செவ்வாய், அக்டோபர் 04, 2011

சித்தர் பாடல்களில் இருந்து 3

  ஞானகுரு பட்டினத்தார் 
         பாடல்களில்.........இருந்து 
  

பூதங்க ளற்றுப் பொறியற்றுச் சாரைம் புலன்களற்றுப்
பேதங் குணமற்றுப் பேராசை தானற்றுப் பின்முனற்றுக்
காதங் கரணங் களுமற்ற ஆனந்தக் காட்சியிலே
ஏதங் களைந்திருப்பேன் இறைவாகச்சி ஏகம்பனே.



ஐம்பூதங்கள் எனப்படுகின்ற நிலம் ,நீர்,நெருப்பு,காற்று ,ஆகாயம் என அனைத்தும் ஒழிந்து ,  மெய் வாய் , கண் , மூக்கு , செவி என சொல்லப்படுகின்ற ஐம்பொறிகள் ஒழிந்து , ஐம்பொறிகளைச் சார்ந்து இருக்கின்ற சுவை , ஒளி , உணர்வு , ஓசை , நாற்றமென்ற ஐம்புலன்களும் ஒழிந்து ஒன்றிற்கொன்று மாறுபடும் குணமனைத்தையும் ஒழிந்து ,பேராசையும் ஒழிந்து , முன் இருந்த வினையும் ஒழிந்து பின் வரப்போகும் வினையும் ஒழிந்து , அனைத்தையுமே ஒழித்து காணும் இன்பக் காட்சியிலே என் குற்றங்களைக் களைந்து ஏகானந்தமாய் இருப்பேன் இறைவா திருக்கச்சி ஏகம்பனே .      


நல்லாய்எனக்கு மனுவொன்று தந்தருள் !ஞானமிலாப்
பொல்லா எனைக்கொன்று போடும் பொழுதியல் பூசைசெபம்
சொல்லார் நற்கோயில் நியமம் பலவகைத் தோத்திரமும்
எல்லாமுடிந்தபின் கொல்லுகண் டாய்கச்சி ஏகம்பனே.



நன்மையே வடிவானவனே என் இறைவனே உன்னிடத்தில் அடியேனுக்கு ஒரு விண்ணப்பம் உள்ளது .அதனை ஏற்றுக் கொள்ள வேண்டும் அப்பனே . அது என்னவென்றால் , இந்த ஞானமில்லாத பொல்லாதவனின் மரணத்திற்கு முன் நான் செய்த சிவபூசையும் , சிவ தோத்திரங்களும் , சிவாலய தரிசனங்களும் , பலவகைத் துதிகளும் முடிந்த பின்னர் கொல்வாய் அப்பனே . ஏனெனில் நான் மரணிக்கும் பொது என் மெய்யறிவு கலங்கி உன்னை நினைப்பேனோ நினையாது மறப்பேனோ ஆதலின் அனைத்தும் முடிந்த உடன் என்னை எமனிடம் சேர்ப்பிப்பாய் இறைவா கச்சி ஏகம்பனே .  


சடக்கடத் துக்கிரை தேடிப்பலவுயிர் தம்மைக்கொன்று
விடக்கடித் துக்கொண்டு இறுமாந்திருந்து மிகமெலிந்து
படக்கடித் தின்றுழல் வார்கடமைக்கரம் பற்றிநமன்
இடக்கடிக்கும் பொழுதேது செய்வார்கச்சி ஏகம்பனே.



சட வாடிவாகிய இந்த உடலை பாதுகாக்கும் பொருட்டு ஆகாரத்தைத் தேடி பல உயிர்களை அவ்வுயிர் வருந்தும் வகையில் வருத்தி பின் கடித்துத் தின்று அதை உணவாகக் கொண்டு செருக்கடைந்து இருப்பவர்களை எமன் கட்டி இழுத்து போகும்போது என்ன செய்வார் திருக்காஞ்சியிலே எழுந்தருள் ஏகம்ப நாதனே .  


நாறுமுடலை நரிப்பொதிச் சோற்றினை நான்தினமுஞ்
சோறுங்கறியும் நிரப்பியபாண்டத்தைத் தோகையர்தங்
கூறுமலமும் இரத்த முஞ்சோறுங் குழியில் விழாது
ஏறும்படி யருள்வாய் இறைவா கச்சி ஏகம்பனே.



துர்நாற்றம் வீசும் உடலை , நரிக்கு பொதி சோறாய் இருக்கும் ஒரு பொருளை , நான் தினமும் சோறும் கறியும் நிரப்பிய பாத்திரத்தை , பெண்கள் தம் மலமும் உதிரமும் தவறாது ஒழுகும் அல்குல் எனப்படும் குழியில் விழாது , முக்தியாகிய கரையை அடையும்படி செய்குவாய் இறைவா , திருக்காஞ்சி அமர்ந்த ஏகம்ப நாதனே .


சொக்கிட் டரண்மனைப் புக்குட் டிருடிய துட்டர்வந்து
திக்குற்ற மன்னரைக் கேட்பது பொற்சிவ நிந்தைசெய்து
மிக்குக் குருலிங்க சங்கமம் நிந்தித்து வீடிச்சிக்கும்
எக்குப் பெருத்தவர்க் கென்சொல்லுவேன்கச்சி ஏகம்பனே.



மாயப்பொடி என்னும் மயக்கம் தரும் பொடியைத் தூவி அரண்மனையில் உள்ளே நுழைந்து களவு செய்த திருடர்களை காவலர்கள் பிடித்து அரசன் முன் கொண்டு நிறுத்தும் பொழுது அத் திருடர்கள் அரசே எங்களை மன்னித்து விடுவிக்கும்படி வேண்டினால் மன்னன் விடுவானோ ?
அதே போல சிவநிந்தை செய்து சிவத்தை மதியாது இருந்து தீமையில் மேம்பட்ட மூடர்கள் முக்தி அடைய விரும்பினால் எவ்வாறு கிட்டும் அம்மூடர்களுக்கு நான் என்ன சொல்வேன் திருகச்சியில் வீற்றிருக்கும்  ஏகம்பனே .


விருந்தாக வந்தவர் தங்களுக்கன்னம் மிகக் கொடுக்கப்
பொருந்தார் வளம்பெற வாழ்வார் நின்னாமத்தை போற்றி நித்தம்
அருந்தா முலைப்பங்கர் என்னாத பாதகர் அம்புவியில்
இருந்தாவ தேதுகண்டாய் இறைவாகச்சி ஏகம்பனே.



தமக்கு உற்றவரோ அல்லது மற்றவரோ எவரேனும் நமது இல்லத்திற்கு விருந்தினராக வந்தற்கு உணவளிக்காது இருப்பவர்கள் மிகுந்த செல்வம் பெற்று வாழ்ந்தாலும் , தினந்தோறும் மாதொரு பாகனாய் வீற்றிருக்கும் உண்ணாமுலை அம்மை  நாதனின் நாமத்தை என்னாது இருக்கும் செல்வம் படைத்த பாவிகள் இந்த பூமியிலே இருப்பதினால் என்ன பயன் திருக்கச்சியில் எழுந்தருள் செய்யும் ஏகம்ப நாதனே .


எல்லாம்அறிந்து படித்தே இருந்தெமக்கு உள்ளபடி
வல்லான் அறிந்துளன் என்றுணராது மதிமயங்கிச்
சொல்லால் மலைந்துறு சூழ் விதியின்படி துக்கித்துப்பின்
எல்லாம் சிவன்செயலே என்பர்காண்கச்சி ஏகம்பனே.



நன்னெறி நூல்கள் அனைத்தையும் தெளிவுற கற்று அறிந்தாலும் நமக்கு துன்பம் நேரும்போது ஊழ்வினையாகிய முன்வினை பயனே என்றுணராமல் அனைத்தும் விதிப்படி என்று அறியாமல் அத்துன்பத்தை நினைத்து அறிவு கலங்கி மற்றவரிடத்தில் ஆலோசனை கேட்டு அதிலும் குழம்பி அனைத்து துன்பத்தையும் அனுபவித்து முடியும் நேரத்தில் எல்லாம் சிவன் செயலே என்று மனந்தேளிவார்கள் இறைவா திருக்கச்சியின் ஏகம்ப நாதனே .


பொன்னை நினைந்து வெகுவாகத் தேடுவர் பூவையன்னாள்
தன்னைநினைந்து வெகுவாய்உருகுவர் தாரணியில்
உன்னை நினைந்திங் குனைப்பூசி யாத உலுத்தரெல்லாம்
என்னை இருந்துகண்டாய் இறைவாகச்சி ஏகம்பனே.



இறைவா இந்த மானிடர் எல்லோரும் செல்வத்தை மேலும் மேலும் சேர்க்க எண்ணி தேடி ஓடிக்கொண்டே இருப்பார்கள் ,பெண்களால் பெறப்படும் சிற்றின்பத்தையும் நினைத்து மனம் நைந்து உருகுவர் ,ஓர் நாளும் உன்னை நினைக்காத நினைத்து பூசிக்காத இந்த வீணரெல்லாம் மனிதர்களாய் இப்பூவுலகில் இருந்து பயன் யாது அப்பனே திருக்கச்சி ஏகம்ப நாதனே .


கடுஞ்சொலின் வம்பரை ஈனரைக் குண்டரைக் காமுகரைக்
கொடும் பவமேசெயும் நிர்மூடர்தம்மைக் குவலயத்து
நெடும்பனைபோல் வளர்ந்துநல் லோர் தம் நெறியறியா
இடும்பரை யேன்வகுத்தாய் இறைவாகச்சி ஏகம்பனே.



பாவம் விளைவிக்கும் கொடும் சொற்கள் கூறிடும் வீனர்களையும் எந்நேரமும் காமத்தையே நினைந்து காமக்குருடர்களாய் காமுகர்களையும் கொடிய விஷத்தை மேலான கொடியவரையும் 
கொடிய பாவங்களை எல்லாம் அஞ்சாமல் செய்யும் நிர்மூடர் தம்மையும் இப்பூமியிலே நெடும்பனை (பனை ஒருவர் நிற்கும் அளவு நிழல் கூட தராது) போன்று வளர்ந்து வம்பளந்து கொண்டிருக்கும் வம்பரையும் ஞானிகள் வகுத்த நெறியறியாத கொடியவரையும் ஏன் படைத்தாய் இறைவா திருக்கச்சியில் எழுந்தருளும் ஏகம்ப நாதனே .   


கொன்றே னனேகம் உயிரையெலாம் பின்புகொன்றுகொன்று
தின்றேன் அதன்றியும் தீங்குசெய்தேனது தீர்க வென்றே
நின்றேனின் சன்னிதிக்கேஅத னாற்குற்றம் நீபொறுப்பாய்
என்றேஉனைநம்பினேன் இறைவாகச்சி ஏகம்பனே.



அனேக உயிர்களை அது வருந்தும்படி கொலை செய்தேன் கொன்று என் உணவின் பொருட்டு கொன்றதை தின்றேன் அது போக இன்னும் மற்றவருக்கும் பிற உயிரினங்களுக்கும் தீங்கு செய்தேன் இந்த பாவங்கள் தீர்க்க வேண்டி எம்பெருமானின் சந்நிதிக்கு வந்து மனமுருகி நின்றேன் சிவபெருமானே இதையெல்லாம் மன்னித்து பொறுத்து எனக்கு அருள் செய்வீர் என்று நம்பினேன் உன்னை இறைவா திருக்கச்சி ஏகம்ப நாதனே .
  
அன்னை எத்தனை எத்தனை அன்னையோ
     அப்பன் எத்தனை எத்தனை அப்பனோ
பெண்டிர்  எத்தனை எத்தனை பெண்டிரோ
     பிள்ளை எத்தனை எத்தனை பிள்ளையோ
முன்னை எத்தனை எத்தனை சன்மமோ
     மூடனாய் அடியேனும் அறிந்திலேன்
இன்னம் எத்தனை எத்தனை சன்மமோ
     என்செய்வேன்கச்சி ஏகம்ப நாதனே


ஐயனே இதுவரை நானெடுத்த பிறப்புக்களில் பெற்ற தாயார் எத்தனை எத்தனை தாயாரோ ,தந்தையார் எத்தனை எத்தனை தந்தையாரோ ,மனைவிகள் எத்தனை எத்தனை மனைவிமாரோ ,புத்திரர் எத்தனை எத்தனை புத்திரரோ பூர்வத்தில பிறப்பு எத்தனை எத்தனை பிறப்புக்களோ அதைப்பற்றி அறிவில்லாத அடியேனும் அறிந்திடேன் இன்னும் எத்தனை எத்தனை பிறப்புக்களோ இந்த பிறப்போடு நிற்பதற்கு என்ன செய்வேன் இறைவா திருக்கச்சி ஏகம்பர நாதனே .  


                       அடுத்த பதிவில் தொடரும் ..........


சிவத்தை போற்றுவோம் !! சித்தர்களை போற்றுவோம் !!

                   - திருவடி முத்துகிருஷ்ணன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக