையை ஏவி விடுக என்று கட்டளை யிட்டான். வில்லிலிருந்து புறப்படும் கொடிய அம்பு போல் மன்னனது ஆணை புறப்பட்டதும் சற்றும் தாமதியாமல் காவலர் மத யானையை அவிழ்த்து விட்டனர். சமணர்கள் நாவுக்கரசரை அழைத்து வந்து மத யானை வரும் திசைக்கு எதிரில் நிறுத்தினர். நாவுக்கரசர் சிவநாமத்தை சிந்தையிலிருத்தி சுண்ணவெண் சந்தைனச் சாந்தும் எனத் தொடங்கும் சிவப்பாடலைப் பாடினார். திருப்பாட்டின் இறுதியில், அஞ்சுவது யா‌தொன்று மில்லை அஞ்ச வருவது மில்லை என்று அமையுமாறு திருப்பதிகம் அமைத்தார் நாவுக்கரசர்.அப்‌பொழுது புயல் போல் முழக்கமிட்டுக் கொண்டு வந்த மத யானை நாவுக்கரசரின் அருகே வந்ததும் துதிக்கையை உயர்த்தி அவரைச் சுற்றிச் சுற்றி வலம் வந்தது. நிலத்தில் வீழ்ந்து வணங்கி அவருக்கு மரியாதை செய்தது. மத யானையின் மாறுபட்ட செயலைக் கவனித்த சமணர்கள் பாகர்களிடம் நாவுக்கரசரைக் கொல்லுமாறு யானைக்கு செய்கை காட்டுங்கள்‌ என்று பொருமினர். அவர்களும் குறிப்பால் ‌யானைக்கு அதனை உணர்த்தினர். உடனே மத யானை மதம் பொங்க துதிக்கையால் பாகர்களைத் தூக்கி எடுத்து வீசி எறிந்து கொன்றது; அத்தோடு ‌யானை அடங்கவில்லை. அந்த மத யானை சமணர்களின் மீது பாய்ந்து அவர்களையும் காலால் மிதித்துத் தந்தத்தால் குத்திக் கிழித்தது. துதிக்கையால் தூக்கி எறிந்து கொன்று குவித்தது.மந்திரகிரி திருப்பாற் கடலைக் கலக்கியது ‌போல், மத யானை அத்திரு நகரை ஒரு கலக்கு கலக்கி சமணர்களைக் கொன்று குவித்தது. மத யானையின் பிடியில் விழாமல் தப்பிப் பிழைத்த ஒருசில சமணர்கள் அஞ்சி நடுங்கி பல்லவ வேந்தனிடம் தஞ்சம் புகுந்தனர். ஆத்திரத்தோடு சமணர்களைப் பார்த்து இனிமேல் செய்வதற்கு என்னதான் இருக்கிறது? என்று  வெறுப்போடு கேட்டதும், சமணர்கள் இம்முறை தருமசேனரைக் கல்லோடு சேர்ந்து கட்டி கடலில் போட வேண்டும் என்று கேட்டு கொண்டார்கள். அந்த நிலையிலும் சமணர்களின் செருக்கு அடங்கவில்லை. அவர்களது இத்தகைய முடிவிற்குத் தலைவணங்கிய வேந்தன், நாவுக்கரசரை கல்லோடு கட்டிக் கடலில் கொண்டு போய்த் தள்ளிவிடுங்கள் என்று ஏவலாளருக்குக் கட்டளையிட்டான்.

                       ஏவலாளர் நாவுக்கர‌சரைப் படகில் ஏற்றிக் கொண்டு சமணர்களுடன் கடலில் புறப்பட்டனர். நடுக்கடல் சென்றதும், அவரைக் கல்லோடு கட்டி கடலில் வீழ்த்திவிட்டுக் கரைக்குத் திரும்பினார். கடலுள் வீழ்ந்த நாவுக்கரசர், ‌எப்படி ‌வேண்டுமானாலும் ஆகட்டும்; இவ்வெளியோன் எம்பிரானை ஏத்துவேன் என்று நினைத்தார். சொற்றுணை என அடி எடுத்து நற்றுணையாவது நமச்சிவாயவே என்று பதிகம் பாடி கடலில் மூழ்கினார். ஆழ்கடலில் அருந்தமிழ் முத்தை கொடுத்தார். பைந்தமிழ் பாமாலை கோர்த்தார். புலித்தோலைப் போர்த்த அரவணிந்த அண்ணலுக்கு அழகிய ஆரமாய் அணிவித்தார். கல்லும் கனிய இன்மொழியில், நாவரசர் பாமாலை தொடுத்து, ஐந்தெழுத்தை ஓதியதும், அவரது உ‌டலைப் பிணித்திருந்த கயிறு அறுபட்டு வீழ்ந்தது. அக்கயிற்றோடு கட்டியிருந்த கல்லும், தெப்பமாகக் கடல் மீது மிதந்தது. நாவுக்கரசர் அதன்மீது எழுந்தருளினார் . நாவுக்கரசர் வருணனின் உதவியால் திருப்பாதிரிப் புலியூருக்கு அருகிலே கரை சேர்த்தார். அத்தலத்தின்கண் வாழும் அன்பர்களும், அடியார்களும் விரைந்தோடி வந்து நாவுக்கரசரை அன்பு கொண்டு அழைத்து அக மகிழந்தனர். சிவநாமத்தை விண்ணெட்ட ஒலித்த வண்ணம் நாவுக்கரசரை திருப்பாதிரிப்புலியூர் ஐயனின் திருக்கோயிலுக்கு அழைத்துச் சென்றனர். அங்கே குடிகொண்டிருக்கும் முக்கண்ணரின் மென்‌மலர்த்தாளினை ஏத்தி வழிபட்டு, ஈன்றாளுமாயெனக்கெழுந்தையுமாய் ன்று தொடங்கும் நமச்சிவாயப் பதிகத்தை இறைவனின் செவிகுளிர ஓதினார் நாவுக்கரசர். உருத்திராக்ஷ மாலைகளும, திருவெண்ணீரும் மேனியில் துலங்க, கையிலே உழவாரமும் தாங்கியவாறு அப்பர் பெருமான் நின்ற ‌கோலம்கண்டு அன்பர்கள் பேரானந்தம் பூண்டனர். 

                            இவற்றை எல்லாம் கேள்வியுற்ற பல்லவ மன்னன் மனம் மாறினான். மதி தெளிந்தான். எஞ்சிய சமணர்களை அடியோடு ஒழித்தான். நாவுக்கரசருக்குத் தான் செய்த பாவத்திற்கு பிரா‌யசித்தம் தேடப் புறப்பட்டான். அதற்குள் நாவுக்கரசர் அங்கிருந்து புறப்பட்டு, பல சிவத்தலங்களைத் தரிசித்தவாறு, திருவதிகையை வந்‌தடைந்தார். நாவுக்கரசரை வரவேற்க, திருவதிகை வாழ் அன்பர்கள் மிகப்பெரிய ஏற்பாடுகள் பல வற்றைச் செய்தனர். திருவதிகைத் தொண்டர்களும், அன்பர்களும் இன்னிசை முழக்கத் தோடும், வேத ஒலியோடும், எல்லையிலேயே நாவுக்கரசரை வணங்கி வரவேற்று, நகருள் அழைத்துச் சென்றனர். அவரது அன்புத் திறத்தையும், பக்தி திறத்தையும், அருட் திறத்தையும் எண்ணி விம்மித முற்றனர். இவ்வாறு அன்பர்கள் சூழ்ந்துவர, வீதிவழியே வலம் வந்த திருநாவுக்கரசர், ஆலயத்த‌ை அடைந்து திருவீரட்டானேசுவரரைப் பார்த்து, இறைவன் தன்னை ஏழையேன் நான் பண்டிகழ்ந்தவாறே என்று முடியும் திருத்தாண்டகப் பதிகத்தைப் பாடிப் பரமனைப் பேணினார்.

                வீரட்டானேசுவரரிடம் ஆராக்காதல் கொண்ட நாவுக்கரசர், சில நாட்கள் அத்திரு நகரிலேயே தங்கி, பைந்தமிழ்ப் பாமாலையால் வழிபட்டு உழவாரப் பணி ‌செய்து கொண்டிருந்தார். நாவுக்கரசர், திருவதிகைத் தலத்தில் எழுந்தருளியிருந்து  பரமனைப் பாடிப் பணிவதைக் கேள்வியுற்றான் மன்னன் ! நால்வகைப் படை சூழ, மங்கல வாத்தியங்கள் ஒலிக்க திருவதிகையை அடைந்தான் பல்லவ மன்னன் ! திருமடத்தில தங்கியிருக்கும் நாவுக்கரசர் மலரடியில் வீழ்ந்து வணங்கி எழுந்தான். பிழை பொறுத்தருள  பிரார்த்திததான். அவரது அருளையும்,  அன்பையும் பெற்றான்; முக்தி நெறியினை உணர்ந்தான். சிவமே உருவெடுத்த செந்தமிழ்ச் செல்வரின் கருணை உள்ளத்திலே கட்டுண்ட பல்லவன், அன்னையின் அன்பு அரவணைப்பிலே சிக்கித் தவித்த மழலை போலானான். தனது தவற்றை எல்லாம் உணர்ந்து, தம் முன்னால் சிவப்பழமாக நிற்கும் பல்லவ மன்னனுக்கு நாவுக்கரசர், ஐந்தெழுத்து மந்திரத்தை ஜபித்துத் திருவெண்ணீறு கொடுத்தார். அரசன் திருவெண்ணீற்றைப் பக்தியோடு பெற்றுக் கொண்டு தனது நெற்றியிலும், திருமேனியிலும் பூசிக்கொண்டவாறு, நாவுக்கரசரின் அடிமலரைப் பணிந்தான். சில நாட்கள் அவரோடு தங்கியிருந்து, மனம் மகிழ்ந்த மன்னன், ஓர்நாள் அவரிடம் விடை பெற்றுக் கொண்டு பாடலிபுரத்துக்குப் புறப்பட்டான். பாடலிபுரத்தை அடைந்த மன்னன். முதல் வேலையாக சமணர்களின் பள்ளிகளையும், பாழிகளையும் இடித்துத் தள்ளினான். திருவதிகையில் குண பாலீசுரம் என்றும் திருக்கோயிலைக் கட்டி, சைவ சமயத்திற்குச் சிறந்த தொண்டாற்றத் தொடங்கினான். திருநாவுக்கரசர் பல சிவத்தலங்களைத் தரிசித்து வரும் பொருட்டு, திருவதிகைப் பெருமானை வணங்கித் தமது சிவயாத்திரையைத் தொடர்ந்தார். திருவெண்ணெய்நல்லூர், திருவாமாத்தூர், திருக்கோவிலூர் போன்றத் தலங்களில் எழுந்தருளியிருக்கும் இறைவனைத் துதித்த வண்ணம் பெண்ணாடத்தைப் வ்நதணைந்தார். பரம்‌பொருளைப் பாமாலை சாத்திப் போற்றினார். 

           ஐ‌யனே! எம்மை ஆட்கொண்டு அருளிய அருள் வடிவே ! சமணத்தோடு சேர்ந்து சில காலம் அவர்களுக்காகவே உழைத்த இந்த ஈன உடம்பு உலகில் உயிர் வாழ விரும்பவில்லை. அடியேன் உலகில் உமது திருநாமம் போற்றி மகிழ்ந்து வாழ்ந்திட வேண்டுமென்றால் தேவரீர் திருவுள்ளம் கனிந்து, இந்த ஏழையின் வெண்ணீறு அணிந்த மேனியிலே, உமது குலச்சினையான சூலத்தையும் இடபத்தையும் பொறித்து அருள்புரிவீராகுக என்று வேண்டினார் நாவுக்கரசர். பொன்னாற் திருவடிக் கொன்றுண்டு விண்ணப்பம் எனத் தொடங்கும் திருப்பதிகத்தைப் பாடினார். திருநாவுக்கரசர் பதிகம் பாடி முடித்தார். எவரும் அறியா வண்ணம் பூதகணத்தவர் தோள்களில் சூல முத்திரையையும், இடபமுத்திரையையும் பொறித்து விட்டு அகன்றனர். திருநாவுக்கரசர் ஆனந்தக் கண்ணீர் வடித்து நின்றார். விண்ணவர் மலர்மாறி பொழிந்தனர். ஆலயத்துள் ம‌றையொலி முழங்கியது. அருள் ஒளி பிறந்தது. அடிகளார் உய்ந்தேன் எனக்கூறி மகிழ்ந்து தம்மை மறந்த நிலையில், பரமனின் பாத கமலங்களில் வீழ்ந்தார். அருந்தவசிகளும், அமரர்களும், திருமூர்த்திகளும் போற்றி வணங்கும் வேணியர் பிரானின் மலரடியில் அன்பின் அருள்வடிவமாய் வீழ்ந்த அண்ணல் அம்மையப்பரின் அருத்திறத்தினை எண்ணிப் பெருமிதமுற்றார். அத்தலத்தில் சில நாட்கள் தங்கியிருந்து முக்காலமும், முக்கண்ணரைப் போற்றிச் செந்தமிழ்ப் பாமாலை சாத்தி, சிந்தைமகிழ, திருத்தொண்டுகள் பல நடத்தி வந்தனர். 

ஒருநாள் அத்திருத்தலத்திலிருந்து புறப்பட்டார். திருவரத்து‌றை, திருமுதுகுன்றம் போன்ற தலங்களில் எழுந்தருளியிருக்கும் பரமனைப் பாடிய வண்ணம் தில்லையை அடைந்தார். நாவுக்கரசர், கோபுரத்தைக் கண்டு, கண்களில் நீர்மல்க, சிவநாமத்தைப் ‌பாடிப் பணிந்தார். சிதம்பரம் தில்லை நடராஜர் கோயிலின் மேற்கு ராஜகோபுரத்தின் வழியாக சென்று நடராஜரை தரிசித்தார். தி்ல்லைவாழ் அந்தணர்கள் சூழ ஆலயத்துள் எழுந்தருளிய நாவுக்கரசர், பேரம்பலத்த‌‌ை வணங்கினார். ஆனந்தத் தாண்டவம் ஆடும் பொன்னம்பலத்தரசரைப் பேரன்புருகத் தொழுதார். கையுந் தலைமிசை புனையஞ்சலியன எனத் தொடங்கும் செந்தமிழ்ப் பதிகத்தைப் பாடினார். எம்பெருமானின் ஆனந்த வடிவத்தைப் பார்த்துப் பார்த்து மகிழ்ந்து நின்ற திருநாவுக்கரசருக்கு, பாத கி்ண்கிணிகள் பரதமாட அரவமணிந்த அழகிய வெண்ணீறு துலங்கும் மலர்க்கரங்கள் அபிநயத்தோடு தெரிவது கண்டார், இறைவன் தன்னைப் பார்த்து, என்று வந்தாய் ? என்று கேட்பது போன்ற குறிப்பைப் புலப்படுத்த நடனம் புரிகின்றாய் என்று உணர்ந்து கொண்டவராய், கருநட்ட கண்டன் என்னும் விருத்தத்தையும், பத்தனாய்ப் பாடமாட்‌டேன் என்னும் நேரிசையையும் பாடிப் பணி்ந்தார் திருநாவுக்கரசு ! அத்தலத்தில் சிலகாலம் தங்கியிருந்து உழவாரப்பணி செய்து வந்‌தார். எம்பெருமானை வணங்கி பாமாலை பல பாடினார். ஒருநாள் நாவுக்கரசர் தில்லையைவிட்டுப் புறப்பட்டுத் திருநாரையூர் வந்தார். ‌பொள்ளாப் பிள்ளையாரை வணங்கினார். 

          அங்கிருந்து புறப்பட்டுச் சீர்காழிப் பதியின் எல்லையை வந்தடைந்தார். தோணியப்பருக்குத் திருத்தொண்‌டு ‌புரிநதுவரும் ஞான சம்பந்தர், அன்பர்‌களோடும், அடியார்களோடும் புறப்பட்டுச் சென்று நாவுக்கரசரை அகமும், முகமும் மலர எதிர்க்கொண்டு அழைத்தார். நாவுக்கரசர் திருக்கூட்டத்தின் இடையே சென்று அவருடைய மலரடியைப் பணிந்தார்.ஞான சம்பந்தர், நாவுக்கரசரை தமது தந்தையாரைப் போன்ற தலைமையான சிறப்பு மிக்கவர் என்பதை உளமாற உணர்ந்து, அப்பரே என்று அழைத்ததும், திருநாவுக்கரசர் அடியேன் என்று தமது பணிவான அன்பை வெளிப்படுத்தினார். அருட்கடலும், அன்புக்கடலும் கலந்தாற்போன்று, இணைந்த இவ்விரு ஞானமூர்த்திகளும் அன்பர்கள் புடைசூழ தோணியப்பர் ஆலயத்தை வந்தடைந்தனர். திருக்கோபுரத்தை வழிபட்ட இருவரும் வானளாவி ஓங்கி நிற்கும் விமானத்தை வலம் வந்து ‌தொழுதனர். ஆளுடைப்பிள்ளையார்அப்பரடிகளைப் பார்த்து, அப்பரே! நீவிர் உம்மை ஆட்கொண்டருளிய எம்பெருமானை இன்பத் தழிழால் பாடுவீராக ! என்று வேண்டினார். ஆனந்தக் கடலில் மூழ்கி நின்ற அப்பரடிகள், பார் கொண்டு முடி என்னும்  பாமாலை சாத்தித் திரு‌த்தோணியப்பரையும், பெரியநாயகியம்மை‌யையும் பணிந்தார்.

        கலைஞானக் கன்றாகிய ஆளுடைப்பிள்ளையின் விருப்பதிற்கிணங்க அருள்ஞான அரசராகிய அப்பரடிகளும் சீர்காழியில், ஞானசம்பந்தருடன் சிலகாலம் தங்கி இருந்தார். இரு சிவநேசர் செல்வர்களும் நாடோறும் எம்பெருமானை வணங்கி, பதிகம் பல பாடிப் பணிந்து வந்தனர். சீர்காழிப் பதியிலுள்ள மெய்யன்பர்கள் அருள்பெற்ற இந்த நாயன்மார்களின் செந்தமிழ்த் தேன் சிந்தும் பக்திப் பாடல்களைப் பருகிப் பெருமிதம் பொங்கினர். சீர்காழி நகரம் விழாக்கோலம் பூண்டது ! ஒரு நாள் சோழநாட்டிலுள்ள திருத்தலங்களை எல்லாம் தரிசித்து வரவேண்டும் என்று ஆராக் காதலுடன் இரு ஞானமூர்த்திகளும் சீர்காழியை விட்டுப் புறப்பட்டனர். பல சிவதலங்களைத் தரிசித்தவாறு திருகோலக்கா என்னும் தலத்தை வந்தடைந்தனர். அங்கு இருவரும், எம்பெருமானைத் தரிசித்து சிந்தை குளிர்ந்தனர். ஆளுடையப்பிள்ளையார் அப்பர் சுவாமிகளிடம் விடைபெற்றுக்கொண்டு சீர்காழி்க்குத் திரும்பினார். அப்பரடிகள் ‌கோலக்காவிலிருந்து புறப்பட்டார்.

                       கருப்பறியலூர், திருப்புன்கூர், நீடூர், திருக்குறுக்கை, வீராட்டம், திருநின்றயூர், திருநனிப்பள்ளி வழியாக பல சிவத்தலங்களைத் தரிசித்தவாறு திருச்சத்தி முற்றத்தை வந்தடைந்தார். உமாதேவியார் போற்றிப் பணிந்‌த புனிதத்தலமாகிய திருச்சத்தி முற்றத்தில் எழுந்தருளியிருக்கும் இறைவனை வணங்கி வழிபட்டார். அப்பரடிகள் அவ்வூரில் தங்கியிருந்து எம்பெருமானுக்கு உழவாரப் பணி‌செய்யத் திருவுள்ளம் பற்றினார். திருச்சத்தி முற்றத்து பக்தகோடிகள் திருநாவுக்கரசரின் வருகையால் புளங்காகிதம் அடைந்தனர். நாவுக்கரசர் உழவாரப் பணிபுரிந்து பரமனை வழிபட்டார். ஆன்மீக அன்பர்களும் அப்பரடியாருக்கு உறுதுணையாக நின்றனர். அப்பரடிகள் எம்பெருமானே! கூற்றவன் வந்து எனது உயிரைக் கவர்ந்து செல்லுமுன் உமது திருவடி அடையாள்ம் பதியுமாறு அடியேன் சென்னிமீது வைத்து அருளவேண்டும் என்ற கருத்தமைந்த கோவாய் முடுகியடுறதில் எனத் தொடங்கி, திருச்சத்தியமுற்ற துறையும் சிவக்கொழுந்தே என்னும் திருப்பதிகத்தைப் பாடினார். அருள்வடிவமாகி எம்பெருமான், திருநல்லூருக்கு வா என்று அப்பரடிகளுக்கு அருள்புரிந்தார். அடிகள் ஆனந்தம் மேலிட அக்கணமே திருச்சத்தி முற்றத்தை விட்டுப் புறப்பட்டார். திருநல்லூர் என்னும் பழம்பதியை வந்தடைந்தார். நலம் தந்த நாதரை வலம் வந்து வணங்கினார். அப்பொழுது கருணைக் கடலாகிய நல்லூர்ப் பெருமானார், திருச்சத்தி முற்றத்தில் உளம் உருக என்னிடம் வேண்டியதற்கு ஏற்ப உனது எண்ணத்தை முடி்க்கின்றோம் என்று திருவாய் மலர்ந்து, தமது திருப்பாத மலர்களை அப்பர் சுவாமிகளின் சென்னியின் மீது சூட்டி அருளினார். எம்பெருமான் கருணைக் கடலில் மூழ்கி கரைகாணாமல் தத்தளித்துப் போன அப்பரடிகள் நினைத்துருகும் அடியாரை எனத் தொடங்கி நல்லூர்ப் பெருமானார் நல்லவாரே எனப் பாடினார். 

             அங்கிருந்து புறப்பட்டு திங்களூர் வந்‌தடைந்த அப்பரடிகள், அப்பூதி அடிகளின் இல்லத்திற்கு எழுந்தருளினார். அங்கு திருவமுது உண்ணப்போகும் தருணத்தில் அபபூதி அடிகளின் மகன்களுள் மூத்தவன் அரவம் தீண்டி இறந்தான் என்பதறிந்து அவனைத் திருப்பதிகம் பாடி உயிர் பெற்று எழச் செய்தார் நாவுக்கரசர். நாவுக்கரசர் அப்பூதி அடிகளோடு திங்களூரில் தங்கியிருந்து எம்பெருமானைப் பணிந்து வந்தார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு நாவுக்கரசர். திருப்பழனம் வழியாக நல்லூர்,பழையாறை, வலஞ்சுழி, திருக்குடமுக்கு, திருச்சேறை,திருக்குடவாயில்,திருநா‌ரையூர், திருவாஞ்சியம் பெருவேளூர், திருவிளாமர் முதலிய தலங்களைத் தரிசித்துக்கொண்டே வந்தார். பெருமானை வண்டமிழ்ப் பாமாலை பாடிப்போற்றினார் நாவுக்கரசர். எண்திசையும் அவரது புகழ் ‌பேச சிவதரிசனம் செய்துகொண்டே திருவாரூரை வந்தணைந்தார். திருவாரூர்ச் சிவத்தொண்டர்களுகளும், சிவ அன்பர்களும் அப்பரைக் கோலாகலத்தோடு வணங்கி வரவேற்றார்கள். அடியார்கள் சூழ, அப்பரடிகள் தேவாசிரிய மண்டபத்தின் முன்சென்று வணங்கிய வண்ணம் கோயில் உள்ளே செனறார். புற்றிடங் கொண்ட தியாகேசப்பெருமானை அன்போடு துதி செய்து திருத் தாண்டகம் பாடி அன்போடு துதி செய்து திருத் தாண்டகம் பாடி மகிழ்ந்தார். திருவாதிரைத் திருநாளைக் கண்டுகளித்தனர். அப்பரடிகள் அத்தலத்திலேயே எழுந்தருளியிருந்து தினந்தோறும் தியாகேசப் பெருமானை வழிபட்டு இனிய பக்திப் பாமாலைகளைச் சாத்திச் சிந்தை குளிர்ந்தார். அடுத்துள்ள வலிவலம், கீழ்வேளூர், கன்றாப்பூர் ‌போன்ற திருப்பதிகளுக்கும் சென்று வந்தார். திருவாமூர் திருவாதிரைத் திருவிழாவைக் கண்டு களிப்புற்றார். 

                பின்னர் அங்கிருந்து திருப்புகலூருக்குப் புறப்பட்டார். இத்தருணத்தில் சீர்காழியில் இருந்து எழுந்தருளிய ஞானசம்பந்தர் பல சிவ தலங்களைத் தரிசித்த வண்ணம் திருப்புகலூரை வந்தணைந்தார். முருகநாயனார் மடத்தில் தங்கியிருந்து நாடோறும் ஆலயம் சென்று அரனாரை வணங்கி வழிபட்டு வந்தார் சம்பந்தர். அப்பரடிகள் தமது அன்பர்களுடன் திருப்புகலூருக்கு வந்து கொண்டிருந்தார். இவ்விவரத்தை முன்பாகவே அறிந்துகொண்ட ஆளுடைப் பிள்ளையார் திருப்புகலூர்த் தொண்டர்களுடன் அப்பரடிகளை எதிர்கொண்டு வரவேற்று ஆரத்தழுவி மகிழ்ந்தார். ‌தொண்டர்கள் புடைசூழ இரு ஞான செல்வர்களும் முருகநாயனார் மடத்திற்கு வந்தனர். முருகநாயனார், பேரானந்தத்துடன் இரு சிவனருட் செல்வர்களையும் வரவேற்று மடத்துள் எழுந்தருளச் செய்தார்; சிவஞானப் பதிகம் பாடி மகிழ்ந்தார். ஆளுடைபிள்ளையார் அப்பரடிகளிடம், அப்பரே! திருவாதிரைத் திருநாளில் நிகழ்ந்த அற்புதங்களையும் புற்றிடங் கொண்ட பெருமானின் பெருமையையும் ஏற்றமிகும் இன்பத் தமிழால் எடுத்துரைப்பீர் என்று வேண்டினார். அம்மொழி கேட்டு அகமகிழ்ந்த அப்பரடிகள் தியாகேசப் பெருமானின் திருக்கோலத் திருவிழா வைபவத்தை முத்துவிதான மணி்ப பொற்கவரி எனத் தொடங்கும் தண்தமிழ்ப் பதிகத்தால் நெக்குருக பாடினார். இவ்வற்புதத் திருப்பதிகத்தைச் செவி குளிரக் ‌கேட்டு இன்புற்ற ஆளுடைப் பிள்ளையார், தியாகேசப் பெருமானைத் தரிசிக்க வேண்டும் என்று அளவிலா ஆசை கொண்டார். சிலநாட்கள் அப்பருடன் முருகநாயனாரின் மடத்தில் தங்கியிருந்து சம்பந்தர், அப்பரடிகளிடம் விடை பெற்றுக் கொண்டு சிவ அன்பர்களுடன், திருவாரூருக்குப் புறப்பட்டார்.

                அப்பரடிகள், புகலூர்ப் பெருமானுக்கு உழவாரப் பணி செய்து மகிழ்ந்து வந்தார். திருப்புகலூரில் தங்கியிருந்து திருத்தொண்டுகள் புரிந்து வந்த அப்பரடிகள், அடுத்துள்ள திருச்சாத்தமங்கை, திருமருகல் ‌போன்ற சிவத்தலங்களுக்கு அன்பர்களுடன் சென்று சிவதரிசனம் செய்து வந்தார். திருவாரூர் சென்‌றிருந்த ஆளுடைப் பி‌ள்ளையார் புற்றிடங் கொண்ட பெருமானை வழிபட்டு அன்பர்களுடன் திருப்புகலூருக்குத் திரும்ப வந்தார். அப்பரடிகள், திருத்தொண்டர்களுடன் சென்று, எல்லையிலேயே ஆளுடைப் பிள்ளையாரைச் சந்தித்து, எதிர்கொண்டு வரவேற்றார். இரு ஞானமூர்த்திகளும் திருப்புகலூர்ப் பெருமானை வழிபட்டவாறு மடத்தில் தங்கியிருந்தனர். சிறுத்தொண்ட நாயனாரும், திருநீலநக்க நாயனாரும், முருக நாயனாரும் மடத்திற்கு எழுந்‌தருளினர். இரு திருஞான மூர்த்தியர்களையும் வணங்கி மகிழ்ந்தனர். அச்சிவனடியார்கள், இரு ஞான மூர்த்திகள் திருத்தொண்டில் அருட்திறத்தினை வானளாவப் புகழ்ந்து போற்றினர். அருள்பெற்ற சிவனருட் தொண்டர்களாடு, முருக நாயனார் திருமடத்தில் தங்கியிருந்த ஆளுடைப் பிள்ளையாருக்கும், அப்பரடிகளுக்கும், சிவயாத்திரைக்குப் புறப்பட வேண்டும் என்ற பெருவிருப்பம் ஏற்பட்டது. அவர்கள் அனபர்களனைவரிடமும் விடைபெற்றுக் கொண்டு திருப்புகலூர்ப் புண்ணியரின் அருளோடு திருக்கடவூர் என்னும் திருத்தலத்திற்கு  புறப்பட்டனர். இரு திருவருட் செல்வர்களும் திருக்கடவூரை அடைந்து, காலனை உதைத்த விமலநாதரைஅமுதத்தமிழால் பாடிப் பணிந்து குங்குலியக் கலயனார் மடத்திற்கு எழுந்தருளினார். 

                        குங்குலியக் கலயனார் எல்லையில்லா மகிழ்வோடு இருவரையும்  வழிபட்டு வரவேற்றார். இத்திருநகரில் குங்குலிய கலியநாயனாருடன் சில நாட்கள் தங்கியிருந்து , திருத்தொண்டுகள் பல புரிந்து வந்த இரு ஞானமூர்த்திகளும், குங்குலியக்கலய நாயனாரிடம் விடைபெற்றுக் கொண்டு, திரு ஆக்கூர் வழியாக தங்கள் சிவயாத்திரையத் தொடங்கினார். போகும் வழியிலேயே பல புண்ணிய சிவத்தலங்களைத் தரிசித்து, அரவணிந்த அண்ணலை, அழகு தமிழில் வழிபட்டனர். திருவீழிமிழலை என்னும் திருத்தலத்திற்கு வந்து சேர்ந்தனர். ஒருமுறை திருமால் சக்ராயதம் பெருவதற்காக எம்பெருமானை, ஆயிரத்தெட்டு கமல மலர்களால் வழிபடலானார். எம்பெருமான், அம்மலருள் ஒரு மலர் குறையுமாறு செய்தருளினார். அதை அறியாத திருமால் ஒவ்வொரு ‌மலர்களாக எடுத்து, ஐந்தெழுத்து மந்திரத்தை ஓதி அர்ச்சனை செய்து வந்தார். இறுதியில், ஒரு மலர் குறைகிறது என்பதை உணர்ந்து உளம் உருகினார். திருமால் வேறு மலர் கொய்து வருவதற்குள் தாமதம் ஏற்பட்டு, வழிபாடு தடைப்பட்டுவிடும் என்பதை உணர்ந்தார். வழிபாட்டை நிறைவோடு முடிக்கக் கருதினார். தமது மலர் கண்களிலே ஒன்றை எடுத்து அர்ச்சனை செய்வது என்ற முடிவோடு ஒரு விழியைத் தோண்டி எடுக்கத் துணிந்தபொழுது, எம்பெருமான் எழுந்தருளி அவ‌ரைத் தடுத்தாட் கொண்டார்.

                                         திருமாலின் அன்பிற்குக் கட்டுப்பட்ட திருசடைப் பிரான் சக்ராயுதம் கொடுத்தருளினார். திருமால் விழிகளில் ஒன்றை ‌எடுத்து இறைவனுக்கு அர்ச்சிக்கத் துணிந்ததால் இத்திருத்தலம் திருவீழிமிழலை என்று திருநாமத்தைப் பெற்றது. இத்திரு நகரில் அடியார்களின் கூட்டம் கடல் வெள்ளம் போல் பொங்கி எழுந்தது. அங்கு வருகை தந்த இரு ஞானமூர்த்திகளை எதிர்கொண்டு வணங்கி, மலர் தூவி வரவேற்றனர் அடியார்கள். அருட்செல்வங்கள் மட்டற்ற மகிழ்ச்சிப் பெருக்கோடு தொண்டர் குழாத்தோடு கலந்து, மாடவீதி வழியாக விண்விழி விமானத்தையுடைய கோவிலுள் எழுந்தருளினர். கோயிலை வலம் வந்து திருமுன் பக்திப் பழமாக நின்ற இரு ஞானமூர்த்திகளும், தமிழ்ப் பதிகத்தால் வீழி அழகரை ஏற்றித் துதித்தனர். அப்பரடிகள், திருவீழிமிழலையானைச் சேராதார் தீயநெறிக்கே சேர்கின்றாரே என்ற ஈற்றிடியினைக் கொண்‌ட திருத்தாண்டகப் பதிகம் பாடினார். திருவீழிமிழலை அன்பர்கள் இரு சிவன் அடியார்களும் தங்குவதற்குத் தனித்தனியழகிய திருமடங்களை ஏற்பாடு செய்தனர். இரண்டு மடங்களிலும் ஆண்டவன் ஆராதனையும் அடியார் துதியாராதனையும் சிறப்பாக நடந்தன. 

          இருவரும் அத்தலத்திலேயே சிலகாலம் தங்கியிருந்து திருத்தொண்டுகள் பல புரிந்து வந்தனர். இந்த சமயத்தில் வானம் பொய்த்தது; மழையின்றி எங்கும் வறட்சி ஏற்பட்டது. நாடெங்கும் விளைச்சல் இல்லாமற் போனது, மக்கள் தாங்க முடியாத பஞ்சத்தால் பெரிதும் துயருற்றனர். மக்களுக்கு ஏற்பட்ட பஞ்சத்தை எண்ணி அப்பரும், ஆளுடைப் பிள்ளையும் செய்வதறியாது சிந்தித்தனர். திருவீழிமிழலை திருசடை அண்ணலைத் தியானித்த வண்ணமாககே இருந்தனர். ஒருநாள் எம்பெருமான், இரு ஞானமூர்த்திகளுடைய கனவிலும் எழுந்தருளி, உங்களைத் தொழுது வழிபடும் தொண்டர்களுக்காக உங்களுக்குத் தினந்தோறும் படிக்காசு தருவோம். அதனைக் கொண்டு அடியார்களின் அவலநிலையை அகற்றுங்கள் என்று திருவாய் மலர்ந்து மறைந்தார். மறுநாள் கிழக்கு பீடத்தில் ஆளுடை பிள்ளையாருக்கும், மேற்கு பீடத்தில் அப்பரடிகளுக்கும், ‌பொற்காசுகளை வைத்தார். திருஞான சம்பந்தர் அம்பிகையின் ஞானப்பாலுண்ட திருமகனாரானதால் அவருக்கு வாசியுடன் கூடிய காசும், அப்பரடிகள் எம்பெருமானிடத்து மெய் வருந்த அருந்தொண்டு ஆற்றிகிறவராதலால் அவருக்கு வாசி இல்லாத காசும் கிடைக்கப் பெற்றது. இருவரும் படிக்காசுகளைக் கொண்டு பண்டங்கள் வாங்கி வந்து அடியார்க்கு அமுதளி்க்க வகை செய்தனர். எல்லோரும் அமுது உண்டு செல்லுங்கள் என்று பறை சாற்றினர். மக்களுக்கு அன்னதானம் புரிந்து பஞ்சத்தைப் போக்கினர். இவ்விரு சிவனடியார்களின் இருமடங்களிலும் தினந்தோறும் தொண்டர்கள் அமுதுண்டு மகிழ்ந்த வண்ணமாகவே இருந்தனர். இறைவனின் திருவருளாலே, மாதம் மும்மாரி பொழிந்தது. நெல்வளம் கொழித்தது. எங்கும் முன்போல் எல்லா மங்களங்களும் பொங்கிப் பொழிந்தன. இரு சிவ மூர்த்திகளும், தங்கள் சிவ தரிசன யாத்திரையைத் தொடங்கினர். திருவாஞ்சியம் முதலிய சிவத்தலங்களை வழிபட்ட வண்ணம் வேதாரணியம் என்று அழைக்கப்படும் திருமறைக்காடு என்னும் தலத்தை வந்தணைந்தார்.

              ஞானசம்பந்தரும் திருநாவுக்கரசரும் ஆலயத்திற்கு வந்தனர். கோயிலில் கதவுகள் அடைககப்பட்டிருந்தன. அதுகண்டு வியப்பு மேலிட்ட இரு ஞானமூர்‌த்திகளும் அன்பர்களிடம் கதவுகள் அடைக்கப்பட்டிருப்பதின் காரணத்தை வினவினர். அச்சிவ அன்பர்கள், இருவரையும் தொழுது வணங்கியவாறு விவரத்தை விளக்கினர். நாங்கள் மற்றொரு வாயில் வழியாக அரனாரை வழிபாடு செய்து வருகின்றோம். அன்பர்கள் மொழிந்ததைக் கேட்டு இரு ஞான மூர்ததிகளும் எப்படியும் கதவுகளைத் திறத்தல் வேண்டும் என்று எண்ணினார். ஆளுடைப் பிள்ளையார், அப்பரடிகளைப் பார்த்து, அன்பரே! மறைகள் வழிபட்ட வேணிபிரானை நாம் எப்படியும் இந்த நேர்வாயிலின் வழியே சென்று தரிசித்து வழிபடுதல் வேண்டும். எனவ‌ே திருமுன் காப்பிட்ட கதவும் திறக்கும்படி திருப்பதிகம் பாடி அருள்வீராக! என்று ‌கேட்டுக் கொண்டார். ஆளுடைப்பிள்ளையாரின் அன்புக் கட்டளையக் கேட்டு், அகமகிழ்ந்த நாவுக்கரசர் இறைவனைத் தியானித்த வண்ணம், பண்ணின் நேர்மொழியாள் எனத் தொடங்கும் பதிகத்தைப் பாடினார். இருந்தும் கதவு திறக்கத் தாமதமாவதைக் கண்டு இறக்க மொன்றிவிர் என்று திருக்கடைக் காப்பிலே பாடினார். இங்ஙனம் திருநாவுக்கரசர் மெய்யுருகப் பாடிமுடித்த அளவில் மறைக்காட்டு மணிகண்டப் பெருமானின் திருவருளால் மணிக் கதவம் தாள் நீங்கியது. திருக்கதவும திறக்கப்பட்டது. அப்பரடிகளும்,ஆளுடைப் பிள்ளையும் அகமும், முகமும் மலர்ந்தனர். அன்பரகளும், அடியார்களும், சிவநாமத்தை விண்ணெட்ட முழக்கினர். 
         
                     இரு ஞானமூர்த்திகளும் மற்ற சில அன்பர்களோடு. ஆலயத்திற்குள் சென்றனர். வேதவனப் பெருமானின் ஆலயத்திற்குள் சென்றனர். வேதவனப் பெருமானின் தோற்றப் பொலிவைக்கண்டு மருள்கொண்டு நின்றனர், அழகு தமிழால் வழிபட்ட இரு ஞானமூர்த்திகளும் புறத்தே வந்தார்கள். அப்பரடிகள், இம மணிக்கதவம் அடைக்குமாறு நீரும் பாடியருள்க என்று ஆளுடையப் பிள்ளையாரிடம் வேண்டிக் கொண்டார். அம்பிகையின் ஞானப்பாலுண்ட சம்பந்தர் பாடினார். திருப்பதிகத்தில், முதற்பாட்டிலேயே திறந்த கதவம் தானே மூடிக்கொண்டது. அன்று முதல் ஆலயத்தின் மணி கதவுகள் தானாகவே திறக்கவும், மூடவும் ஏற்றாற்போல் அமைந்தது. இத்தயை மகிழ்ச்சிப் பெருக்கில் அனைவரும் இருஞானச் செல்வர்களையும் மலர் தூவிக் கொண்டாடினர். அத்திருத்தொண்டர்கள் புடைசூழ மடத்திற்குப் புறப்பட்டனர். மொழிக்கு முதல்வராகிய நாவுக்கரசர் மடத்தில் ஒரு புறத்தே படுத்துக்கொண்டார். அவருக்கு உறக்கம் வரவில்லை. மனதில் எழுந்த ஒரு சிறு கலக்கம் அவரை அளவு கடந்து குழப்பிக் கொண்டிருந்தது.
முதலில் வாயில் காப்பு நீங்குவதற்கு அடியேன் இரு தடவைகள் முயன்று பாடிய பின்னரே திறந்தது. ஆனால் ஞானசம்பந்தர் காப்பு மூடுவதற்குப் பாடத் தொடங்கியபொழுதே கதவும் அடைபட்டு விட்டது. அது ஏன் ? நான் பாடியவுடன் மட்டும் கதவம் ஏன் திறக்கவில்லை ? எம்பெருமானுடைய திருவுள்ளக் கிடக்கை யாதோ என்பதை இந்த அடியேன் அறி‌ய இயலாது போனேனே ! என்ற எண்ணம் நாவுக்கரசரின் நித்திரையைக் கெடுத்தது. கண்களை மூடிக்கொண்டு சிவசிந்தையில் ஒருவாறு கண் அயர்ந்தார். இறைவன் அவரது கனவில் எழு்ந்தருளினார் ! வாகீசா ! நாம் திருவாய்மூரில் இருப்போம். அங்கு நீ எம்மைத் தொடர்ந்து வருவாயாக ! என்று எம்பெருமான் அருள்வாக்கு மலர்ந்தருளினார். 

        அப்பரடிகள் உறக்கம் கலைந்து எழுந்தார். எம்பெருமானைப் பணிந்து, எங்கே என்னை இருந்திடத் தேடிக்கொண்டு எனத் தொடங்கும் பதிகம் ஒன்றைப் பாடினார் அப்பரடிகள். அந்த இரவிலேய திருவாய்மூர் புறப்பட எண்ணினார். அந்த நள்ளிரவு வேளையில் சம்பந்தரின் நித்திரை‌யைக் கெடுக்க விரும்பவில்லை நாவுக்கரசர்.  மடத்திலுள்ள சில அடிகளாரிடம் மட்டும் கூறிவிட்டு புறப்பட்டார். எம்பெருமான், அந்தணர் கோலத்துடன் அடியார் முன்னால் சென்று கொண்டிருந்தார். எம்பெருமானுக்கு பின்னால் அப்பரடிகள் அதிவேகமாக நடக்கலானார் நிறைந்த அமுதம் கைக்கு எட்டியும், வாய்க்கு எட்டாதது போல், தம்மால் முயன்றவரை முழு வேகத்தடன் விரைந்து சென்றும் அவரால் எம்பெருமானை நெருங்க முடியவில்லை ! இத்தருணத்தில் எம்பெருமானின் திருவருளால் இமைமூடித் திறப்பதற்குள் இவர்கள் செல்லும் பாதையில் ஒருமருங்கில், பொன்மயமான திருக்கோயில் ஒன்று எழுந்தது. எம்பெருமானும், அதனுள் மறைந்தார். அப்பரடிகள் அப்‌பொன் வண்ணக் கோயிலுள் விரைந்து சென்றார். அங்கே பெருமாளைக் காணாது கண்களில் நீர் மல்க நின்றார். அங்கே‌யே துயினறார். மறுநாள் ஞானசம்பந்தர் அப்பரடிகள் இறைவன் அருளியதற்கு ஏற்ப திருவாய்மூர் சென்றுள்ளார் என்று விவரத்தை கேள்விப்பட்டு அக்கணமே அன்பர்களுடன் திருவாய்மூருக்கு விரைந்தார். திருவாய்மூரில், எம்பெருமானால் அருளப்பட்ட பொன்வண்ணக் கோயிலை வந்‌தணைந்தார். ஞானசம்பந்தர் ! அப்பரடிகளைக் கண்டு அப்பரே! என்றார். ஞானசம்ப்ந்தர் குரல் கேட்டுச் சற்று மனக் கலக்கம் நீங்கி அகமகிழ்ந்த அப்பரடிகள் அவரை வணங்கி வரவேற்றார்.  ஐயனே ! என்னை இங்கு அ‌ழைத்து வ்ந்து உமது அருள் ‌தோற்றத்தைக் காட்டாமல் மறைத்து விட்டீரே ! வேதாரண்யத்திலும் பெருமான் எனை சோதித்தீர் !  எளி‌யவன் மீது ஐயனின் கருணை இம்மட்டும்தானா ? உமது அன்புத் தொண்டர் திருஞான சம்பந்தரே பதிகம் பாடிக் காப்பு நீங்கச் செய்ய வேண்டும் என்ற உமது திருவுள்ளத்தினை உணராமல் நான் பதிகம் பாடி காப்பு நீங்கச் செய்த கதவைத் திறப்பித்தது அடியேன் செய்த பிழைதான். அதற்காக இக்கோயிலுள் மாயமாய் ஒளிந்துக் கொண்டிருப்பது சரிதானா!
எம்பெருமானே! திருத்தொண்டின் ஒப்பற்ற திறத்தினால் முதற்பாட்டிலேயே கதவை அடைக்கச் செய்த அளுடைப் பிள்ளையார் இங்கு எழுந்தருளியுள்ளார். ஐயன் அவருக்குக் கட்சியளிக்காமல் இவ்வாறு மறைநது கொள்வதும் முறையோ ? என்று வேண்டினார் அப்பரடிகள். இவ்வாறு அப்பரடிகள் உள்ளம் உருக இறைஞ்சி நின்றதும், பிறையணிந்த வேணியப்பிரான், ஆளுடைப் பிள‌்ளைக்குக் காட்சி அளித்தார் . 
                  
           ஞானசம்பந்தர், அக்காட்சியைக் கண்டு பரமனைப் பணிந்தவாறு அப்பரிடம், அப்பரே! ஐயனைப் பாரும் என்று கூறினார். அம்பலவாணரின் ஆனந்தத் ‌தோற்றத்தைக் கண்டு பேரின்பம் பூண்ட அப்பரடிகள், இறைவனின் பாதக்கமலங்களைப் பணிந்து எழுந்து, பாவ வடியார் பரவக் கண்டேன் என்று தொடங்கும் தமிழ்ப் பாமாலையால் பூமாலை சாத்தி புளகாங்கிதம் அடைந்தார். அவரது பாமாலைய ஏற்றுக்கொண்ட கயிலையரசர் மறைந்தருளினார்.இரு ஞான மூர்த்திகளின் பக்தியின் வலிமையைக் கண்டு, சூழ்ந்திருந்த அன்பர்கள் ஆராவாரித்தனர். இருவரும் அன்பர்களுடன், திருவாய்மூரில் சில காலம் தங்கியிருந்து பெருமானுக்குத் திருத்தொண்டு புரிந்தனர். பின்னர் அன்பர்களுடன திருவாய்மூரை நீத்து திருமறைக் காட்டிற்கு திரும்பி வந்தனர்.வேதவனப் பெருமா‌ன் வழிபட்டு இரு சிவனருட் செல்வர்களும் தத்தம் மடத்திற்குச் சென்றனர். இவ்விரு ஞான சீலர்களும் திருமறைக் காட்டில் தங்கியிருந்த நாளில், ஆளுடைப் பிளளையாரைப் பார்க்க மதுரையிலிருந்து சிலர் வந்தனர். அவர்கள் சுவாமிகளை வணங்கி பாண்டியமாதேவியும், அமைச்சர் குலச்சிறையாரும், சமணத்தில் வளர்ச்சியைத் தடுத்து சைவத்தை உய்விக்கும் பொருட்டு மதுரைக்கு எழுந்தருள வேண்டும் !என்று கேட்டுக் கொண்டதாக விண்ணப்பித்தனர். ஆளுடைப் பிள்ளையாரும் அவர்களிடம், விரையில் வருவோம்  என்று செய்த‌ி சொல்லி அனுப்பி வைத்தார்.ஆளுடைப் பிள்ளையார் பாண்டிய நாடு பேõகத் தீர்மானித்தார் என்பதைக் கேள்வியுற்ற அப்பரடிகள் அவரது திருமடத்திற்கு விரைந்து வந்து அவரைப் பாண்டியநாடு போகாதவாறு தடுக்க எண்ணினார். அப்பரடிகள் அன்பு மேலிட, ஆளுடைப் பிள்ளையாரிடம், மாசு படிந்த உடலும், தூசி படிந்த கொள்கையும் கொண்டு வாழும் வஞ்சக நெஞ்சம் கொண்ட மாயையில் வல்ல சமணர்களை ஒழிக்க, தூய்மையும், வாய்மையும் மிக்கத் தாங்கள் செல்வது ந்‌ன்றன்று. அக்கொடியவர்கள் எனக்கு இழைத்த ‌கொடுமைகள் கணக்கிலடங்கா. தேவரீர் ! அங்கு செல்ல வேண்டாம். அடியேன் ஒருபோதும் அதற்கு சம்மதிக்க மாட்டேன் என்று மொழிந்தார். அப்பரே! திருசடை அண்ணலையும், திருத்தொண்டர்களையும் ‌திருவெண்ணீ‌ற்றையும் போற்றுகின்ற ஆற்றல் மிக்கவர்கள் பாண்டியமாதேவியும், அமைச்சரும் ! அவர்கள் அழைப்பிற்கு இணங்கி, நேரில் ‌செல்வதால் எனக்கு எவராலும் எவ்வித இடர்பாடும் ஏற்படாது ! சமணத்தை நம்பி அதர்மத்தில் உழலும் பாண்டிய மன்னனைக் கொண்டே அச்சமணர்களின் செருக்கை அடக்குவேன். சைவத் தவ நெறியினைப் பாண்டிய நாட்டில் நிலைநாட்டுவேன். அதுவரைத் தாங்கள் இத்தலத்திலேயே இருங்கள். எப்படியும் பாண்டியநாட்டைச் சூழ்ந்துள்ள பிற சமய இருளை நீக்கி சைவத் திருவிளக்கை ஏற்றி வெற்றிவாகை சூடி வருகிறேன் ! என்றார். அப்பரடிகளும் மறுமொழி பேசாது வி‌டை கெடுத்தார். வேதவனப் பெருமாளை வணங்கி வழிபட்டு, ஆளுடைப் பிள்ளையார் மதுரைக்குப் புறப்பட்டார். அதன் பின்னர், அப்பரடிகள் மட்டும், திருமறைக்காட்டில் எழுந்தருளியிருந்து, வேதவனப் பெருமானுக்கு நாடோறும் திருப்பணிகள் செய்து வந்தார்.
                  
                           ஒருநாள் அப்பரடிகள், அத்தலத்திலிருந்து புறப்பட்டு நாகைக் காரோணம், திருவீழிமிழலை, திருவாடுதுறை வழியாக திருப்பழையாறை என்னும் பழம்பெரும் பதியை வந்தணைந்தார். வடதளி என்னும் பெயர் பெற்ற பழையாறை அடுத்துள்ள கோயிலில் சிவலிங்கப் பெருமானைச் சமணர்கள் தங்கள் சூழ்ச்சியால் மறைத்து சமணக் கோவிலாக மாற்றியிருந்தனர். இச்செய்தியை அவ்வூரிலுள்ள சிவ அன்பர்கள் வாயிலாகக் கூறக்கேட்ட அப்பரடிகள் அளவிலா வேதனை கொண்டார். மனம் பொறாது உளம் நொநது வருந்தினார். அப்பரடிகள் அக்கோயிலின் தெய்வ சந்நிதானத்தின அருகில் ஓர் இடத்திலமர்ந்து எம்பெருமானுடை‌ய பாதகமலங்களை மனதில் தியானித்தவராய், பித்தா! பிறைசூடிப் பெருமானே ; அருளாளா!  இளம் பிறையணிந்து விடையேறு பெருமானே ! சமணர்களின் சூழ்ச்சியை அழித்து தேவரீருடைய திருவுருவத்தை வடதளி விமானத்தில்  காட்டி அருளினாலன்றி, இவ்விடத்தை விட்டு நான் ஒரு அடிகூட எடுத்து வைக்கமாட்டேன் என்று தமது கருத்தை உறுதியிட்டுப் பரமனுக்கு உணர்த்தியவாறு தியானத்தில் அமர்ந்தார். அன்றிரவு கொன்றை மலர் அணிந்த மாதொரு பாகர், சோழ அரசருடை கனவில் எழுந்தருளினார். அறிவில்லாத சமணர்கள் சிவ அன்பர்களுக்கு அடுக்கடுக்காக இன்னல் அளிப்பதோடு, நம்முடைய வடதளி விமானக் கோயிலை ம‌றைத்து எமது மேனியை மண்ணுக்குள் மறைந்து வைத்துள்ளனர். இப்‌பொழுது எமது அன்பு பக்தன் - நாவுக்கரசன் எம்மைத் தரிசித்து வழிபடக் காத்துக் ‌கிடக்கிறான். 

                   நாவுக்கரசன் கருத்தை நிறைவேற்றுவாயாக! கண்ணுதற் கடவுள் சோழ வேந்தனுக்கு, சமணர்கள் தம் திருமேனியை மறைத்து வைத்திருக்கும் இடத்தின் அடையாளங்களையும் விளக்கி அருளி மறைந்தார். சோழ மன்னர் கனவு தெளிந்து எழுந்தார். அமைச்சர்களுடனும் , வீரர்களுடனும் வடதளி ஆலயத்தை வந்தடைந்தார். எம்பெருமான் அருளிய அடையாளத்தைக் கொண்டு சிவலிங்கப் பெருமானைக் கண்டு எடுத்தார். பின்னர் அரசர், வெளியே தியானத்தில் இருக்கும் அப்பரடிகளின் திருவடிகளை வணங்கி சிவலிங்கப் பெருமானை, சமணர்கள் மறைந்த இடத்திலிருந்து வெளிப்படுத்திக் கொண்டு வந்துள்ளோம் என்றார் திருநாவுக்கரசர் பேரின்பம் பூண்டார். சோழப் பேரரசனை  வாழ்த்தினார். திருநாவுக்கரசர் அன்பர்களுடன் ஆலயத்துள் சென்று வடதளி பெருமானை பணிந்து அகமகிழ்ந்தார். சோழ வேந்தன் சிவபெருமானுக்கு வடதளியில் விமானம் அமைத்து நல்லோரையில் பெருவிழா நடத்தி சிவலிஙகப் பெருமானை பிரதிஷ்டை செய்தார். வடதளிநாதர் ‌கோயிலில் மீண்டும் முன்போல் நித்திய நைமித்தியங்கள் சிறப்பாக நடந்தேற எல்லா ஏற்பாடுகளையும செய்தார். ஆலய வழிபாட்டிற்கு ஏராளமான் நிலபுலன்களை அளித்தார் மன்னர். இவ்வாறு நாடு போற்ற நற்பணி செய்த மன்னர், முதற் காரியமாக சமண மதத்தை மங்க செய்து . சிவ மதத்தை ஓங்கச் செய்தார், அப்பரடிகள், வடதளியில் எழுந்தருளியிருக்கும் சிவலிங்கப் பெருமானைப் பணிந்து பதிகங்கள் பாடினார். அங்கிருந்து புறப்பட்டு காவிரிக்கு இருமருங்கிலுமுள்ள சிவத்தலங்களை தரிசித்துத் தமிழ்மாலை சாத்திய வண்ணம் திருவானைக்கா, திருவெறும்பியூர், திருச்சிராப்பள்ளி, திருக்கற்குடி, திருப்பாத்துறை வழியாக, திருப்பைஞ்ஞீலியை நோக்கிப் புறப்பட்டார் அப்பரடிகள். நாட்க‌ணக்காக நடந்த காரணத்தால் அப்பரடிகளுக்கு களைப்பு ஏற்பட்டது. பசியும், தாகமும் மேலிட்டது ; சோர்வினால் உடல் வருத்தியது. இருந்தும் அத்திருஞான சீலர் உள்ளம் கலங்காது உடல் சேர்வையும் எண்ணிப்பாராது திருப்பைஞ்ஞீலிப் பெருமானை தியானித்தபடியே வழிநடந்தார். 

              அப்போது எம்பெருமான் தமது தொண்டரின் வேதனையைப் போக்கத் திருவுள்ளம் கொண்டார். திருப்பைஞ்ஞீலி செல்லும் வழியில் குளிர்நீர்ப் பொய்கையயையும், எழில்மிகு‌ சோலையையும் உருவாக்கினார். அத்தோடு அந்தணர் கோலத்தில் கையில் பொதிசோறுடன் அப்பரடிகள் வரும் வழியில் அவரை எதிர்பார்த்து வீற்றிருந்தார். சற்று நேரத்தில் அப்பரும் அவ்வழியே வந்து சேர்ந்தார். எம்பெருமான் அப்பரடிகளுக்குப் பொதி சோறு கொடுத்தார். அப்பரடிகள் பொதி சோற்றை உண்டு அருகிலுள்ள குளத்தில்  குளிர்ந்த நீரைப்பருகி தளர்வு நீங்கப் பெற்றார். அந்தணர்க்குத் தமது நன்றியை தெரிவித்தார். எம்பெருமான், அன்பரே! நீர் எங்கே செல்கின்றீர்கள் ? என்று கேட்டார். சுவாமி ! அடியேன் திருப்பைஞ்ஞீலியில் எழுந்தருளியிருக்கும் திருசடைப் பெருமானை தரிசிக்கப் போய்க் கொண்டிருக்கிறேன். அன்பரே நன்று. நானும் அத்திருக் கோயிலுக்குத் தான் போகிறேன். என்று கூறினார். அவரையும் அழைத்து்க்கொண்டு திருப்பைஞ்ஞீலிக்குப் புறப்பட்டார். இருவரும் ஆலயத்தை வந்தடைந்தனர். அந்தணர் வடிவில் எழுந்தருளிய நீலகண்டப் பெருமான் மாயமாக மறைந்தார், அநதணர் வடிவில், தம்மோடு எழுந்தருளியது எம்பெருமான் என்பதை உணர்ந்த அப்பர் எல்லையில்லா பரமனைப் போற்றிப் பணிந்தார். அங்கிருந்து புறப்பட்டு, காஞ்சிபுரத்தை வந்‌தணைந்தார். காஞ்சி மாநகரத்து அன்பர்களும், சிவதொண்டர்களும் நாவுக்கரசரை எல்லையிலே எதிர்கொண்டு வணங்கி வரவேற்றனர். ஏகாம்பரநாதர் கோயிலுக்கு அழைத்துச் சென்றனர். அப்பரடிகள், தழிழ்ப்பதிகம் சாத்தி ஏகாம்பரேசுவரளர வழிபட்டார். அங்கு சில நாட்கள் தங்கியிருந்து அடுத்துள்ள பல சிவத்தலங்களைத் தரிசிதது வந்தார் அப்பரடிகள். ஏகாம்பரநாரைப் பிரிய மனமில்லாமல் பக்தி மயக்கத்தில் மூழ்கினார். ஒரு நாள் பெருமானிடம் விடைபெற்றுக் கொண்டு புறப்பட்டார்.  

            திருக்கழுக்குன்றம், திருவான்மியூர், மயிலாப்பூர், திருவொற்றியூர், திருப்பாச்சூர், திருவாலங்காடு, திருக்காரிகை வழியாகத் திருக்காளத்திமலையை அணுகினார் அப்பர். திருக்காளத்தியப்பரையும், திருக்காளத்தியப்பரின் வலப்பக்கத்தில் வில்லேந்தி நிற்கும் அருள் வல்லவர் கண்ணப்ப நாயனாரது திருச்‌சேவ‌டிகளையும் வணங்கி வண்ணத் தமிழ்ப் பாமாலையால் அர்ச்சனை செய்தார். சில நாட்கள் அத்திருமலையில் தங்கியிருந்து புறப்பட்ட அப்பரடிகள், திருப்பருபதம் என்னும் ஸ்ரீ சைலத்தை வந்தணைந்தார். இத்திருத்தலத்தில் நந்தியெம்பெருமான், எம்பெருமானைத் தவஞ்செய்து வரம் பெற்று இம்மலை வடிவமாக எழுந்தருளி எம்பெருமானைத் தாங்குகிறார் என்பது புராண வரலாறு. தேவர்களும், சித்தர்களும், கின்னரர்களும், நாகர்களும், இயக்கர்களும், விஞ்சையர்களும், சிவமுனிவர்களும், தினந்தோறும் போற்றி மகிழ்நது வணங்கி வழிபடும் மல்லிகார்ச்சுனரை உளம் குளிரக் கண்டு பக்திப் பாமாலை சாத்தி வழிபட்டார் அப்பரடிகள். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு, தெலுங்கு நாடு, மாளவதேசம், ‌மத்தியப் பிரதேசம் முதலியவற்றைக் கடந்து காசியை வந்தடைந்‌தார் நாவுக்கரசர் ! அத்திரு நகரிலுள்ள தொண்டர்கள், அப்பரடிகளை வணங்கி மகிழ்ந்தனர். அவரோடு தலயாத்திரைக்குப் புறப்பட எண்ணினார். அப்பரடிகள் தடங்கண்ணித் தாயாரையும், விசுவ லிங்கத்தையும் போற்றி தமிழ்ப் பதிகம் பாடியருளினார். அப்பரடிகள் தம்முடன் வந்த அன்பர்களை விட்டு விட்டு திருக்கயிலாய மலைக்குப் புறப்பட்டார்.
அடர்ந்த காடுகளையும், உயர்ந்த மலைகளையும், காட்டாறுகளையும் க‌டந்து, கங்கைவேணியர் ம‌ீது தாம் கொண்டுள்ள அரும்பெருங் காதலுடன் தன்னந்தனியாக வழிநடக்கலானார் அப்பரடிகள். அவர் சிந்தை அனைத்தும் சிவநாமத்தைப் பற்றிய தாகவே இருந்தது. காய், கனி, கிழங்கு, குலை முதலியவற்றை உண்பதையும் அறவே நிறுத்திவிட்டார்! இரவென்றும், பகலென்றும் பாராமல் பரமன் மீது ஆறாக் காதல் பூண்டு நடந்து செல்லலானார். 

              அத்திருவருட் செல்வரது பட்டுப் பாதங்கள் தேயத் தொடங்கின. இரவு வேளையில் காடுகளில் காணும் கொடிய விலங்குகள் அவருக்கு எவ்வித துண்பத்தையும் கொடுக்காமல் அஞ்சி நடுங்கி ஒளிந்தன. நல்ல பாம்புகள் படமெடுத்து அதனது பணாமகுடத்துள்ள நாகமணிகளால் அவருக்கு விளக்கெடுத்தன. இவ்வாறு அப்பரடிகள் நடந்து கொண்டே பாலை வனத்தைக் கடக்கும் நிலைக்கும் வந்தார். கதிரவனின் கொடிய வெப்பத்தால், பாலைவனத்தில் நடந்த அவரது திருவடிகள் பரடுவரையும் தேய்ந்தன. கால்கள் தேய்ந்து ரத்தம் சொட்ட ‌தொடங்கின.  அதைப் பற்றியும் சறறும் வருந்தாமல் திருக்கைகளை ஊன்றி தத்தித் தத்தித் ‌சென்றார். அதனால் கரங்களும் மணிக்கட்டுவரைத் தேய்ந்தன. அப்‌பொழுதும் அயர்ந்து விடாத அப்பரடிகள் மார்பினால் தவழ்ந்து சென்றார். சற்று தூரம் சென்றதும், மார்பும் தேய்ந்து குருதி பொங்க, சதைப்பற்று அற்று எலும்புகள் முறிந்தன. அப்பரடிகள் எதைப் பற்றியும் வருத்தப்படாமல் கயிலை அரசரின் சிந்தையிலே உடல் தசைகள் கெட, உடம்பை உருட்டிக் கொண்‌‌டே சென்றார். இவ்வாறு புற உறுப்புக்கள் எல்லாம் உபயோகமற்றுப் போனதும், அப்பரடிகள் செய்வதறியாது நிலத்தில் வீழ்ந்தார். அப்பரடிகள் வீழ்ந்து கிடந்த இடத்திற்கு அருகே ஓர் அழகிய தாமரைத் தடாகத்தைத் தோற்றுவித்தருளிய பரமன், ஓர் தவசி வடிவம் கொண்டு அப்பர் எதிரில் தோன்றினார். விழிகளை மூடியவாறு சயனித்திருந்த அப்பரடிகள் கண்னைத் திறந்துப் பார்த்தபோது தம்மைச் சுற்றித் தடாகமும், அத்தடாகத்தருகே அருந்தவசியும் இருக்கக் கண்டு வியந்தார். அப்பொழுது அத்தவசி, அன்பரே! உள்ளம் உருக உடல் தேய்ந்து, சிதைந்து, அழிந்து போகுமளவிற்கு இந்தக் கொடிய கானகத்தில் இப்படித் துயறுருவது ‌யாது கருதி ? எனக் கேட்டார். அத்தவசியின் கோலத்தைக் கண்டு அவரது பாதங்களைப் ‌பணிந்தார். கண்களிலே நீர் மல்க, சுவாமி ! மலைமகளுடன் கயிலையில் எழுந்தருளி யிருக்கும் எம்பெருமானைத் தரிசித்து வழிபட ஆறாக்காதல் கொண்டேன். ஆளும் நாயகனைக் கண்டுகளிக்காதவரை, என் வாழ்வு முற்றுப் பெறாது. பிறவித் துன்பத்தில் நின்றும் நான் விடுவிட, பிறையணிந்த பெருமானைக் கயிலைக்குச் சென்று எப்படியாகிலும் போற்றியே தீருவேன். என்று மிகுந்த சிரமத்துடன் அப்பரடிகள் பதிலுரைத்தார். 

               அது கேட்ட அத்தவசி புன்னகை முகத்தில் மலர, அப்பனே ! ‌பாம்பணிந்த பரமேசுரர் பார்வதியுடன் வீற்றிருக்கும் கயிலைமலையை மானுடர் சென்று காண்பது என்பது ஆகாத காரியம் அப்படியிருக்க இறைவன் தரிசனம் உனக்கு மட்டும் எப்படியப்பா கிட்டும் ? எதற்கப்பா இந்த வீண் முயற்‌‌‌சி ? ‌‌‌தேவர்களுக்கும் அது அரிது. கயிலையையாவது நீ காண்பதாவது? பேசாமல்  வந்த வழியே திரும்ப போவதே தக்கச்செயல். இல்லையேல் கயிலைக்குப் போவதற்குள் உன் உடல்தான் அழியும். சுவாமி! அழியப் போகும் இந்த உடலுக்காக அஞசேன். கயிலைமலை பூமியில் எழுந்தருளியிருக்கும் என் அப்பனின் ஆனந்த தாண்டவத்தை கண்டு களித்த பின்னரன்றி நான் மீளேன். இந்தப் பொய்யான மெய்யுடம்பை ஒருபோதும் திரும்பச் சுமந்து செல்லேன். தவசியாக வந்த பெருமான் மறைந்தார். நாவுக்கரசர் வியப்புற்றார். ஓங்கு புகழ் நாவுக்கரசனே ! எழுந்திரு என்ற இறைவனின் அருள்வாக்கி ஒலித்தது. அப்பரடிகள், பூரித்தார். அவரது தேய்ந்து அழிந்த உறுப்புக்கள் எல்லாம் முன்போல் வளர்ந்து பிரகாசித்தது. அவர் உடல் வன்மை பெற்று எழுந்தார். நிலமதில் வீழ்ந்து வணங்கினார். சிவ சிவ சுந்தரதேவனே! அருட்கடல் அண்ணலே! அடியேனைக் காத்த ஐ‌யனே! ஆடுகின்ற அரசனே! மண்ணிலே தோன்றி விண்ணிலே மறைந்தருளி அற்புதம் புரிந்த தேவநாயகனே! தேவரீர் திருக்கயிலைமலை மீதில் எழுந்தருளியிருக்கும் திருக்‌கோலத்தைக் கண்டு வழிபட இந்த அடியேனுக்கு அருள்வீர் ! இறைவன் அசரீரியாக அப்பரடிகளுக்கு, அன்ப! இப்பொய்கையில் மூழ்கி திருவையாற்றில் எழுந்திருப்பாயாக ! அங்கு திருக்கயிலையில் நாம் வீற்றிருக்கும் காட்சியைக் காட்டியருளுவேன் என்று மொழிந்தருளினார். 

                   அம்பலத்தரசனின் ஆணையைச் சிரமேற்கொண்டு சிந்தை குளிர்ந்த அப்பரடிகள் செந்தமிழ்ப் பதிகத்தால் செஞ்சடை அண்ணலைப் போற்றிப் பணிந்தவாறு தூய தடாகத்தில் மூழ்கினார். பிறையணிந்த பெருமானின் பெருமையை யாரே அறியவல்லார் ? அத்தடாகத்தில் மூழ்கிய அப்பர் பெருமான் திருவையாறு ப‌ொற்றாமரைக் குளத்தில் தோன்றிக் கரையேறினார். அப்பரடிகள் இறைவனின் அருளை எண்ணி எண்ணி கண்ணீர் மல்கி கரைந்துருகினார். அமரர்கள் மலர்மாரி பொழிந்தனர். அவரது பொன் திருமேனியிலும், நெற்றியிலும், ‌தெய்வீகப் பேரொளி பால் வெண்ணீறு போல் பிரகாசித்தது. சிரம் மீது கரம் உயர்த்தியவாறு நீரிலிருந்து கரையேறினார் அப்பரடிகள் ! கோயிலை அடைந்தார். பூங்கோயில் கயிலைப் பனிமலை போல் காட்சி அளித்தது. எம்பெருமான் அப்பர் அடிகளுக்கு சக்தி சமேதராய் நவமணி பீடத்தில காட்சி கொடுத்தார். அப்பரடிகள், சிவானந்தச் சமுத்திரத்தைக் கண்கள் என்னும் திருக்கரங்களால் அள்ளி அள்ளி்ப பருகினார். வீழ்ந்து பணிந்து எழுந்தார். ஆனந்தக் கண்ணீர் வடித்தார்; சிவக் கடலில் மூழ்கி திளைத்தார். அப்பரடிகள், திருத்தாண்டகப் பதிகங்களைப் பக்திப் பெருக்கோடும பாடிப் பாடி அளவிலா இன்பம் எய்தி நின்றார். அப்பரடிகளின் ஆசையை நிறைவேற்றிய பெருமான் அத்திருக் காட்சியைக் மறைந்தருளினார். கயிலைக் காட்சி சட்டென்று மறைந்தது கண்டு திகைத்த அப்பரடிகள் மாதர் பிறைக் கண்ணியாளை மலையான் மகளொடும் எனத் தொடங்கும் தமிழ்ப் பதிகம் பாடினார். திருவையாற்றில் எழுந்தருளியிருக்கும் பஞ்சநதீசுவரரின் திருவடித் தாமரைகளைப பணிந்தார். அத்திருத் தலத்தை விட்டுச் செல்ல மனம் வராத அடியார் திருவையாற்றில் தங்கியிருந்து உழவாரப் பணி செய்து வரலானானர். சில நாட்களில், அங்கிருந்து புறப்பட்டு சிவத்தலங்களைத் தரிசித்துத் தமிழ்ப் பாமாலை பாடிய வண்ணம் திருப்பூந்துருத்தி என்னும்  தலத்தை அடைந்தார். அங்கு எழுந்தருளியிருக்கும் பெருமானுக்குத் திருத்தொண்டுகள் பல புரிந்து வரலானார்.  இந்தச் சமயத்தில் பாண்டிய நாட்டிலே சமணரை வென்று வெற்றி வாகை சூடிய ஞானசம்பந்தர், சோழநாடு திரும்பினார். திருப்பூந்துருத்தியில் அப்பரடிகள் அவரைக் கண்டு மகிழ அடியார்களும் புடைசூழ தமது முத்துச் சிவிகையில் புறப்பட்டார். அதுபோல, ஞானசம்பந்தரின் வருகையைக் கேள்விப் பட்ட அப்பரடிகள், உவகைப் பொங்க அக்கணமே அவரை எதிர் கொண்டழைக்கப் புறப்பட்டார்.

            அப்பரடிகள் முத்துச் சிவிகையில் சம்பந்தர் வருவதைக் கண்டார். அப்பரடிகள் தம்மை எவரும் காணாதபடி ஞானசம்பந்தர் வீற்றிருக்கும் முத்துச் சிவிகைதனைத் தோள் கொடுத்துச் சுமந்து நடக்கலானார். திருப்பூந்துருத்தியை வந்‌தடைந்த ஆளுடைப்பிள்ளை அப்பர் அடிகளை எங்கும் காணாது அப்பர் எங்கிருக்கிறார் என்று கேட்க திருநாவுக்கரசர் தேவரீருடைய அடியேன், முத்து சிவிகையினைத் தாங்கி உமது திருவடிகளைப் போற்றி வரும் பெறும்பேறு பெற்று இங்குள்ளேன் என்று மகிழ்ச்சிப் பொங்க கூறினார். அப்பருடைய ‌மொழி கேட்டு, ஆளுடைப் பிள்‌ளையார் சிவிகையினின்றும் விரைந்து கீழே இறங்கினார். உள்ளமும், உடலும் பதைபதைக்க அப்பரடிகளை வணங்க வந்தார். அதற்குள் அப்பரடிகள் விரைந்து ஆளுடைப் பிள்ளை தம்‌மை வணங்குவதற்கு முன் அவரை வணங்கி மகிழந்து உள்ளம் உருகில கண்களில் நீர்மல்க நின்றார். இக்காடசியைக் கண்ட சிவனடியார்கள் அனைவரும் மெய்யுருகி நின்றனர். இரு திருத்தொண்டர்களையும் வணங்கினர். இரு ஞானமூர்த்திகளும், அத்தலத்தில் எழுந்தருளியிருக்கும் எம்பெருமானின் தாளைத் தலையால் வணங்கி திருத்தாண்டகம் பாடி மகிழ்ந்தனர். அன்பர்களுடன் இரு சிவநேசச் செல்வர்களும் மடத்தில் தங்கினர். அப்பரும், ஆளுடைப்பிள்ளையும் அடியார்கள் புடைசூழ, மேளதாள வாத்தியங்கள் முழங்க திருக்கோயில் சென்று திருப்பூந்துருத்திப் பெருமானைப் பாமாலையால் போற்றிப் பணிந்தனர். பக்தர்கள் பரமனையும், பரமன் அருள்பெற்ற தவசியர்களையும் வணங்கி மகிழந்தனர். ஒருநாள் ஆளுடைப்பிள்ளையார் அப்பரடிகளிடம் பாண்டி நாட்டில் தாம் சமணர்களை வாதில் வென்று வெற்றி பெற்ற விவரத்தை கூற, நாவுக்கரசர் பாண்டிய நாடு செல்ல ஆவல் கொண்டார். 

             அப்பரடிகள் ஆளுடைப்பிள்ளையாரிடம், நான் பாண்டிய நாடு சென்று வருகிறேன். தாங்கள் தொண்டை நன்னாட்டிலுள்ள சிவத்தலங்களைத் தரிசித்து வருவீராகுக என்று கூறினார். ஆளுடைப்பிள்ளையாரும் அவ்வாறே செய்யச் சித்தம் பூண்டார். ஞானசமபந்தர் அப்பரடிகளிடம் விடைபெற்றுப் புறப்‌பட்டார். ஞானசம்பந்தரை வழி அனுப்பிவிட்டு அப்பரடிகள் தமது பாத யாத்திரையைத் தொடர்ந்தார். பல திருத்தலங்களைத் தரிசித்துக் கொண்டே மதுரையம் பதியை வந்தடைந்தார் அப்பரடிகள் ! அப்பரடிகள், மதுரையம்பதிக்கு எழுந்தருளியுள்ளார் என்று செய்தியறிந்தான் பாண்டியன் ! மன்னரும், மங்கையர்கரசியாரும், அமைச்சர் குலச்சிறையாரும், அன்பர்களாடு, அடியார்களோடு  அப்பரடிகளைத் தொழுது வணங்கி, உபசரித்து வரவேற்றார். ராஜ மரியாதைகளுடன் அப்பரடிகளை கெளரவப்படுத்தினான் மன்னன். அத்திருத்தலத்தில், அடியார் சிலகாலம் தங்கியருந்தார். எம்பெருமானு்க்குத் தமிழ்த் தொண்டாற்றினார். மன்னர் மனம் மகிழ்ந்தார். அரசியாரும், அமைச்சரும் அடியாரைப் போற்றி பெருமிதம் கொண்டனர். அங்கிருந்து புறப்பட்ட அப்பரடிகள் திருப்புவனம், திருராமச்சுரம், திருநெல்வேலி, திருகானப்பேர் போன்ற பல பாண்டி நாட்டுக் கோயில்களில் எழுந்தருளியிருக்கும் பரமனைப் பாடிப் பரவிய வண்ணம், சோழ நாட்டை நோக்கிப் புறப்பபட்டார். பொன்னி நாட்டில் ஒளிவிடும் பொன்னார் மேனியனுடைய புனிதத் தலங்களையெல்லாம் கண்குளிரக் கண்டு பற்பல பைந்தமிழப் பதிகங்களைப் பாடி வணங்கிய வண்ணம் திருப்புகலூரை அடைந்தார். 

         திருப்புகலூர்ப் பெருமானின் தாளை வணங்கி ஆறாக் காதலுடன், உள்ளமும், உடலும் உருக, அத்திருத்தலத்திலேயே தங்கியிருந்து, புகலூர்ப் புனிதர்க்கு உழவாரப் பணிசெய்து வராலனார் அப்பரடிகள். அப்பொழுது அப்பரடிகள் நினற திருத்தாண்டகம், தனித் திருத்தாண்டகம், திருத்தலக்கோவை, குறைந்த திருநேரிசை, தனித்திருநேரிசை, ஆருயிர் திருவிருத்தம், தசபுராணம், பாவநாசப்பதிகம், சரக்கறைத் திருவிருத்தம் முதலிய பல திருப்பதிகங்களைப் பாடினார். அப்பரடிகளின் பற்றற்ற பரம நிலையை உலகிற்கு உணர்த்துவான் வேண்டி புகலூர்ப் பெருமான், உழவார பணிபுரிந்து வரும் மன்றலிலே, பொன்னும், நவரத்தினங்களும் மின்னும்படிச் செய்தார் .அப்பரடிகள் பொன்னையும், நவமணிகளையும் உழவாரப் பணிபுரியும் மன்றலிலே உருளும் கற்களுக்கு ஒப்பாகவே கருதி, அவற்றை உழவாரப் படைகொண்டு எடுத்து அருகிலுள்ள தாமரைத் தடாகத்தில் வீசி எறிந்தார். பொன்னாசையும், பொருளாசையும் கொள்ளாத அப்பரடிகள், பெண்ணாசையும் வெறுத்த துறவு நிலையை மேற்கொள்ளும் பெரு ஞானி என்பதையும் உலகிற்கு உணர்த்துவான் வேண்டிப் புகலூர் சிவபெருமான் அரம்பையர்களை மன்றலிலே தோன்றச் செய்தார். வில்லைப் போன்ற புருவங்களையும், மின்னலைப் போன்ற மேனியையும், கன்னலையொத்த மொழியையும், தென்றலைப் போன்ற குளுமையையும் உடைய அரம்பையர், அப்பரை நோக்கினர். அப்பரடிகள் தியானத்திலேயே இருந்தார்.  அரம்பையர்கள் மெல்லிய மலர்ப் பாதத்திலே சிலம்புகள் ஒலித்தன. செங்கழுநீர் மலர் போன்ற மெல்லிய விரல்களினை வட்டணையோடு அசைத்தனர். அக்கரங்களின் வழியே கெண்டைமீன் வடிவங்கொண்ட வட்டக் கருவிழிகளைச் செலுத்தி, பொற்‌கொடி போல் அசைந்தாடினர். தித்திக்கும் தேன்போல் கொவ்வை இதழ்களில் பண் இசைத்து சுழன்று, சுழன்று மயக்கும் அழகு நடனம் புரிந்தார்கள். மலர்மாரி பொழிதலும், தழுவுபவர் போல அணைத்தலும், காரிருள் கூநதல் அவிழ, இடை துவள மான் போல் துள்ளி ஓடுதலுமாக, தாங்கள் கற்ற கலைகளை எல்லாம் காட்டிக் காமன் கணை தொடுத்தாற் போல், பற்பல செய்ல்களை நடத்தினர் அரம்பை‌யர். 

           அப்பரடிகள் சித்தத்தைச் சிவனாரடிக்கே அர்ப்பணித்து சற்றும் சித்தநிலை திரி‌யாது திருத்தொண்டு லீலைக‌ளில் அவரது உள்ளத்தையோ, உடலையோ பறிகொடுத்து விடவில்லை. அப்பரடியார் அரம்பையர்களைப் பார்த்து, மயங்கும் மாயை வடிவங்களே ! எதற்காக என்னிடம் வந்து இப்படி வீணாக அலைகிறீர்கள் ? உமக்கு நீவிர் மயக்கி ஆளும் உலகம் மட்டும் போதாதா ? எதற்காக என்னிடம் வந்து ஆடிப் பாடுகிறீர்கள் ? திருவாரூர் தியாகேசப் பெருமானின் திருவடிகளில் தமிழ்ப் பதிகம் பாடித் திருத்தொண்டு புரிந்துவரும் சிறந்த பணியில் நிலையாக நிற்பவன். என்னை உங்கள் வலையில் சிக்கி எண்ணி வீணாக அலைய வேண்‌டாம். போய்விடுங்கள் என்று கருத்து கொண்ட பொய்ம்மாய பெருங்கடல் எனத் தொடங்கும் திருத்தாண்டகத்தைப் பாடினார். உடனே அத்தேவக் கன்னிகைகள் அவரது திருவடியை வணங்கி மறைந்தனர். அப்பரடிகளுடைய உள்ள உறுதியையும், பக்தியின் திறத்தினையும், பாமாலை பாடும் ஆற்றலையும் ஏழு உலகங்களும் போற்றிப் புகழ்ந்தன. இவ்வாறு புகலூர்ப் பெருமானுக்கு அரும்பணி ஆற்றிவந்த அன்பு வடிவம் ‌கொண்ட அப்பரடிகள் எம்பெருமானின் திருவடிகளில் தமது திருமெய் ஒடுங்கும் காலம் நெருங்கி வந்துவிட்டதே என்பதை தமது திருக்குறிப்பினால் உணர்ந்தார். அதனால். அவர் அத்திருத்தலத்தை விட்டு சற்றும் நீங்காமல், பாமாலைப் பாடிப் பரமனை வழிபட்டு வந்தார். புடமிட்ட பொன்போல் உலகிற்கு பேரொளியாய்த் திகழ்ந்த திருநாவுக்கரசர் தாம் இறைவனது பொன்மலர் தாளினை அடையப் போகும் பேரின்ப நிலையை உணர்ந்தார். எண்ணுகேன் என் சொல்லி எனத் தொடங்கும் திருத்தாண்டகத்தை ஊன் உருக, உடல் உருக, உள்ளம் உருகப் பாடினார். எம்பெருமானின் சேவடியைப் பாமாலையால் பூஜித்து திருச்செவியைச் செந்தமிழால் குளிரச் செய்தார். திருநாவுக்கரசர் சித்திரைத் திங்கள் - சதயதிருநக்ஷத்திரத்தில், சிவானந்த ஞான வடிவேயாகிய சிவபெருமானுடைய பொன் மலர்ச் சேவடிக் கீழ் அமர்ந்தருளி பேரின்பப் பெருவாழ்வு பெற்றார். விண்ணவரும் மலர்மாரி பொழிந்தனர். தேவ துந்துபிகள் ஐந்தும் விண்ணில் முழங்கின.  எல்லா உயிர்களும் நிறைந்த மகிழ்ச்சியால் உளம் நிறைவுபெற்று நின்றன. அப்பரடிகளாக அவதரித்த வாகீசமுனிவர் வேணிபிரானின் திருப்பாத நிழலில் வைகும் நிலையான சிவலோக பதவியைப் பெற்றார். முன்போல் திருக்கயிலாய மலையில் தவஞானியாக எழுந்தருளினார்.


குருபூஜை: திருநாவுக்கரசரின் குருபூஜை சித்திரை மாதம் சதயம் நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது.

திருநாவுக் கரையன்றன் அடியார்க்கும் அடியேன்.

நன்றி : தினமலர் 

                                      இறை பணியில் : திருவடி முத்துகிருஷ்ணன்