புதன், ஏப்ரல் 29, 2015

பட்டினத்தார் கூறும் அருளுரைகள் ....






நன்னாரிற் பூட்டியசூத்திரப் பாவைநன் னார்தப்பினாலற்
றன்னாலு மாடிச்சலித்திடு மோவந்தத் தன்மையைப்போல்
உன்னாலி யானுந்திரிவ தல்லான்மற் றுனைப்பிரிந்தால்
என்னா லிங்காவதுண்டோ யிறைவாகச்சி யேகம்பனே .


பொம்மலாட்டம் எனப்படும் கலையில் நூலில் பொம்மையை கட்டி அதை ஆட்டுவிப்பர் . ஆட்டுவிப்பவன் இல்லாமல் அந்த பொம்மை தானே ஆடாது அதே போல என்னை  ஆட்டுவிக்கும் சூத்ரதாரி  நீ சொல்ல நான் ஆடுவேன் நீ உன் பிடியை விட்டுவிட்டால் என்னால் தனியே என்ன செய்ய இயலும் என் அப்பனே கச்சியின் கண் எழுந்தருள் செய்யும் ஏகம்ப நாதனே .

                                   நம்மை முழுமையாக ஈசன் பதத்தில் சேர்த்து விட வேண்டும் அவன் அருகில் இருத்தலே இப்பிறவிக்கு நலம் பயக்கும்அவன் துணை இல்லாமல் நம்மால் ஒன்றும் ஆகாது என்ற தத்துவத்தை இவ்வாறு விளக்குகிறார் . 



நல்லா ரிணக்கமும் நின்பூசை நேசமு ஞானமுமே
யல்லாது வேறு நிலையுளதோ அகமும் பொருளும்
இல்லாளுஞ் சுற்றமு மைந்தரும் வாழ்வும் எழிலுடம்பும்
எல்லாம் வெளிமயக்கே யிறைவாகச்சி யேகம்பனே.


நல்ல ஒழுக்கத்தை விட்டு வழுவாது இருக்கும் நல்லவர்களுடைய நட்பில் இருப்பதும்  உன்னை உள்ளன்போடு பூசை செய்வதும் , சிவ ஞானமும் அல்லாது இச் சிறியேனுக்கு வேறு நிலை உள்ளதோ எம்பெருமானே , இல்லை ! வாழும் வீடும் , சேர்த்து வைத்த பொன் முதலிய பெரும் செல்வங்களும் , நில புலன்களும் , மனையாளும் , புத்திர செல்வங்களும் , உறவினர்களும் , இறுமாப்புடன் தான் அழகு என்று இருக்கும் இந்த தேகமும் எல்லாம் நிலை இல்லை புற மயக்கமே இறைவா கச்சி ஏகம்ப நாதனே . 

                          சிவ பதம் மட்டுமே நிலை என்று உறுதி படக் கூறுகிறார் . 



                   சிவமேஜெயம் - திருவடி முத்துகிருஷ்ணன் 

    சிவத்தை போற்றுவோம் !! சித்தர்களை போற்றுவோம் !!
           


திங்கள், ஏப்ரல் 27, 2015

சீரான வாழ்விற்கு சித்தர்களின் அருளுரைகள் ..


      மகான் ஸ்ரீ பட்டினத்தார் 

                      அருளிய உபதேசங்கள்





அறந்தா னியற்று மவனிலுங் கோடியதி கமில்லந்
துறந்தா னவனிற்சதகோடி யுள்ளத்துற வுடையோன்
மறந்தா னறக்கற்றறிவோ டிருந்திரு வாதனையற்
றிருந்தான் பெருமையை யென் சொல்லுவேன் கச்சியேகம்பனே.


இல்லறத்தில் உள்ள கடமைகளை சரிவர செய்து மறுமையில் சொர்க்கத்தை அடையும் இல்லறத்துள் இருப்பவனிலும் புறப்பற்றை நீங்கப் பெற்றவன் ஒரு கோடி மடங்கு உயர்ந்தவனாவான் . அவனைக் காட்டிலும் அகப்பற்றை நீக்கி சந்நியாச நிலை அடைந்தவன்     நூறு கோடி மடங்கு உயர்ந்தவனாவான். தீவினையை நீக்கி பாவ புண்ணியங்களின் தாக்கம் தவிர்த்து நல்ல நூல்களை கற்று தவ ஒழுக்கத்தில் சிறந்து விளங்கும் மகா துறவியின் பெருமையை என்னவென்று சொல்லுவேன் திருக்கச்சியில் அருள் புரியும் ஏகம்ப நாதனே .

கட்டி யணைத்திடும் பெண்டீருமக்களுங் காலத்தச்சன்
வெட்டி முறிக்குமரம்போலற் சரீரத்தை வீழ்த்திவிட்டாற்
கொட்டிமுழக்கி யழுவார் மயானங் குறுகியப்பாற்
யெட்டியடி வைப்பரோ யிறைவாகச்சி யேகம்பனே .


தச்சன் வெட்டும் மரம் வீழ்வது போல காலத்தச்சன் என்னும் கூற்றுவன் நம் உயிரை வாங்கி நம் உடலை வீழும் படி செய்து விட்டால் , கட்டிய மனையாளும் நாம் அணைத்திடும் மக்களும் என்ன செய்வார்கள் பறைகளை ஒலித்து ஒப்பாரி வைப்பார் இடுகாடு வரை உடன் வந்து அழுவர் . அந்த இடுகாட்டை தாண்டி அவர்களால் ஒரு அடி எடுத்து வைக்க இயலுமா , என் இறைவனே கச்சியில் அருள் புரியும் ஏகம்பர நாதனே .


                          சிவமேஜெயம் - திருவடி முத்து கிருஷ்ணன் 


       சிவத்தை போற்றுவோம் !! சித்தர்களை போற்றுவோம் !!










ஸ்ரீ பாம்பாட்டி சித்தர் வரலாறு




                    பாம்பாட்டி சித்தர் கார்த்திகை மாதம் மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர். பாம்பைப் பிடிப்பது அவற்றின் விஷத்தை சேமித்து விற்பது.இதுவே பாம்பாட்டி சித்தரின் தொழில். இவர் விஷமுறிவு மூலிகைகளைப் பற்றி அறிந்திருந்ததால் அந்த ஊரில் பாம்புக்கடிக்கு சிறந்த வைத்தியராகத் திகழ்ந்தார். 

ஒருநாள் சிலர், மருத மலையின் மீது பெரிய நவரத்ன பாம்பு ஒன்று இருப்பதாகவும், அதன் தலையில் விலையுயர்ந்த மாணிக்கம் இருப்பதாகவும், அதனைப் பிடிப்பவன் திறனுள்ள பெரிய பாக்கியசாலி என்றும் பேசிச் சென்றனர். இதனைக் கேள்விப்பட்ட பாம்பாட்டி சித்தர் அதனைப் பிடிக்க விரும்பி காட்டிற்குள் சென்றார். பாம்பைத் தீவிரமாக தேடினார். அப்போது திடீரென பலத்த சிரிப்பொலி கேட்டுத் திரும்பினார். 

அங்கே மிகப் பிரகாசமான ஒளியோடு சட்டைமுனி சித்தர் நின்றார். “இங்கு எதைத் தேடுகிறீர்கள்?” என்று வினவினார். அதற்கு பாம்பாட்டி சித்தர் “நான் நவரத்ன பாம்பைப் பிடிக்க வந்தேன், அதைக் காணவில்லை” என்றார். இதைக் கேட்ட சட்டைமுனி சிரித்தார். “நவரத்ன பாம்பை உனக்குள் நீயே வைத்துக் கொண்டு வெளியே தேடுகின்றாயே! இது பயனற்ற செயல் அல்லவா! உனக்கு மிகவும் மகிழ்ச்சியையும் இப்பிறப்புக்கு நல்ல லாபத்தையும்  தரக்கூடிய ஓர் பாம்பு எல்லோர் உடலிலும் உண்டு, ஆனால் யாரும் அதை அறிவதில்லை. அதனால் வெளியில் திரியும் இந்தப் பாம்பை தேடுவதை விட்டுவிட்டு, உனக்குள் இருக்கும் பாம்பை கண்டு பிடி இல்லாத பாம்பைத் தேடி வெளியில் ஓடாதே, என்றார். 

                எல்லாவற்றையும் கேட்டு உண்மையை உணர்ந்த பாம்பாட்டியார் சித்தரின் காலில் விழுந்து வணங்கினார்.சட்டை முனி சித்தர் கனிவோடு பாம்பாட்டியைப் பார்த்து விளக்க மளிக்கத் தொடங்கினார். “அற்புதமான இந்த மனித சரீரத்தினுள் ஆதி யிலி ருந்தே ஒரு பாம்பு படுத்துக்கொண்டு இருக்கிறது. ‘குண்டலினி’ என்று அதற்கு பெயர். தூங்கிக் கொண்டு இருக்கும் அந்தப் பாம்பு அறிவை சுருக்குகிறது. இதன் நுட்பத்தை அறிவது அரிது. மக்களின் துன்பத்திற்கு மூலாதாரமே இந்த மூலாதாரப் பாம்பின் உறக்கம் தான். 

                 இறைவனை உணரப் பாடுபடுபவர்களுக்கு சுவாசம் ஒடுங்கும். அப்பொழுது ‘குண்டலினி’ என்ற அந்தப் பாம்பு விழித்து எழும். அதனால் தியானம் சித்திக்கும். இறைவன் நம்முள் வீற்றிருப்பார். மனிதனுள் இறைவனைக் காணும் இரகசியம் இதுவே” என்று சொல்லி முடித்தார். “குருதேவா! அரும்பெரும் இரகசியத்தை இன்று உங்களால் அறிந்தேன். மேலான இந்த வழியை விட்டு இனி நான் விலக மாட்டேன்!” என்று சொன்ன பாம்பாட்டியார், சித்தரை வணங்கி எழுந்தார். சித்தர் அருள்புரிந்து விட்டு மறைந்தார். பாம்பாட்டியார் செய்த தொடர்யோக சாதனையால் குண்டலினி யோகம் கைகூடியது. எல்லாவகை சித்துக்களும் சித்தியானது. இரவு பகலாக பல நாடுகளையும் சுற்றினார். மக்களின் வியாதிகளை மூலிகைகளால் குணமாக்கினார்.


                   அவர் பாடல்களில் செல்வம் , உடல் நிலையாமை பற்றியும் மெய்யான சிவபதத்தை நாடுவது பற்றியும் , விடுகதைகள் , சித்தர் வல்லமைகள் பற்றியும் தனது பாடல்களில் உபதேசங்கள் கூறுகிறார் .

மலைபோன்ற செம்பொற்குவை வைத்திருப்பவர் 
மறலி வருகையில் வாரிச்செல்வரோ 
அலை யாமலகத்தினை யத்தன் பால்வைத்தோர் 
அழியாரென்றே நீ துணிந்தாடாய் பாம்பே .


மலை அளவு செல்வக் குவியல்கள் இருந்தாலும் எமதர்மன் அழைக்கையில் தன்னுடன் செல்வங்களைக் கொண்டு போக முடியுமா முடியாது. அலையும் மனதினை ஈசன் பதத்தில் இருத்தி வைத்தவர்களை எமனும் கண்டு அஞ்சுவான் அவர்களுக்கு அழிவில்லை என்று ஆடுபாம்பே . என்று உள்ளிருக்கும் பாம்பை ஆட்டுவிக்கிறார் . 
                    



                        சிவமேஜெயம் - திருவடி முத்துகிருஷ்ணன் 



      சிவத்தை போற்றுவோம் !! சித்தர்களை போற்றுவோம் !!







செவ்வாய், ஏப்ரல் 21, 2015



காரைக்கால் அம்மையார் வரலாறு





            காரைக்கால் எனும் ஊரை பிறப்பிடமாகக் கொண்டதால் புனிதவதி தாயார் காரைக்கால் அம்மை என்று அழைக்கப் படுகிறார் .

                       வளங்கள் மிகுந்த காரை நகர்தனில் தனதத்தர் என்னும் பெரும் வணிகர் இருந்தார் . பெயருக்கு ஏற்றாற்போல செல்வம் அவரிடம் மிகுந்து இருந்தது . குறைவில்லாது இருந்த அவருக்கு அனைத்து செல்வங்களையும் அருளும் திருமகளே வந்து பிறந்ததைப் போன்று அழகிய பெண்குழந்தை பிறந்தது புனிதவதி என்று திருநாமம் சூட்டி மகிழ்ந்தனர் .

அந்தக் குழந்தையும் ஈசனின் நாமத்தை தவிர வேறு ஒன்றும் தெரியாது என்பது போல  சிவபெருமான் மேல் மிக்க பற்று கொண்டு வளர்ந்து வந்தது . தக்க பருவம் வந்ததும் நாகப்பட்டினத்தில் ஒரு பெரிய வணிகரின் மகனான பரமதத்தனுக்கு மணம் முடித்து வைத்தார்கள்.மணமக்கள் இருவரும் ஒருவர் மீது ஒருவர் அன்பு கொண்டு இல்லறத்தை நல்லறமாக நடத்தி வந்தார்கள் . அம்மையும் நடராஜ பெருமானுக்கும் அவன் அடியார்களுக்கும் தொண்டு செய்து தன் பக்தியினின்று விலகாது இல்லறம் நடத்தி வந்தார் . 
  
.        பரமதத்தனை வணிகம் பொருட்டு சந்திக்க வந்தவர் இரண்டு மாங்கனிகளை அவரிடம் கொடுத்தார்  அவரும் அக்கனிகளை வீட்டிற்கு அனுப்பி வைத்தார் . அம்மையார் அக்கனிகளை தன் நாயகனுக்கு பரிமாறும் பொருட்டு அதை வீட்டிற்குள் வைத்து விட்டு தன் வேலைகளை செய்து கொண்டிருக்கும் வேளையில் மிகுந்த பசியோடு ஒரு சிவனடியார் வந்தார் . உணவு தயாராகவில்லை மிகுந்த வேதனை அடைந்த அம்மையாருக்கு மாங்கனி நினைவு வரவே மகிழ்வு கொண்டு அடியாருக்கு மாங்கனியை படைத்து அடியாரின் பசி போக்கினார் . சிவனடியார் பசி தீர்ந்து அம்மையாரை வாழ்த்தி விட்டு சென்றார்  


   சிறிது நேரத்தில் பரமதத்தன் பகல் உணவு உண்ண வீடு வந்தவன் குளித்து விட்டு சாப்பிட உட்கார்ந்தான். கணவனுக்கு அறுசுவை உணவுகளோடு மீதமிருந்த ஒரு மாங்கனியையும் வைத்தார். பரமதத்தன் அக்கனியை ஆவலோடு சாப்பிட்டான். அக்கனி மிகவும் ருசியாக இருந்ததால் மற்றொரு கனி யையும் கொண்டு வரும்படி கேட்டான். இதை எதிர்பாராத அம்மையார் அதை எடுத்துக் கொண்டு வருபவர் போல உள்ளே சென்றாள். திடும் என்று இன்னொரு மாங் கனிக்கு என்ன செய்வதென்று தெரியாமல் திகைக்கிறாள். துன்பம் வரும் சமயத்தில் விடையேறும் பெருமானையன்றி யார் உதவுவார் என்று தெளிந்து அவரைத் தியானித்தாள். என்ன அதிசயம்! விடையேறும் பெருமான் அருளால் அவள் கையில் அதிமதுர மங்கனி ஒன்று வந்தது. வந்த மாங்கனியைக் கொண்டு வந்து கணவனுக்குக் கொடுத் தாள். அந்த மாங்கனியை உண்ட பரமதத்தன் அது முந்திய மாங்கனியை விடப் பலமடங்கு ருசியாக இருப் பதை உணர்ந்தான்.

                    இந்த மாங்கனி நான் கொடுத்து அனுப்பிய கனி அல்ல இதன் ருசி வேறாக இருக்கிறது. மூன்று உலகங்களிலும் இது போன்ற மாங்கனி கிடைப்பதரிது. இதை எங்கே வாங்கினாய்?” என்று கேட்க புனிதவதி திகைத்துப் போனாள். என்றாலும் நடந்ததை நடந்தபடி சொல்வது தன் கடமை என்று உணர்ந்து உண்மையைச் சொன்னாள்.ஆனால் பரமதத்தன் இதை நம்பத் தயாராக இல்லை. ”இக்கனி ஈசன் அருளால் கிடைத்த தென்றால் இதே போன்ற இன்னொரு கனியை வரவழைத்துக் கொடு பார்க்கலாம் "என்றான். இதைக் கேட்ட புனிதவதி, இது என்ன சோதனை? என்று கலக்கமடைந்தாள். என்றாலும் சிவபெருமானை வணங்கி, “ஐயனே! நீர் மாங்கனியை அளித்தருளவில்லை யென்றால், நான் சொன்ன வார்த்தைகள் பொய் வார்த்தைகளாகி விடுமே!” என்று வேண்ட, ஐயன் அருளால் ஒரு மாங்கனி வர, அம்மையார் அந்த மாங்கனியை பரமதத்தனிடம் கொடுத்தார் .

                     கனியை வாங்கிய பரமதத்தன் ஆச்சரியமும் அதிர்ச்சியும் திகைத்து நின்றான். இது வரை தான் பார்த்து வந்த புனிதவதி சாதாரண பெண்மணி அல்ல. இவள் ஒரு தெய்வத் தன்மை வாய்ந்த பெண்மணி என்று உணர்ந்தான். தன் கையில் இருந்த கனி மறையவும் இன்னும் திகைப்பில் இருந்தவரை அம்மையார் கனியை பார்க்கலாம் என்று சொன்னீர்கள் ஆதலால் பார்க்க மட்டுமே என் அப்பன் அருள் செய்தான் . என்றதும் அம்மையாரிடம் தன் மனையாள் என்ற நினைப்பு நீங்கப் பெற்று பெரும் அடியார் தெய்வப் பிறவி என்று எண்ணி அவரை நீங்க முடிவெடுத்தார் .

பெரும் செல்வம் ஈட்டும் பொருட்டு ஒரு வேலை இருப்பதாகவும் தான் வர சில நாட்கள் ஆகும் என்று போனவர் பாண்டிய நாட்டில் குலசேகர பட்டினம் என்னும் வந்தடைந்து வணிகம் செய்து பெரும் பொருள் ஈட்டி அவ்வூரில் உள்ள ஒரு வணிகரின் மகளை திருமணம் புரிந்து இல்லறம் நடத்தி வந்தார் . அவருக்கும் ஒரு பெண் குழந்தை பிறந்தது அக்குழந்தைக்கு புனிதவதி என்று அம்மையாரும் பெயரினையே சூட்டி மகிழ்ந்தார் .  இங்கே புனிதவதியார் மிகவும் மனம் நொந்து தன் கணவனை பிரிந்து தேடுவதற்கு ஆட்களை அனுப்பி வைத்தார்கள் . தேடியவர்கள் பரமதத்தனை பாண்டிய நாட்டில் கண்டோம் என்று சொன்னதும் அம்மையார் உடனே புறப்பட்டு தாய் தந்தை மற்றும் உறவினர்களோடு  குலசேகர பட்டினத்தை வந்தடைந்தார்கள் .  

                இந்த செய்தியை கேள்விப்பட்ட பரமதத்தரும் அம்மையாரை எதிர்கொண்டு தன் மனைவியோடும் மகளோடும் அம்மையார் திருப்பதத்தில் விழுந்தார் . அம்மையார் அதிர்ச்சியில் உறைந்து இருக்கையில் அனைவரும் திகைத்து இது என்ன செயல் மனைவியை வணங்குவதா " என்று வினவ  அவரும் இல்லை புனிதவதியை வணங்குவதில் தவறில்லை மானிடப் பிறவி இல்லை இவள் தெய்வப் பிறவி ஆதலால் தவறேதும் இல்லை என்று விளக்கம் அளித்தார்.

            பரமதத்தன் புனிதவதியின் பெருமகைளை சொல்ல கேட்ட உறவினர்கள் திகைத்து நின்றார்கள் . அம்மையாரும் கணவனுக்கு இல்லாத இந்த இளமையை இந்த உடலும் எதற்கு என்று திருவாலங்காட்டாரிடம் வேண்டி எனக்கு இந்த உடலை சுமப்பது பாராம் அப்பனே இதை நீங்கி பேய் வடிவம் தாரும் என்று இறைஞ்சி வேண்ட , என்ன ஆச்சர்யம் ! அப்பனும் , அம்மையாரின் எழிலுடம்பை நீக்கி பேய் வடிவம் கொடுத்து அருள் செய்தார் . தேவர்கள் மலர் மாரி பொழிந்து வாழ்த்தினர் இதையெல்லாம் கண்ட அவரின் உறவினர்கள் அச்சம் கொண்டு அம்மையாரை வணங்கிவிட்டு சென்றனர் . 

              பேய் வடிவம் தாங்கிய அம்மையார் நடமாடும் பெம்மானை " அற்புதத் திருவந்தாதி " என்னும் நூறு பாடல்கள் பாடி துதித்தார். பின் “திருஇரட்டை மணிமாலை” என்னும் பிரபந்தத்தையும் பாடியருளினார். புனிதவதியாரின் பேயுருவத்தைக் கண்டவர்கள் அதிசயமும் அச்சமும் அடைந்தார்கள். ஆனால் அவரோ

அண்டர் நாயகர் என்னை அறிவரேல்,
அறியா வாய்மை
எண்டிசை மாக்களுக்கு யான்
எவ்வுருவாய் என்?          
         என்று பாடினார் . 
                      
                            அம்மையார் பேயுருவோடு வட திசையிலுள்ள பல இடங்களுக்கும் யாத்திரையாகச் சென்றார். எல்லா இடங்களையும் கடந்த பின் விடையேறும் நாயகன்  வீற்றிருக்கும் கயிலை மலையை காண ஆவல் கொண்டார் . அப்பன் வீற்றிருக்கும் மலையைக் காலால் மிதிக்கலாகாது என்று காலால் நடப்பதை விட்டுத்  தலையால் நடந்து கயிலை  மலை ஏறும் போது உமையாள் அப்பனிடம் பேய் உருவம் தாங்கி தலையால் மலை ஏறும் இவர் யார் என்று கேட்க , உமையே வரும் இவர் நம்மைப் பேணும் அம்மை காண் என்று பதில் சொல்லி புனிதவதியாரை அம்மா என்று அன்போடு அழைத்தார் .
             

                        காரை அம்மையாரும் அப்பனே என்று அவன் பாதத்தில் வீழ , புரமெரித்தவன் அம்மையே என்ன வேண்டும் என்று கேட்க ,

பிறவாமை வேண்டும் மீண்டும்
பிறப்புண்டேல் உன்னை என்றும்
மறவாமை வேண்டும், இன்னும்
வேண்டும் நான் மகிழ்ந்து பாடி
அறவா, நீ ஆடும் போது உன்அடியின் கீழிருக்க”

 பிறவாமை வேண்டும். அப்படிப் பிறக்க நேர்ந்து விட்டால், ஐயனே உன்னை என்றும் மறவாமல் இருக்கும் படி செய்ய வேண்டும். இன்னும் ஒன்று வேண்டும்யாதெனில் ,  அரவம் சூடிய ஐயனே நீ ஆடும்போது அடியேன் உன்திருவடிநீழலில் இருக்க வேண்டும் எப்பொழுதும் உன்னைப் போற்றிப் பாட வேண்டும் என்றார் .

             
               அம்மையின் வேண்டுகோளைக் கேட்ட ஐயன், அம்மை கேட்ட வரங்களை அருளினான். மேலும் ”திருவாலங்காட் டில் நாம் ஆடும் ஆடலைக் கண்டு ஆனந்தமடைந்து எப்போதும் நம்மைப் பாடுவாய்” என்றும் அருள் செய்தான். காரைக்கால் அம்மையும் கைலாச மலையிலிருந்து தலை யாலே நடந்து வந்து திருவாலங்காட்டில் ஊர்த்வதாண்டவ மூர்த்தியைத் தரிசித்து அவருடைய எடுத்த பாதத்தின் கீழ் சிவானந்தத்தை அனுபவித்துக் கொண்டிருந்தார்.. இன்றும் அனுபவித்துக் கொண்டிருக்கிறார். ஐயனின் ஊர்த்வதாண்டவத்தைக்கண்டதும் “கொங்கை திரங்கி” என்று தொடங்கும் திருவாலங்காட்டுப் பதிகம் பாடினார்.
                           
                                 அப்பனே அம்மை என்று அழைத்த காரைக்கால் அம்மையாரை வணங்கி நாமும் அவன் அருள் பெறுவோம் . 

                              
                      சிவமேஜெயம் - திருவடி முத்துகிருஷ்ணன் 


          சிவத்தை போற்றுவோம் !! சித்தர்களை போற்றுவோம் !!
                         

திங்கள், ஏப்ரல் 20, 2015


போதை பழக்கம் பற்றி சித்தர்கள் 


சிவனை வணங்குவோர் கஞ்சா மற்றும் போதை பொருள் உட் 
கொள்ளலாம் என்கிற தவறான கூற்றுக்கு சித்தர்களின்  அறிவுரை  

கஞ்சாப் புகைபிடி யாதே - வெறி
காட்டி மயங்கியே கட்குடி யாதே
அஞ்ச வுயிர்மடி யாதே - புத்தி 

அற்றவஞ் ஞானத்தி னூல்படி யாதே.


  போதை என்பது நம் அறிவை மயக்கி நம்மை மூர்க்கனாக மூடர்களாக மாற்றும் ஆதலால் போதைப் புகை , மற்றும் மதுபானங்களையும் அருந்துதல் தவறானது எண்டு கடுவெளியார் சாடுகிறார் .

  திருமூலரும் தனது திருமந்திரத்தில் 

காமமும் கள்ளும் கலதி கட்கே ஆகும்
மா மலமும் சமயத்துள் மயல் உறும்
போ மதி ஆகும் புனிதன் இணை அடி
ஓமய ஆனந்தத் தேறல் உணர்வு உண்டே.


காமமும் , மதுவும் மக்களை கெட வைக்கும் இஃது தீய குணமுடைய கீழ் மக்களுக்கு உரியன ,  நல் மாந்தர் எது செய்வாரென்றால் தூய்மையான வெள்ளை நிறமுடைய திருநீறினை அணிந்து , தம்மை அண்டியவரை காத்தருளும் திருவடியை உடைய புனிதனை போற்றி அவன் திருவடி மலர்களில் கிடந்து அந்த இனிமையான தேனை உண்டு அந்த உணர்விலே இருப்பார்கள் . திருவடி உணர்வு அவர்களை எந்தத் தீங்கும் சேரா வண்ணம் காக்கும் . 

                                    என்று திருமூலரும் கூறுகிறார் 




               சிவமேஜெயம் - திருவடி முத்துகிருஷ்ணன் 

சிவத்தை போற்றுவோம் !! சித்தர்களை போற்றுவோம் !! 



                                       










வெள்ளி, ஏப்ரல் 17, 2015

108 சித்தர்களும் அவர்களின் ஜீவ சமாதிகளும் 







1. திருமூலர் - சிதம்பரம். 
2. போகர் - பழனி என்கிற ஆவினன்குடி. 
3. கருவூர்சித்தர் – கருவூர், திருகாளத்தி, ஆணிலையப்பர் கோவில். 
4. புலிப்பாணி - பழனி அருகில் வைகாவூர்.
5. கொங்கணர் - திருப்பதி, திருமலை
6. மச்சமுனி - திருப்பரங்குன்றம், திருவானைக்கால் 
7. வல்லப சித்தர் என்னும் சுந்தரானந்தர் - மதுரை.
 8. சட்டைமுனி சித்தர் – திருவரங்கம். 
9. அகத்தியர் – திருவனந்தபுரம், கும்பகோணத்திலுள்ள கும்பேஸ்வரர் கோவில். 
10. தேரையர் - தோரணமலை (மலையாள நாடு) 
11. கோரக்கர் – பேரூர். 
12. பாம்பாட்டி சித்தர் - மருதமலை, துவாரகை, விருத்தாசலம். 
13. சிவவாக்கியர் - கும்பகோணம். 
14. உரோமரிசி - திருக்கயிலை 
15. காகபுசுண்டர் - திருச்சி, உறையூர். 
16. இடைக்காட்டுச் சித்தர் - திருவண்ணாமலை 
17. குதம்ப்பைச் சித்தர் - மயிலாடுதுறை 
18. பதஞ்சலி சித்தர் - சிதம்பரம், அழகர் கோவில், இராமேஸ்வரம். 
19. புலத்தியர் - பாபநாசம், திருஆலவுடையார் கோவில்.
20. திருமூலம் நோக்க சித்தர் - மேலை சிதம்பரம். 
21. அழகண்ண சித்தர் - நாகப்பட்டினம். 
22. நாரதர் - திருவிடைமருதூர், கருவை நல்லூர். 
23. இராமதேவ சித்தர் - அழகர் மலை 
24. மார்க்கண்டேயர் - கருவை நல்லூர். 
25. புண்ணாக்கீசர் - நண்ணாசேர். 
26. காசிபர் - ருத்ரகிரி 
27. வரதர் - தென்மலை 
28. கன்னிச் சித்தர் - பெருங்காவூர். 
29. தன்வந்தரி – வைத்தீஸ்வரன் கோவில் 
30. நந்தி சித்தர் - காசி, திருவாவடுதுறை, காளங்கி. 
31. கடுவெளி சித்தர் - திருக்காஞ்சிபுரம். 
32. விசுவாமித்திரர் - காசி, திருவாவடுதுறை, காளங்கி. 
33. கௌதமர் - திருவருணை, திருவிடைமருதூர். 
34. கமல முனி - திருவாரூர் . 
35. சந்திரானந்தர் - திருவாஞ்சியம். 
36. சுந்தரர் - வாரிட்சம், திருவாரூர். 
37. காளங்கி நாதர் - திருக்கடவூர், திருப்பணந்தாள். 
38. வான்மீகி - எட்டிக்குடி, திருவையாறு. 
39. அகப்பேய் சித்தர் - திருவையாறு, எட்டிக்குடி. 
40. பட்டினத்தார் - திருவொற்றியூர். 
41. வள்ளலார் - வடலூர். 
42. சென்னிமலை சித்தர் - கேரளத்தில் உள்ள நாங்குனாசேரி. 
43. சதாசிவ_பிரமேந்திரர்_சமாதிசதாசிவப் பிரம்மேந்திரர் - நெரூர். 
44. ராமகிருஷ்ணர், சாரதாதேவியார் - பேலூர் மடம் 
45. ராகவேந்திரர் - மந்திராலயம். 
46. ரமண மகரிஷி - திருவண்ணாமலை, மாத்ருபூதேஸ்வரர் ஆலயம். 
47. குமரகுருபரர் - காசி. 
48. நடன கோபால நாயகி சுவாமிகள் - காதக்கிணறு. 
49. ஞானானந்த சுவாமிகள் - அனைத்து தபோவனங்கள். 
50. ஷீரடி சாயிபாபா - ஷீரடி. 
51. சேக்கிழார் பெருமான் - மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சுவாமி சன்னதிக்கு பின்புறம். 
52. ராமானுஜர் - ஸ்ரீரங்கம். 
53. பரமஹம்ச யோகானந்தர் - கலிபோர்னியா. 
54. யுக்தேஸ்வரர் - பூரி. 
55. ஜட்ஜ் சுவாமிகள் - புதுக்கோட்டை 
56. ஆதி பராசக்தி திருகோவிலில் 21 சித்தர்களின் ஜீவ சமாதிகள் உள்ளன. 
57. கண்ணப்ப நாயனார் - காளஹஸ்தி. 
58. சிவப்பிரகாச அடிகள் - திருப்பழையாறை வடதளி. 
59. குரு பாபா ராம்தேவ் - போகரனிலிருந்து 13 கி.மி. 
60. ராணி சென்னம்மாள் - பிதானூர், கொப்புலிமடம். 
61. பூஜ்ய ஸ்ரீ சித்த நரஹரி குருஜி - மதுரை மாரியம்மன் தெப்பக்குளம் அருகில் சித்தாசிரமம். 
62. குழந்தையானந்த சுவாமிகள் - மதுரை காளவாசல். 
63. முத்து வடுகநாதர் - சிங்கம் புணரி. 
64. இராமதேவர் - நாகப்பட்டிணம். 
65. அருணகிரிநாதர் - திருவண்ணாமலை. 
66. பாடக்சேரி தவத்திரு இராமலிங்க சுவாமிகள் – தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் திருக்கோவில். 67. மௌன சாமி சித்தர் - தென்காசியிலிருந்து செங்கோட்டை செல்லும் வழியில் உள்ளது. 
68. சிறுதொண்டை நாயனார் - திருச்செட்டாங்குடி. 
69. ஒடுக்கத்தூர் சுவாமிகள் - பெங்களூரில் அல்சூர் ஏரிக்கரையில் உள்ளது. 
70. வல்லநாட்டு மகாசித்தர் - வல்லநாடு. 
71. சுப்பிரமணிய சித்தர் - ரெட்டியப்பட்டி. 
72. சிவஞான பாலசித்தர் - மயிலாடுதுறை முருகன் சந்நிதி. 
73. கம்பர் - நாட்டரசன் கோட்டை. 
74. நாகலிங்க சுவாமிகள் - புதுவை அம்பலத்தாடையார் மடம். 
75. அழகர் சுவாமிகள் - தென்னம்பாக்கம். 
76. சிவஞான பாலைய சுவாமிகள் - புதுவைக்கு வடக்கே 6 மைல் தொலைவில் உள்ளது. 
77. சித்தானந்த சுவாமிகள் - புதுவைக்கு அருகிலுள்ள கருவடிக்குப்பம். 
78. சக்திவேல் பரமானந்த குரு - புதுவையிலுள்ள முதலியார் பேட்டை. 
79. ஸ்ரீராம் பரதேசி சுவாமிகள் - வில்லியனூர் செல்லும் பாதையில் வலப்புறம் அமைந்து உள்ளது. 
80. அக்கா சுவாமிகள் - புதுவையில் உள்ள குதிரைக்களம் அருகே. 
81. மகான் படே சுவாமிகள் - சின்னபாபு சமுத்திரம். 
82. கம்பளி ஞானதேசிக சுவாமிகள் - புதுவை அருகில் ருத்திர பூமிக்கு சமீபமாக அமைந்துள்ளது. 
83. பகவந்த சுவாமிகள் - புதுப்பாளையத்தில் கெடில நதிக்கரையில். 
84. கதிர்வேல் சுவாமிகள் – ஸ்ரீலங்கா, புதுவை அருகில் சித்தன் குடியிலும் சமாதி உண்டு. 
85. சாந்த நந்த சுவாமிகள் - ஸ்ரீ சாரதா சிவகங்கை பீடத்திற்கு அருகில் உள்ளது. 
86. தயானந்த சுவாமிகள் - புதுப்பாளையத்தில் கெடில நதிக்கரையில். 
87. தஷிணாமூர்த்தி சுவாமிகள் - பாண்டிசேரியடுத்த பள்ளித் தென்னல். 
88. ஞானகுரு குள்ளச்சாமிகள் - புதுவை. 
89. வேதாந்த சுவாமிகள் - புதுவை, திருமுத்துகுமார் சுவாமிகள் தோட்டத்தில் உள்ளது. 
90. லஷ்மண சுவாமிகள் - புதுவையிலுள்ள புதுப்பட்டி. 
91. மண்ணுருட்டி சுவாமிகள் - புதுவையிலுள்ள சுதேசி காட்டன் மில் எதிரில். 
92. சுப்பிரமணிய அபிநய சச்சிதானந்த பாரதி சுவாமிகள் - பாண்டிசேரியிலுள்ள எல்லப் பிள்ளை. 
93. யோகி ராம் சுரத்குமார் (விசிறி சுவாமிகள்) - திருவண்ணாமலை. 
94. கோட்டூர் சுவாமிகள் - சாத்தூர் அருகிலுள்ள கோட்டூர். 
95. தகப்பன் மகன் சமாதி - கிரிவலம் வந்த நல்லூர் அருகே பனையூர். 
96. நாராயண சாமி அய்யா சமாதி - நாகர்கோவில். 
97. போதேந்திர சுவாமிகள் - தஞ்சை மாவட்டத்திலுள்ள மருதநல்லூர்.
 98. அவதூர ரோக நிவர்தீஸ்வரர் சுவாமிகள் - சென்னை பூந்தமல்லி. 
99. வன்மீக நாதர் - எட்டிக்குடி. 
100. தம்பிக்கலையான் சித்தர் - சென்னை திருவான்மியூர் மருந்தீஸ்வரர் திருக்கோவிலில் உள்ள 108 சிவலிங்கங்களில் இரண்டாவதாக உள்ள லிங்கத்தில் ஐக்கியம் ஆகியுள்ளார். 
101. மெய்வரத் தம்பிரான் சுவாமிகள் - திருச்சி, ஜெயங்கொண்ட சோழபுரத்திலிருந்து 25 கி.மீ. தொலைவில் உள்ளது. 
102. குகை நாச்சியார் மகான் - திருவண்ணாமலை. 
103. வாலைகுருசாமி - சிதம்பரத்திலுள்ள கொம்மடிக் கோட்டை. 
104. பாம்பன் சுவாமிகள் - திருவான்மியூர். 
105. குமாரசாமி சித்தர் சுவாமிகள் - கோயமுத்தூரிலுள்ள பூராண்டான் பாளையம். 
106. பெரியாழ்வார் சுவாமிகள் - அழகர் கோவில் (மதுரை) 
107. மாயம்மா ஜீவசமாதி - கன்னியாகுமரி. 
108. பரமாச்சாரியார் ஜீவசமாதி - காஞ்சிபுரம்.


        சிவமேஜெயம் - திருவடி முத்துகிருஷ்ணன் 

சிவத்தை போற்றுவோம் !! சித்தர்களை போற்றுவோம் !!

வியாழன், ஏப்ரல் 16, 2015

63 நாயன்மார்களும் அவர்களின் பூசை தினமும் 



சிவபெருமானை போற்றுவதே தம் வாழ்க்கையாக கொண்டு வாழ்ந்து உயர்ந்த நாயன்மார்கள் பெயர்கள் .


 1. அதிபத்தர் நாயனார்    - ஆவணி ஆயில்யம்
 2. அப்பூதியடிகள்             - தை சதயம்
 3. அமர்நீதி நாயனார்      - ஆனி பூரம்
 4. அரிவாட்டாயர்            - தை திருவாதிரை
 5. ஆனாய நாயனார்       - கார்த்திகை ஹஸ்தம்
 6. இசை ஞானியார்         - சித்திரை  சித்திரை
 7. 
மெய்ப்பொருள் நாயனார் - கார்த்திகை உத்திரம் 
 8. இயற்பகையார்           - மார்கழி உத்திரம்
 9.  இளையான்குடி மாறார் - ஆவணி மகம்
10. உருத்திர பசுபதியார் - புரட்டாசி அசுவினி
11. எறிபத்த நாயனார்    - மாசி ஹஸ்தம்
12. ஏயர்கோன் கலிகாமர்  - ஆனி ரேவதி
13. ஏனாதிநாத நாயனார் -  புரட்டாசி உத்திராடம்
14. ஐயடிகள் காடவர்கோன் - ஐப்பசி மூலம்
15. கணநாதர் நாயனார்    - பங்குனி திருவாதிரை
16. கணம்புல்லர் நாயனார் - கார்த்திகை கார்த்திகை
17. கண்ணப்ப நாயனார் - தை மிருகசீரிஷம்
18. கலிய நாயனார்    - ஆடி கேட்டை
19. கழறிற்றறிவார்     - ஆடி சுவாதி 


20. காரி நாயனார்          - மாசி பூராடம் 

21. காரைக்கால் அம்மையார் - பங்குனி சுவாதி 

22. கழற்சிங்கர்  நாயனார் - வைகாசி பரணி 

23.குலச்சிறையார்     - ஆவணி அனுஷம் 

24. கூற்றுவர் நாயனார்  - ஆடி திருவாதிரை 

25. கலிக்கம்ப நாயனார்  - தை ரேவதி 

26. குங்கிலிக்கலையனார்  - ஆவணி மூலம் 

27. சடைய நாயனார்    -   மார்கழி திருவாதிரை 

28. சிறுத்தொண்ட நாயனார் - சித்திரை பரணி 

29. கோச்செங்கட் சோழன் - மாசி சதயம் 

30. கோட்புலி நாயனார்      - ஆடி கேட்டை 

31. சக்தி நாயனார்      - ஐப்பசி பூரம் 

32. செருத்துணை நாயனார் - ஆவணி பூசம் 

33. சண்டேசுவர நாயனார் - தை உத்திரம் 

34. சோமாசிமாறர்        - வைகாசி ஆயில்யம் 

35. சுந்தரமூர்த்தி நாயனார் - ஆடி சுவாதி 

36. திருக்குறிப்பு தொண்ட நாயனார் - சித்திரை சுவாதி 

37. சிறப்புலி நாயனார்     - கார்த்திகை பூராடம் 

38. திருநாளைப் போவார் - புரட்டாசி ரோகினி 

39. திருஞான சம்பந்தர்  - வைகாசி மூலம் 

40. தண்டியடிகள் நாயனார் - பங்குனி சதயம் 

41. சாக்கிய நாயனார் - மார்கழி பூராடம் 

42. நமிநந்தியடிகள்    - வைகாசி பூசம் 

43. புகழ்ச்சோழ நாயனார் - ஆடி கார்த்திகை 

44. நின்றசீர் நெடுமாறர் - ஐப்பசி பரணி 

45. திருநாவுக்கரச நாயனார்  - சித்திரை சதயம் 

46. நரசிங்க முனையர்  - புரட்டாசி சதயம் 

47. திருநீலகண்ட நாயனார்  - தை விசாகம் 

48. திருமூல நாயனார்  - ஐப்பசி அசுவினி 

49. திருநீலகண்ட யாழ்ப்பாணர் - வைகாசி மூலம் 

50. திருநீலநக்க நாயனார் -  வைகாசி மூலம் 

51.  மூர்த்தி நாயனார்    - ஆடி கார்த்திகை 

52. முருக நாயனார்  - வைகாசி மூலம் 

53. முனையடுவார் நாயனார் - பங்குனி பூசம் 

54. மங்கையர்க்கரசியார் - சித்திரை ரோகினி 

55. பெருமிழலைக் குறும்பர் - ஆடி சித்திரை 

56. மானக்கஞ்சாறர்  - மார்கழி சுவாதி 

57. பூசலார் நாயனார்  - ஐப்பசி அனுஷம் 

58. நேச நாயனார்    - பங்குனி ரோகினி 

59. மூர்க்க நாயனார் - கார்த்திகை மூலம் 

60. புகழ்த்துணை நாயனார்  - ஆனி ஆயில்யம்

61. வாயிலார் நாயனார் - மார்கழி ரேவதி 

62. விறன் மீண்டநாயனார் - சித்திரை திருவாதிரை

63. இடங்கழி நாயனார்    - ஐப்பசி கார்த்திகை 


     சிவத்தொண்டு புரிந்து அவன் அடியார்களுக்கும் தொண்டு செய்த அறுபத்து மூவர் பதம் பணிந்து அவர்களோடு நாமும் நம் அப்பனை வணங்கி பெரும் பேரு அடைவோம் .


                சிவமேஜெயம் - திருவடி முத்துகிருஷ்ணன்

சிவத்தை போற்றுவோம் !! சித்தர்களை போற்றுவோம் !! 











கோள்களை கண்டு நாம்
                  ஏன் அஞ்ச வேண்டும் ?




கோள்களை கண்டு நாம் ஏன் அஞ்ச வேண்டும் அவை தம் கடமைகளை செய்கின்றன நாமும் நம் கடமை ஈசனை பணிந்து கிடப்பதே என்று அவன் பதத்தை பற்றுவோமேயானால் அவைகள் நம்மை என்ன செய்ய முடியும் .
ஞானக்குழந்தை திருஞான சம்பந்தரும் தன்னுடைய கோளறு பதிகத்தில் இவ்வாறு குறிப்பிடுகிறார் .

திருஞானசம்பந்த சுவாமிகள் 

அருளிய கோளறு பதிகம்


வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன்
மிகநல்ல வீணை தடவி
மாசறு திங்கள்கங்கை முடிமே லணிந்தென்
உளமே புகுந்த அதனால்
ஞாயிறு திங்கள்செவ்வாய் புதன்வியாழன் வெள்ளி
சனிபாம்பி ரண்டு முடனே
ஆசறு நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே. 


என்பொடு கொம்பொடாமை யிவைமார் பிலங்க
எருதேறி யேழை யுடனே
பொன்பொதி மத்தமாலை புனல்சூடி வந்தென்
உளமே புகுந்த அதனால்
ஒன்பதொ டொன்றொடேழு பதினெட்டொ டாறும்
உடனாய நாள்க ளவைதாம்
அன்பொடு நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே. 


உருவலர் பவளமேனி ஒளிநீ றணிந்து
உமையோடும் வெள்ளை விடைமேன்
முருகலர் கொன்றைதிங்கள் முடிமே லணிந்தென்
உளமே புகுந்த அதனால்
திருமகள் கலையதூர்தி செயமாது பூமி
திசை தெய்வ மானபலவும்
அருநெதி நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே. 


மதிநுதல் மங்கையோடு வடபா லிருந்து
மறையோது மெங்கள் பரமன்
நதியொடு கொன்றைமாலை முடிமே லணிந்தென்
உளமே புகுந்த அதனால்
கொதியுறு காலனங்கி நமனோடு தூதர்
கொடுநோய்க ளான பலவும்
அதிகுண நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே.
 


நஞ்சணி கண்டனெந்தை மடவாள் தனோடும்
விடையேறும் நங்கள் பரமன்
துஞ்சிருள் வன்னிகொன்றை முடிமே லணிந்தென்
உளமே புகுந்த அதனால்
வெஞ்சின அவுணரோடு முருமிடியு மின்னு
மிகையான பூத மவையும்
அஞ்சிடு நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே. 


வாள்வரி யதளதாடை வரிகோ வணத்தர்
மடவாள் தனோடு முடனாய்
நாண்மலர் வன்னிகொன்றை நதிசூடி வந்தென்
உளமே புகுந்த அதனால்
கோளரி யுழுவையோடு கொலையானை கேழல்
கொடுநாக மோடு கரடி
ஆளரி நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே. 


செப்பிள முலைநன்மங்கை ஒருபாக மாக
விடையேறு செல்வ னடைவார்
ஒப்பிள மதியுமப்பும் முடிமே லணிந்தென்
உளமே புகுந்த அதனால்
வெப்பொடு குளிரும்வாதம் மிகையான பித்தும்
வினையான வந்து நலியா
அப்படி நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே. 


வேள்பட விழிசெய்தன்று விடமே லிருந்து
மடவாள் தனோடும் உடனாய்
வாண்மதி வன்னிகொன்றை மலர்சூடி வந்தென்
உளமே புகுந்த அதனால்
ஏழ்கடல் சூழிலங்கை அரையன்ற னோடும்
இடரான வந்து நலியா
ஆழ்கடல் நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே. 


பலபல வேடமாகும் பரனாரி பாகன்
பசுவேறும் எங்கள் பரமன்
சலமக ளோடெருக்கு முடிமேல் அணிந்தென்
உளமே புகுந்த அதனால்
மலர்மிசை யோனுமாலும் மறையோடு தேவர்
வருகால மான பலவும்
அலைகடல் மேருநல்ல அவைநல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே. 


கொத்தலர் குழலியோடு விசயற்கு நல்கு
குணமாய வேட விகிர்தன்
மத்தமு மதியுநாகம் முடிமே லணிந்தென்
உளமே புகுந்த அதனால்
புத்தரொ டமணைவாதில் அழிவிக்கு மண்ணல்
திருநீறு செம்மை திடமே
அத்தகு நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே. 


தேனமர் பொழில்கொளாலை விளைசெந்நெல் துன்னி
வளர்செம்பொன் எங்கும் நிகழ
நான்முகன் ஆதியாய பிரமா புரத்து
மறைஞான ஞான முனிவன்
தானுறு கோளும்நாளும் அடியாரை வந்து
நலியாத வண்ணம் உரைசெய்
ஆனசொல் மாலையோதும் அடியார்கள் வானில்
அரசாள்வர் ஆணை நமதே. 




            ஆணையிட்டுக் கூறுகிறார் சிவனடியார்களை நவக் கோள்கள் என்ன செய்ய முடியும் என்று . நாமும் ஈசனை பணிந்து அவன் பதமே கதி என்று இருந்து நவக் கோள்களை வென்று இருப்போம் . 


                   சிவமேஜெயம் - திருவடி முத்துகிருஷ்ணன் 

   சிவத்தை போற்றுவோம் !! சித்தர்களை போற்றுவோம் !!