செவ்வாய், மே 30, 2017

சித்தர் என்பவர் யார் ?

            மகான் ஸ்ரீ பட்டினத்தார் திருவடிகள் போற்றி !!



கடவுளை புறத்தில் கண்டு பூசை செய்பவர்கள் பக்தர்கள் , கடவுளை அகத்தில் கண்டு தெளிந்தவர்கள் சித்தர்கள் . சித் என்ற சொல்லிற்கு அறிவு என்று பொருள். அறிவு தெளிய பெற்றவர்கள் சித்தர்கள் . இவர்கள் சமயத்திற்கும் , சடங்குகளுக்கும் அப்பாற்பட்டவர்கள் . இறைவனை இடைவிடாது தியானித்து சித்தத்தை சிவத்தில் நிறுத்தி பேரின்பத்தில் இருப்பவர்கள் .

மௌனத்தை பிரதானமாகக்கொண்டு சித்தி அடைந்தவர்கள் , இரும்பை பொன்னாக்கும் ரசவாத கலையை அறிந்தவர்கள் , நினைத்த இடத்திற்கு நினைத்த நேரத்தில் செல்லும் ஆற்றல் படைத்தவர்கள் , கூடு விட்டு கூடு பாயும் சித்து போன்ற எட்டு சித்துக்கள் கைவர பெற்றவர்கள் .

சித்தர்கள் என்றால் சித்து செய்பவர்கள் என்று அர்த்தம் , சித்து என்றால் எல்லாவற்றையும் உணர்ந்து கொள்ளும் தன்மை என்று பொருள் . பாம்பாட்டி சித்தர் தன்னுடைய பாடல்களில் சித்தர் வல்லபங் கூறல் என்ற பகுதியில் சித்தர்கள் பெருமைகளை கூறி இருக்கிறார் .


தூணைச்சிறு துரும்பாக தோன்றிடச் செய்வோம்
துரும்பைப் பெருந்தூணாகத் தோற்றச் செய்குவோம்
ஆணைபெண்ணும் பெண்ணை யாணு மாகச் செய்குவோம்
ஆரவாரித் தெதிராய் நின்றாடு பாம்பே.

எட்டு மலைகளைப் பந்தா யெடுத்தெறி குவோம்
ஏழுகட லையுங்குடித் தேப்ப மிடுவோம்
மட்டுப் படா மணலையும் மதித்திடுவோம்
மகாராஜன் முன்பு நீ நின்றாடு பாம்பே.


செப்பரிய மூன்றுலகுஞ்செம் பொன்னாக்குவோம்
செங்கதிரைத் தண்கதிராய்ச் செய்து விடுவோம்
இப்பெரிய உலகத்தை இல்லாமற் செய்வோம்
எங்கள் வல்லபங் கண்டு நீ யாடு பாம்பே.

வேதன்செய்த சிருஷ்டிகள்போல் வேறுசெய்குவோம்
வேதனையு மெங்கள் கீழே மேவச் செய்குவோம்
நாதனுடன் சமமாக நாங்களும் வாழ்வோம்
நாங்கள் செய்யும் செய்கை யிதென்றாடு பாம்பே.



சிறுபுலி யானையாளி சிங்க முதலாய்ச்
சிற்றடிக்குக் குற்றேவல் செய்யச் சொல்லுவோம்
வீறுபெருங் கடவுளை எங்களுடனே
விளையாடச் செய்குவோமென் றாடு பாம்பே.
                                      - பாம்பாட்டி சித்தர் 

தங்களுடன் விளையாட இறைவனை அழைப்போம் என்கிறார்.
பாம்பாட்டியார் நாதனுடன் சமமாக நாங்களும் வாழ்வோம் என்று கூறுகிறார் ஈசனோடு கலந்த பின்பு இருவரும் வேறா . ஆற்று நீர் கடலில் கலந்து விட்டால் கடல்நீர் ஆவது போல ஈசனுடன் கலந்த பின் நாங்களும் சமம் என்று கூறுகிறார் . 

பல யுகங்கள் வாழ்ந்தவர்கள் உடலை அழியாமல் வைக்கும் வகை அறிந்தவர்கள் . ஈசனோடு இரண்டறக்கலந்து சிவமாய் ஆகி மண்ணில் என்றும் அருள் புரிந்து கொண்டு இருக்கும் சித்தர்கள் ஏராளம் . சித்தர்கள் தரிசனம் பாவங்களை நாசம் செய்யும் ஞான நிலையை மேம்படுத்தும் .

                         சிவமேஜெயம் - திருவடி முத்துகிருஷ்ணன் 


சிவத்தை போற்றுவோம் !! சித்தர்களை போற்றுவோம் !!






புதன், மே 24, 2017

பயனுள்ள தகவல் ....

                     படித்து பகர்ந்தது ...
     
நவ கையிலாயங்களை ஒரே நாளில் தரிசனம் செய்ய ..


ஒன்பது நவக்கிரகஆலயங்களையும் ஒரே நாளில்
தரிசனம் செய்ய காலநேரஅட்டவணையுடன் வழிதடங்கள் !!!
ஒன்பது நவ கிரகங்கள் ஆலயங்கள் அனைத்தும் கும்பகோணம் மயிலாடுதுறை காரைக்கால் பகுதியை சுற்றி அமைந்திருக்கின்றன. கீழ்கண்ட கால அட்டவணை படி உரிய வழி தடங்களில் பயணம் செய்து ஒன்பது நவக்கிரக ஆலயங்களையும் ஒரே நாளில் தரிசனம் செய்து அருள் பெற வேண்டுகிறோம்.
*1, திங்களூர் (சந்திரன்):*
*தரிசனம் நேரம் :1மணி நேரம்*
*காலை 6மணி*
ஒன்பது நவகிரக ஆலயங்களில் முதலில் ஆரம்பிக்கும்
வேண்டியது திங்களூர்தான். நீங்கள் கும்பகோணம் பேருந்து நிலையத்திலிருந்து பாபநாசம், ஐயம்பேட்டை வழியாக 33 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திங்களூரை சுமார் 1 மணி நேர நேரத்தில் அடைந்து விட முடியும். இதற்கு சரியாக காலை 5.00 மணிக்கெல்லாம் கும்பகோணத்திலிருந்து நீங்கள் கிளம்ப வேண்டும். பின்னர் திங்களூர் கைலாசநாதர் கோயிலில் சுவாமி தரிசனத்தை ஒரு மணி நேரத்திற்குள் முடித்துக்கொண்டு 7 மணிக்கு ஆலங்குடி கிளம்பலாம்.
*2, ஆலங்குடி (குரு) :*
*தரிசனம் நேரம்:1மணி நேரம்*
*காலை 7.30மணி*
ஆலங்குடியை 30 நிமிடத்தில் அடைந்து விடலாம். பின்னர் ஸ்ரீ ஆபத்சகாயேஸ்வரர் கோயிலில் ஒரு மணி நேரத்திற்குள் சுவாமி தரிசனத்தை முடித்துக்கொண்டு 8.30 மணியளவில் கும்பகோணம் வழியாக திருநாகேஸ்வரம் கிளம்பலாம்
காலை 8.30 மணிக்குள் இருந்து 9.00 மணிக்குள் காலை உணவை முடித்து கொள்ளலாம்
*3, திருநாகேஸ்வரம் (ராகு) :*
*தரிசனம் நேரம்:1மணி நேரம்*
*காலை 9.30*
கும்பகோணத்திற்கு வெகு அருகிலேயே 6 கிலோமீட்டர் தொலைவில் திருநாகேஸ்வரம் ஹ 10 அல்லது 15 நிமிடங்களில், 10.00 மணியளவில் திருநாகேஸ்வரம் ராகு கோயிலை அடைந்து விட முடியும். நாகநாதசுவாமி பெரிய கோயில் என்பதால் தரிசனம் செய்து முடிக்க ஒரு மணி நேரம் ஆகும். பின்னர் கும்பகோணம் வழியாக செல்ல 21 கி.மீ தொலைவில் உள்ள சூரியனார் ஆலயம் செல்ல 10.30க்கு புறப்பட்டு 30 நிமிடத்தில் சென்று விடலாம்.
*4, சூரியனார் கோவில் (சூரியன்) :*
*தரிசனம் நேரம்:1மணி நேரம்*
*மதியம் 11.00மணி*
நீங்கள் 11.00 மணிக்கெல்லாம் சூரியனார் கோவிலை அடைந்து விடலாம். சூரியனார் கோவிலில் உள்ள சிவசூரியநாராயண கோவில் மற்ற நவகிரக கோயில்களை போல் அல்லாமல் சூரியனை முதன்மையாக கொண்டு நவக்கிரகங்களுக்கென தனித்து அமைந்த கோயில் எ‌ன்ற சிறப்பை பெற்றுள்ளது. இங்கு சூரிய பகவானை தரிசித்து முடித்தவுடன் 12.00 மணிக்கெல்லாம் கஞ்சனூர் கிளம்ப வேண்டும்.
*5, கஞ்சனூர் (சுக்கிரன்) :*
*தரிசனம் நேரம்:1மணி நேரம்*
*மதியம் 12.15*
சூரியனார் கோவிலிலிருந்து கஞ்சனூர் 5 கிலோமீட்டர் தொலைவிலேயே அமைந்திருப்பதால் மூலமாக 15 நிமிடங்களில் கஞ்சனூரை அடைந்து விடலாம். எனவே 12.15மணிக்கே உங்களால் அக்னீஸ்வரர் ஸ்வாமி கோவிலுக்கு சென்று விட முடியும். அதோடு 1.15 மணியளவில் கோயில் நடை சாத்தப்பட்டுவிடும் என்பதால் ஒரு மணி நேரத்திற்குள்ளாக சுவாமி தரிசனத்தை முடித்துக்கொள்ளவேண்டும்.
*6, வைத்தீஸ்வரன் கோயில் (செவ்வாய்) :*
*தரிசனம் நேரம் :1மணி நேரம்*
*மாலை 4மணி*
நவகிரக கோயில்கள் அனைத்திலுமே 1.15 மணிக்கு நடை சாத்தப்பட்டால் பின்பு 4 மணிக்கே கோயில் கதவுகள் திறக்கப்படும். எனவே 1.30 மணிக்கு கஞ்சனூரிலிருந்து மயிலாடுதுறை 20 கிலோமீட்டர் தொலைவிலுள்ள மயிலாடுதுறையை 2.மணிக்கெல்லாம் அடைந்து விடலாம். மயிலாடுதுறையிலேயே மதிய உணவை முடித்துக்கொண்டு ஆற அமர 3.00 மணியளவில் கிளம்பினால் கூட 15 கிலோமீட்டர் தூரமுள்ள வைத்தீஸ்வரன் கோயிலை 3.30 மணிக்கெல்லாம் அடைந்து விட முடியும். பின்னர் கோயில் நடை திறந்து பின்பு சுவாமி தரிசனத்தை முடித்துக்கொண்டு 5.00மணிக்கு வைத்தீஸ்வரன் கோயிலிலிருந்து கிளம்பினால் சரியாக இருக்கும்.
*7, திருவெண்காடு (புதன்) :*
*தரிசனம் நேரம்:45 நிமிடம் நேரம்*
*மாலை 5.15மணி*
வைத்தீஸ்வரன் கோயிலிலிருந்து 5.00 மணிக்கு கிளம்பினால் 16 கிலோமீட்டரில் அமைந்துள்ள திருவெண்காடு ஸ்தலத்தை 5.15மணிக்கு அடைந்துவிட முடியும். பின்னர் ஸ்வேதாரண்யேஸ்வரர் கோயிலில் வீற்றிருக்கும் புதன் பகவானையும், சிவபெருமானையும் 45 நிமிஷம் மணிநேரத்திற்குள் தரிசித்துவிட்டு 6.00மணிக்கு கிளம்ப வேண்டும்.
*8, கீழ்பெரும்பள்ளம் (கேது) :*
*தரிசனம் நேரம்:45 நிமிடம் நேரம்*
*மாலை 6.15மணி*
திருவெண்காட்டிலிருந்து 8 கிலோமீட்டர் தூரத்தில் அமையப்பெற்றுள்ள கேது பகவானின் கீழ்பெரும்பள்ளம் ஸ்தலத்தை 15 நிமிடங்களில் 6.15 அடைந்து விடலாம். ஜாதகத்தில் தவறான இடத்தில் கேது இருப்பதால் தோஷம் அடைந்த மக்கள், அதற்கு பரிகாரம் செய்ய இந்த கோயிலுக்கு வருகிறார்கள்.45 நிமிஷம் நேரத்திற்குள் தரிசனம் செய்து விட்டு 7.00மணிக்கு திருநள்ளாறு புறப்படலாம்
*9, திருநள்ளாறு (சனி) :*
*தரிசனம் நேரம்:1மணி நேரம்*
*இரவு 8.00மணி*
நவகிரக ஸ்தலங்களின் சுற்றுலாவில் நீங்கள் இறுதியாக செல்லவிருக்கும் இடம் சனி பகவான் வீற்றிருக்கும் திருநள்ளாறு ஸ்தலம். கீழ்பெரும்பள்ளத்திலிருந்து சரியாக 7.00, மணிக்கு புறப்பட்டால் 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திருநள்ளாறு ஸ்தலத்தை திருக்கடையூர், காரைக்கால் வழியாக ஒரு மணி நேரத்திற்குள் வேகமாக சென்றால் 8.00மணிக்கெல்லாம் அடைந்து விட முடியும். அதன் பின்னர் ஸ்ரீ தர்பாரன்யேசுவரர் திருக்கோவிலில் சனி பகவானையும், சிவபெருமானையும் ஒரு மணிநேரம் தரிசிக்கலாம்.
9.30மணிக்கு திருநள்ளாறு ஆலயத்தோடு ஒன்பது நவக்கிரகங்களையும் தரிசனம் செய்த மிகப்பெரிய மனநிறைவோடு பூர்வஜென்ம பாக்கியமாக இறைவனின் அருள் பெற்று புறப்படலாம்....


       முகநூலில் அடியேன் படித்தது பகர்ந்த அன்பருக்கு நன்றி .

சிவமேஜெயம் - திருவடி முத்துகிருஷ்ணன் 


சிவத்தை போற்றுவோம் !! சித்தர்களை போற்றுவோம் !!