புதன், அக்டோபர் 05, 2011

சித்தர் பாடல்களில் இருந்து 6

ஞான குரு பட்டினத்தார்
 பாடல்களில் இருந்து......... 



நெருப்பான மேனியர் செங்காட்டில் ஆத்தி நிழல் அருகே
இருப்பார் திருவுளம் எப்படி யோஇன்னம் என்னை அன்னைக்
கருப்பா சயக்குழிக்கே தள்ளு மோகண்ணன் காணரிய
திருப்பாத மேதரு மோதெரி யாது சிவன்செயலே.



ஜோதியாய் ஒளிரும் மேனி கொண்ட எம் இறைவன் திருச்செங்காட்டிலே ஆத்தி மரத்து நிழலிலே அமர்ந்து இருப்பார் . அவர் திருவுளம் எப்படியோ என்னை இன்னும் ஓர் அன்னை வயிற்றினில் பிறப்பெடுக்க வைக்குமோ அல்லது மேகம் போன்ற கருநிறமுடைய கண்ணனும் காணாத திருவடியை அருளுமோ எனக்கு என்ன தெரியும் எல்லாம் சிவனுக்கு தான் தெரியும் . 
  
ஐயுந் தொடர்ந்து, விழியுஞ் செருகி, அறிவழிந்து,
மெய்யும் பொய்யாகி விடுகின்ற போதொன்று வேண்டுவன்யான்
செய்யுந் திருவெற்றி யூர்உடையீர்! திரு நீறுமிட்டுக்
கையுந் தொழப் பண்ணி ஐந்தெழுத் தோதவுங் கற்பியுமே. 



மரண காலத்தில் நம்மையறியாமல் கோழை வழிந்து கண்களும் பஞ்சடைத்து உணர்வும் ஒழிந்து இந்த உடலமும் சடமாகி அனைத்தும் பொய்யாகி போகும்போது அடியேன் உம்மிடம் ஒன்று வேண்டுகிறேன் . அது யாதெனில் திருவொற்றியூரில் வீற்றிருக்கும் சிவபெருமானே எனக்கு திருநீர் தரிக்கவும் ,உம்மை நோக்கி தொழுவதற்கும் ,உமது ஐந்தெழுத்தை போற்றவும் கற்பித்து கொடுப்பீரா திருவொற்றியூர் உடையவரே . 


சுடப்படு வார் அறி யார், புரம் மூன்றையுஞ் சுட்டபிரான்
திடப்படு மாமதில் தென்ஒற்றி யூரன் தெருப்பரப்பில்
நடப்பவர் பொற்பதம் நந்தலை மேற்பட நன்குருண்டு
கிடப்பது காண்மன மே விதி ஏட்டைக் கிழிப்பதுவே!



தமது தலைவிதி ஏட்டைக் கிழிக்கும் உபாயத்தை அஞ்ஞானிகளாய்  வாழ்ந்து இறந்து சுற்றத்தாரால் சுடப்படுபவர்கள் அறிய மாட்டார்கள் . ஆனால் மனமே உனக்கு நான் சொல்கிறேன் கேள் ,அது என்னெவெனில் மூன்று புறங்களையும் எரித்த எம் கடவுள் அழகிய பெரிய திடமான மதில்களை உடைய திருவொற்றியூரில் குடி கொண்டிருக்கிறார் . ஆகவே நீ திருவொற்றியூர் தெருவில் நடப்பவர்களின் பாதம் உன் தலை மீது படும் படி நன்றாக விழுந்து வணங்கு இதுதான் நான்முகன் எழுதிய விதி ஏட்டை கிழிப்பது .

காடே திரிந்தென்ன? காற்றே புசித்தென்ன? கந்தை சுற்றி
ஓடே எடுத்தென்ன? உள்ளன்பி லாதவர் ஓங்குவிண்ணோர்
நாடே இடைமரு தீசர்க்கு மெய்யன்பர் நாரியர்பால்
வீடே யிருப்பினும் மெய்ஞ்ஞான வீட்டின்பம் மேவுவரே.



சிவபெருமான் மேல் மெய்யான அன்பும் , பிற உயிர்களிடத்தில் பரிவும் இல்லாதவர் காட்டில் திரிந்தாலும் , பிராணாயாமம் போன்ற கற்று காற்றை உண்டு வாழ்ந்தாலும் , இடையில் கந்தை துணியை மட்டும் சுற்றி திருவோடு எடுத்து சுற்றி வந்தாலும் ஆவதென்ன , அதுபோல பிற உயிர்களை நேசித்து மெய்யடியவராய் இருப்போர் பெண்களுடன் கூடி இல்லறம் நடத்திக் கொண்டிருந்தாலும் மெய்ஞ்ஞானம் எனும் பேரின்ப வீட்டை அடைவார் . 


தாயும் பகை கொண்ட பெண்டீர் பெரும்பகை தன்னுடைய
சேயும் பகை உற வோரும் பகைஇச் செகமும் பகை
ஆயும் பொழுதில் அருஞ்செல்வம் நீங்கில்இங் காதலினால்
தோயுநெஞ்சே மரு தீசர்பொற் பாதஞ் சுதந்தரமே.



இவ்வுலகில் வாழத்தக்க செல்வங்கள் நம்மை விட்டு நீங்கி விட்டால் , பெற்ற தாயாரும் நமக்கு பகையாவார் , நம்மில் பாதி எனக்கூறிக் கொள்ளும் மனைவியும் பகையாவாள் ,நமது மூலமாக வந்த புதல்வரும் பகையாவார் , நமது உற்றார் உறவினரும் மற்றும் அனைவருமே பகையாவார்கள் . இவை அனைத்துமே நம்மை விட்டு நீங்கினாலும் மருதீசர் பொன்னடிகளை போற்றிக் கொண்டேயிரு உனக்கு எப்போதும் துணையாய் இருக்கும் ,நெஞ்சே அவருடைய திருவடிகளில் அன்பு செலுத்து உனக்கு அதுதான் சுதந்திரம்.


காடோ? செடியோ? கடல்புற மோ? கனமே மிகுந்த
நாடோ? நகரோ? நகர்நடு வோ? நலமே மிகுந்த
வீடோ? புறந்திண்ணை யோ? தமி யேன்உடல் விழுமிடம்?
நீள்தோய் கழுக்குன்றி லீசா! உயிர்த்துணை நின்பதமே!



சிவபெருமானே அடியேனுடைய உடல் சலனமற்று விழும் இடம் அடர்ந்த காடோ , செடியோ , அல்லது கடல் புங்களிலோ , சிறப்பு வாய்ந்த தேசத்திலோ , நகரத்திலோ , நகர் நடுவிலோ , நன்மைகள் மிகுந்த வீட்டிலோ , வெளித் திண்ணையிலோ , இந்த மூடன் அறிந்திட மாட்டேன் அப்பனே ஆதலால் திருக்கழுக்குண்றில் இருந்து அருள் புரியும் ஈசா என் உயிர்க்கு உன் பதம் தான் துணை .   
  
பத்தும் புகுந்து பிறந்து வளர்ந்து பட்டாடைசுற்றி,
முத்தும் பவளமும் பூண்டுஓடி ஆடி முடிந்தபின்பு
செத்துக் கிடக்கும் பிணத்தருகே இனிச் சாம்பிணங்கள்
கத்துங் கணக்கென்ன? காண் கயிலாபுரிக் காளத்தியே!



பத்துத் திங்கள் அன்னை வயிற்றில் இருந்து பின் பிறந்து வளர்ந்து பட்டாடையும் விலை உயர்ந்த ஆடைகளையும் உடுத்தி , முத்தும் பவளமும் இன்னும் உயர்ந்த ஆபரணங்களையும் அணிந்து செல்வத்துக்காக ஓடி செல்வம் கிடைத்து சந்தோஷத்தில் ஆடாத ஆட்டமெல்லாம் ஆடி முடித்து எதுவும் எடுத்துச் செல்லாது தனியே செத்து கிடக்கும் பிணத்தின் அருகே இனி தாம் சாகப் போகிறோம் என்பதை உணராது சாகப் போகிற பிணங்கள் அனைத்தும் உட்கார்ந்து அழுகின்றனவே இதைப் பார்த்தாயா கயிலையை ஒத்த தென்கயிலை எனும் கயிலாயபுரி வாழும் காளத்தி அப்பனே . 




பொன்னால் பிரயோசனம்பொன் படைத்தார்க்குண்டு; பொன்
                                     படைத்தோன்
தன்னால் பிரயோசனம் பொன்னுக்கங் கேதுண்டு அத்தன்
                                    மையைப்போல்
உன்னால்பிர யோசனம் வேணதெல் லாம்உண்டு உனைப்பணியும்
என்னால்பிர யோசனம் ஏதுண்டு? காளத்தி ஈச்சுரனே!



திருக்காளத்தி ஈஸ்வரனே , தங்கத்தை சேமித்து வைப்போருக்கு அத் தங்கத்தால் பயன் உண்டு , தங்கத்தை வைத்திருப்பவர்களால் தங்கத்திற்கு என்ன பயன் உண்டு . அதே போல் உன்னை போற்றி வேண்டுவதால் எனக்கு பயன் உண்டு . உன்னை நான் வணங்குவதால் உனக்கு என்ன பயன் உண்டு . 


வாளால் மகவரிந்து ஊட்டவல்லேன் அல்லன்; மாதுசொன்ன
சூளால் இளமை துறக்கவல்லேன் அல்லன்; தொண்டு செய்து
நாளாறில் கண்இடந்து அப்பவல்லேன் அல்லன்நான் இனிச்சென்று
ஆளாவது எப்படியோ திருக்காளத்தி அப்பருக்கே?



சிறுத் தொண்டநாயனாரைப் போல் வாளினால் தன் மகனை அறிந்து ஊட்ட என்னால் முடியாது . திருநீலகண்ட நாயனாரைப் போல் மனைவி சொன்ன வார்த்தையால் இளமை துறந்து வாழவும் முடியாதவனாய் இருக்கிறேன் . கண்ணப்ப நாயனாரைப் போல் உனக்கு தொண்டு செய்து தன் கண்ணை பிடுங்கி உனக்கு கொடுக்க முடியாது . இப்படி எதற்குமே துணியாத நான் எப்படி திருக் காளாத்தியில் வாழும் அப்பனுக்கு ஆளாகப் போகிறேனோ தெரியவில்லை .


முப்போதும் அன்னம் புசிக்கவும் தூங்கவும் மோகத்தினால்
செப்போது இளமுலை யாருடன் சேரவும் சீவன்விடும்
அப்போது கண்கலக் கப்படவும் வைத்தாய் ஐயனே!
எப்போது காணவல் லேன்? திருக் காளத்தி ஈச்சுரனே!



மூன்று வேளையும் பசியை போக்க சாப்பிடுவதும் , இரவு நேரத்தில தூங்கவும் காமப் பசி நேர்ந்தால் அதைக் கழிக்க இளமையான தனங்களை உடைய பெண்களிடத்தில் இன்பம் துய்க்கவும் சீவன் நம்மை விட்டு அகலும் காலத்தில் வாழ் நாள் வீணாய் கழிந்ததை எண்ணி வருத்தப் படவும் வைத்தாய் இறைவா திருக்காளத்தி ஈஸ்வரனே . உன்னுடைய திருவடியை தரிசிக்கும் தகுதிக்கு எப்போது ஆளாவேன் ஐயனே .


    பாடல்கள் தொடரும்..........


சிவத்தை போற்றுவோம் !! சித்தர்களை போற்றுவோம் !!
                    
                            - திருவடி முத்துகிருஷ்ணன் 






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக