வியாழன், நவம்பர் 28, 2013



சித்தர் பாடல்களில் இருந்து .....................




                            
மணிவாசக பெருமான் அருளிய 
        
திருவாசகத் தேனிலிருந்து............

                                                                       சில துளிகள் 


உம்பர்கட்கரசே! ஒழிவற நிறைந்த யோகமே! ஊத்தையேன் தனக்கு
வம்பெனப் பழுத்து, என் குடி முழுமாண்டு, வாழ்வற வாழ்வித்த மருந்தே!
செம் பொருள் துணிவே! சீருடைக் கழலே! செல்வமே! சிவபெருமானே!
எம்பொருட் டுன்னைச் சிக்கெனப் பிடித்தேன்; எங்கெழுந் தருளுவதினியே ?


தேவர்களுக்கு அரசே அனைத்துப்பொருள்களோடும் கலந்துநிற்கும் பொருளே,மலஅழுக்குகள் உடையவனாகிய என்னை வலியவந்து ஆட்கொண்டு வாழ்வித்த அருமருந்தானவனே,யாராலும் வரையறுக்கஇயலாத செம்பொருளானவனே,வீடுபேற்றினை நல்கும் திருவடிகளை உடையவனே செல்வமே சிவபெருமானே நான்உய்யும்பொருட்டு நின்திருவடியைச் சிக்கெனப்பிடித்துவிட்டேன்.இனி எம்மைவிட்டு எங்குஎழுந்தருளமுடியும்?.

அம்மையே!அப்பா! ஒப்பில்லா மணியே! அன்பினில் விளைந்த ஆரமுதே!
பொய்ம்மையே பெருக்கி, பொழுதினைச் சுருக்கும், புழுத்தலைப் புலையனேன் தனக்கு,
செம்மையே ஆய சிவபதமளித்த செல்வமே! சிவபெருமானே!
இம்மையே, உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்; எங்கெழுந் தருளுவதினியே ?


உலக உயிர்களுக்கு அம்மையாகவும் அப்பனாகவும் விளங்குபவனே, இணையில்லாத  மணியே , உள்ளம்எனும் பெருங்கோயிலில் எழும் தூயஅன்பினில் விளைந்த அமிழ்தம் போன்றவனே, பொய்மையே உருவமாகக் கொண்டு ,பிறப்பின் நோக்கம் அறியாது வீணே பொழுதினைக் கழித்துத்திரியும் புழுத்த உடலோடுதிரிகின்ற கீழானவன் எனக்கும் , யாருக்கும் கிடைக்காத செம்மையான சிவபதத்தை அளித்தவனே ,செல்வமே சிவபெருமானே இப்பிறப்பிலேயே உன்னைச் சிக்கெனப் பிடித்துக்கொண்டேன்.இனி என்னைவிட்டு வேறு எங்கும் செல்ல முடியாது.

பால்நினைந் தூட்டும் தாயினும் சாலப் பரிந்து, நீ, பாவியேனுடைய
ஊனினை உருக்கி, உள் ஒளி பெருக்கி, உலப்பிலா ஆனந்தம் ஆய
தேனினைச் சொரிந்து, புறம் புறம் திரிந்த செல்வமே! சிவபெருமானே!
யானுனைத் தொடர்ந்து, சிக்கெனப் பிடித்தேன்; எங்கெழுந் தருளுவதினியே ?


குழந்தை அழுவதற்கு முன்பே அதன்பசியைநினைந்து பால்ஊட்டும் தாயைவிடவும் இரங்கி நீ பாவங்களின் உருவமான என்னுடைய உடலும் உருகுமாறுசெய்து உள்ளத்தில் ஒளிபெருகுமாறும் வற்றாத இன்பமாகிய தேனைப்பொழிந்து எங்குசென்றாலும் என்னுடனேவந்து உதவிய செல்வமே சிவபெருமானே நான்உனை உரியநேரத்தில் உறுதியாகப் பற்றிக்கொண்டேன் இனி என்னைவி்ட்டு எங்கும் செல்லமுடியாது.

அத்தனே! அண்டர் அண்டமாய் நின்ற ஆதியே! யாதும் ஈறில்லாச்
சித்தனே! பத்தர் சிக்கெனப் பிடித்த செல்வமே! சிவபெருமானே!
பித்தனே! எல்லா உயிரும் ஆய்த் தழைத்து, பிழைத்து, அவை அல்லை ஆய் நிற்கும்
எத்தனே! உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்; எங்கெழுந் தருளுவதினியே ?


தந்தையே விண் உலகத்தவர்க்கும்ஆதாரமாய் நின்ற முதல்வனே, முடிவு என்று ஒன்று இல்லாத ஞானமயமானவனே ,பத்தர்களால் உறுதியாகப் பற்றப்பட்ட ஞானச் செல்வமே, சிவபெருமானே அன்புடையவனே,  எல்லாஉலகங்களையும் படைத்துக் காப்பவனே,உலகங்களோடு பொருந்தாது நிற்பவனே சூழ்ச்சியானவனே உன்னை உறுதியாகப் பற்றிக்கொண்டேன் இனி எம்மைவிட்டு எங்கும் செல்ல முடியாது.


                                                  இறை பணியில் 

                                                                               பெ.கோமதி 

                                                                  சிவமேஜெயம் !!

                   சிவத்தை போற்றுவோம் !! சித்தர்களை போற்றுவோம் !!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக