திங்கள், அக்டோபர் 10, 2011

சந்தான குரவர் மறைஞான சம்பந்தர்




         சந்தான குரவர்கள்  மறைஞான சம்பந்தர்



மெய்கண்ட (உண்மை) சாத்திரங்கள் என்று போற்றப்படும், சைவசித்தாந்த சாத்திரங்களில் சிவஞானபோதம்  தலைசிறந்ததாகப் போற்றப்படுகிறது. இதை எழுதியவர் மெய்கண்டார். இவரைச் சார்ந்தே சந்தான குரவர் என்னும் சைவ மரபு தோன்றியது. மெய்கண்டாரின் மாணவர் அருணந்தி சிவாச்சாரியார். அவரது மாணவர் மறைஞானசம்பந்தர். வெள்ளாற்றின் கரையோரம் உள்ள பெண்ணாகரத்தில் (கடலூர் மாவட்டம்) ஆவணி உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்த இவர், அருணந்தி சிவாச்சாரியாரிடம் சிவதீட்சை பெற்றார். சிவதர்மம் என்னும் ஆகமத்தின் உத்தரபாகத்தை தமிழில் மொழி பெயர்த்தார்.  இவருடைய வாழ்வில் நடந்த சுவாரஸ்யமான சம்பவம் ஒன்று உண்டு.


 ஒருமுறை சிதம்பரம் நடராஜர் கோயிலில் அர்ச்சகராகப் பணியாற்றிய உமாபதி சிவாச்சாரியார் என்பவர் பூஜைகளை முடித்துக் கொண்டு, மேளதாளத்துடன் வீட்டுக்கு பல்லக்கில் சென்று கொண்டிருந்தார். (அக்காலத்தில், கோயில்களில் பூஜை செய்யும் அர்ச்சகர்களை பல்லக்கில் கொண்டு சென்று வீட்டில் விடுவதும், பகலாக இருந்தாலும் தீவட்டி பிடித்துச் செல்வதும் வழக்கம்)  உச்சிவேளை... வெயில் நன்கு காய்ந்து கொண்டிருந்தது. அந்தப் பட்டப்பகல் நேரத்தில், பல்லக்கின் முன்னே ஒருவன் தீவட்டி பிடித்துச் சென்று கொண்டிருந்தான். செல்லும் வழியில் ஒரு வீட்டின் திண்ணையில் அமர்ந்திருந்தார் மறைஞானசம்பந்தர். உமாபதியின் பல்லக்கையும், முன்னே தீவட்டியும் செல்வதைக் கண்ட அவர், பட்ட மரத்தில் பகல்குருடு போகுது பார் என்று அவருடைய காதில் படும்படி உரக்க சத்தமிட்டார்.உமாபதி சிவாச்சாரியாரின் காதுகளில் இது கேட்டது. கற்பூரத்தில் பற்றிய நெருப்பு எப்படி கொழுந்து விட்டு எரியுமோ, அதுபோல அவரது மனதில், இந்த வார்த்தைகள் ஞானக்னியாக பற்றிக் கொண்டது.


சிவஜோதி அவருள் தனலாய் எழுந்தது. பல்லக்கிலிருந்து கீழே குதித்தார். மறைஞான சம்பந்தரிடம் ஓடினார், என்னை சீடராக ஏற்றுக் கொள்ளுங்கள், என்று அவரது திருவடிகளில் பணிந்தார். மறைஞானசம்பந்தர், அவரிடம் ஒருவார்த்தை கூட பேசவில்லை. திண்ணையில் இருந்து எழுந்தார். அப்படியே நடக்கத் தொடங்கினார். உமாபதி சிவமும் விடுவதாக இல்லை. அவரைப் பின்தொடர்ந்தார். மறைஞானசம்பந்தர் ஒரு வீட்டின் முன் நின்றார். அந்த வீட்டில் இருந்தவர்கள், காய்ச்சிய கூழை அவரது கைகளில் பிச்சையாக வார்த்தனர். சிவபிரசாதம் என்று சொல்லிக் கொண்டே மறைஞானசம்பந்தர் அதை அண்ணாந்து குடித்தார். அப்போது அவரது கையிடுக்கு வழியாக கூழ் ஒழுகத் தொடங்கியது. குருவாக ஏற்றுக் கொண்ட உமாபதி, சிந்திய கூழை குரு பிரசாதம் என்று சொல்லிக் குடித்தார். அதுமுதல் உமாபதிசிவாச்சாரியார், மறைஞானசம்பந்தரின் சீடரானார். 


உமாபதி சிவாச்சாரியாரோடு சந்தானக்குரவர் என்னும் மரபு முற்றுப்பெற்றது. சிந்தாந்த அட்டகம் என்னும் எட்டு நூல்களை எழுதினார். இதில் குருவின் மீது கொண்ட ஈடுபாட்டால் எழுதிய நூல் நெஞ்சுவிடு தூது என்பதாகும். சரி...உமாபதி சிவாச்சாரியாருக்கு ஞானத்தை ஏற்படுத்திய பட்டமரத்தில் பகல் குருடு போகுது பார் என்ற சொற்றொடரின் சூட்சுமம் தெரிய வேண்டாமா!பட்டமரத்தின் கட்டைகளால் செய்யப்பட்டது பல்லக்கு. அந்தப் பல்லக்கில் சென்றவர் உமாபதி. பகலில் தீவட்டி ஏந்திச் சென்றதால், அவர் குருடாகிறார். அதாவது, பல்லக்கு, பரிவாரம் ஆகிய வசதிகளெல்லாம் தற்காலிகமானவை. இவை இறைவனை அடைவதற்குரிய சாதனங்கள் அல்ல. அதாவது, இறைவன் அருகில் இருந்து பூஜை செய்தால் மட்டும் ஆண்டவனை அறிய முடியாது. நிஜமான பக்தி இருந்தால், இறைவனை பாமரன் கூட அடைய முடியும் என்பதே இதன் சூட்சுமம்.





நன்றி தினமலர் 

1 கருத்து:

  1. ஐயா வணக்கம்,

    சந்தானக்குரவர்களை சிவாச்சாரியார் என அழைக்கக் கூடாது. சிவம் என்றுதான் அழைக்க வேண்டும். ஏனெனில் சிவாச்சாரியார் என்பது ஒரு வகுப்பினரைச் சாரும்.
    13-13 ஆம் நூற்றாண்டுகளில் ஞான தீக்கை பெற்ற அருளாளர்களை சிவம் என்று பின்னொட்டுப் பெயரிட்டு அழைத்தனர் மக்கள்.
    சிவாச்சாரியார் என்பது ஒரு வகுப்பைச் சார்ந்தவர் எனப் பொருள்படும். சிவம் என்பது ஞானதீக்கை பெற்ற அருளாளர் எனப் பொருள்படும.

    நன்றி
    சாமி
    www.arundhtamil.blogspot.in

    பதிலளிநீக்கு