செவ்வாய், அக்டோபர் 04, 2011

சித்தர் பாடல்களில் இருந்து 4

   ஞான  குரு பட்டினத்தார் 
         பாடல்களில் இருந்து .........



காம்பிணங் கும்பணைத் தோளார்க்கும் பொன்னுக்குங் காசினிக்கும்                                     
தாம்பிணங் கும்பல ஆசையும் விட்டுத் தனித்துச் செத்துப்
போம்பிணந் தன்னைத் திரளாகக் கூடிப் புரண்டு இனிமேற்
சாம்பிணங் கத்துது ஐயோ! என் செய்வேன் தில்லைச் சங்கரனே!

வளவளப்பான மூங்கிலை ஒத்த தோள்களை உடைய பெண்டிரையும் விட்டு அவர் பொருட்டு தேடிய  செல்வங்கள் இருக்கும் இடம் வீடு மற்றும் இன்னும் ஆசைப்பட்டு சேர்த்த பொருள்கள் அனைத்தையும் விட்டு தன்னுடன் எதுவும் எடுத்து போக முடியாமல் தனியே செத்துப் போன பிணத்தைச் சுற்றி , தாமும் ஒருநாள் போகப்போகிறோம் என்றுணராது இனிமேல் சாகப் போகிற பிணமெல்லாம் திரளாகக் கூடி மண்மேல் புரண்டு அழுகிறதே ஐயோ என் செய்வேன் தில்லையிலே வீற்றிருக்கும் சங்கரனே .
   
சோறிடும் நாடு, துணிதருங் குப்பை, தொண்டன் பரைக்கண்டு
ஏறிடுங் கைகள் இறங்கிடுந் தீவினை, எப்பொழுதும்
நீறிடும் மேனியர் சிற்றம் பலவர் நிருத்தங்கண்டால்
ஊறிடும் கண்கள் உருகிடும் நெஞ்சம்என் உள்ளமுமே!

துறவு பூண்டவர்கள் எங்கும் ஏற்று உண்பார்கள் இந்த நாடே அவர்களுக்கு சோறிடும் ஆதலால் சோற்றுக்கு கவலை இல்லை , குப்பையில் கிடக்கும் கந்தல் துணியே தாமுடுத்த போதுமானது , மெய்யான சிவனடியாரைக் கண்டால் நாம் கைகளை உயர்த்தி அவர்களை வணங்க வேண்டாம் கைகளே தாமாக வணங்கும் , அவ்வாறு வணங்கும் பொது நம்முடைய தீவினைகள் அகன்று போய் விடும் . எப்பொழுதும் திருநீற்றைத் தரிக்கும் அடியவர் தரிசனமும் ,தில்லையிலே ஆடும் பொன்னம்பலத்தான் ஆடல் புரியும் அழகிய கிடைப்பதற்கரிய தரிசனமும் கண்டால் அந்த பரமானந்தத்திலே கண்களில் நீர் பெருகி உள்ளமும் உருகி அவன் வசமாகி விடும் .
  
அழலுக்குள் வெண்ணெய் எனவே உருகிப்பொன் னம்பலத்தார் 
நிழலுக்குள் நின்று தவமுற் றாமல்நிட் டூரமின்னார்
குழலுக் கிசைந்த வகைமாலை கொண்டுகுற் றேவல்செய்து
விழலுக்கு முத்துலை இட்டிறைத் தேன் என் விதிவசமே.

தீயிலிட்ட வெண்ணெயைப் போல் மனம் உருகி திருச்சிற்றம்பலத்தில் பொற்சபையிலே நடம்புரியும் பொன்னம்பலத்தாரின் நிழலை அடைய தவம் செய்யாமல் , மின்னலை போன்று இருக்கும் பெண்களின் கூந்தலில் சிக்கி அவர் மீது கொண்ட மயக்கத்தால் அவர் கூந்தலில் பலவித மலர்களை சூட்டி அந்த நறுமணத்தில் மதிமயங்கி அவர்கள் இட்ட வேலையை செய்யும் ஒரு அடிமையாய் இருந்து வெறும் புல்லுக்கு இறைத்த நீராய் என் வாழ் நாள் வெறும் பாழாய் ஆனதெல்லாம் என் முன்வினையினால் தானோ இறைவா .
  
ஓடாமல் பாழுக்கு உழையாமல் ஓரம் உரைப்பவர்பால்
கூடாமல் நல்லவர் கூட்டம் விடாமல்வெங் கோபம் நெஞ்சில்
நாடாமல் நன்மை வழுவாமல் இன்றைக்கு நாளைக்கென்று
தேடாமல் செல்வம் தருவாய்! சிதம்பர தேசிகனே!

 இன்பத்தின் காரணமாக வீண் ஆசை கொண்டு செல்வத்தைத் தேடி ஓடாமல் புறம் ,கோள் கூறுபவரோடு நட்பு பாராட்டாமல் , நல்லவர்களோடு பழகத் தவறாமல் ,என் மனதிலே கோபம் என்னும் கொடிய விஷம் ஏறாமல் , நன்மையான நான் செய்த புண்ணிய செயல்கள் என்னை விட்டு நீங்கா வண்ணம் ,இன்றைக்கு நாளைக்கு என அழியும் செல்வத்தைத்  தேடாமல் , அழியா செல்வமாகிய பிறவிப்பிணி தீர்க்ககூடிய உன் பதம் எனும் செல்வம் தருவாய் சிதம்பர தேசிகனே .
  
பாராமல் ஏற்பவர்க்கு இல்லையென் னாமல் பழுதுசொல்லி
வாராமல் பாவங்கள் வந்தணு காமல் மனம் அயர்ந்து
பேராமல், சேவை பிரியாமல் அன்புபெ றாதவரைச்
சேராமல் செல்வம் தருவாய்! சிதம்பர தேசிகனே!

எனது நிலைமை உணராது ஏற்பவர்க்கு (யாசகம் கேட்பவர்களுக்கு) இல்லை என்று சொல்லி, பொருள் கொடுக்க இயலாதவன் என்னிடம் கேட்டுவிட்டீரே என்று அவர் மனம் நோகும்படி செய்த பாவம் என்னை அணுகாமல் , அவர் கேட்டும் கேட்டதை அளிக்க முடியவில்லை என்று என் மனம் வருத்தமடையாமலும் , உனக்கு செய்யும் தொண்டு என்னை விட்டு நீங்காமலும் , உன் திருவடியில் அன்பு இல்லாதவரை சேராமலும் , உன் திருவடியாகிய செல்வத்தை எனக்கு அளிப்பாய் சிதம்பர தேசிகனே .

கொல்லாமல், கொன்றதைத் தின்னாமல், குத்திரங் கோள்களவு
கல்லாமல், கைதவ ரோடுஇணங் காமல்கனவி னும்பொய்
சொல்லாமல், சொற்களைக் கேளாமல், தோகையர் மாயையிலே
செல்லாமல், செல்வந் தருவாய் சிதம்பர தேசிகனே!

ஒரு உயிரையும் கொல்லாமல்,கொன்றதை தின்னாமல் வஞ்சகம் ,கோள் , களவு முதலிய கொடும் செயல்களை கற்காமலும் , அப்படி செய்யும் வஞ்சகத்தாரோடு சேராமலும் , கனவிலும் பொய் சொல்லாமலும் , வஞ்சகச் சொற்களையும் பொய்களையும் கேளாமலும் ,பெண்கள் மயக்கமெனும் பெருமயக்கத்தில் விழுந்து விடாமலும் , சிற்றம்பலத்தானின் திருவடியாகிய செல்வத்தை எனக்கு அளிப்பாய் சிதம்பர தேசிகனே .
  
முடிசார்ந்த மன்னரும் மற்றுமுள் ளோரும் முடிவிலொரு
பிடிசாம்ப ராய்வெந்து மண்ணாவ துங்கண்டு பின்னும் இந்தப்
படிசார்ந்த வாழ்வை நினைப்பதல் லால்பொன்னின் அம்பலவர்
அடிசார்ந்து நாம்உய்ய வேண்டுமென்றே அறி வாரில்லையே!

மணிமுடி தரித்து பகை அரசர்களை வென்று அனைத்தையும் கட்டி ஆளும் அரசனும் சரி ,சராசரி மனிதனும் சரி வாழ்க்கை முடிந்து இறந்து கட்டைமீது எரித்தபின்பு முடிவில் பிடி சாம்பல் மட்டும் தான் மிஞ்சும் ,இந்த உண்மை தெரிந்து இருந்தும் இந்நிலையில்லாத வாழ்வை விட்டுவிட்டு பொன்னம்பலத்தே நடமிடும் ஈசன் எந்தை எம்பெருமான் சிவனடி சேர்ந்து நாம் இம்மானிடப் பிறப்பை மேன்மையானதாக்க வேண்டும் என்று நினைப்பாரில்லை போலும் அப்பனே . 

காலை உபாதி மலஞ்சலமாம் அன்றிக் கட்டுச்சியிற்
சால உபாதி பசிதாகம் ஆகும்முன் சஞ்சிதிமாம்
மாலை உபாதி துயில்காமமாம் இவை மாற்றிவிட்டே
ஆலம் உகந்தருள் அம்பலவா, என்னை ஆண்டருளே!

காலையில் கழிக்க வேண்டிய துன்பம் மல சலமாம் , இது கழிந்தால் பசி தாகம் எனும் பெரும் துன்பம் , அதுவும் கழிந்தால் மாலையில் தூக்கம் , காமம் என்னும் இரு பெரும் துன்பம் நம்மை அலைக்கழிக்கும் எல்லா துன்பத்தையும் மாற்றி என்னை ஆட்கொள்ள வேண்டும் இறைவனே  தேவர்களுக்காக ஆலகால விஷம் எனும் கொடிய விஷத்தை உண்ட பொன்னம்பலவனே .
  
ஆயும் புகழ்த்தில்லை அம்பலவாணர் அருகில் சென்றால்
பாயும் இடபம், கடிக்கும் அரவம், பின்பற்றிச் சென்றால்
பேயுங் கணமும் பெருந்தலைப் பூதமும் பின்தொடரும்;
போயென்செய் வாய்மனமே பிணக் காடவர் போமிடமே?

மனமே , அனைவருமே போற்றிப் புகழும் தில்லை அம்பலவாணரின் அருகில் சென்றால் இடபம் நம் மீது பாயும் , பாம்பும் சீறிக் கொண்டு கடிக்க வரும் ,அதையும் பொருட்படுத்தாது சென்றால் பேயும் பூதமும் பெருந்தலை கொண்ட பூதகணங்களும் நம்மை பின்தொடரும் ஏனெனில் அவர் போகுமிடம் மயானமாம் அங்கே போய் நீ என்ன செய்ய போகிறாய் மனமே , எத்துனை துன்பம் நேர்ந்தாலும் அவரே கதி என்று அவர் பின்னால் போ அவர் பாதத்தை விடாமல் பற்று .
ஓடும் எடுத்து அதள் ஆடையும் சுற்றி, உலாவிமெள்ள
வீடுகள் தோறும் பலிவாங்கியே, விதி யற்றவர்போ
லாடு மருட்கொண்டிங் கம்பலத்தே நிற்கு மாண்டிதன்னைத்
 தேடுங் கணக்கென்ன காண்! சிவகாம சவுந்தரியே.

திருவோடு எடுத்து புலித்தோல் ஆடையும் அரையில் சுற்றி மெள்ள நடந்து வீடுகள் தோறும் பிச்சை கேட்கும் விதியற்றவராகி பித்தனைப்போல் இருக்கும் ஆண்டியாகிய அத்தனை தேடும் வகை என்ன அம்மா சிவகாம சுந்தரியே .( இந்த பாடல் அடிகள் பசியோடு இருந்தபோது  அம்மை ஒரு பெண் வேடத்தில் வந்து திருவமுது கொடுத்து பின் மறைந்தார் வந்து போனது அம்மையே என்று தெரிந்த உடன் பாடப்பட்ட பாடல் ) 

    இன்னும் பதிவுகள் தொடரும்........

சிவத்தை போற்றுவோம் !! சித்தர்களை போற்றுவோம் !!

                        - திருவடி முத்து கிருஷ்ணன் 







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக