வியாழன், மார்ச் 22, 2018

மகான்களின் வாழ்வில்

மகான்களின் வாழ்வில் .....

மகான் ரிபு முனிவர் 


                                                       முனிவர்க்கெல்லாம் முனிவரான ரிபு முனிவர் தன் சீடன் நிதாங்கனை அழைத்தார் . " நிதாங்கா " நீ உன்னுடைய ஊருக்கு திரும்பி சென்று உலக வாழ்க்கை அனுபவத்தை உணர்ந்து வா என்று பணித்தார் . குரு பக்தியில் சிறந்து விளங்கிய நிதாங்கன் குருவை வணங்கி , உங்களை விட்டு நீங்கி எப்படி சுவாமி அடியேன் ஞானம் பெற முடியும் என்று வினவி நான் இந்த குருகுலத்தை விட்டு செல்ல மாட்டேன் என்று பிடிவாதமாய் இருந்தான் .

                ரிபு முனிவர் தன் சீடனிடம் , நிதாங்கா நான் கூறுவதைக் கேள் நான் எப்பொழுதும் உன்னுடன் இருக்கிறேன் கவலை கொள்ளாதே நீ சில அனுபவம் பெறவே உன்னை போகச் சொல்லுகிறேன் சென்று வா உன்னை நான் விரைவில் வந்தடைவேன் என்றார் . அவரை பணிவுடன் வணங்கி குரு வார்த்தைக்கு கட்டுப்பட்டு தன் ஊருக்கு திரும்பினான் . இயல்பு வாழ்க்கையில் ஈடுபட்டான் காலங்கள் பல கடந்தது . 

                      ஒரு நாள் அந்த நாட்டு அரசன் தன்னுடைய பட்டது யானை மீது ஊர்வலம் வந்தான் அங்கு மக்கள் மேளதாளத்துடன் ஆடிப்பாடி மகிழ்ச்சியுடன் வந்தனர் அவ்வழியே வந்த நிதாங்கன் அக்காட்சியை கண்டு ரசித்துக்கொண்டிருந்தான் . அப்போது ஒரு கை அவனுடைய தோளைத் தொட்டது . உடனே திரும்பி பார்த்தான் அழுக்கு ஆடையும் , கலைந்த கேசமுமாக ஒரு பெரியவர் நிதாங்கனை பார்த்து தம்பி , இங்கே என்ன கூட்டமாக இருக்கிறது என்று கேட்டார் . நிதாங்கன் அந்த பெரியவரின் தோற்றத்தை பார்த்து ஏளனமாய் சிந்தித்து இவருடன் என்ன சொல்ல என்று , அதுவா .. ராஜ யானை மேலே ஊர்வலம் போறார் என்று வேண்டா வெறுப்பாக சொல்லி நகர்ந்தான் .                        
                              ஓஹோ என்று இழுத்த பெரியவரை பரிதாபமாக பார்த்து , என்ன ஓஹோ .. நான் சொன்னது புரிஞ்சுதா என்று கேட்டான் . அதற்கு அந்த பெரியவர் ஹ்ம் புரியுது தம்பி ஊர்வலம் வருது சரிதான் இதுல எது ராஜா ? எது யானை ? என்று கேள்வி கேட்டார் . இதைக் கேட்டு சற்றே திகைத்த நிதாங்கன் என்னய்யா இது கூடவா தெரியவில்லை மேலே இருப்பவர் ராஜா கீழே இருப்பது யானை என்றான் . இந்த பதிலைக் கேட்ட கிராமத்துப் பெரியவர் சந்தோசமாய் கைகளை தட்டி குதூகலமாய் சிரித்து ஆர்ப்பரித்தார் . நிதாங்கன் இப்படியும் ஒரு மனிதனா என்று வேறுபக்கம் செல்ல ஆயத்தமானான் . அந்த பெரியவர் இவனை திரும்பவும் சீண்டுவது போல் தம்பி எனக்கொரு சந்தேகம் என்றார் .

                           மிகவும் கோபத்துடன் திரும்பிய நிதாங்கனை பார்த்து தம்பி , ராஜாவும் , யானையும் யாருன்னு எனக்கு புரியுது ஆனா மேலே , கீழே ன்னு சொன்னீங்களே அதுதான் புரியலை என்றார் . பெரியவர் தன்னை வம்புக்கு இழுப்பதாக எண்ணிக்கொண்டு அவர் எதிர்பார்க்காத வேளையில் சட்டென அவர் தோள் மீது ஏறி  அமர்ந்து கொண்டு சொன்னான் நீ எனக்கு கீழே , நான் உமக்கு மேலே இப்போது புரிகிறதா என்றான் . உடனே பெரியவர் புரியுது தம்பி மேல் , கீழ் இரண்டும் நன்கு விளங்கிற்று . நீ , நான் அப்படின்னு சொன்னீங்களே அந்த நீ , நான்  என்ன அதை மட்டும் விளக்குங்கள் போதும் என்றார் .  முதலில் ' நான் ' என்பது என்ன அதை சொல்லிவிட்டு பின்பு ' நீ ' பத்தி சொல்லுங்க என்றார் . 


                                   கேள்வியின் ஆழத்தில் தன்னை மறந்து சிந்திக்க தொடங்கினான் நிதாங்கன் . " நான் " என்பது என்ன ?  நிதாங்கன் என்பதா இல்லை அது எனது பெயர் ... இந்த உடலாக இருக்குமோ ? இருக்காது தூக்கத்தில் அந்த உணர்வு இருப்பது இல்லையே ... அப்படியானால் நான் என்பது .....? இவ்வாறாக சிந்தித்துக் கொண்டிருக்கும் போது அவனுக்குள் ஒரு ஒளிக்கீற்று ஊடுருவியதை உணர்ந்தவனாக வந்திருந்த பெரியவரை நோக்கினான் . அவர் இவனையே பார்த்துக்கொண்டிருந்தார் சட்டென்று அவர் காலில் நெடுஞ்சாண்கிடையாக விழுந்தான் . கண்ணீர் பெருக சுவாமி நீங்கள் எனக்குள் மிகப்பெரிய தெளிவை கொடுத்து விட்டீர்கள் .  என் குருநாதரை தவிர வேறு யாரும் அடியேனுக்கு இந்த உபதேசம் கொடுக்க முடியாது என்று கூறினான் . 
                       வந்திருந்த அந்த பெரியவர் தன் சுய உருவத்திற்கு வந்திருந்தார் வேறு யார் சாட்ஷாத் ரிபு முனிவர் தான் தன்னுடைய சீடன் தெளிவு பெற வேண்டும் என்று இந்த நாடகத்தை நடத்தி உள்ளார் . நிதாங்கனை தன்னுடன் அனைத்துக் கொண்டார் மகரிஷி ரிபு . அன்று முதல் அத்வைத பாடத்தை நிதாங்கனுக்கு போதித்தார் .  

                       சிவமேஜெயம் - திருவடி முத்துகிருஷ்ணன் 
சிவத்தை போற்றுவோம் !! சித்தர்களை போற்றுவோம் !!




புதன், மார்ச் 07, 2018

சித்தர்கள் மூல மந்திரம்






















நந்தீசர் மூல மந்திரம்
ஓம் ஸ்ரீம் லம் ஸ்ரீ நந்தீச சித்த சுவாமியே போற்றி!

அகத்தியர் மூல மந்திரம்
ஓம் ஸ்ரீம் க்ரீம் ஸ்ரீ அகத்திய சித்த சுவாமியே போற்றி!

திருமூலர் மூல மந்த்திரம்
ஓம் ஸ்ரீம் கெம் ஸ்ரீ மூலநாத சித்த சுவாமியே போற்றி!

போகர் மூல மந்திரம்
ஓம் ஆம் ஊம் ஸ்ரீ மகாபோகர் சித்த சுவாமியே போற்றி!

கோரக்கர் மூல மந்திரம்
ஓம் ஸ்ரீம் க்லம் ஸ்ரீ கோரக்க சித்த சுவாமியே போற்றி!

தேரையர் மூல மந்திரம்
ஓம் ஸ்ரீம் லபம் நசீம் ஸ்ரீ தேரைய சித்த சுவாமியே போற்றி!

சுந்தரானந்தர் மூல மந்திரம்
ஓம் ஸ்ரீம் ஆம் ஊம் ஸ்ரீ சுந்தரானந்த சித்த சுவாமியே போற்றி!

புலிப்பாணி மூல மந்திரம்
ஓம் ஸ்ரீம் கிலீம் ஸ்ரீ புலிப்பாணி சித்த சுவாமியே போற்றி!

பாம்பாட்டி சித்தர் மூல மந்திரம்
ஓம் ஸ்ரீம் வசி ஸ்ரீ பாம்பாட்டி சித்த சுவாமியே போற்றி!

காக புசண்டர் மூல மந்திரம்
ஓம் ஸ்ரீம் லம் ஸ்வம் ஸ்ரீ காக புசண்ட சித்த சுவாமியே போற்றி!

இடைக்காடர் மூல மந்திரம்
ஓம் ஸ்ரீம் ருணம் ஸ்ரீ இடைக்காட்டு சித்த சுவாமியே போற்றி!

சட்டைமுனி மூல மந்திரம்
ஓம் ஸ்ரீம் சம் வம் சட்டைமுனி சுவாமியே போற்றி!

அகப்பேய் சித்தர் மூல மந்திரம்
ஓம் ஸ்ரீம் சௌம் ஸ்ரீ அகப்பேய் சித்த சுவாமியே போற்றி!

கொங்கணவர் மூல மந்திரம்
ஓம் ஸ்ரீம் நசீம் ஸ்ரீ கொங்கண சித்த சுவாமியே போற்றி!

சிவவாக்கியர் மூல மந்திரம்
ஓம் ஸ்ரீம் லம் ஸ்ரீ சிவவாக்கிய சித்த சுவாமியே போற்றி!

உரோமரிஷி மூல மந்திரம்
ஓம் ஸ்ரீம் கிலம் ஸ்ரீ உரோம ரிஷி சுவாமியே போற்றி!

குதம்பை சித்தர் மூல மந்திரம்
ஓம் ஸ்ரீம் சம் ஸ்ரீ குதம்பைச் சித்த சுவாமியே போற்றி!

கருவூரார் மூல மந்திரம்
ஓம் ஸ்ரீம் வம் லம் ஸ்ரீ கருவூர் சித்த சுவாமியே போற்றி!

இந்த கலி யுகத்தில் நம்மை காப்பாற்றுவதற்கும் , பேறு நிலையை அடையச்செய்வதற்கும் சித்த பெருமக்களால் மட்டுமே முடியும் . ஆதலினால் சித்தர்களை வழிபடுவோம் . 


சிவமேஜெயம் - திருவடி முத்துகிருஷ்ணன் 

சிவத்தை போற்றுவோம் !!! சித்தர்களை போற்றுவோம் !!!




அருணகிரி நாதர் வரலாறு 


                                                             நினைத்தாலே முக்தி அளிக்கும் திருவண்ணாமலையில் 15ஆம் நூற்றாண்டில் பிறந்தவர் அருணகிரிநாதர். இவரது தந்தையார் பெயர் திருவெங்கட்டார் என்றும் தாயார் பெயர் முத்தம்மை  இளமையிலேயே தாய் தந்தையாரை இழந்த அருணகிரிநாதரை, அவரது மூத்த சகோதரி ஆதியம்மை அவர்கள் தாயாகவும், தந்தையாகவும் இருந்து திருமணம் செய்துக்கொள்ளாமல் தம்பியை தன் மகனாகவே பாவித்து அன்போடு வளர்த்தார். அருணகிரிநாதர் இளமையில் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கினார். இருப்பினும், மாயா நெறியில் அகப்பட்டு, பெண்ணாசை கொண்டவராய் இருந்தார். இவரது தமக்கையார் அருணகிரிநாதர் நாளடைவில் திருந்துவார் என்று எண்ணி இவருக்கு மணமுடித்து வைத்தார். இருந்தும், அருணகிரிநாதர் பெண்ணாசை கொண்டு பரத்தையரின் பால் மனதை பறிகொடுத்து, தாசிகள் வீட்டிலேயே இருந்து வந்தார். அதனால் சிறிது சிறிதாக தமது சொத்துக்களை இழந்து வந்தார். காமத்திலேயே மூழ்கி திளைத்ததன் பயனாக, அருணகிரிநாதருக்கு பெருநோய் ஏற்பட்டது. இவரது நடத்தையினால் அவரது மனைவியும் அவரை வெறுத்து நீங்கினார்.

                                        தமது சொத்துக்கள் அனைத்தும் அழிந்த போதும், உடல் குஷ்ட நோயால் பெரும்பிணியுற்று வருந்திய போதும், அருணகிரிநாதரால் பெண்ணாசையை கட்டுப்படுத்த இயலவில்லை. பரத்தையின் பால் செல்ல தமது தமக்கையாரிடம் பொருள் கேட்டார். தமக்கையார் தன்னிடம் ஏதும் இல்லாத நிலையில், "உனது இச்சையை தீர்க்க ஒரு பெண் தானே வேண்டும். நானும் ஒரு பெண் தான், உனது இச்சையை என்னிடம் தீர்த்துக் கொள்" என வருத்தத்துடனும், கோபத்துடனும் கூறினார். தமக்கையார் கூறிய வார்த்தைகள், அவரது இதயத்தை தைத்தன. பெண்ணாசையால் தமது வாழ்க்கையை வீணடித்ததோடு, தமது குடும்ப மானமே பறிபோனதை எண்ணி பதைபதைத்தார். அக்கணமே வீட்டை விட்டு வெளியேறி, கால் போன போக்கில் சென்றார். அவரை வழியில் கண்ட முதியவர் ஒருவர், அவரது நிலையை அறிந்து, முருகப்பெருமானின் பெருமைகளை எடுத்துரைத்து, ஆறேழுத்து மந்திரத்தை உபதேசித்து, முருகனை வழிபடுமாறு கூறிச் சென்றார். 

                                              அவரது உபதேசத்தின்பேரில் முருகப்பெருமானை வழிபட்டு வந்தார். ஆயினும், முருகனை நினைத்து தியானத்தில் அமர்ந்த போது, தியானம் கை கூடவில்லை. உடல் பிணி ஒரு புறம், தமக்கை கூறிய கொடுஞ்சொல் மறுபுறம் என அவரது உள்ளம் குழப்பமடைகிறது. வாழ்கையே வெறுத்த நிலையில், தம் உயிரை விடுவதே ஒரே வழி என்று எண்ணி, திருவண்ணாமலை கோபுர உச்சிக்கு சென்று, அங்கிருந்து கீழே குதித்தார். முருகப்பெருமான் அடியவர் கோலத்தில் வந்து அவரை கீழே விழாமல் தாங்கி பிடித்தார். அவருக்கு மந்திர உபதேசம் அளித்து மறைந்தார். மந்திர உபதேசம் பெற்ற அருணகிரிநாதர், தியானத்தில் அமர்ந்தார். தியான நிலையிலேயே 12 ஆண்டுகள் கழித்தார். இறை அருளால், அவரது பிணி நீங்கி வஜ்ர தேகம் பெற்றிருந்தார். முருகப்பெருமான் அவர் முன் காட்சி அளிக்க, தியான நிலையில் இருந்து விடுபட்டு மெய்சிலிர்க்க ஆறுமுகக்கடவுளை வணங்கி நின்றார். முருகப்பெருமான் தன்னுடைய வேலால் அருணகிரிநாதர் நாவில் எழுதி, திருப்புகழை பாடுமாறு பணித்தார். அருணகிரிநாதர் தயங்கி நிற்க, முருகக்கடவுளே "முத்தைத்தரு பத்தித் திருநகை" என்று அடியை எடுத்துக் கொடுக்க, அருணகிரிநாதர் மடை திறந்த வெள்ளம் போல், திருப்புகழை பாடினார். பின்னர், வயலூர் வருமாறு பணித்து மறைந்தருளினார். 

வயலூரை அடைந்த அருணகிரிநாதர், பொய்யாக் கணபதி சன்னதி முன், "கைத்தல நிறைகனி" என்ற திருப்புகழை பாடித் துதித்தார். பின்னர், அறுபடை வீடுகளையும் தரிசித்து, தலந்தோறும், திருப்புகழ் பாடினார். அருணகிரிநாதர் பாடிய திருப்புகழ் யாவும் கருத்தாழமும், சொல்லாழமும், இனிய சந்தமும் நிறைந்தது. இவ்வாறு, தலந்தோறும் சென்று வரும் வேளையில், திருச்செந்தூரில், முருகப்பெருமானின் நடனத்தை கண்டு களிப்புற்றார். சுவாமி மலையில், அவருடைய தமக்கை ஆதியம்மையாரை சந்திக்க நேர்ந்தது. ஆதியம்மையார் அருணகிரிநாதரை வணங்கி, தம்மை முருகனடி சேர்க்குமாறு வேண்டினார். அருணகிரிநாதரும், முருகனை துதித்து பாடினார். முருகப்பெருமான் காட்சி அளித்து, ஆதியம்மையாரை தமக்குள் ஐக்கியமாக்கி மறைந்தார். பின்னர், விராலி மலையில் காட்சி அளித்த முருகப்பெருமான், அருணகிரிநாதருக்கு அட்டமாசித்திகளை அளித்து அருள் புரிந்தார்.

வக்கபாகை எனும் ஊரில் வாழ்ந்து வந்த வில்லிபுத்தூரார் என்ற பெரும் புலவர், பல புலவர்களிடம் புலமை போட்டியில் ஈடுபட்டு வந்தார். போட்டியின் போது, வில்லிபுத்தூரார் கைகளில் துரட்டு ஒன்று வைத்திருப்பார். அந்த துரட்டு, போட்டிக்கு வந்த புலவரின் காதில் மாட்டப்பட்டிருக்கும். வில்லிபுத்தூரார் கேட்கும் கேள்விகளுக்கு புலவர் பதில் கூற வேண்டும், தவறினால், தமது கைகளில் உள்ள துரட்டினை இழுத்து காதுகளை அரிந்து விடுவார். இந்த போட்டியில், பல புலவர்கள் வில்லிபுத்தூராரை வெல்ல இயலாமல் தமது காதுகளை இழந்தனர். இதை அறிந்த அருணகிரிநாதர், இந்த கொடுமையை தடுக்க எண்ணி வில்லிபுத்தூராரிடம் சென்று, போட்டியில் ஈடுபட்டார். அப்போது அருணகிரிநாதர் தமது கைகளிலும் துரட்டு அளிக்கப்பட வேண்டும் எனவும், தாம் பாடும் அந்தாதி ஒன்றிற்கு, வில்லிபுத்தூரார் பொருள் கூறினால், தாம் தோல்வியை ஒப்புக் கொள்வதாகவும் தமது காதுகளை வில்லிபுத்தூரார் அரியலாம் என்றும், தவறினால் வில்லிபுத்தூராரின் காதுகளை, தமது துரட்டினால் அரிய நேரிடும் என்றும் நிபந்தனை விதித்தார். வில்லிபுத்தூராரும் அதற்கு ஒப்புக் கொண்டார். இருவரது கைகளிலும் துரட்டு வழங்கப்பட்டு, எதிராளியின் காதுகளில் துரட்டினை பூட்டினர். அருணகிரிநாதர் பின்வரும் பாடலை பாடினார்.

திதத்தத்தத் தித்தத் திதிதாதை தாததுத் தித்தத்திதா
திதத்தத்தத் தித்த திதித்தித்த தேதுத்து தித்திதத்தா
திதத்தத்தத் தித்தத்தை தாததி தேதுதை தாததத்து
திதத்தத்தத் தித்தித்தி தீதீ திதிதுதி தீதொத்ததே 


இதற்கு பொருள் கூற முடியாமல், வில்லிபுத்தூரார் தோல்வியை ஒப்புக் கொண்டார். தோல்வி அடைந்த போதும், வில்லிபுத்தூராரின் காதுகளை அரியாமல், இந்தப் புலமை போட்டியை இத்துடன் நிறுத்திக் கொள்ளுமாறு வில்லிபுத்தூரார்க்கு அறிவுரை வழங்கினார். வில்லிபுத்தூராரும் தமது தவறினை உணர்ந்து அருணகிரிநாதரை வணங்கினார். இதனால், "கருணைக்கு அருணகிரி" என்று அருணகிரிநாதர் போற்றப்பட்டார். வில்லிபுத்தூரார் தமது தவறிற்கு பரிகாரமாக மகாபாரதத்தை, "வில்லிபாரதம்" என்ற பெயரில் தமிழில் எழுதினார்.

சில காலம் கழித்து, அரசன் பிரபுடதேவனின் கண்பார்வை பாதிப்படைந்தது. அருணகிரிநாதரை வஞ்சம் தீர்க்க சமயம் பார்த்திருந்த சம்பந்தாண்டான், மன்னனிடம், சொர்க்க லோகத்தில் உள்ள பாரிஜாத மலரை கொண்டு வந்தால் இழந்த பார்வையை மீண்டும் பெறலாம் என்றும், பாரிஜாத மலரை இறையருள் பெற்ற அருணகிரிநாதரை அன்றி வேறு எவராலும் கொண்டு வர இயலாது எனவும் கூறினான். மன்னனும், அருணகிரிநாதரிடம் சென்று, தமக்கு மீண்டும் பார்வை கிடைக்க சொர்க்க லோகம் சென்று பாரிஜாத மலரை கொண்டு வர வேண்டும் என 
வேண்டினான். அருணகிரிநாதரும் அவ்வாறே செய்வதாக மன்னனிடம் உறுதி கூறினார். சம்பந்தாண்டான் தன்னுடைய சகாக்களை அழைத்து, மானிட உருவில் சொர்க்க லோகம் செல்ல இயலாது என்றும், அட்டமா சித்திகளை பெற்ற அருணகிரிநாதர், கூடு விட்டு கூடு பாய்ந்து வேறு உருவில் சொர்க்க லோகம் செல்வார் என்றும், அவ்வாறு செல்லும் வேளையில், அவரது உயிரற்ற உடலை தம்மிடம் கொண்டு வருமாரும் கூறினான். அருணகிரிநாதர் சொர்க்க லோகம் செல்ல, திருவண்ணாமலை திருக்கோவிலில் உள்ள பேய்க்கோபுரத்தின் மேல்நிலைக்கு சென்று, தம்முடைய உடலிலிருந்து உயிரை பிரித்து, அங்கு இறந்திருந்த கிளியின் உடலில் தம்முடைய உயிரை செலுத்தி அங்கிருந்து சொர்க்க லோகம் நோக்கி சென்றார். 

                                                                    அருணகிரிநாதரை பின் தொடர்ந்து வந்திருந்த சம்பந்தாண்டானின் சகாக்கள், அருணகிரிநாதரின் உடலை எடுத்துக் கொண்டு சம்பந்தாண்டானிடம் கொண்டு சேர்த்தனர். சம்பந்தாண்டான், மன்னனிடம் அருணகிரிநாதர் சொர்க்கம் செல்லும் முயற்சியில் இறந்து விட்டார் என்று நம்ப வைத்து, அருணகிரிநாதரின் உடலை எரித்து விட்டான். கிளி வடிவில் சொர்க்கம் சென்று பாரிஜாத மலரை கொண்டு வந்து பூலோகம் திரும்பிய அருணகிரிநாதர், தமது உடலை காணாது திகைத்தார். தமது உடல் அழிக்கப்பட்டு விட்டதை அறிந்து அருணகிரிநாதர், கிளி உருவிலேயே மன்னனிடம் சென்று பாரிஜாத மலரை சேர்பித்தார். முருகனை நினைத்து துதித்தார். முருகப்பெருமான், அருணகிரிநாதரிடம் "கவலை வேண்டாம். இந்த கிளி உருவிலேயே கவி பாடுமாறு" அருளினார். பாரிஜாத மலரால் பார்வை பெற்ற மன்னன், கிளி உருவில் வந்தது அருணகிரிநாதரே என்பதை உணர்ந்து போற்றினான். திருவண்ணாமலை கோபுரத்தில் இருந்து கிளி உருவில் அருணகிரிநாதர் பாடிய பாடலே கந்தர் அனுபூதியாகும். கிளி வடிவிலேயே இருந்த அவரை அவ்வடிவிலேயே முருகன் ஆட்கொண்டான். அவர் கிளி உருவில் வந்து அமர்ந்த கோபுரம் தற்போதும் கிளிக்கோபுரம் என்ற அழைக்கப்படுகிறது.

                              சிவமேஜெயம் - திருவடி முத்துகிருஷ்ணன் 

சிவத்தை போற்றுவோம் !!! சித்தர்களை போற்றுவோம் !!! 


சிந்திக்க ஒரு கதை ......

மன சஞ்சலத்தை போக்க என்ன செய்ய வேண்டும் 

                                        
                                                    
                                புத்தரின் சீடர்களில் ஒருவருக்கு ஒரு சந்தேகம் ஏற்பட்டது மனதின் சஞ்சலத்தை போக்க என்ன செய்ய வேண்டும் என்பதே அது . புத்தர் சீடர்களுக்கு உபதேசம் செய்யும் வேளையில் அந்த சீடர் தன் குருவான புத்தரிடம் தன்னுடைய சந்தேகத்திற்கு விளக்கம் கேட்டார் அதற்கு புத்தர் செயல் மூலம் அவருக்கு விளக்க நினைத்தார் . 
                                                பின்பு  புத்தர் தன்னுடைய சீடர்களுடன் பயணத்தை தொடர்ந்தார் . ஒரு ஏரியை எதிர் கொண்டபோது, அங்கிருந்த பெரிய ஆலமர நிழலில் அனைவரும் சற்று ஓய்வெடுக்கும் எண்ணத்துடன் தங்கினார்கள்.புத்தர் அந்த விளக்கம் கேட்ட சீடரை அனுப்பி ஏரியில் இருந்து குடிப்பதற்கு நீர்கொண்டு வரச் சொன்னார். சீடரும்  பானை ஒன்றை எடுத்துக் கொண்டு நீர்நிலையை நோக்கி நடந்தார்.அந்த நேரத்தில், மாட்டு வண்டி ஒன்று  ஏரிக்குள் இறங்கி ஏரியைக் கடந்து சென்றது .ஏரி கலங்கி விட்டது. அத்துடன் ஏரியின் கீழ்ப் பகுதியில் இருந்த சேறும் சகதியும் மேலே வந்து நீரை அசுத்தப்படுத்தி பார்ப்பதற்கே உபயோகமற்றதாகக் காட்சியளித்தது.இந்தக் கலங்கிய நீர் எப்படிக் குடிப்பதற்குப் பயன்படும்? இதை எப்படிக் குருவிற்குக் கொண்டுபோய்க் கொடுப்பது? என்று தண்ணீரில்லாமல் திரும்பிவிட்டார்.அத்துடன் தன் குருவிடமும் அதைத் தெரிவித்தார்.

                               சிறிது நேரம் சென்ற பிறகு, புத்தர் தன்னுடைய சீடரை மீண்டும் ஏரிக்குச் சென்று வரப் பணித்தார்.நீர்நிலையருகே சென்று சீடன் பார்த்தான். இப்போது நீர் தெளிந்திருந்தது . சகதி நீரின் அடியிற்சென்று பதிந்திருந்தது. ஒரு பானையின் தண்ணீரை முகர்ந்து கொண்டு சீடன் புத்தரிடம் திரும்பினான். புத்தர் தண்ணீரைப் பார்த்தார்.
சீடனையும் பார்த்தார். பிறகு மெல்லிய குரலில் சொல்லலானார்.தண்ணீர் சுத்தமாவதற்கு என்ன செய்தாய்..? நான் ஒன்றும் செய்யவில்லை சுவாமி! அதை அப்படியே விட்டுவிட்டு வந்தேன். அது தானாகவே சுத்தமாயிற்று! நீ அதை அதன் போக்கிலேயே விட்டாய். அது தானாகவே சுத்தமாயிற்று. அத்துடன் உனக்கு தெளிந்த நீரும் கிடைத்தது இல்லையா?
ஆமாம் சுவாமி!  நம் மனமும் அப்படிப்பட்டதுதான்..

                                                                மனம் குழப்பத்தில் இருக்கும்போது நாம் ஒன்றும் செய்ய வேண்டாம். அதை அப்படியே விட்டு விட வேண்டும். சிறிது கால அவகாசம் கொடுக்க வேண்டும்.அது தனக்குத்தானே சரியாகிவிடும்.நாம் எந்தவித முயற்சியும் செய்ய வேண்டாம். மனதை சமாதானப்படுத்தும் விதத்தைப் பற்றி சிந்திக்கவும் வேண்டாம். அது  தன்னிச்சையாக நடக்கும். அத்துடன் நம்முடைய முயற்சியின்றி அது நடக்கும். இப்போது சீடனின் குழப்பம் தீர்ந்தது புது தெளிவு பிறந்தது . 


                  சிவமேஜெயம் - திருவடி முத்துகிருஷ்ணன் 

சிவத்தை போற்றுவோம் !!! சித்தர்களை போற்றுவோம் !!!

திங்கள், மார்ச் 05, 2018

கோ சேவை 





நம்முடைய கோசாலைக்கு புது வரவு நாட்டு பசுங் கன்று மிகவும் அழகான வெண்மை நிறமுடையது . 

            சிவமேஜெயம் - திருவடி முத்து கிருஷ்ணன் 


சிவத்தை போற்றுவோம் !!!   சித்தர்களை போற்றுவோம் !!! 

வியாழன், மார்ச் 01, 2018

படித்ததில் பிடித்தது ....
இறை நம்பிக்கை பற்றிய பதிவு 


இரண்டு அணில்கள் மரத்தில் ஏறி ஓடி விளையாடிக் கொண்டிருந்தன. அதில் ஒரு அணிலுக்குக் கடவுள் பக்தி அதிகம். எந்தக் காரியத்தைச் செய்தாலும் இறைசிந்தனை செய்துவிட்டு செய்வதும் ஒவ்வொரு நன்மையிலும் கடவுளுக்கு நன்றி செலுத்துவதும் அதன் வழக்கம்.
அதன் தோழனான மற்ற அணிலுக்கோ கடவுள் நம்பிக்கையே கிடையாது .திட்டமிட்டு செயல் புரியும் புத்திசாலிக்குக் கடவுளே தேவையில்லை என்று அடிக்கடி சொல்லும் . அத்துடன் மற்ற அணிலையும் கேலி செய்து சிரிக்கும்.
கடவுள் பக்தியுள்ள அணில் இதையெல்லாம் கண்டு கொள்வதேயில்லை.
விளையாட்டு மிகவும் சுவாரஸ்யமாகத் தொடர்ந்தது. நேரம் போவதே தெரியவில்லை
உற்சாகத்துடன் ஓடிக் கொண்டிருக்கும் போது பத்திமான் அணில் பிடி வழுக்கி மரத்திலிருந்து கீழே விழுந்து விட்டது.
காயம் எதுவும் படவில்லை என்ற போதிலும் கொஞ்சம் வயிற்றில் அடிபட்டு வலித்தது.
பெரிய ஆபத்திலிருந்து என்னைக் காப்பாற்றிய கடவுளே. உங்களுக்கு நன்றி என்றது .
இதைக் கேட்டதும் மரத்தில் இருந்த அணில் சிரி சிரியென்று சிரித்தது. கீழே விழுந்து மண்ணைக் கவ்வினாலும் உனக்கெல்லாம் அறிவே வராது.
உன் கடவுள் எதுக்காக உன்னைத் தள்ளி விட்டாருன்னு கொஞ்சம் அவர்க்கிட்டேயே கேட்டு சொல்லேன் என்று சொல்லி மீண்டும் கிண்டலாய் சிரித்தது.
பக்தியுள்ள அணில் சொன்னது கடவுளை நம்புற நாங்கள் எல்லாம் துன்பப் படுத்தப்பட்டும் கைவிடப்படுகிறதில்லை. கீழே தள்ளப்பட்டும் மடிந்து போகிறதில்லை.
அதனால கடவுள் எங்கள கீழே தள்ளி விட்டாலும் அதிலும் காரணம் இருக்கும் என்றது.ஆமாம் .கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டுறதில்லை மீண்டும் விழுந்து விழுந்து சிரிக்கும் தன் நண்பனை வேதனையோடு பார்த்தது.
கண்களை மூடி விண்ணை நோக்கி கடவுளே இந்த அவமானத்துக்கும் வலிக்கும் ஏதுவாய் நான் ஏதேனும் தவறு செய்திருந்தா மன்னித்திடு என்றது.அது கண்களைத் திறக்கும்போது ஒரு கொடூரமான காட்சியைக் கண்டு நடுங்கி விட்டது. மரத்தில் இருந்த அணில் இன்னும் குலுங்கிக் குலுங்கி சிரித்துக் கொண்டிருந்தது.
அதற்குப் பக்கவாட்டிலிருந்து ஒரு பாம்பு அதை நெருங்கி வந்துகொண்டிருந்
தது.உன் பக்கத்துல பாம்பு என்று மரத்தின் கீழிருந்து கதறுகிற சத்தம் அதன் காதில் ஏறவில்லை.
கண்ணிமைக்கும் நேரத்தில் பாம்பு மரத்தில் இருந்த அணிலை லபக்கென்று கவ்விக் கொண்டது . தன் தோழன் மரத்திலிருந்து தவறி விழுந்ததற்கும் கூட ஒரு காரணம் இருந்திருக்கிறது என்று உணரும்போது அது முழுமையாய் விழுங்கப் பட்டிருந்தது .
சில வேளையில் நாம் தடுமாறி விழும்போது உலகம் கேலியாய்ச் சிரிக்கலாம் . அது நம்முடைய உயிரை காப்பதற்காகக் சிறு வலியாக கூட இருக்கலாம் .
நமக்கு எது நிகழ்ந்தாலும் *இறைவன்* அதை நன்மைக்கு தான் செய்கிறார் என்பதை உணர்ந்து கொண்டால் வாழ்க்கை என்றும் இன்பமே.  
         ஆகவே காரணம் இல்லாமல் காரியம் இல்லை இந்தப் பிறப்பு ஈசனுக்கு தொண்டு செய்யவே எடுத்திருக்கிறோம் என்று எண்ணி சிவ சிந்தனையிலே நாமும் வாழ்ந்து வந்தால் நம் துன்பங்களை எல்லாம் அவன் பார்த்துக் கொள்வான் " சிவாய நமவென்று சிந்தித்திருப்போர்க்கு அபாயம் ஏதுமில்லை " துன்பம் ஆனாலும் இன்பம் ஆனாலும் அவனே கொடுத்திருக்கிறான் என்று சமமாக பாவித்தால் ஒரு காலும் துன்பமில்லை . 

           சிவமேஜெயம் - திருவடி முத்துகிருஷ்ணன் 

சிவத்தை போற்றுவோம் !!!   சித்தர்களை போற்றுவோம் !!!