திங்கள், அக்டோபர் 10, 2011

திருமூலர் அருளிய திருமந்திரம் (4)


 திருமூலர் அருளிய திருமந்திரம் 

                                 மூன்றாம் தந்திரம்



1. அட்டாங்க யோகம்

உரைத்தன வல்கரி யொன்று மூடிய
நிரைத் திராசி நிரை முறை யெண்ணிப்
பிரைச் சதம் எட்டும் பேசியே நந்தி
நிரைத்த இயமம் நியமம் செய்தானே.

செய்த இயம நியமம் சமாதி சென்று
உய்யப் பராசத்தி உத்தர பூருவ
மெய்த கவச நியாசங்கள் முத்திரை
எய்த உரை செய்வன் இந்நிலை தானே.

அந்நெறி இந்நெறி என்னாது அட்டாங்கத்
தன் நெறி சென்று சமாதியிலே நின்மின்
நந்நெறி செல்வார்க்கு ஞானத்தில் ஏகலாம்
பு
ந்நெறி யாகத்தில் போக் கில்லை யாகுமே.

இயம நியமமே எண்ணிலா ஆதனம்
நயமுறு பிரணா யாமம் பிரத்தி யாகாரம்
சயமிகு தாரணை தியானம் சமாதி
அயமுறும் அட்டாங்க மாவது வாமே.

                              2. இயமம்

எழுந்து நீர் பெய்யினும் எட்டுத் திசையும்
செழும் தன் நியமங்கள் செய்மின்என் றண்ணல்
கொழும் தன் பவளக் குளிர் சடை யோடே
அழுந்திய நால்வர்க் கருள் புரிந்தானே.

கொல்லான் பொய் கூறான் களவிலான் எண் குணன்
நல்லான் அடக்கம் உடையான் நடுச்செய்ய
வல்லான் பகுத் துண்பான் மாசிலான் கள் காம
மில்லான் இயமத் திடையில் நின்றானே.

3. நியமம்

ஆதியை வேதத்தின் அப் பொருளானைச்
சோதியை அங்கே சுடுகின்ற அங்கியைப்
பாதியுள் மன்னும் பராசத்தி யோடுடன்
நீதி யுணர்ந்து நியமத்த னாமே.

தூய்மை அருள் ஊண் சுருக்கம் பொறை செவ்வை
வாய்மை நிலைமை வளர்த்தலே மற்றிவை
காமங் களவு கொலை எனக் காண்பவை
நேமி ஈரைந்து நியமத்த னாமே.

தவம் செபம் சந்தோட மாத்திகம் தானம்
சிவன் தன் விரதமே சித்தாந்தக் கேள்வி
மகம் சிவபூசை ஒண்மதி சொல்லீர் ஐந்து
நிவம் பல செய்யின் நியமத்த 
னாமே.

4. ஆதனம்

பங்கயம் ஆதி பரந்த பல் ஆதனம்
அங்குளவாம் இரு நாலும் அவற்றினுள்
செங்கில்லை ஆகச் சுவத்திகம் என மிகத்
தங்கிருப்பத் தலைவனு மாமே

ஓர் அணை அப்பதம் ஊருவின் மேல் ஏறி இட்டு
ஆர வலித்து அதன்மேல் வைத்து அழகுறச்
சீர் திகழ் கைகள் அதனைத் தன் மேல் வைக்கப்
பார் திகழ் பத்மாசன மென லாமே

துரிசு இவ் வலக்காலைத் தோன்றவே மேல் வைத்து
அரிய முழந் தாளில் அம் கையை நீட்டி
உருசியொடும் உடல் செவ்வே இருத்திப்
பரிசு பெறுமது பத்திர ஆசனமே.

ஒக்க அடி இணை ஊருவில் ஏறிட்டு
முக்கி உடலை முழங் கை தனில் ஏற்றித்
தொக்க அறிந்து துளங்காது இருந்திடல்
குக்குட ஆசனம் கொள்ளலு மாமே.

பாத முழந்தாளில் பாணிகளை நீட்டி
ஆதர வோடும் வாய் அங்காந் தழகுறக்
கோது இல் நயனங் கொடி மூக்கிலே உறச்
சீர் திகழ் சிங்காதன மெனச் செப்புமே.

பத்திரம் கோமுகம் பங்கயம் கேசரி
சொத்திரம் வீரம் சுகாதனம் ஓரேழு
உத்தம மாமுது ஆசனம் எட்டு எட்டுப்
பத்தொடு நூறு பல ஆசனமே.

5. பிராணாயாமம்

ஐவர்க்கு நாயகன் அவ் ஊர்த் தலைமகன்
உய்யக் கொண்டேறும் குதிரை மற்றொன் றுண்டு
மெய்யர்க்குப் பற்றுக் கொடுக்கும் கொடாது போய்ப்
பொய்யரைத் துள்ளி விழுத்திடும் தானே.

ஆரிய னல்லன் குதிரை இரண்டுள
வீசிப் பிடிக்கும் விரகறிவா ரில்லை
கூரிய நாதன் குருவினருள் பெற்றால்
வாரிப் பிடிக்க வசப்படும் தானே.

புள்ளினு மிக்க புரவியை மேல் கொண்டால்
கள்ளுண்ண வேண்டாம் தானே களிதரும்
துள்ளி நடப்பிக்கும் சோம்பு தவிர்ப்பிக்கும்
உள்ளது சொன்னோம் உணர்வுடை யோர்க்கே.

பிராணன் மனத்தொடும் பேராது அடங்கிப்
பிராணன் இருக்கில் பிறப்பு இறப்பில்லை
பிராணன் மடைமாறிப் பேச்சு அறிவித்துப்
பிராணன் அடைபேறு பெற்றுண்டீர் நீரே.

ஏறுதல் பூரகம் ஈர் எட்டு வாமத்தால்
ஆறுதல் கும்பம் அறுபத்து நாலு அதில்
ஊறுதல் முப்பத்திரண்டு அதி ரேசகம்
மாறுதல் ஒன்றின் கண் வஞ்சகம் ஆமே.

வளியினை வாங்கி வயத்தில் அடக்கில்
பளிங்கு ஒத்துக் காயம் பழுக்கினும் பிஞ்சாம்
தெளியக் குருவின் திரு அருள் பெற்றால்
வளியினும் வேட்டு வளியனும் ஆமே.

எங்கே இருக்கினும் பூரி இடத்திலே
அங்கே அது செய்ய ஆக்கைக்கு அழிவு இல்லை
அங்கே பிடித்தது விட்டு அளவும் செல்லச்
சங்கே குறிக்கத் தலைவனு மாமே.

ஏற்றி இரக்கி இருகாலும் பூரிக்கும்
காற்றைப் பிடிக்கும் கணக் கறிவார் இல்லை
காற்றைப் பிடிக்கும் கணக் கறிவாளர்க்குக்
கூற்றை உதைக்குங் குறி அது வாமே

மேல் கீழ் நடுப்பக்கம் மிக்கு உறப் பூரித்துப்
பால் ஆம் இரேசகத்தால் உள் பாவித்து
மால் ஆகி உந்தியுள் கும்பித்து வாங்கவே
ஆலாலம் உண்டா னருள் பெறலாமே.

இட்ட தவ்வீடு இளகா திரேசித்துப்
புட்டிப் படத் தச நாடியும் பூரித்துக்
கொட்டிப் பிராணன் அபானனுங் கும்பித்து
நட்டம் இருக்க நமனில்லை தானே.

புறப்பட்டுப் புக்குத் திரிகின்ற வாயுவை
நெறிப்பட உள்ளே நின்மல மாக்கில்
உறுப்புச் சிவக்கும் உரோமங் கறுக்கும்
புறப்பட்டுப் போகான் புரி சடையோனே.

கூடம் எடுத்துக் குடி புக்க மங்கையர்
ஓடுவர் மீளுவர் பன்னிரண் டங்குலம்
நீடுவர் எண்விரல் கண்டிப்பர் நால்விரல்
கூடிக் கொளில் கோல அஞ்செழுத் தாமே.

பன்னிரண் டானை பகலிரவு உள்ளது
பன்னிரண் டானையைப் பாகன் அறிகிலன்
பன்னிரண் டானையைப் பாகன் அறிந்தபின்
பன்னிரண் டானைக்குப் பகலிர வில்லையே.

6. பிரத்தியாகாரம்

கண்டுகண் டுள்ளே கருத்துற வாங்கிடில்
கொண்டு கொண் டுள்ளே குணம் பல காணலாம்
பண்டுகந்து எங்கும் பழமறை தேடியை
இன்று கண் டிங்கே இருக்கலு மாமே.

நாபிக்குக் கீழே பன்னிரண் டங்குலம்
தாபிக்கு மந்திரம் தன்னை அறிகிலர்
தாபிக்கும் மந்திரம் தன்னை அறிந்தபின்
கூவிக் கொண்டு ஈசன் குடி இருந்தானே.

மூலத்து இருவிரல் மேலுக்கு முன் நின்ற
பாலித்த யோனிக்கு இருவிரல் கீழ் நின்ற
கோலித்த குண்டலியுள் எழுஞ் செஞ்சுடர்
ஞாலத்து நாபிக்கு நால்விரல் கீழதே.

நாசிக்கு அதோ முகம் பன்னிரண் டங்குலம்
நீ சித்தம் வைத்து நினையவும் வல்லையேல்
மா சித்த மா யோகம் வந்து தலைப் பெய்தும்
தேகத்துக்கு என்றும் சிதைவில்லை யாமே.

சோதி இரேகைச் சுடரொளி தோன்றிடில்
கோதில் பரானந்த மென்றே குறிக் கொண்மின்
நேர்திகழ் கண்டத்தே நிலவொளி எய்தினால்
ஓதுவ துன் உடல் உன் மத்த மாமே.

மூலத் துவாரத்தை ஒக்கரம் இட்டு இரு
மேலைத் துவாரத்தின் மேல் மனம் வைத்து இரு
வேல் ஒத்த கண்ணை வெளியில் விழித்து இரு
காலத்தை வெல்லும் கருத்திது தானே.

எரு இடும் வாசற்கு இருவிரல் மேலே
கரு இடும் வாசற்கு இருவிரல் கீழே
உரு இடும் சோதியை உள்க வல்லார்க்குக்
கரு இடும் சோதி கலந்து நின்றானே.

ஒருக்கால் உபாதியை ஒண் சோதி தன்னைப்
பிரித்து உணர் வந்த உபாதிப் பிரிவைக்
கரைத் துணர் வுன்னல் கரைதல் உள்நோக்கால்
பிரத்தியா காரப் பெருமையை அது வாமே.

புறப்பட்ட வாயுப் புகவிடா வண்ணம்
திறப்பட்டு நிச்சயம் சேர்ந் துடன் நின்றால்
உறப்பட்டு நின்றது உள்ளமும் ஆங்கே
புறப்பட்டுப் போகான் பெருந் தகையானே.

7. தாரணை

கோணா மனத்தைக் குறிக்கொண்டு கீழ்க்கட்டி
வீணாத்தண்டு ஊடே வெளி வுறத்தான் நோக்கிக்
காணாக் கண் கேளாச் செவி என்றிருப்பார்க்கு
வாழ்நாள் அடைக்கும் வழி அது வாமே .

மலையார் சிரத்திடை வான் நீர் அருவி
நிலையாரப் பாயும் நெடுநாடி ஊடே
சிலையார் பொதுவில் திருநட மாடும்
தொலையாத ஆனந்தச் சோதி கண்டேனே.

மேலை நிலத்தினாள் வேதகப் பெண் பிள்ளை
மூல நிலத்தில் எழுகின்ற மூர்த்தியை
ஏல எழுப்பி இவளுடன் சந்திக்கப்
பாலனு மாவான் பரா நந்தி ஆணையே.

கடை வாசலைக் கட்டிக் காலை எழுப்பி
இடை வாசல் நோக்கி இனிதுள் இருத்தி
மடை வாயில் கொக்குப் போல் வந்தித் திருப்பார்க்கு
உடையாமல் ஊழி இருக்கலும் ஆமே.

கலந்த உயிருடன் காலம் அறியில்
கலந்த உயிரது காலின் நெருக்கம்
கலந்த உயிரது கால் அது கட்டில்
கலந்த உயிருடல் காலமும் நிற்குமே.

வாய் திறவாதார் மனத்தில் ஓர் மாடு உண்டு
வாய் திறப்பாரே வளி
யிட்டுப் பாய்ச்சுவர்
வாய் திறவாதார் மதியிட்டு மூட்டுவர்
கோய் திறவா விடில் கோழையு மாமே.

வாழலு மாம் பலகாலும் மனத் திடைப்
போழ்கின்ற வாயு புறம் படாப் பாய்ச் சுறில்
ஏழு சாலேகம் இரண்டு பெருவாய்தல்
பாழி பெரியது ஓர் பள்ளி யறையே.

நிரம்பிய ஈரைந்தில் ஐந்து இவை போனால்
இரங்கி விழித் திருந்து என் செய்வை பேதாய்
வரம்பினைக் கோலி வழி செய்குவார்க்குக்
குரங்கினைக் கொட்டை பொதியலு மாமே.

முன்னம் வந்தனர் எல்லாம் முடிந்தனர்
பின்னை வந்தவர்க்கு என்ன பிரமாணம்
முன்னுறு கோடி யுறு கதி பேசிடில்
என்ன மாயம் இடி கரை நிற்குமே.

அரித்த உடலை ஐம் பூதத்தில் வைத்துப்
பொருத்த ஐம்பூதம் சத்தாதியில் போந்து
தெரித்தமன் ஆதி சத்தாதியில் செல்லத்
தரித்தது தாரணை தற்பரத் தோடே.

8. தியானம்

வரும் ஆதி ஈரெட்டுள் வந்த தியானம்
பொருவாத புந்தி புலன் போகம் ஏவல்
உருவாய சத்தி பரத் தியான முன்னும்
குருவார் சிவத் தியானம் யோகத்தின் கூறே.

கண்நாக்கு மூக்குச் செவி ஞானக் கூட்டத்துள்
பண்ணாக்கி நின்ற பழம் பொருள் ஒன்றுண்டு
அண்ணாக்கி னுள்ளே அகண்ட வொளிகாட்டிப்
புண்ணாக்கி நம்மை பிழைப்பித்த வாறே.

ஒண்ணா நயனத்தில் உற்ற வொளி தன்னைக்
கண்ணாரப் பார்த்துக் கலந்தங்கு இருந்திடில்
விண்ணாறு வந்து வெளி கண்டிட வோடிப்
பண்ணாமல் நின்றது பார்க்கலு மாமே.

ஒரு பொழுது உன்னார் உடலோடு உயிரை
ஒரு பொழுது உன்னார் உயிருள் சிவனை
ஒரு பொழுது உன்னார் சிவன் உறை சிந்தையை
ஒரு பொழுது உன்னார் சந்திரப் பூவே.

மனத்து விளக்கினை மாண்பட ஏற்றிச்
சினத்து விளக்கினைச் செல்ல நெருக்கி
அனைத்து விளக்கும் திரி ஒக்கத் தூண்ட
மனத்து விளக்கது மாயா விளக்கே.

எண்ணாயிரத்து ஆண்டு யோகம் இருக்கினும்
கண்ணார் அமுதினைக் கண்டறிவார் இல்லை
உள் நாடி உள்ளே வொளி யுற நோக்கினால்
கண்ணாடி போலக் கலந்து நின்றானே.

நாட்ட மிரண்டும் நடு மூக்கில் வைத்திடில்
வாட்ட மில்லை மனைக்கும் அழிவில்லை
ஓட்டமு மில்லை உணர்வில்லை தானில்லை
தேட்டமு மில்லை சிவனவ னாமே.

நயனம் இரண்டும் நாசிமேல் வைத்திட்டு
உயர்வெழா வாயுவை உள்ளே யடக்கித்
துயரற நாடியே தூங்க வல்லார்க்குப்
பயனிது காயம் பயமில்லை தானே.

மணி கடல் யானை வார் குழல் மேகம்
அணி வண்டு தும்பி வளை பேரிகை யாழ்
தணிந்து எழுநாதங்கள் தாம் இவை பத்தும்
பணிந்தவர்க்கு அல்லது பார்க்க வொண்ணாதே.

கடலொடு மேகம் களிறொடு மோசை
அட வெழும் வீணை அண்ட ரண்டத்துச்
சுடர் மன்னு வேணுச் சுரிசங்கி னோசை
திடமறி யோகிக் கல்லால் தெரியாதே.

ஈசனியல்பும் இமையவர் ஈட்டமும்
பாசமியங்கும் பரிந் துயராய் நிற்கும்
ஓசை யதன் மணம் போல விடுவதோர்
ஓசை யாம் ஈசன் உணர வல்லார்க்கே.

நாத முடிவிலே நல்லாள் இருப்பது
நாத முடிவிலே நல் யோகம் இருப்பது
நாத முடிவிலே நாட்டம் இருப்பது
நாத முடிவிலே நஞ்சு உண்ட கண்டனே.

உதிக்கின்ற ஆறினும் உள்ங்கி ஐந்தும்
துதிக்கின்ற தேசுடைத் தூங்கு இருள் நீங்கி
அதிக்கின்ற ஐவருள் நாதம் ஒடுங்கக்
கதிக் கொன்றை ஈசன் கழல் சேரலாமே.

பள்ளி அறையில் பகலே இருள் இல்லை
கொள்ளி அறையில் கொளுந்தாமல் காக்கலாம்
ஒள்ளிது அறியிலோர் ஓசனை நீள் இது
வெள்ளி அறையில் விடிவு இல்லை தானே.

கொண்ட விரதம் குறையாமல் தான் ஒன்றித்
தண்டுடன் ஓடித் தலைப்பட்ட யோகிக்கு
மண்டலம் மூன்றினும் ஒக்க வளர்ந்தபின்
பிண்டமும் ஊழி பிரியாது இருக்குமே.

அவ் வவர் மண்டல மாம் பரிசு ஒன்றுண்டு
அவ் வவர் மண்டலத் தவ் வவர் தேவராம்
அவ் வவர் மண்டலம் அவ் வவர்க்கே வரில்
அவ் வவர் மண்டலம் மாய மற்றோர்க்கே.

இளைக் கின்ற நெஞ்சத்து இருட்டறை யுள்ளே
முளைக் கின்ற மண்டலம் மூன்றினும் ஒன்றித்
துளைப் பெரும் பாசம் துருவிடும் ஆகில்
இளைப் பின்றி மார்கழி ஏற்ற மது வாமே.

முக்குண மூடற வாயுவை மூலத்தே
சிக்கென மூடித் திரித்துப் பிடித்திட்டுத்
தக்க வலம் இடம் நாழிகை சாதிக்க
வைக்கும் உயர் நிலை வானவர் கோனே.

நடலித்த நாபிக்கு நால் விரல் மேலே
மடலித்த வாணிக்கு இருவிரல் உள்ளே
கடலித்து இருந்து கருத வல்லார்கள்
சடலத் தலைவனைத் தாம் அறிந்தாரே.

அறிவாய சத்து என்னு மாறா அகன்று
செறிவான மாயை சிதைத்து அருளாலே
பிரியாத பேர் அருள் ஆயிடும் பெற்றி
நெறியான அன்பர் நிலை அறிந்தாரே.

9. சமாதி

சமாதி யமாதியில் தான் செல்லக் கூடும்
சமாதி யமாதியில் தான் எட்டுச் சித்தி
சமாதி யமாதியில் தங்கினோர்க்கு அன்றே
சமாதி யமாதி தலைப்படும் தானே.

விந்துவும் நாதமும் மேருவில் ஓங்கிடில்
சந்தியில் ஆன சமாதியில் கூடிடும்
அந்தம் இலாத அறிவின் அரும் பொருள்
சுந்தரச் சோதியும் தோன்றிடும் தானே.

மன் மனம் எங்கு உண்டு வாயுவும் அங்கு உண்டு
மன் மனம் எங்கு இல்லை வாயுவும் அங்கு இல்லை
மன் மனத்து உள்ளே மகிழ்ந்து இருப்பார்க்கு
மன் மனத்து உள்ளே மனோலயம் ஆமே.

விண்டலர் கூபமும் விஞ்சத் தடவியும்
கண்டு ணர்வாகக் கருதி இருப்பார்கள்
செண்டு வெளியில் செழும் கிரியத் திடை
கொண்டு குதிரை குசை செறுத்தாரே.

மூல நாடி முகட்டலகு உச்சியுள்
நாலு வாசல் நடுவுள் இருப்பிர்காள்
மேலை வாசல் வெளியுறக் கண்ட பின்
காலன் வார்த்தை கனவிலும் இல்லையே.

மண்டல மைந்து வரைகளும் ஈராறு
கொண்டிட நிற்கும் குடிகளும் ஆறு எண்மர்
கண்டிட நிற்கும் கருத்து நடு வாக
உண்டு நிலாவிடும் ஓடும் பதத்தையே.

பூட்டு ஒத்து மெய்யில் பொறிபட்ட வாயுவைத்
தேட்டற்ற அந்நிலம் சேரும்படி வைத்து
நாட்டத்தை மீட்டு நயனத் திருப்பார்க்கு
தோட்டத்து மாம்பழம் தூங்கலு மாமே.

உரு வறியும் பரிசொன் றுண்டு வானோர்
கருவரை பற்றிக் கடைந் தமுது உண்டார்
அருவரை ஏறி அமுதுண்ண மாட்டார்
திருவரை யாம் மனம் தீர்ந் தற்றவாறே.

நம்பனை ஆதியை நால் மறை ஓதியைச்
செம் பொனின் உள்ளே திகழ்கின்ற சோதியை
அன்பினை யாக்கி அருத்தி யொடுங்கிப் போய்க்
கொம்பேறிக் கும்பிட்டுக் கூட்ட மிட்டாரே.

மூலத்து மேல் அது முச்சதுரத்து
காலத் திசையில் கலக்கின்ற சந்தினில்
மேலைப் பிறையினில் நெற்றி நேர் நின்ற
கோலத்தின் கோலங்கள் வெவ்வேறு கொண்டதே.

கற்பனை அற்றுக் கனல் வழியே சென்று
சிற்பனை எல்லாம் சிருட்டித்த பேரொளிப்
பொற்பினை நாடிப் புணர் மதியோடு உற்றுத்
தற்பரம் ஆகத் தகும் தண் சமாதியே.

தலைப்பட்டு இருந்திடத் தத்துவம் கூடும்
வலைப் பட்டு இருந்திடும் மாது நல்லாளும்
குலைப் பட்டு இருந்திடும் கோபம் அகலும்
துலைப் பட்டு இருந்திடும் தூங்க வல்லார்க்கே.

சோதித் தனிச் சுடராய் நின்ற தேவனும்
ஆதியும் உள்நின்ற சீவனும் ஆகும் ஆல்
ஆதிப் பிரமன் பெருங் கடல் வண்ணனும்
ஆதி அடிபணிந்து அன்புறு வாரே.

சமாதி செய்வார்க்குத் தகும் பல யோகம்
சமாதிகள் வேண்டாம் இறையுடன் ஏகில்
சமாதி தான் இல்லை தான் அவனாகில்
சமாதியில் எட்டெட்டுச் சித்தியு மெய்துமே.

10. அட்டாங்க யோகப் பேறு

                                இயமம்

போது கந்து ஏறும் புரிசடையானடி
யாதுகந்தார் அமரா பதிக்கே செல்வர்
ஏதுகந்தான் இவன் என்றருள் செய்திடும்
மாதுகந்து ஆடிடும் ஆல் விடையோனே.

                                 நியமம்
பற்றிப் பதத் தன்பு வைத்துப் பரன்புகழ்
கற்றிருந்து ஆங்கே கருதும் அவர்கட்கு
முற்றெழுந்து ஆங்கே முனிவர் எதிர்வரத்
தெற்றும் சிவபதம் சேரலும் ஆமே.

                              ஆதனம்
வருந்தித் தவம் செய்து வானவர் கோவாய்த்
திருந் தமராபதிச் செல்வ னிவன் எனத்
தரும் தண் முழவம் குழலும் இயம்ப
இருந்து இன்பம் எய்துவர் ஈசனருளே.

                           பிராணாயாமம்
செம் பொன் சிவகதி சென்று எய்தும் காலத்துக்
கும்பத் தமரர் குழாம் வந்தெதிர் கொள்ள
எம்பொன் தலைவ னிவனா மெனச் சொல்ல
இன்பக் கலவி யிருக்கலு மாமே.

                            பிரத்தியாகாரம்
சேருறு காலத் திசை நின்ற தேவர்கள்
ஆரிவன் என்ன அரனாம் இவன் என்ன
ஏருறு தேவர்கள் எல்லாம் எதிர்கொள்ளக்
காருரு கண்டனை மெய் கண்டவாறே.

                            தாரணை
நல்வழி நாடி நமன் வழி மாற்றிடும்
சொல் வழியாளர் சுருங்காப் பெரும் கொடை
இல்வழி யாளர் இமையவர் எண்திசைப்
பல்வழி எய்தினும் பார்வழி ஆகுமே.

                           தியானம்
தூங்க வல்லார்க்கும் துணை ஏழ் புவனமும்
வாங்க வல்லார்க்கும் வலிசெய்து நின்றிடும்
தேங்க வல்லார்க்கும் திளைக்கும் அமுதமும்
தாங்க வல்லார்க்கும் தன் இடமாமே.

                            சமாதி
காரியம் ஆன உபாதியைத் தான் கடந்து
ஆரிய காரண மேழும் தன்பால் உற
ஆரிய காரணம் ஆய தவத்திடைத்
தாரியல் தற்பரம் சேர்தல் சமாதியே.

11. அட்டமா சித்திபரகாயப் பிரவேசம்

பணிந்து எண்திசையும் பரமனை நாடித்
துணிந்து எண் திசையும் தொழுது எம் பிரானை
அணிந்து எண் திசையினும் அட்டமா சித்தி
தணிந்து எண் திசை சென்று தாபித்த வாறே.

பரிசு அறி வானவர் பண்பன் அடி எனத்
துரிசு அற நாடியே தூவெளி கண்டேன்
அரியது எனக்கு இல்லை அட்டமா சித்தி
பெரியது அருள் செய்து பிறப்பு அறுத்தானே.

குரவன் அருளில் குறிவழி மூலன்
பரையின் மணம்மிகு சங்கட்டம் பார்த்துத்
தெரிதரு சாம்பவி கேசரி சேரப்
பெரிய சிவகதி பேர் எட்டாம் சித்தியே.

காயாதி பூதம் கலை கால மாயையில்
ஆயாது அகல அறிவு ஒன்றன் அனாதியே
ஓயாப் பதி அதன் உண்மையைக் கூடினால்
வீயாப் பரகாயம் மேவலும் ஆமே.

இருபதினாயிரத்து எண்ணூறு பேதம்
மருவிய கன்ம மாம் அந்த யோகம்
தரும் இவை காய உழைப்பு ஆகும் தானே
அருமிகு நான்காய் அடங்குமா சித்திக்கே.

மதி தனில் ஈர் ஆறாய் மன்னும் கலையின்
உதயம் அது நால் ஒழிய ஓர் எட்டுப்
பதியும் ஈர் ஆறு ஆண்டு பற்று அறப் பார்க்கில்
திதமான ஈர் ஆறு சித்திகள் ஆமே.

நாடும் பிணி ஆகும் நஞ்சனம் சூழ்ந்தக்கால்
நீடும் கலை கல்வி நீள் மேதை கூர் ஞானம்
பீடு ஒன்றினால் வாயாச் சித்தி பேதத்தின்
நீடும் துரம் கேட்டல் நீள் முடி ஈர் ஆறே.

ஏழ் ஆனதில் சண்ட வாயுவின் வேகி ஆம்
தாழா நடை பல யோசனை சார்ந்திடும்
சூழான ஓர் எட்டில் தோன்றா நரைதிரை
தாழான ஒன் பதிற்றான் பர காயமே.

ஈர் ஐந்தில் பூரித்துத் தியான உருத்திரன்
ஏர் ஒன்று பன் ஒன்றில் ஈர் ஆறாம் எண்சித்தி
சீர் ஒன்று மேல் ஏழ் கீழ் ஏழ் புவிச் சென்று
ஏர் ஒன்று வியாபியாய் நிற்றல் ஈர் ஆறே.

தானே அனுவும் சகத்துத்தன் நொய்ம்மையும்
மானாக் கனமும் பரகாயத்து ஏகமும்
தான் ஆவதும் பரகாயம் சேர் தன்மையும்
ஆனாத உண்மையும் வியாபியும் ஆம் எட்டே.

தாங்கிய தன்மையும் தான் அணுப் பல் உயிர்
வாங்கிய காலத்து மற்று ஓர் குறை இல்லை
ஆங்கே எழுந்தோம் அவற்றுள் எழுந்துமிக்கு
ஓங்கி வர முத்தி முந்தியவாறே.

முந்திய முந்நூற்று அறுபது காலமும்
வந்தது நாழிகை வான் முதலாய் இடச்
சிந்தை செயச் செய மண் முதல் தேர்ந்து அறிந்து
உந்தியுள் நின்று உதித்து எழும் ஆறே.

சித்தம் திரிந்து சிவ மயம் ஆகிய
முத்தம் தெரிந்து உற்ற மோனர் சிவமுத்தர்
சுத்தம் பெறலாம் ஐந்தில் தொடக்கு அற்றோர்
சித்தம் பரத்தில் திரு நடத்தோரே.

ஒத்த இவ் ஒன்பது வாயுவும் ஒத்தன
ஒத்த இவ் ஒன்பதின் மிக்க தனம் செயன்
ஒத்த இவ் ஒன்பதில் ஒக்க இருந்திட
ஒத்த உடலும் உயிரும் இருந்ததே.

இருக்கும் தனம் செயன் ஒன்பது காலில்
இருக்கும் இருநூற்று இருபத்து மூன்று ஆய்
இருக்கும் உடலில் இருந்தில ஆகில்
இருக்கும் உடல் அது வீங்கி வெடித்ததே.



வீங்கும் கழலை சிரங்கொடு குட்டமும்
வீங்கும் வியாதிகள் சோகை பலவதாய்
வீங்கிய வாதமும் கூனும் முடம் அதாய்
வீங்கு வியாதிகள் கண்ணில் மருவியே.



கண்ணில் வியாதி ரோகம் தனஞ் செயன்
கண்ணில் இவ் வாணிகள் காசம் அவன் அல்லன்
கண்ணினில் கூர்மன் கலந்திலன் ஆதலால்
கண்ணினில் சோதி கலந்ததும் இல்லையே.



நாடியின் ஓசை நயனம் இருதயம்
தூடி அளவும் சுடர் விடு சோதியைத்
தேவருள் ஈசன் திருமால் பிரமனும்
ஓவற நின்று அங்கு உணர்ந்து இருந்தாரே.



ஒன்பது வாசல் உடையது ஓர் பிண்டத்துள்
ஒன்பது நாடி உடையது ஓர் இடம்
ஒன்பது நாடி ஒடுங்க வல்லார் கட்கு
ஒன்பது காட்சி இலை பல ஆமே.



ஓங்கிய அங்கிக் கீழ் ஒண் சுழுனைச் செல்ல
வாங்கி இரவி மதி வழி ஓடிடத்
தாங்கி உலகங்கள் ஏழும் தரித்திட
ஆங்கு அது சொன்னோம் அருவழி யோர்க்கே.......



தலைப் பட்ட வாறு அண்ணல் தையலை நாடி
வலைப் பட்ட பாசத்து வன் பிணை மான் போல்
துலைப் பட்ட நாடியைத் தூவழி செய்தால்
விலைக்கு உண்ண வைத்தது ஓர் வித்து அது ஆமே.



ஓடிச் சென்று அங்கே ஒரு பொருள் கண்டவர்
நாடியின் உள் ஆக நாதம் எழுப்புவர்
தேடிச் சென்று அங்கே தேனை முகந்து உண்டு
பாடியுள் நின்ற பகைவரைக் கட்டுமே.



கட்டி இட்ட தாமரை ஞாளத்தில் ஒன்பது
மட்டு இட்ட கன்னியர் மாதுடன் சேர்ந்தனர்
கட்டி இட்டு நின்று களம் கனி ஊடுபோய்ப்
பொட்டு இட்டு நின்று பூரணம் ஆனதே.



பூரண சத்தி எழுமூன்று அறை ஆக
ஏர் அணி கன்னியர் எழு நூற்று அம் சாக்கினார்
நாரணன் நான்முகன் ஆதிய ஐவர்க்கும்
காரணம் ஆகிக் கலந்து விரிந்ததே.



விரிந்து குவிந்து விளைந்த இம் மங்கை
கரந்து உள் எழுந்து கரந்து அங்கு இருக்கில்
பரந்து குவிந்தது பார் முதல் பூதம்
இரைந்து எழு வாயு இடத்தினில் ஒடுங்கே.



இடையொடு பிங்கலை என்னும் இரண்டு
மடை படு வாயுவும் மாறியே நிற்கும்
தடை அவை ஆறு ஏழும் தண் சுடர் உள்ளே
மிடை வளர் மின் கொடி தன்னில் ஒடுங்கே.



ஒடுங்கி ஒருங்கி உணர்ந்து அங்கு இருக்கில்
மடங்கி அடங்கிடும் வாயு அதன் உள்
மடங்கி மடங்கிடும் மன் உயிர் உள்ளே
நடம் கொண்ட கூத்தனும் நாடு கின்றானே.



நாடியின் உள்ளே நாதத் தொனியுடன்
தேடி உடன் சென்று அத் திருவினைக் கைக் கொண்டு
பாடி உள் நின்ற பகைவரைக் கட்டி இட்டு
மாடி ஒரு கை மணி விளக்கு ஆனதே.



அணு ஆதி சித்திகள் ஆனவை கூறில்
அணுவில் அணுவின் பெருமையில் நேர்மை
இணுகாத வேகார் பாகாயம் ஏவல்
அணு அத்தனை எங்கும் தான் ஆதல் என்று எட்டே.



எட்டு ஆகிய சித்தி ஓர் எட்டி யோகத்தால்
கிட்டாப் பிராணனே செய்தால் கிடைத்திடும்
ஒட்டா நடு நாடி மூலத்தன் அல் பானு
விட்டான் மதி உண்ணவும் வரும் மேல் அதே.



சித்திகள் எட்டு அன்றிச் சேர் எட்டியோகத்தால்
புத்திகள் ஆனவை எல்லாம் புலப்படும்
சித்திகள் எண் சித்தி தான் ஆம் திரிபுரை
சத்தி அருள் தரத் தான் உள ஆகுமே.



அணிமா


எட்டு இவை தன்னோடு எழில் பரம் கை கூடப்
பட்டவர் சித்தர் பர லோகம் சேர்தலால்
இட்டம் அது உள்ளே இறுக்கல் பரகாட்சி
எட்டும் வரப்பு இடம் தான் நின்று எட்டுமே.



மந்திரம் ஏறு மதி பானுவை மாற்றிக்
கந்தாய்க் குழியில் கசடு அற வல்லார்க்குத்
தந்து இன்றி நல் காமிய லோகம் சார்வாகும்
அந்த உலகம் அணிமாதி ஆமே.



முடிந்திட்டு வைத்து முயங்கி ஓர் ஆண்டில்
அணிந்த அணிமாகை தான் ஆம் இவனும்
தணிந்த அப் பஞ்சினும் தான் ஒய்யது ஆகி
மெலிந்து அங்கு இருந்திடும் வெல்ல ஒண்ணாதே.



லகிமா


ஆகின்ற அத் தனி நாயகி தன்னுடன்
போகின்ற தத்துவம் எங்கும் புகலது ஆய்ச்
சாகின்ற காலங்கள் தன்வழி நின்றிடின்
மாய்கின்றதை ஆண்டின் மால் அகு ஆகுமே.



மால் அகு ஆகிய மாயனைக் கண்டபின்
தான் ஒளி ஆகித் தழைத்து அங்கு இருந்திடும்
பால் ஒளி ஆகிப் பரந்து எங்கும் நின்றது
மேல் ஒளி ஆகிய மெய்ப் பொருள் காணுமே.



மகிமா


மெய்ப்பொருள் சொல்லிய மெல் இயலாள் உடன்
தன் பொருள் ஆகிய தத்துவம் கூடிடக்
கைப் பொருள் ஆகக் கலந்திடும் ஓர் ஆண்டின்
மைப் பொருள் ஆகும் மகிமா அது ஆகுமே.



ஆகின்ற கால் ஒளி ஆவது கண்டபின்
போகின்ற காலங்கள் போவது இல்லை ஆம்
மேல் நின்ற காலம் வெளி உற நின்றன
தான் நின்ற காலங்கள் தன்வழி ஆகுமே.



தன்வழி ஆகத் தழைத்திடும் ஞானமும்
தன் வழி ஆகத் தழைத்திடும் வையகம்
தன் வழி ஆகத் தழைத்த பொருள் எல்லாம்
தன் வழி தன் அருள் ஆகி நின்றானே.



பிராத்தி


நின்றன தத்துவ நாயகி தன்னுடன்
கண்டன பூதப் படை அவை எல்லாம்
கொண்டவை ஓர் ஆண்டு கூட இருந்திடில்
விண்டதுவே நல்ல பிராத்தி அது ஆகுமே.



கரிமா


ஆகின்ற மின் ஒளி ஆவது கண்டபின்
பாகின்ற பூவில் பரப்பவை காணலாம்
ஏகின்ற காலம் வெளிஉற நின்றது
போகின்ற காலங்கள் போவதும் இல்லைஏ.



போவது ஒன்று இல்லை வருவது தான் இல்லை
சாவது ஒன்று இல்லை தழைப்பது தான் இல்லை
தாமதம் இல்லை தமர் அகத்து இன் ஒளி
யாவதும் இல்லை அறிந்து கொள்வார்க்கே.



அறிந்த பராசத்தி உள்ளே அமரில்
பறிந்தது பூதப் படை அவை எல்லாம்
குவிந்து அவை ஓர் ஆண்டு கூட இருக்கில்
விரிந்தது பரகயம் மேவலும் ஆமே.



பிராகாமியம்


ஆன விளக்கு ஒளி ஆவது அறிகிலர்
மூல விளக்கு ஒளி முன்னே உடையவர்
கான விளக்கு ஒளி கண்டு கொள்வார் கட்கு
மேலை விளக்கு ஒளி வீடு எளிதா நின்றே.



ஈசத்துவம்


நின்ற சதாசிவ நாயகி தன்னுடன்
கண்டன பூதப் படை அவை எல்லாம்
கொண்டவை ஓர் ஆண்டு கூடி இருந்திடில்
பண்டை அவ் ஈசன் தத்துவம் ஆகுமே.



ஆகின்ற சந்திரன் தன் ஒளி ஆய் அவன்
ஆகின்ற சந்திரன் தட்பமும் ஆயிடும்
ஆகின்ற சந்திரன் தன் கலை கூடிடில்
ஆகின்ற சந்திரன் தான் அவன் ஆமே.



தானே படைத்திட வல்லவன் ஆயிடும்
தானே அளித்திட வல்லவன் ஆயிடும்
தானே சங்காரத் தலைவனும் ஆயிடும்
தானே இவன் எனும் தன்மயன் ஆமே.



தன்மை அது ஆகத் தழைத்த கலையின் உள்
பன்மை அது ஆகப் பரந்த ஐம் பூதத்தை
வன்மை அது ஆக மறித்திடில் ஓர் ஆண்டின்
மென்மை அது ஆகிய மெய்ப் பொருள் காணுமே.



வசித்துவம்


மெய்ப் பொருள் ஆக விளைந்தது ஏது எனின்
நல் பொருள் ஆகிய நல்ல வசித்துவம்
கைப் பொருள் ஆகக் கலந்த உயிர்க்கு எல்லாம்
தன் பொருள் ஆகிய தன்மையன் ஆகுமே.



தன்மை அது ஆகத் தழைத்த பகலவன்
மென்மை அது ஆகிய மெய்ப் பொருள் கண்டிடின்
பொன்மை அது ஆகப் புலன்களும் போயிட
நன்மை அது ஆகிய நல்கொடி காணுமே.



நல் கொடி ஆகிய நாயகி தன்னுடன்
அக் கொடி ஆகம் அறிந்திடில் ஓராண்டு
பொன் கொடி ஆகிய புவனங்கள் போய்வரும்
கல் கொடி ஆகிய காமுகன் ஆமே.



காமரு தத்துவம் ஆனது வந்தபின்
பூமரு கந்தம் புவனம் அது ஆயிடும்
மா மரு உன் இடை மெய்த் தடுமானன் ஆய்
நா மருவும் ஒளி நாயகம் ஆனதே.



நாயகம் ஆகிய நல் ஒளி கண்டபின்
தாயகம் ஆகத் தழைத்து அங்கு இருந்திடும்
போய் அகம் ஆன புவனங்கள் கண்டபின்
பேய் அகம் ஆகிய பேர் ஒளி காணுமே.



பேர் ஒளி ஆகிய பெரிய அவ் வேட்டையும்
பார் ஒளி ஆகப் பதைப்பு அறக் கண்டவன்
தார் ஒளி ஆகத் தரணி முழுதும் ஆம்
ஓர் ஒளி ஆகிய கால் ஒளி காணுமே.



காலோடு உயிரும் கலக்கும் வகை சொல்லில்
கால் அது அக்கொடி நாயகி தன்னுடன்
கால் அது ஐஞ்ஞூற்று ஒரு பத்து மூன்றையும்
கால் அது வேண்டிக் கொண்ட இவ் ஆறே.



ஆறது ஆகும் அமிர்தத் தலையின் உள்
ஆறது ஆயிர முந்நூற்று தொடைஞ்சு உள
ஆறது ஆயிரம் ஆகும் அருவழி
ஆறது ஆக வளர்ப்பது இரண்டே.



இரண்டின் மேலே சதா சிவ நாயகி
இரண்டது கால் கொண்டு எழுவகை சொல்லில்
இரண்டது ஆயிரம் ஐம்பதோடு ஒன்றாய்த்
திரண்டது காலம் எடுத்ததும் அஞ்சே.



அஞ்சுடன் அஞ்சு முகம் உள நாயகி
அஞ்சுடன் அஞ்சு அது ஆயுதம் ஆவது
அஞ்சு அது அன்றி இரண்டு அது ஆயிரம்
அஞ்சது காலம் எடுத்துளும் ஒன்றே.



ஒன்று அது ஆகிய தத்துவ நாயகி
ஒன்று அது கால் கொண்டு ஊர்வகை சொல்லிடில்
ஒன்று அது வென்றி கொள் ஆயிரம் ஆயிரம்
ஒன்று அது காலம் எடுத்துளும் முன்னே.



முன் எழும் அக் கலை நாயகி தன்னுடன்
முன் உறு வாயு முடிவகை சொல்லிடின்
முன் உறும் ஐம்பத்து ஒன்றுடன் அஞ்சும் ஆய்
முன் உறு வாயு முடி வகை ஆமே.



ஆய் வரும் அத்தனி நாயகி தன்னுடன்
ஆய் வரும் வாயு அளப்பது சொல்லிடில்
ஆய் வரும் ஐஞ்ஞூற்று முப்பதோடு ஒன்பது
மாய் வரு வாயு வளப்பு உள் இருந்தே



இருநிதி ஆகிய எந்தை இடத்து
இருநிதி வாயு இயங்கு நெறியில்
இருநூற்று முப்பத்து மூன்று உடன் அஞ்சாய்
இருநிதி வாயு இயங்கும் எழுத்தே.



எழுகின்ற சோதியுள் நாயகி தன் பால்
எழுகின்ற வாயு இடம் அது சொல்லில்
எழுநூற்று இருபத்து ஒன்பான் அது நாலாய்
எழுந்து உடன் அங்கி இருந்தது இவ்வாறே.



ஆறு அது கால் கொண்டு இரதம் விளைத்திடும்
ஏழ் அது கால் கொண்டு இரட்டி இறக்கிட
எட்டு அது கால் கொண்டிட வகை ஒத்தபின்
ஒன்பது மாநிலம் ஒத்தது வாயுவே.



சந்திரன் சூரியன் தற்பரன் தாணுவில்
சந்திரன் தானும் தலைப்படும் தன்மையைச்
சந்தியிலே கண்டு தான் ஆம் சக முகத்து
உந்திச் சமாதி யுடை ஒளியோகியே.



அணங்கு அற்றம் ஆதல் அரும்சன நீவல்
வணங்கு உற்ற கல்விமா ஞானம் மிகுத்தல்
சுணங்கு உற்ற வாயர் சித்தி தூரம் கேட்டல்
நுணங்கு அற்று இரோதல் கால் வேகத்து நுந்தலே.



மரணம் சரை விடல் வண்பர காயம்
இரணம் சேர் பூமி இறந்தோர்க்கு அளித்தல்
அரணன் திருஉற வாதன் மூ ஏழாங்
கரன் உறு கேள்வி கணக்கு அறிந்தேனே.



ஓதம் ஒலிக்கும் உலகை வலம் வந்து
பாதங்கள் நோவ நடந்தும் பயன் இல்லை
காதலில் அண்ணலைக் காண இனியவர்
நாதன் இருந்த நகர் அறிவாரே.



மூல முதல் வேதா மால் அரன் முன் நிற்கக்
கோலிய ஐம் முகன் கூறப் பரவிந்து
சாலப் பரநாதம் விந்துத் தனி நாதம்
பாலித்த சத்தி பரை பரன் பாதமே.



ஆதார யோகத்து அதி தேவொடும் சென்று
மீது ஆன தற்பரை மேவும் பரன் ஒடு
மேதாதி ஈர் எண் கலை செல்லம் மீது ஒளி
ஓதா அசிந்த மீது ஆனந்த யோகமே.



மதியமும் ஞாயிறும் வந்து உடன் கூடித்
துதி செய்பவர் அவர் தொல் வானவர்கள்
விதி அது செய்கின்ற மெய் அடியார்க்குப்
பதி அது காட்டும் பரமன் நின்றானே.



கட்ட வல்லார்கள் கரந்து எங்கும் தான் ஆவர்
மட்டு அவிழ் தாமரை உள்ளே மணம் செய்து
பொட்டு எழக் குத்திப் பொறி எழத் தண்டு இட்டு
நட்டு அறிவார்க்கு நமன் இல்லை தானே.



12. கலைநிலை


காதல் வழி செய்த கண் நுதல் அண்ணலைக்
காதல் வழி செய்து கண் உற நோக்கிடில்
காதல் வழி செய்து கங்கை வழிதரும்
காதல் வழி செய்து காக்கலும் ஆமே.



காக்கலும் ஆகும் கரணங்கள் நான்கையும்
காக்கலும் ஆகும் கலை பதினாரையும்
காக்கலும் ஆகும் கலந்த நல் வாயுவும்
காக்கலும் ஆகும் கருத்து உற நில்லே.



நிலை பெற நின்றது நேர்தரு வாயு
சிலை பெற நின்றது தீபமும் ஒத்து
கலை வழி நின்ற கலப்பை அறியில்
மலைவற ஆகும் வழி இது ஆமே.



புடை ஒன்றி நின்றிடும் பூதப் பிரானை
மடை ஒன்றி நின்றிட வாய்த்த வழியும்
சடை ஒன்றி நின்ற அச் சங்கர நாதன்
விடை ஒன்றில் ஏறியே வீற்று இருந்தானே.



இருக்கின்ற காலங்கள் ஏதும் அறியார்
பெருக்கின்ற காலப் பெருமையை நோக்கி
ஒருக்கின்ற வாயு ஒளி பெற நிற்கத்
தருக்கு ஒன்றி நின்றிடும் சாதகன் ஆமே.



சாதகம் ஆன அத்தன்மையை நோக்கியே
மாதவம் ஆன வழிபாடு செய்திடும்
போதகம் ஆகப் புகல் உறப் பாய்ச்சினால்
வேதகம் ஆக விளைந்தது கிடக்குமே.



கிடந்தது தானே கிளர் பயன் மூன்று
நடந்தது தானே உள் நாடியுள் நோக்கிப்
படர்ந்தது தானே பங்கயம் ஆகத்
தொடர்ந்தது தானே அச் சேதியுள் நின்றே.



தானே எழுந்த அத் தத்துவ நாயகி
ஊனே வழி செய்து எம் உள்ளே இருந்திடும்
வானோர் உலகு ஈன்ற அம்மை மதித்திடத்
தேனே பருகிச் சிவ ஆலயம் ஆகுமே.



திகழும் படியே செறிதரு வாயு
அழியும் படியை அறிகிலர் ஆரும்
அழியும் படியை அறிந்தபின் நந்தி
திகழ்கின்ற வாயுவைச் சேர்தலும் ஆமே.



சோதனை தன்னில் துரிசறக் காணலாம்
நாதனும் நாயகி தன்னில் பிரியும் நாள்
சாதனம் ஆகும் குருவை வழிபட்டு
மாதனம் ஆக மதித்துக் கொள்ளீரே.



ஈர் ஆறு கால் கொண்டு எழுந்த புரவியைப்
பேராமல் கட்டிப் பெரிது உண்ண வல்லீரேல்
நீர் ஆயிரமும் நிலம் ஆயிரத்து ஆண்டும்
பேராது காயம் பிரான் நந்தி ஆணையே.



ஓசையில் ஏழும் ஒளியின்கண் ஐந்தும்
நாசியின் மூன்றும் நாவில் இரண்டும்
தேசியும் தேசனும் தன்னில் பிரியும் நாள்
மாசு அறு சோதி வகுத்து வைத்தானே.



13. காரியசித்தி உபாயம்


உடம்பார் அழியில் உயிரார் அழிவர்
திடம்பட மெய்ஞானம் சேரவும் மாட்டார்
உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே
உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே.



உடம்பினை முன்னம் இழுக்கு என்று இருந்தேன்
உடம்பினுக்கு உள்ளே உறு பொருள் கண்டேன்
உடம்பு உளே உத்தமன் கோயில் கொண்டான் என்று
உடம்பினை யான் இருந்து ஓம்பு கின்றேனே.



சுழற்றிக் கொடுக்கவே சுத்திக் கழியும்
கழற்றி மலத்தைக் கமலத்தைப் பூரித்து
உழற்றிக் கொடுக்கும் உபாயம் அறிவார்க்கு
அழற்றித் தவிர்ந்து உடல் அஞ்சனம் ஆமே.



அஞ்சனம் போன்று உடலை அறு மந்தியில்
வஞ்சக வாத மறுமத் தியானத்தில்
செம் சிறு காலையில் செய்திடல் பித்து அறும்
நஞ்சு அறச் சொன்னோம் நரை திரை நாசமே.



மூன்று மடக்கு உடைப் பாம்பு இரண்டு எட்டுள்
வேன்ற இயந்திரம் பன்னிரண்டு அங்குலம்
நான்ற இம் முட்டை இரண்டையும் கட்டி இட்டு
ஊன்றி இருக்க உடம்பு அழியாதே.



நூறும் அறுபதும் ஆறும் வலம் வர
நூறும் அறுபதும் ஆறும் இடம் வர
நூறும் அறுபதும் ஆறும் எதிர் இட
நூறும் அறுபதும் ஆறும் புகுவரே.



சத்தியார் கோயில் இடம் வலம் சாதித்தான்
மத்தியானத் திலே வாத்தியம் கேட்கலாம்
தித் தித்த கூத்தும் சிவனும் வெளிப்படும்
சத்தியம் சொன்னோம் சதா நந்தி ஆணையே.



திறத் திறம் விந்து திகழும் ஆகாரம்
உறப் பெறவே நினைந்து ஓதும் சகார
மறிப்பது மந்திர மன்னிய நாதம்
மறப் பெற யோகிக்கு அற நெறி ஆமே.



உந்திச் சுழியின் உடன் நேர் பிராணனைச்
சிந்தித்து எழுப்பிச் சிவ மந்திரத்தினால்
முந்தி முகட்டின் நிறுத்தி அபானனைச்
சிந்தித்து எழுப்பச் சிவன் அவன் ஆமே.



மாறா மலக் குதம் தன் மேல் இரு விரல்
கூறா இலிங்கத்தின் கீழே குறிக் கொண்மின்
ஆறா உடம்பு இடை அண்ணலும் அங்கு உளன்
கூறா உபதேசம் கொண்டது காணுமே.



நீல நிறன் உடை நேர் இழையா ளொடும்
சாலவும் புல்லிச் சதம் என்று இருப்பார்க்கு
ஞாலம் அறிய நரை திரை மாறிடும்
பாலனும் ஆவர் பரா நந்தி ஆணையே.



அண்டம் சுருங்கில் அதற்கு ஓர் அழிவு இல்லை
பிண்டம் சுருங்கில் பிராணன் நிலை பெறும்
உண்டி சுருங்கில் உபாயம் பல உள
கண்டம் கறுத்த கபாலியும் ஆமே.



பிண்டத்து உள் உற்ற பிழக் கடை வாசலை
அண்டத்து உள் உற்று அடுத்து அடுத்து ஏகிடில்
வண்டிச் சிக்கு மலர்க் குழல் மாதரார்
கண்டிச் சிக்கு நல் காயமும் ஆமே.



சுழலும் பெரும் கூற்றுத் தொல்லை முன் சீறி
சுழலும் இரத்தத்து உள் அங்கி உள் ஈசன்
கழல் கொள் திருவடி காண்கு உறில் ஆங்கே
நிழல் உளுந்து எற்றுளும் நிற்றலும் ஆமே.



நான் கண்ட வன்னியும் நாலு கலை ஏழும்
தான் கண்ட வாயுச் சரீரம் முழுதொடும்
ஊன் கண்டு கொண்ட உணர்வும் மருந்து ஆக
மான் கன்று நின்று வளர்கின்ற வாறே.



ஆகும் சன வேத சத்தியை அன்பு உற
நீ கொள்ளின் நெல்லின் வளர்கின்ற நேர்மையை
பாகு படுத்திப் பல் கோடி களத்தினால்
ஊழ் கொண்ட மந்திரம் தன்னால் ஒடுங்கே.



14. கால சக்கரம்


மதி வட்டம் ஆக வரை ஐந்து நாடி
இது விட்டு இங்கு ஈராறு அமர்ந்த அதனால்
பதி வட்டத்துள் நின்று பாலிக்குமாறு
மது விட்டுப் போம் ஆறு மாயல் உற்றேனே.



உற்ற அறிவு ஐந்தும் உணர்ந்த அறிவு ஆறும் ஏழும்
கற்ற அறிவு எட்டும் கலந்த அறிவு ஒன்பதும்
பற்றிய பத்தும் பலவகை நாழிகை
அற்றது அறியாது அழிகின்ற வாறே.



அழிகின்ற ஆண்டு அவை ஐ ஐஞ்சு மூன்று
மொழிகின்ற முப்பத்து மூன்று என்பது ஆகும்
கழிகின்ற கால் அறுபத்திரண்டு என்ப
எழுகின்ற ஈர் ஐம்பத்து எண் அற்று இருந்ததே.



திருந்து தினம் அத் தினத்தினொடு நின்று
இருந்து அறி நாள் ஒன்று இரண்டு எட்டு மூன்று
பொருந்திய நாளொடு புக்கு அறிந்து ஓங்கி
வருந்துதல் இன்றி மனை புகல் ஆமே.



மனை புகு வீரும் மகத்து இடை நாடி
என இருபத்து அஞ்சும் ஈர் ஆறு அதனால்
தனை அறிந்து ஏறட்டுத்தற் குறி ஆறு
வினை அறி ஆறு விளங்கிய நாலே.



நாலும் கடந்தது நால்வரும் நால் ஐந்து
பாலம் கடந்தது பத்துப் பதினைந்து
கோலம் கடந்த குணத்து ஆண்டு மூ இரண்டு
ஆலம் கடந்தது ஒன்று ஆர் அறிவாரே.



ஆறும் இருபதுக்கு ஐ அஞ்சு மூன்றுக்கும்
தேறும் இரண்டும் இருபத்தொடு ஆறு இவை
கூறு மதி ஒன்றினுக்கு இருபத்து ஏழு
வேறு பதி அம் கண் நாள் விதித்தானே.



விதித்த இருபத்து எட்டொடு மூன்று அறையாகத்
தொகுத்து அறி முப்பத்து மூன்று தொகுமின்
பகுத்து அறி பத்து எட்டும் பாராதி கணால்
உதித்து அறி மூன்று இரண்டு ஒன்றின் முறையே.



முறை முறை ஆய்ந்து முயன்றிலர் ஆகில்
இறை இறை யார்க்கும் இருக்க அரிது
மறை அது காரணம் மற்று ஒன்றும் இல்லை
பறை அறையாது பணிந்து முடியே.



முடிந்தது அறியார் முயல்கின்ற மூர்க்கர்
இடிஞ்சில் இருக்க விளக்கு எரி கொண்டு
கடிந்தனன் மூளக் கதுவ வல்லார்க்கு
நடந்திடும் பாரினில் நண்ணலும் ஆமே.



நண்ணு சிறு விரல் நாண் ஆக மூன்றுக்கும்
பின்னிய மார்பு இடைப் பேராமல் ஒத்திடும்
சென்னியின் மூன்றுக்கும் சேரவே நின்றிடும்
உன்னி உணர்ந்திடும் ஓவியம் தானே.



ஓவியம் ஆன உணர்வை அறிமின்கள்
பாவிகள் இத்தின் பயன் அறிவார் இல்லை
தீவினையாம் உடன் மண்டலம் மூன்றுக்கும்
பூவில் இருந்திடும் புண்ணியத் தண்டே.



தண்டுடன் ஓடித் தலைப் பெய்த யோகிக்கு
மண்டலம் மூன்றும் மகிழ்ந்து உடல் ஒத்திடும்
கண்டவர் கண்டனர் காணார் வினைப்பயன்
பிண்டம் பிரியப் பிணங்கு கின்றாரே.



பிணங்கி அழிந்திடும் பேர் அது கேள் நீ
அணங்கு உடன் ஆதித்தன் ஆறு விரியின்
வணங்கு உடனே வந்த வாழ்வு குலைந்து
சுணங்கனுக்கு ஆகச் சுழல்கின்ற வாறே.



சுழல் கின்ற ஆறின் துணை மலர் காணான்
தழல் இடைப் புக்கிடும் தன் உள் இலாமல்
கழல் கண்டு போம் வழி காண வல்லார்க்குக்
குழல் வழி நின்றிடும் கூத்தனும் ஆமே.



கூத்தன் குறியில் குணம் பல கண்டவர்
சாத்திரம் தன்னைத் தலைப் பெய்து நிற்பர்கள்
பார்த்துஇருந்து உள்ளே அனு போகம் நோக்கிடில்
ஆத்தனும் ஆகி அலர்ந்து இரும் ஒன்றே.



ஒன்றில் வளர்ச்சி உலப்பு இலி கேள் இனி
நன்று என்று மூன்றுக்கு நாள் அது சென்றிடும்
சென்றிடும் முப்பதும் சேர இருந்திடில்
குன்று இடைப் பொன் திகழ் கூத்தனும் ஆமே.



கூத்தவன் ஒன்றிடும் கூர்மை அறிந்து அங்கே
ஏத்துவர் பத்தினில் எண்திசை தோன்றிடப்
பார்த்து மகிழ்ந்து பதுமரை நோக்கிடில்
சாத்திடு நூறு தலைப் பெய்யலாமே.



சாத்திடும் நூறு தலைப் பெய்து நின்றவர்
காத்து உடல் ஆயிரம் கட்டு உறக் காண்பர்கள்
சேர்த்து உடல் ஆயிரம் சேர இருந்தவர்
மூத்து உடன் கோடி உகம் அது ஆமே.



உகம் கோடி கண்டும் ஒசிவற நின்று
அகம் கோடி கண்டு உள் அலறக் காண்பர்கள்
சிவம் கோடி விட்டுச் செறிய இருந்து அங்கு
உகம் கோடி கண்டு அங்கு உயர் உறுவாரே.



உயர் உறுவார் உலகத்தொடும் கூடிப்
பயன் உறுவார் பலர் தாம் அறியாமல்
செயல் உறுவார் சிலர் சிந்தை இலாமல்
கயல் உறு கண்ணியைக் காண கிலாரே.



காண இலாதார் கழிந்து ஓடிப் போவர்கள்
காண இலாதார் நயம் பேசி விடுவார்கள்
காண இலாதார் கழிந்த பொருள் எலாம்
காண இலாமல் கழிகின்ற வாறே.



கழிகின்ற அப்பொருள் காண இலாதார்
கழிகின்ற அப் பொருள் காணலும் ஆகும்
கழிகின்ற உள்ளே கருத்து உற நோக்கில்
கழியாத அப்பொருள் காணலும் ஆமே.



கண்ணன் பிறப்பு இலி காண் நந்தியாய் உள்ளே
எண்ணும் திசையுடன் ஏகாந்தன் ஆயிடும்
திண் என்று இருக்கும் சிவகதியாய் நிற்கும்
நண்ணும் பதம் இது நாட வல்லார் கட்கே.



நாட வல்லார்க்கு நமன் இல்லை கேடு இல்லை
நாட வல்லார்கள் நரபதியாய் நிற்பர்
தேட வல்லார்கள் தெரிந்த பொருள் இது
கூட வல்லார் கட்குக் கூறலும் ஆமே.



கூறும் பொருளில் தகார உகாரங்கள்
தேறும் பொருள் இது சிந்தை உள் நின்றிடக்
கூறும் மகாரம் குழல் வழி ஓடிட
ஆறும் அமர்ந்திடும் அண்ணலும் ஆமே.



அண்ணல் இருப்பிடம் ஆரும் அறிகிலர்
அண்ணல் இருப்பிடம் ஆய்ந்து கொள்வார் களுக்கு
கண்ணல் அழிவு இன்றி உள்ளே அமர்ந்திடும்
அண்ணலைக் காணில் அவன் இவன் ஆகுமே.



அவன் இவன் ஆகும் பரிசு அறிவார் இல்லை
அவன் இவன் ஆகும் பரிசு அது கேள் நீ
அவன் இவன் ஓசை ஒளியின் உள் ஒன்றிடும்
அவன் இவன் வட்டம் அது ஆகி நின்றானே.



வட்டங்கள் ஏழும் மலர்ந்திடும் உம் உளே
சிட்டன் இருப்பிடம் சேர அறிகிலீர்
ஒட்டி இருந்து உள் உபாயம் உணர்ந்திடக்
கட்டி இருப்பிடம் காணலும் ஆகுமே.



காணலும் ஆகும் பிரமன் அரி என்று
காணலும் ஆகும் கறைக் கண்டன் ஈசனைக்
காணலும் ஆகும் சதா சிவ சத்தியும்
காணலும் ஆகும் கலந்து உடன் வைத்ததே.



15. ஆயுள் பரீட்சை


வைத்த கை சென்னியில் நேரிதாய்த் தோன்றிடில்
உத்தமம் மிக்கிடில் ஓர் ஆறு திங்கள் ஆம்
அத்தம் மிகுத்து இட்டு இரட்டியது ஆயிடில்
நித்தல் உயிர்க்கு ஒரு திங்களில் ஓசையே.



ஓசையும் ஈசனும் ஒக்கும் உணர்வின் கண்
ஓசை இறந்தவர் ஈசனை உள் குவர்
ஓசை இறந்தவர் நெஞ்சின் உள் ஈசனும்
ஓசை உணர்ந்த உணர்வு இது ஆமே.



ஆமே அழிகின்ற வாயுவை நோக்கிடில்
நாமே உறைகின்ற நன்மை அளித்திடும்
பூ மேல் உறைகின்ற போதகம் வந்திடும்
தாமேல் உலகில் தலைவனும் ஆமே.



தலைவனிடம் வலம் சாதிப்பார் இல்லை
தலைவனிடம் வலம் ஆயிடில் தையல்
தலைவனிடம் வலம் தன் வழி அஞ்சில்
தலைவனிடம் வலம் தன் வழி நூறே.



ஏறிய வானில் எண்பது சென்றிடும்
தேறிய ஏழில் சிறக்கும் வகை எண்ணில்
ஆறு ஒரு பத்தாய் அமர்ந்த இரண்டையும்
தேறியே நின்று தெளி இவ் வகையே.



இவ்வகை எட்டும் இடம் பெற ஓடிடில்
அவ் வகை ஐம்பதே என்ன அறியலாம்
செவ் வகை ஒன்பதும் சேரவே நின்றிடின்
மூவ் வகை ஆம் அது முப்பத்து மூன்றே.



மும் மூன்றும் ஒன்றும் முடிவு உற நின்றிடில்
எண் மூன்றும் நாலும் இடவகையாய் நிற்கும்
ஐம் மூன்றும் ஓடி அகலவே நின்றிடில்
பன் மூன்றொடு ஈர் ஆறு பார்க்கலும் ஆமே.



பார்க்கலும் ஆகும் பகல் முப்பதும் ஆகில்
ஆக்கலும் ஆகும் அவ்வாறு இரண்டு உள் இட்டுப்
போக்கலும் ஆகும் புகல் அற ஒன்று எனில்
தேக்கலும் ஆகும் திருந்திய பத்தே.



ஏ இரு நாளும் இயல்பு உற ஓடிடில்
பாய் இரு நாளும் பகை அற நின்றிடும்
தேய் உற மூன்றும் திகழவே நின்றிடில்
ஆய் உரு ஆறு என்று அளக்கலும் ஆமே.



அளக்கும் வகை நாலும் அவ்வழியே ஓடில்
விளக்கும் ஒரு நாலும் மெய்ப் பட நிற்கும்
துளக்கும் வகை ஐந்தும் தூய் நெறி ஓடில்
களக்கம் அற மூன்றில் காணலும் ஆமே.



காணலும் ஆகும் கருதிய பத்து ஓடில்
காணலும் ஆகும் கலந்த இரண்டையும்
காணலும் ஆகும் கலப்பு அற மூ ஐந்தேல்
காணலும் ஆகும் கருத்து உற ஒன்றே.



கருதும் இருபதில் காண ஆறு ஆகும்
கருதும் ஐ ஐந்தில் காண்பது மூன்று ஆம்
கருதும் இருபது உடன் ஆறு காணில்
கருதும் இரண்டு எனக் காட்டலும் ஆமே.



காட்டலும் ஆகும் கலந்து இருபத்து ஏழில்
காட்டலும் ஆகும் கலந்து எழும் ஒன்று எனக்
காட்டலும் ஆகும் கலந்து இரு பத்து எட்டில்
காட்டலும் ஆகும் கலந்த ஈர் ஐந்தே.



ஈர் ஐந்தும் ஐந்தும் இரு மூன்று எட்டுக்கும்
பார் அஞ்சி நின்ற பகை பத்து நாளாகும்
வாரம் செய்கின்ற வகை ஆறு அஞ்சாம் ஆகில்
ஓர் அஞ்சொடு ஒன்று என ஒன்று நாளே.



ஒன்றிய நாள்கள் ஒரு முப்பத்து ஒன்று ஆகில்
கன்றிய நாளும் கருத்து உற மூன்று ஆகும்
சென்று உயிர் நால் எட்டும் சேரவே நின்றிடின்
மன்று இயல்பாகும் மனையில் இரண்டே.



மனையில் ஒன்று ஆகும் மாதம் மும் மூன்றும்
சுனையில் ஒன்று ஆகத் தொனித்தனன் நந்தி
வினை அற ஓங்கி வெளிசெய்து நின்றால்
தனை உற நின்ற தலைவனும் ஆமே.



ஆரும் அறியார் அளக்கின்ற வன்னியை
ஆரும் அறியார் அளக்கின்ற வாயுவை
ஆரும் அறியார் அழிகின்ற அப்பொருள்
ஆரும் அறியார் அறிவு அறிந்தேனே.



அறிவது வாயுவொடு அடைந்து அறிவு ஆய
அறிவாவது தான் உலகு உயிர் அத்தின்
பிறிவு செய்யா வகை பேணி உள் நாடில்
செறிவது நின்று திகழும் அதுஏ.



அது அருளும் மருள் ஆன உலகம்
பொது அருளும் புகழாளர்க்கு நாளும்
மது அருளும் மலர் மங்கையர் செல்வி
இது அருள் செய்யும் இறையவன் ஆமே.



பிறப்பது சூழ்ந்த பெருந்தகை நந்தி
குறிப்பது கூடிய கோலக் குரம்பைப்
பழப்பதி ஆவது பற்று அறும் பாசம்
அழப்படி செய்வார்க்கு அகலும் மதியே.



16. வாசசூலம்


வாரத்தில் சூலம் வரும் வழி கூறுங்கால்
நேர் ஒத்த திங்கள் சனி கிழக்கே ஆகும்
பார் ஒத்த சேய் புதன் உத்தரம் பானு நாள்
நேர் ஒத்த வெள்ளி குடக்கு ஆக நிற்குமே.



தெக்கணம் ஆகும் வியாழத்துச் சேர் திசை
அக்கணி சூலமும் ஆம் இடம் பின் ஆகில்
துக்கமும் இல்லை வலம் முன்னே தோன்றிடின்
மிக்கது மேல் வினை மேல் மேல் விளையுமே.



17. வாரசரம்


வெள்ளி வெண் திங்கள் விளங்கும் புதனிடம்
ஒள்ளிய மந்தன் இரவி செவ்வாய் வலம்
வள்ளிய பொன்னே வளரும் பிறை இடம்
தெள்ளிய தேய் பிறை தான் வலம் ஆமே.



வெள்ளி வெண் திங்கள் விளங்கும் புதன் மூன்றும்
தள்ளி இடத்தே தயங்குமே யாம் ஆகில்
ஒள்ளிய காயத்துக்கு ஊனம் இலை என்று
வள்ளல் நமக்கு மகிழ்ந்து உரைத்தானே.



செவ்வாய் வியாழன் சனி ஞாயிறு என்னும்
இவ்வாறு அறிகின்ற யோகி இறைவனே
ஒவ்வாத வாயு வலத்துப் புரிய விட்டு
அவ்வாறு அறிவார்க்கு அவ் ஆனந்தம் ஆமே.



மாறி வரும் இருபான் மதி வெய்யவன்
ஏறி இழியும் இடைபிங்கலை இடை
ஊறும் உயிர் நடுவே உயிர் இருக்கு இரந்து
ஏறி அறிமின் தெரிந்து தெளிந்தே.



உதித்து வலத்து இடம் போகின்ற போது
அதிர்த்து அஞ்சி ஓடுதல் ஆம் அகன்றாரும்
உதித்தது வே மிக ஓடிடும் ஆகில்
உதித்த இவ் ராசி உணர்ந்து கொள் உற்றே.



நடுவு நில்லாமல் இடம் வலம் ஓடி
அடுகின்ற வாயுவை அந்தணன் கூடி
இடுகின்ற வாறு சென்றின் பணி சேர
முடிகின்ற தீபத்தின் முன் உண்டு என்றானே.



ஆயும் பொருளும் அணி மலர் மேல் அது
வாயு விதமும் பதினாறு உள வலி
போய மனத்தைப் பொருகின்ற ஆதாரம்
ஆயுவும் நாளும் முகூர்த்தமும் ஆமே.



18. அமுரிதாரணை


உடலில் கிடந்த உறுதிக் குடிநீர்க்
கடலில் சிறு கிணறு ஏற்றம் இட்டால் ஒக்கும்
உடலில் ஒருவழி ஒன்றுக்கு இறைக்கில்
நடலைப் படாது உயிர் நாடலும் ஆமே.



தெளிதரும் இந்தச் சிவ நீர் பருகில்
ஒளிதரும் ஓர் ஆண்டில் ஊனம் ஒன்று இல்லை
வளி உறும் எட்டின் மனமும் ஒடுங்கும்
களிதரும் காயம் கனகம் அது ஆமே.



நூறு மிளகு நுகரும் சிவத்தின் நீர்
மாறும் இதற்கு மருந்து இல்லை மாந்தர்கள்
தேறில் இதனைத் தெளி உச்சி அப்பிடின்
மாறும் இதற்கு மறு மயிர் ஆமே.



கரை அருகே நின்ற கானல் உவரி
வரை வரை என்பவர் மதி இலா மாந்தர்
நுரை திரை நீக்கி நுகர வல்லார்க்கு
நரை திரை மாறும் நமனும் அங்கு இல்லையே.



அளக நல் நுதலாய் ஓர் அதிசயம்
களவு காயம் கலந்த இந் நீரிலே
மிளகு நெல்லியும் மஞ்சளும் வேம்பு இடில்
இளகும் மேனி இருளும் கபாலமே.



வீர மருந்து என்றும் விண்ணோர் மருந்து என்றும்
நாரி மருந்து என்றும் நந்தி அருள் செய்தான்
ஆதி மருந்து என்று அறிவார் அகல் இடம்
சோதி மருந்து இது சொல்ல ஒண்ணாதே.



19. கேசரி யோகம்


கட்டக் கழன்று கீழ் நான்று வீழாமல்
அட்டத்தைக் கட்டி அடுப்பை அணை கோலி
விட்டத்தைப் பூட்டி மேல் பையைத் தாள் கோத்து
நட்டம் இருக்க நரன் இல்லை தானே.



வண்ணான் ஒலிக்கும் சதுரப் பலகை மேல்
கண்ணாறு மோழை படாமல் கரை கட்டி
விண் ஆறு பாய்ச்சிக் குளத்தை நிரப்பினால்
அண்ணாந்து பார்க்க அழுக்கு அற்ற வாறே.



இடக்கை வலக்கை இரண்டையும் மாற்றித்
துதிக்கையால் உண்பார்க்குச் சேரவும் வேண்டாம்
உறக்கத்தை நீக்கி உணர வல்லார்கட்கு
இறக்கம் வேண்டாம் இருக்கலும் ஆமே.



ஆய்ந்து உரை செய்யில் அமுதம் நின்று ஊறிடும்
வாய்ந்து உரை செய்யும் வருகின்ற காலத்து
நீந்து உரை செய்யில் நிலா மண்டலம் அதாய்ப்
பாய்ந்து உரை செய்தது பாலிக்கு மாறே.



நாவின் நுனியை நடுவே சிவிறிடில்
சீவனும் அங்கே சிவனும் உறைவிடம்
மூவரும் முப்பத்து மூவரும் தோன்றுவர்
சாவதும் இல்லை சத கோடி ஊனே.



ஊன் ஊறல் பாயும் உயர் வரை உச்சி மேல்
வான் ஊறல் பாயும் வகை அறிவார் இல்லை
வான் ஊறல் வகை அறி வாளர்க்குத்
தேன் ஊறல் உண்டு தெளியலும் ஆமே.



மேலை அண் நாவில் விரைந்து இருகால் இடில்
காலனும் இல்லை கதவும் திறந்திடும்
ஞாலம் அறிய நரை திரை மாறிடும்
பாலனும் ஆவான் பரா நந்தி ஆணையே.



நந்தி முதல் ஆக நாம் மேலே ஏறிட்டுச்
சந்தித்து இருக்கில் தரணி முழுது ஆளும்
பந்தித்து இருக்கும் பகலோன் வெளியாகச்
சிந்தித்து இருப்பவர் தீவினையாளரே.



தீவினை ஆடத் திகைத்து அங்கு இருந்தவர்
நாவினை நாடின் நமனுக்கு இடம் இல்லை
பாவினை நாடிப் பயன் அறக் கண்டவர்
தேவினை ஆடிய தீம் கரும்பு ஆமே.



தீம் கரும்பு ஆகவே செய் தொழில் உள்ளவர்
ஆம் கரும்பு ஆக அடைய நாவு ஏறிட்டு
கோங் கரும்பு ஆகிய கோணை நிமிர்த்திட
ஊன் கரும்பு ஆகியே ஊன் நீர் வருமே.



ஊன் நீர் வழியாக உள் நாவை ஏறிட்டுத்
தேன் நீர் பருகிச் சிவாய நம என்று
கான் நீர் வரும் வழி கங்கை தருவிக்கும்
வான் நீர் வரும் வழி வாய்ந்து அறிவீரே.



வாய்ந்து அறிந்து உள்ளே வழிபாடு செய்தவர்
காய்ந்து அறிவு ஆகக் கருணை பொழிந்திடும்
பாய்ந்து அறிந்து உள்ளே படிக் கதவு ஒன்று இட்டுக்
கூய்ந்து அறிந்து உள் உறை கோயிலும் ஆமே.



கோயிலின் உள்ளே குடி செய்து வாழ்பவர்
தாயினும் நல்லார் தரணி முழுதுக்கும்
காயினும் நல்லவர் காய்ந்தவர் தம் உளும்
தீயினும் தீயரத் தீவினை யாளர்க்கே.



தீவினை யாளர் தம் சென்னியில் உள்ளவன்
பூவினை யாளர் தம் பொன் பதி ஆனவன்
பாவினை யாளர் தம் பாகவத்து உள்ளவன்
மாவினை யாளர் தம் மதியில் உள்ளானே.



மதியின் எழும் கதிர் போலப் பதினாறாய்ப்
பதிமனை நூறு நூற்று இருபத்து நாலாய்க்
கதி மனை உள்ளே கணைகள் பரப்பி
எதிர் மலையாமல் இருந்தனன் தானே.



இருந்தனள் சத்தியும் அக்கலை சூழ
இருந்தனள் கன்னியும் அந் நடு ஆக
இருந்தனள் மான் நேர் முக நிலவார
இருந்தனள் தானும் அமுதம் பொழிந்தே.



பொழிந்த இரு வெள்ளி பொன் மண் நடையில்
வழிந்து உள் இருந்தது வான் முதல் அங்கு
கழிந்து அது போகாமல் காக்க வல்லார்க்குக்
கொழுந்து அது ஆகும் குணம் அது தானே.



குணம் அது ஆகிய கோமள வல்லி
மணம் அது ஆக மகிழ்ந்து அங்கு இருக்கில்
தனம் அது ஆகிய தத்துவ ஞானம்
இனம் அது ஆக இருந்தனன் தானே.



இருந்த பிராணனும் உள்ளே எழும் ஆம்
பரிந்த இத் தண்டுடன் அண்டம் பரிய
விரிந்த அப் பூவுடன் மேல் எழ வைக்கின்
மலர்ந்தது மண்டலம் வாழலும் ஆமே.



மண்டலத்து உள்ளே மன ஒட்டியாணத்தைக்
கண்டகத்து அங்கே கருதியே கீழ்க் கட்டிப்
பண்டகத்து உள்ளே பகலே ஒளி ஆகக்
குண்டலக் காதனும் கூத்து ஒழிந்தானே.



ஒழிகின்ற வாயுவும் உள்ளே அமரும்
கழிகின்ற வாயுவும் காக்கலும் ஆகும்
வழிகின்ற காலத்து வட்டக் கழலைப்
பழிகின்ற காலத்துப் பை அகற்றீரே.



பையினின் உள்ளே படிக் கதவு ஒன்று இடின்
மெய்யினின் உள்ளே விளக்கும் ஒளியது ஆம்
கையின் உள் வாயுக் கதித்து அங்கு எழுந்திடின்
மை அணி கோயில் மணி விளக்கு ஆமே.



விளங்கிடும் வாயுவை மேல் எழ உன்னி
நலங்கிடும் கண்டத்து நாபியின் உள்ளே
வணங்கிடும் மண்டலம் வாய்த்திடக் கும்பிச்
சுணங்கிட நின்றவை சொல்லலும் ஆமே.



சொல்லலும் ஆயிடும் ஆகத்து வாயுவும்
சொல்லலும் ஆகும் மண் நீர்க் கடினமும்
சொல்லலும் ஆகும் இவை அஞ்சும் கூடிடில்
சொல்லலும் ஆம் தூர தரிசனம் தானே.



தூர தரிசனம் சொல்லுவான் காணலாம்
கார் ஆரும் கண்ணி கடை ஞானம் உட்பு எய்தி
ஏர் ஆரும் தீபத்து எழில் சிந்தை வைத்திடில்
பாரார் உலகம் பகன் முன்னது ஆமே.



முன் எழு நாபிக்கு முந்நால் விரல் கீழே
பன் எழு வேதப் பகல் ஒளி உண்டு என்னும்
நன் எழு நாதத்து நல் தீபம் வைத்திடத்
தன் எழு கோயில் தலைவனும் ஆமே.



20.பரியங்கயோகம்


பூசுவன எல்லாம் பூசிப் புலர்த்திய
வாச நறும் குழல் மாலையும் சாத்திக்
காயக் குழலி கலவியொடும் கலந்து
தூசி துளை உறத் தூங்காது போகமே.



போகத்தை உன்னவே போகாது வாயுவும்
மோகத்தை வெள்ளியும் மீளும் வியாழத்தில்
சூது ஒத்த மென் முலையாளும் நல் சூதனும்
தாதில் குழைந்து தலை கண்ட வாறே.



கண்டனும் கண்டியும் காதல் செய் யோகத்து
மண்டலம் கொண்டு இருபாலும் வெளிநிற்கும்
வண்டியை மேற் கொண்டு வான் நீர் உருட்டிடத்
தண்டு ஒரு காலும் தளராது அங்கமே.



அங்கப் புணர்ச்சியும் ஆகின்ற தத்துவம்
அங்கத்தில் விந்து வருகின்ற போகத்துப்
பங்கப் படாமல் பரிகரித்துத் தம்மைத்
தங்கிக் கொடுக்கத் தலைவனும் ஆமே.



தலைவனும் ஆயிடும் தன் வழி ஞானம்
தலைவனும் ஆயிடும் தன்வழி போகம்
தலைவனும் ஆயிடும் தன்வழி உள்ளே
தலைவனும் ஆயிடும் தன்வழி அஞ்சே.



அஞ்சு கடிகை மேல் ஆறாம் கடிகையில்
துஞ்சுவது ஒன்றத் துணைவி துணைவன்பால்
நெஞ்சு நிறைந்தது வாய் கொளாது என்றது
பஞ்ச கடிகை பரியங்க யோகமே.



பரி அங்க யோகத்துப் பஞ்ச கடிகை
அரிய இவ் வியோகம் அடைந்தவர்க்கு அல்லது
சரிவளை முன் கைச்சி சந்தனக் கொங்கை
உருவித் தழுவ ஒருவற்கு ஒண்ணாதே.



ஒண்ணாத யோகத்தை உற்றவர் ஆர் என்னில்
விண் ஆர்ந்த கங்கை விரிசடை வைத்தவன்
பண்ணார் அமுதினைப் பஞ்ச கடிகையில்
எண்ணாம் என எண்ணி இருந்தான் இருந்ததே.



ஏய்ந்த பிராயம் இருபது முப்பதும்
வாய்ந்த குழலிக்கு மன்னர்க்கும் ஆனந்தம்
வாய்ந்த குழலியோடு அடைந்து மலர்ந்திடச்
சோர்ந்தன சித்தமும் சோர்வு இல்லை வெள்ளிக்கே.



வெள்ளி உருகிப் பொன்வழி ஓடாமே
கள்ளத் தட்டானார் கரி இட்டு மூடினார்
கொள்ளி பறியக் குழல் வழியே சென்று
வள்ளி உள் நாவில் அடக்கி வைத்தாரே.



வைத்த இருவரும் தம்மின் மகிழ்ந்து உடன்
சித்தம் கலங்காது செய்கின்ற ஆனந்தம்
பத்து வகைக்கும் பதின் எண் கணத்துக்கும்
வித்தகன் ஆய் நிற்கும் வெம் கதிரோனே.



வெம் கதிருக்கும் சனிக்கும் இடைநின்ற
நங்கையைப் புல்லிய நம்பிக்கு ஓர் ஆனந்தம்
தங்களில் பொன் இடை வெள்ளி தாழா முனம்
திங்களில் செவ்வாய் புதைந்து இருந்தாரே.



திருத்திப் புதனைத் திருத்தல் செய்வார்க்குக்
கருத்து அழகாலே கலந்து அங்கு இருக்கில்
வருத்தமும் இல்லை ஆம் மங்கை பங்கற்கும்
துருத்தி உள் வெள்ளியும் சோராது எழுமே.



எழுகின்ற தீயை முன்னே கொண்டு சென்று இட்டால்
மெழுகு உருகும் பரி செய்திடும் மெய்யே
உழுகின்றது இல்லை ஒளியை அறிந்தபின்
விழுகின்ற தில்லை வெளி அறிவார்க்கே.



வெளியை அறிந்து வெளியின் நடுவே
ஒளியை அறியின் உளி முறி ஆம் ஏ
தெளிவை அறிந்து செழும் நந்தியாலே
வெளியை அறிந்தனன் மேல் அறியேனே.



மேல் ஆம் தலத்தில் விரிந்தவர் ஆர் எனின்
மால் ஆம் திசைமுகன் மா நந்தியாய் அவர்
நாலா நிலத்தின் நடு ஆன அப்பொருள்
மேலா உரைத்தனர் மின் இடை யாளுக்கே.



மின் இடையாளும் மின்னாளனும் கூட்டத்துப்
பொன் இடை வட்டத்தின் உள்ளே புகப் பெய்து
தன்னொடு தன்னைத் தலைப் பெய்ய வல்லார் ஏன்
மண் இடைப் பல் ஊழி வாழலும் ஆமே.



வாங்கல் இறுதலை வாங்கலில் வாங்கிய
வீங்க வலிக்கும் விரகு அறிவார் இல்லை
வீங்க வலிக்கும் விரகு அறிவாளரும்
ஓங்கிய தன்னை உதம் பண்ணினாரே



உதம் அறிந்து அங்கே ஒரு சுழிப் பட்டால்
கதம் அறிந்து அங்கே கபாலம் கறுக்கும்
இதம் அறிந்து என்றும் இருப்பாள் ஒருத்தி
பதம் அறிந்து உம் உளே பார்க் கடிந்தாளே.



பார் இல்லை நீர் இல்லை பங்கயம் ஒன்று உண்டு
தார் இல்லை வேர் இல்லை தாமரை பூத்தது
ஊர் இல்லை காணும் ஒளி அது ஒன்று உண்டு
கீழ் இல்லை மேல் இல்லை கேள்வி இல் பூவே.



21. சந்திர யோகம்


எய்து மதிக்கலை சூக்கத்தில் ஏறியே
எய்துவ தூலம் இருவகைப் பக்கத்துள்
எய்தும் கலை போல ஏறி இறங்கும் ஆந்து
உய்யது சூக்கத்து ஊலத்த காயமே.



ஆகின்ற சந்திரன் சூரியன் அங்கி உள்
ஆகின்ற ஈர் எட்டொடு ஆறு இரண்டு ஈர் ஐந்துள்
ஏகின்ற அக்கலை எல்லாம் இடைவழி
ஆகின்ற யோகி அறிந்த அறிவே.



ஆறாதது ஆம் கலை ஆதித்தன் சந்திரன்
நாறா நலம் கினார் ஞாலம் அங்கு அவர் கொளப்
பேறு ஆம் கலை முற்றும் பெருங்கால் ஈர் எட்டு
மாறாக் கதிர் கொள்ளும் மற்று அங்கி கூடவே.



பத்தும் இரண்டும் பகலோன் உயர் கலை
பத்தினொடு ஆறும் உயர் கலை பால் மதி
ஒத்த நல் அங்கி அது எட்டு எட்டு உயர் கலை
அத்திறன் நின்றமை ஆய்ந்து கொள்வீரே



எட்டு எட்ட அனலின் கலை ஆகும் ஈர் ஆறுள்
சுட்டப் படும் கதிரோனுக்கும் சூழ் கலை
கட்டப் படும் ஈர் எட்டாம் மதிக் கலை
ஒட்டப் படா இவை ஒன்றோடு ஒன்றாவே.



எட்டு எட்டும் ஈர் ஆறும் ஈர் எட்டும் தீக் கதிர்
சுட்டு இட்ட சோமனில் தோன்றும் கலை எனக்
கட்டப் படும் தாரகை கதிர் நாலு உள
கட்டி இட்ட தொண்ணூற்றொடு ஆறும் கால் ஆதியே.



எல்லாக் கலையும் இடை பிங்கலை நடுச்
சொல்லா நடு நாடி ஊடே தொடர் மூலம்
செல்லா எழுப்பிச் சிரத்துடன் சேர்தலால்
நல்லோர் திருவடி நண்ணி நிற்பாரே.



அங்கியில் சின்னக் கதிர் இரண்டு ஆட்டத்துத்
தங்கிய தாரகை ஆகும் சசி பானு
வங்கிய தாரகை ஆகும் பரை ஒளி
தங்கு நவ சக்கரம் ஆகும் தரணிக்கே.



தரணி சலம் கனல் கால் தக்க வானம்
அரணிய பானு அரும் திங்கள் அங்கி
முரணிய தாரகை முன்னிய ஒன்பான்
பிரணவம் ஆகும் பெரு நெறி தானே.



தாரகை மின்னும் சசி தேயும் பக்கத்துத்
தாரகை மின்னா சசிவளர் பக்கத்துத்
தாரகை பூவில் சகலத்தி யோனிகள்
தாரகைத் தாரகை தான் ஆம் சொரூபமே.



முன் பதினைந்தின் முளைத்துப் பெருத்திடும்
முன் பதினைந்தில் பெருத்துச் சிறுத்திடும்
அப் பதினைஞ்சும் அறிவல்லார் கட்குச்
செப்ப அரியான் கழல் சேர்தலும் ஆமே.



அங்கி எழுப்பி அருங் கதிர் ஊட்டத்துத்
தங்கும் சசியால் தாம மைந் ஐந்து ஆகிப்
பொங்கிய தாரகை ஆம் புலன் போக்கு அறத்
திங்கள் கதிர் அங்கி சேர்கின்ற யோகமே.



ஒன்றிய ஈர் எண்கலையும் உடல் உற
நின்றது கண்டும் நினைக்கிலர் நீதர்கள்
கன்றிய காலன் கருத்துழி வைத்த பின்
சென்றதில் வீழ்வர் திகைப் பொழியாரே.



அங்கி மதி கூட ஆகும் கதிர் ஒளி
அங்கி கதிர் கூட ஆகும் மதி ஒளி
அங்கி சசி கதிர் கூட அத்தாரகை
தங்கிய அதுவே சகலமும் ஆமே.



ஈராறு பெண்கலை எண்ணிரண்டு ஆண் கலை
பேராமல் புக்குப் பிடித்துக் கொடு வந்து
நேராகத் தோன்றும் நெருப் புறவே பெய்யில்
ஆராத ஆனந்த மானந்த மானதே.



காணும் பரிதியின் காலை இடத் திட்டு
மாணும் மதி அதன் காலை வலத் திட்டு
பேணியே இவ்வாறு பிழையாமல் செய்வீரேல்
ஆணி கலங்காது அவ் வாயிரத் தாண்டே.



பாலிக்கும் நெஞ்சம் பறையோசை ஒன்பதில்
ஆலிக்கும் அங்கே அமரர் பராபரன்
மேலைக்கு முன்னே விளக் கொளியாய் நிற்கும்
காலைக்குச் சங்கு கதிரவன் தானே.



கதிரவன் சந்திரன் காலம் அளக்கும்
பொதிரவன் உள்ளே பொழி மழை நிற்கும்
அதிரவன் அண்டப் புறம் சென்று அடர்ப்ப
எதிரவன் ஈச னிடம் அது தானே.



உந்திக் கமலத் துதித் தெழும் சோதியை
அந்திக்கு மந்திரம் ஆரும் அறிகிலர்
அந்திக்கு மந்திரம் ஆரும் அறிந்த பின்
தந்தைக்கு முன்னே மகன் பிறந்தானே.



ஊதியம் ஏது மறியார் உரைப்பினும்
ஓதியும் ஏது மறியாத ஊமர்கள்
ஆதியு மந்தமும் அந்திக்க வல்லீரேல்
வேதியன் அங்கே வெளிப்படும் தானே.



பாம்பு மதியைத் தினலுறும் பாம்பினைத்
தீங்கு கதிரையும் சோதித்தனல் உறும்
பாம்பு மதியும் பகை தீர்த்து உடன் கொளீ
நீங்கல் கொடானே நெடும் தகையானே.



அயின்றது வீழ் அளவும் துயில் இன்றிப்
பயின்ற சசி வீழ் பொழுதில் துயின்று
நயம் தரு பூரணை உள்ள நடத்தி
வியம் தரு பூரணை மேவும் சசியே.



சசி உதிக்கும் அளவும் துயில் இன்றிச்
சசி உதித்தானேல் தனது ஊணருந்திச்
சசி சரிக்கின்ற அளவும் துயிலாமல்
சசி சரிப்பின் கட்டன் கண் துயில் கொண்டதே.



ஊழி பிரியாது இருக்கின்ற யோகிகள்
நாழிகை யாக நமனை அளப்பர்கள்
ஊழி முதலாய் உயர்வார் உலகினில்
தாழ வல்லாரிச் சசி வன்ன ராமே.



தண் மதி பானுச் சரி பூமியே சென்று
மண் மதி காலங்கள் மூன்றும் வழி கண்டு
வெண் மதி தோன்றிய நாளில் விளைந்தபின்
தண் மதி வீழ் அளவில் கணம் இன்றே.



வளர்கின்ற ஆதித்தன் தன் கலை ஆறும்
தளர்கின்ற சந்திரன் தன் கலை ஆறும்
மலர்ந் தெழு பன்னிரண் டங்குலம் ஓடி
அலர்ந்து விழுந்தமை யார் அறிவாரே.



ஆம் உயிர்த் தேய் மதி நாளே எனல் விந்து
போம் வழி எங்கணும் போகாது யோகிக்குக்
காமுற இன்மையில் கட்டுண்ணும் மூலத்தில்
ஓ மதியத்துள் விட்டுரை உணர்வாலே.



வேறுறச் செங் கதிர் மெய்க்கலை ஆறோடும்
சூருற நான்கும் தொடர்ந்து உறவே நிற்கும்
ஈறிலி நன் கலை ஈரைந் தொடே மதித்து
ஆறுள் கலையுள் அகலுவா வாமே.



உணர் விந்து சோணி உறவினன் வீசும்
புணர் விந்து வீசும் கதிரில் குறையில்
உணர்வும் உடம்பும் உவை ஒக்க நிற்கில்
உணர்வும் உடம்பும் ஒரு கால் விடாவே.



விடாத மனம் பவனத் தொடு மேவி
நடாவு சிவ சங்கின் நாதம் கொளுவிக்
கடா விடா ஐம் புலன் கட்டு உண்ணும் வீடு
படாதன இன்பம் பருகார் அமுதமே.



அமுதப் புனல் வரு மாற்றம் கரைமேல்
குமிழிக் குள் சுடர் ஐந்தையும் கூட்டிச்
சமையத் தண் தோட்டித் தரிக்க வல்லார்க்கு
நமனில்லை நற்கலை நாளில்லை தானே.



உண்ணீர் அமுதம் உறும் ஊறலைத் திறந்து
எண்ணீர் இணை அடித் தாமரைக்கே செலத்
தெண்ணீர் சமாதி அமர்ந் தீரா நலம்
கண்ணால் தொடே சென்று கால் வழி மாறுமே.



மாறு மதியும் மதித் திரு மாறு வின்றித்
தாறு படாமல் தண்டோடே தலைப் படில்
ஊறு படாது உடல் வேண்டும் உபாயமும்
பாறு படா இன்பம் பார்மிசைப் பொங்குமே.



          மூன்றாம் தந்திரம் முற்றிற்று 













கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக