வியாழன், ஆகஸ்ட் 18, 2011

சித்தர் பாடல்கள் (திருமூலர் அருளிய திருமந்திரம் ) 2

              
திருமூலர் அருளிய திருமந்திரம்  
                                           

                                               முதல் தந்திரம்                                  

                                       1. உபதேசம்


விண்ணின்றிழிந்து வினைக்கீடாய் மெய்கொண்டு
தண் நின்ற தாளைத் தலைக்காவல் முன்
வைத்துள் நின்றுருக்கியோர் ஒப்பிலா ஆனந்தக்
கண் நின்று காட்டிக் களிம்பறுத்தானே.


களிம்பறுத்தான் எங்கள் கண்ணுதல் நந்தி
களிம்பறுத்தான் அருள் கண் விழிப் பித்துக்
களிம்பணுகாத கதிர் ஒளி காட்டிப்
பளிங்கில் பவளம் பதித்தான் பதியே.



பதிபசு பாசம் எனப் பகர் மூன்றில்
பதியினைப் போல் பசு பாசம் அனாதி
பதியினைச் சென்றணுகாப் பசு பாசம்
பதியணுகில் பசு பாசம் நில்லாவே.



வேயின் எழும் கனல் போலே இம் மெய்யெனும்
கோயிலில் இருந்து குடி கொண்ட கோன் நந்தி
தாயினும் மும்மலம் மாற்றித் தயா வென்னும் 

தோய மதாய் எழும் சூரியனாமே.


சூரிய காந்தமும் சூழ் பஞ்சும் போலவே
சூரிய காந்தம் சூழ் பஞ்சைச் சுட்டிடா
சூரியன் சந்நிதியில் சுடுமாறு போல்
ஆரியன் தோற்றமுன்னற்ற மலங்களே.



மலம் களைந்தாம் என மாற்றி அருளித்
தலம் களைந்தான் நல் சதாசிவம் ஆன
புலம் களைந்தான் அப்பொதுவினுள் நந்தி
நலம் களைந்தா
னுள் நயந்தா னறிந்தே.


அறி ஐம்புலனுடன் நான்றதாகி
நெறியறியாது உற்ற நீர் ஆழம் போல
அறிவறி உள்ளே அழிந்தது போலக்
குறி அறிவிப்பான் குருபரன் ஆமே.



ஆ மேவுபால் நீர் பிரிக்கின்ற அன்னம்போல்
தாமே தனி மன்றில் தன்னம் தனி நித்தம்
தீ மேவு பல் கரணங்களுள் உற்றன
தாம் ஏழ்பிறப்பு எரி சார்ந்தவித்தாமே.



வித்தைக் கெடுத்து வியாக் கிரத்தே மிகச்
சுத்தத் துரியம் பிறந்து துடக்கு அற
ஒத்துப் புலன் உயிர் ஒன்றாய் உடம்பொடு
செத்திட்டு இருப்பர் சிவயோகியார்களே.



சிவ யோகம் ஆவது சித்த சித்தென்று
தவயோகத் துள்புக்குத் தன்னொளி தானாய்
அவயோகம் சாராது அவன்பதி போக
நவயோக நந்திநமக் களித்தானே.



அளித்தான் உலகெங்கும் தானான உண்மை
அளித்தான் அமரர் அறியா உலகம்
அளித்தான் திருமன்றுள்ளாடும் திருத்தாள்
அளித்தான் பேரின்பத்து அருள் வெளிதானே.


வெளியில் வெளிபோய் விரவிய வாறும்
அளியில் அளிபோய் அடங்கியவாறும்
ஒளியில் ஒளி போய் ஒடுங்கிய வாறும்
தெளியும் அவரே சிவ சித்தர் தாமே.



சித்தர் சிவலோகம் இங்கே தெரிசித்தோர்
சத்தமும்சத்த முடிவும் தம்முள் கொண்டோர்
நித்தர் நிமலர் நிராமயர் நீள் பர
முத்தர் தம்முத்தி முதல் முப்பத்தாறே.



முப்பதும் ஆறும் படி முத்தி ஏணியாய்
ஒப்பிலா ஆனந்தத்து உள் ஒளிபுக்குச்
செப்பரிய சிவம் கண்டு தான் தெளிந்து
அப்பரிசு ஆக அமர்ந்து இருந்தாரே.



இருந்தார் சிவமாகி எங்கும் தாமாகி
இருந்தார் சிவன் செயல்யாவையும் நோக்கி
இருந்தார் முக்காலத்து இயல்பைக் குறித்தங்கு
இருந்தார் இழவு வந்து எய்திய சோம்பே.



சோம்பர் இருப்பது சுத்த வெளியிலே
சோம்பர் கிடப்பதும் சுத்த வெளியிலே
சோம்பர் உணர்வு சுருதி முடிந்திடஞ்
சோம்பர் கண்டு ஆரச் சுருதிக் கண்தூக்கமே.



தூங்கிக் கண்டார் சிவலோகமும் தம்முள்ளே
தூங்கிக் கண்டார் சிவ யோகமும் 
தம்முள்ளே
தூங்கிக் கண்டார் சிவ போகமும் தம்முள்ளே
தூங்கிக் கண்டார் நிலை சொல்வ தெவ்வாறே.


எவ்வாறு காண்பான் அறிவு தனக்கு எல்லை
அவ்வாறு அருள் செய்வான் ஆதியரன் தானும்
ஒவ்வாத மன்றுள் உமைகாண ஆடிடும்
செவ்வானில் செய்ய செழும் சுடர் மாணிக்கம்.



மாணிக்கத் துள்ளே மரகதச் சோதியாய்
மாணிக்கத் துள்ளே மரகத மாடமாய்
ஆணிப் பொன்மன்றினி லாடும் திருக்கூடத்தைப்
பேணித் தொழுது என்ன பேறு பெற்றாரே.



பெற்றார் உலகில் பிரியாப் பெரு நெறி
பெற்றார் உலகில் பிறவாப் பெரும் பயன்
பெற்றார் அம்மன்றில் பிரியாப் பெரும் பேறு
பெற்றார் உலகுடன் பேசாப் பெருமையே.



பெருமை சிறுமை அறிந்து எம்பிரான் போல்
அருமை எளிமை அறிந்து அறிவார் ஆர்
ஒருமையுள் ஆமைபோல் உள் ஐந்து அடக்கி
இருமையும் கேட்டு இருந்தார் புரை அற்றே.



புரை அற்ற பாலினுள் நெய் கலந்தாற் போல்
திரை அற்ற சிந்தை நல் ஆரியன் செப்பும்
உரை அற்று உணர்வோர் உடம்பிங்கு ஒழிந்தால்
கரை அற்ற சோதி கலந்த அசத்தமே.



சத்தம் முதல் ஐந்தும் தன் வழித் தான் சாரில்
சித்துக்குச் சித்தன்றிச் சேர்விடம் வேறு உண்டோ
சுத்த வெளியில் சுடரில் சுடர் சேரும்
அத்தம் இது குறித்து ஆண்டு கொள் அப்பிலே.



அப்பினில் கூர்மை ஆதித்தன் வெம்மையால்
உப்பு எனப் பேர் பெற்று உருச் செய்த அவுரு
அப்பினில் கூடியது ஒன்று ஆகுமாறு போல்
செப்பினில் சீவன் சிவத்துள் அடங்குமே.



அடங்கும் பேரண்டத்து அணுவண்டம் சென்றங்கு
இடம் கொண்டதில்லை இதுவன்றி வேறுண்டோ
கடம் தொறும் நின்ற உயிர் கரைகாணில்
திடம் பெற நின்றான் திருவடி தானே.



திருவடியே சிவம் ஆவது தேரில்
திருவடியே சிவலோகம் சிந்திக்கில்
திருவடியே செல்கதி யது செப்பில்
திருவடியே தஞ்சமுள் தெளிவார்க்கே.



தெளிவு குருவின் திருமேனி காண்டல்
தெளிவு குருவின் திருநாமம் செப்பல்
தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்
தெளிவு குருவுரு சிந்தித்திருத்தல் தானே.



தானே புலன் ஐந்தும் தன்வச மாயிடும்
தானே புலன் ஐந்தும் தன்வசம் போயிடும்
தானே புலன் ஐந்தும் தன்னில் மடைமாறும்
தானே தனித் தெம்பிரான் தனைச் சந்தித்தே.



சந்திப்பது நந்தி தன் திருத்தாள் இணை
சிந்திப்பது நந்தி செய்ய திருமேனி
வந்திப்பது நந்தி நாமம் என் வாய்மையால்
புந்திக்குள் நிற்பது நந்தி பொன் போதமே.



போதம் தரும் எங்கள் புண்ணிய நந்தியைப்
போதம் தனில் வைத்துப் புண்ணியர் ஆயினார்
நாதன் நடத்தால் நயனம் களிகூர
வேதம் துதித்திடப் போய் அடைந்தார் விண்ணே.



           2. யாக்கை நிலையாமை


மண் ஒன்று கண்டீர் இருவினைப் பாத்திரம்
திண்ணென்று  இருந்தது தீவினை சேர்ந்தது
விண்ணின்று  நீர்வீழின் மீண்டும் மண்ணானல்  போல்
எண்ணின்று மாந்தர் இறக்கின்ற வாறே.



பண்டம் பெய் கூரை பழகி விழுந்தக்கால்
உண்ட அப்பெண்டிரும் மக்களும் பின் செலார்
கொண்ட விரதமும் ஞானமும் அல்லது
மண்டி அவருடன் வழிநடவாதே.



ஊர் எலாம் கூடி ஒலிக்க அழுதிட்டுப்
பேரிரை நீக்கிப்பிண மென்று பேரிட்டுச்
சூரையாம் காட்டிடைக் கொடுபோய் சுட்டிட்டு
நீரில் மூழ்கி நினைப் பொழிந்தார்களே.



காலும் இரண்டு முகட்டு அலக் கென்றுள
பாலுள் பரும் கழி முப்பத் திரண்டுள
மேல்உள கூரை பிரியும் பிரிந்தால் முன்
போல் உயிர் மீளப் புக அறியாதே.



சீக்கை விளைந்தது செய்வினை முட்டிற்ற
ஆக்கை பிரிந்தலகு பழுத்ததுமூக்கினில்

கைவைத்து மூடு இட்டுக் கொண்டுபோய்க்
காக்கைக்குப் பலி காட்டிய வாறே.



அடப்பண்ணி வைத்தார் அடிசிலை உண்டார்
மடக்கொடி யாரொடு மந்தணம் கொண்டார்
இடப் பக்கமே இறை நொந்தது என்றார்
கிடக்கப் படுத்தார் கிடந்து ஒழிந்தாரே.



மன்றத்தே நம்பி மாடம் எடுத்தது
மன்றத்தே நம்பி சிவிகை பெற்று ஏறினான்
மன்றத்தே நம்பி முக்கோடி வழங்கினான்
சென்றத்தா என்னத் திரிந்திலன் தானே.



வாசந்தி பேசி மணம் புணர்ந்த அப்பதி
நேசம் தெவிட்டி நினைப்பு ஒழிவார் பின்னை
ஆ சந்தி மேல் வைத்து அமைய அழுதிட்டுப்
பாசம் தீ சுட்டுப் பலி அட்டினார்களே.



கைவிட்டு நாடிக்கருத் தழிந்து அச்சற
நெய்யட்டிச் சோறுண்ணும் ஐவரும் போயினார்
மையிட்ட கண்ணாளும் மாடும் இருக்கவே
மெய்விட்டுப் போக விடை கொள்ளுமாறே.



பந்தல் பிரிந்தது பண்டாரம் கட்டற்ற
ஒன்பது வாசலும் ஒக்க அடைத்தன
துன்புறு காலம் துரிசுவர மேல்மேல்
அன்புடை யார்கள் அழுதகன்றார் களே.



நாட்டுக்கு நாயகன் நம்மூர்த் தலைமகன்
காட்டுச் சிவிகை யொன்று ஏறிக்கடை முறை
நாட்டார்கள் பின்செல்ல முன்னே பறைகொட்ட
நாட்டுக்கு நம்பி நடக்கின்ற வாறே.



முப்பது முப்பதும் முப்பத் தறுவரும்
செப்பமதிள் உடைக் கோயிலுள் வாழ்பவர்
செப்பமதிள் உடைக் கோயில் சிதைந்த பின்
ஒப்ப அனைவரும் ஓட்டு எடுத்தார் களே.



மது ஊர் குழலியும் மாடும் மனையும்
இது ஊர் ஒழிய இதணம் அது ஏறிப்
பொது ஊர் புறம் சுடு காடது நோக்கி
மது ஊர வாங்கியே வைத்த கன்றார்களே.



வைச்ச அகல் உற்றது கண்டு மனிதர்கள்
அச்ச அகலாது என நாடும் அரும்பொருள்
பிச்சது வாய்ப்பின் தொடர் உறு மற்றவர்
எச்ச அகலா நின்று இளைக்கின்ற வாறே.



ஆர்த்து எழும் சுற்றமும் பெண்டிரும் மக்களும்
ஊர்த் துறைக் காலே ஒழிவர் ஒழிந்த பின்
வேர்த் தலை போக்கி விறகிட்டு எரிமூட்டி
நீர்த் தலை மூழ்குவர் நீதி இலோரே.



வளத்து இடை முற்றத்தோர்மா நிலம்முற்றும்
குளத்தின் மண் கொண்டு குயவன் வனைந்தான்
குடம் உடைந்தால் அவை ஓடு என்று வைப்பர்
உடல் உடைந்தால் இறைப் போதும் வையாரே.



ஐந்து தலைப் பறி அறு சடை உள
சந்தவை முப்பது சார்வு பதினெட்டுப்
பந்தலும் ஒன்பது பந்தி பதினைந்து
வெந்து கிடந்தது மேல் அறியோமே.



அத்திப் பழமும் அறைக்கீரை நல்வித்தும்
கொத்தி உலைப் பெய்து கூழ் அட்டு வைத்தனர்
அத்திப் பழத்தை அறைக்கீரை வித்துண்ணக்
கத்தி எடுத்தவர் காடுபுக்காரே.



மேலும் முகடு இல்லை கீழும் வடிம்பு இல்லை
காலும் இரண்டு முகட்டு அலக் கொன்று உண்டு
ஓலையான் மேய்ந்தவர் ஊடு வரியாமை
வேலையான் மேய்ந்த தோர் வெள்ளித் தளிகையே



கூடம் கிடந்தது கோலங்கள் இங்கில்லை
ஆடும் இலையமும் அற்றது அறுதலும்
பாடுகின்றார் சிலர் பண்ணில் அழுத்தி யிட்டுத்
தேடிய தீயினில் தீய வைத்தார்களே.



முட்டை பிறந்தது முந்நூறு நாளினில்
இட்டது தான் இலை ஏதேனும் ஏழைகாள்
பட்டது பார் மணம் பன்னிரண் டாண்டினில்
கெட்டது எழு பதில் கேடு அறியீரே.



இடிஞ்சி இல் இருக்க விளக்கு எரி கொண்டான்
முடிஞ்சது அறியார் முழங்குவர் மூடர்
விடிஞ்சி இருளாவது அறியா உலகம்
படிஞ்சு கிடந்தது பதைக்கின்ற வாறே.



மடல் விரி கொன்றையான் மாயன் படைத்த
உடலும் உயிரும் உருவம் தொழாமல்
இடர் படர்ந்து ஏழா நரகில் கிடப்பர்
குடர் பட வெம் தமர் கூப்பிடு மாறே.



குடையும் குதிரையும் கொற்ற வாளும் கொண்டு
இடையும் அக்காலம் இருந்து நடுவே
புடையும் மனிதனார் போகும் அப்போதே
அடையும் இடம் வலம் ஆருயிராமே .



காக்கை கவரில் என் கண்டார் பழிக்கில் என்
பால் துளி பெய்யில் என் பல்லோர் பழிச்சில் என்
தோல் பையுள் நின்று தொழில் அறச் செய்தூட்டும்
கூத்தன் புறப்பட்டுப் போன இக் கூட்டையே.



3. செல்வம் நிலையாமை


அருளும் அரசனும் ஆனையும் தேரும்
பொருளும் பிறர் கொள்ளப் போவதன் முன்னம்
தெருளும் உயிரொடும் செல்வனைச் சேரின்
மருளும் பினையவன் மாதவ மன்றே.



இயக்கு உறுதிங்கள் இருள் பிழம்பு ஒக்கும்
துயக்கு உறு செல்வத்தைச் சொல்லவும் வேண்டா
மயக்கு அற நாடுமின் வானவர் கோனைப்
பெயல் கொண்டல் போலப்பெரும் செல்வமாமே.



தன்னது சாயை தனக்கு தவாது கண்டு
என்னது மாடு என்று இருப்பார்கள் ஏழைகள்
உன் உயிர் போம் உடல் ஒக்கப் பிறந்தது
கண்
து கண்ணொளி கண்டு கொளீரே.


ஈட்டிய தேன்பூ மணம் கண்டு இரதமும்
கூட்டிக்கொ ணர்ந்துவொரு கொம்பிடைவைத் 
திடுமோட்டித் துரந்திட்டது வலியார் கொளக்
காட்டிக் கொடுத்தது கைவிட்ட வாறே.



தேற்றத் தெளிமின் தெளிந்தீர் கலங்கன் மின்
ஆற்றுப் பெருக்கில் கலக்கி மலக்காதே
மாற்றிக் களைவீர் மறுத்துங்கள் செல்வத்தைக்
கூற்றன் வரும் கால் குதிக்கலும் மாமே.



மகிழ்கின்ற செல்வமு மாடும் உடனே
கவிழ்கின்ற நீர்மிசைச் செல்லும்கலம் போல்
அவிழ்கின்ற ஆக்கைக்கு மோர்வீடு பேறாகச்
சிமிழ் ஒன்று வைத்தமை தேர்ந்து அறியாரே.



வாழ்வும் மனைவியுமக்களு முடன் பிறந்
தாரும் அளவேதெமக் கென்பர் ஒண்பொருள்
மேவும் அதனை விரவு செய்வார் கட்குக்
கூவும் துணை யொன்று கூடலுமாமே.



வேட்கை மிகுத்தது மெய்கொள்வார் இங்கிலை
பூட்டும் தறி ஒன்று போம் வழி ஒன்பது
நாட்டிய தாய் தமர் வந்து வணங்கிப் பின்
காட்டிக் கொடுத்தவர் கை விட்ட வாறே



உடம்பொடு உயிரிடை விட்டோடும் போது
அடும்பரிசு ஒன்றில்லை அண்ணலை யெண்ணும்
விடும் பரிசாய் நின்றமெய் நமன் தூதர்
சுடும் பரிசத்தையும் சூழ்கிலாரே.



4. இளமை நிலையாமை


கிழக்கெழுந்து ஓடிய ஞாயிறு மேற்கே
விழக்கண்டும் தேறார் விழியிலா மாந்தர்
குழக்கன்று மூத்து எருதாய்ச் சில நாளில்
விழக்கண்டும் தேறார் வியன் உலகோரே.



ஆண்டு பலவும் கழிந்தன அப்பனைப்
பூண்டு கொண்டாரும் புகுந் தறிவார் இல்லை
நீண்டன காலங்கள் நீண்டு கொடுக்கினும்
தூண்டு விளக்கின் சுடர் அறியாரே.



தேய்ந்தற் றொழிந்த இளமை கடை முறை  
ஆய்ந்தற்ற பின்னை அரிய கருமங்கள்
பாய்ந்தற்ற கங்கைப் படர் சடை நந்தியை
ஓர்ந்துற்றுக் கொள்ளும் உயிர் உள்ள போதே.



விரும்புவர் முன் என்னை மெல்லியல் மாதர்
கரும்பு தகர்த்துக் கடைக் கொண்ட நீர் போல்
அரும்பொத்த மென் முலை ஆய் இழையார்க்குக்
கரும்பொத்துக் காஞ்சிரங் காயும் ஒத்தேனே.



பாலன் இளையன் விருத்தன் என நின்ற
காலங் கழிவன கண்டும் அறிகிலார்
ஞாலங்  கடந்தண்டம் ஊடறுத்தானடி
மேலுங் கிடந்து விரும்புவன் யானே.



காலை எழுந்தவர் நித்தலும் நித்தலும்
மாலை படுவதும் வாழ்நாள் கழிவதும்
சாலும் அவ் ஈசன் சலவிய னாகிலும்
ஏல நினைப்பவர்க் கின்பம் செய்தானே.



கண்ணதும் காய் கதிரோனும் உலகினை
உள் நின்று அளக்கின்ற தொன்றும் அறிகிலார்
விண்ணுறு வாரையும் வினை யுறுவாரையும்
எண்ணுறு முப்பதில் ஈர்ந் தொழிந்தாரே.



எய்திய நாளில் இளமை கழியாமை
எய்திய நாளில் இசையினால் ஏத்துமின்
எய்திய நாளில் எறிவது அறியாமல்
எய்திய நாளில் இருந்து கண்டேனே.



5. உயிர் நிலையாமை


தழைக்கின்ற செந்தளிர்த் தண்மலர்க் கொம்பில்
இழைக்கின்ற தெல்லாம் இறக்கின்ற கண்டும்
பிழைப்பின்றி எம்பெருமான் அடி ஏத்தார்
அழைக்கின்ற போதறியார் அவர் தாமே.



ஐவர்க்கு ஒரு செய் விளைந்து கிடந்தது
ஐவரும் அச் செய்யைக் காத்து வருவார்கள்
ஐவர்க்கும் நாயகன் ஓலை வருதலால்
ஐவரும் அச்செய்யைக் காவல் விட்டாரே.



மத்தளி ஒன்று உள தாளம் இரண்டு உள
அத்துள்ளே வாழும் அரசரும் அஞ்சு உள
அத்துள்ளே வாழும் அரசனு மங்கு உளன்
மத்தளி மண்ணாய் மயங்கிய வாறே.



வேங்கட நாதனை வேதாந்தக் கூத்தனை
வேங்கடத்து உள்ளே விளையாடு நந்தியை
வேங்கடம் என்றே விரகு அறியாதவர்
தாங்க வல்லார் உயிர் தாம் அறியாரே.



சென்று ணர்வான் திசை பத்தும் திவாகரன்
அன்று ணர்வால் அளக்கின்றது அறிகிலர்
நின்று ணரார்இந் நிலத்தின் மனிதர்கள்
பொன்று ணர்வாரில் புணர்க்கின்ற மாயமே.



மாறு திருத்தி வரம்பு இட்ட பட்டிகை
பீறும் அதனைப் பெரிதுணர்ந்தார் இலை
கூறும் கருமயிர் வெண்மயிர் ஆவது
ஈறும் பிறப்பும் ஓராண்டு எனும் நீரே.



துடுப்பிடு பானைக்கும் ஒன்றே அரிசி
அடுப்
பிடு மூன்றிற்கும் அஞ்சு எரிகொள்ளி
அடுத்து எரியாமல் கொடுமின் அரிசி
விடுத்தன நாள்களும் மேல் சென்றனவே.



இன்புறு வண்டு இங்கு இனமலர் மேல் போய்
உண்பது வாச மது போல் உயிர் நிலை
இன்புற நாடி நினைக்கிலும் மூன்றொளி
கண்புற நின்ற கருத்துள் நில்லானே.



ஆம் விதி நாடி அறம் செய்மின் அந்நிலம்
போம் விதி நாடிப் புனிதனைப் போற்று மின்
நாம் விதி வேண்டும் அது என் சொலின் மானிடர்
ஆம் விதி பெற்ற அருமை வல்லார்க்கே.



அவ்வியம் பேசி அறம் கெட நில்லன்மின்
வெவ்வியன் ஆகிப் பிறர்பொருள் வவ்வன்மின்
செவ்வியன் ஆகிச்சிறந் துண்ணும்போ தொரு
தவ்விக் கொடு உண்மின் தலைப் பட்ட போதே.



6. கொல்லாமை


பற்று ஆய நல்குரு பூசைக்கும் பல்மலர்
மற்று ஓர் அணுக்களைக் கொல்லாமை ஒண் மலர்
நற்றார் நடுக்கற்ற தீபமும் சித்தமும்
உற்றாரும் ஆவியமர்ந்திடம் உச்சியே.



கொல்லிடு குத்து என்று கூறிய மாக்களை
வல்லடிக் காரர் வலிக் கயிற்றால் கட்டிச்
செல்லிடு நில் என்று தீவாய் நரகிடை
நில்லிடும் என்று நிறுத்துவர் தாமே.



7.புலால் மறுத்தல்


பொல்லாப் புலாலை நுகரும் புலையரை
எல்லாரும் காண இயமன் தன் தூதுவர்
செல்லாகப் பற்றித் தீவாய் நரகத்தில்
மல்லாக்கத் தள்ளி மறித்து வைப்பாரே.



கொலையே களவுகள் காமம் பொய் கூறல்
மலைவான பாதகமாம் அவை நீக்கித்
தலையாம் சிவனடி சார்ந்தின்பம் சார்ந்தோர்க்கு
இலையாம் இவைஞான ஆனந்தத் திருத்தலே.



கொன்றிலாரைக் கொலச் சொலிக் கூறினார்
தின்றிலாரைத் தினச் சொலித் தெண்டித்தார்
பன்றியாப் படியில் பிறந்து ஏழ் நரகு
ஒன்றிவார் அரன் ஆணையிது உண்மையே.



8. பிறன் மனை நயவாமை


ஆத்த மனையாள் அகத்தில் இருக்கவே
காத்த மனையாளைக் காமுறும் காளையர்
காய்ச்ச பலாவின் கனி உண்ண மாட்டாமல்
ஈச்சம் பழத்துக்கு இடர் உற்ற வாறே



திருத்தி வளர்த்த ஓர் தேமாங் கனியை
அருத்த மென்றெண்ணி அறையில் புதைத்துப்
பொருத்தமிலா புளிமாங் கொம்பு ஏறிக்
கருத்து அறியாதவர் கால் அற்றவாறே.



பொருள் கொண்ட கண்டனும் போதகை யாளும்
இருள் கொண்ட மின்வெளி கொண்டு நின்றோரும்
மருள் கொண்டு மாதர் மயல் உறு வார்கள்
மருள் கொண்ட சிந்தையை மாற்ற கில்லாரே.



9. மகளிர் இழிவு


இலை நல ஆயினும் எட்டி பழுத்தால்
குலை நலவாம் கனி கொண்டுணல் ஆகா
முலை நலங்கொண்டு முறுவல் செய்வார் மேல்
விலகுறு நெஞ்சினை வெய்து கொள்ளீரே.



மனை புகுவார்கள் மனைவியை நாடில்
சுனை புகுநீர் போல்சுழித் துடன் வாங்கும்
கனவது போலக் கசிந்தெழு மின்பம்
நனவது போலவும் நாட வொண்ணாதே.



இயலுறும் வாழ்க்கை இளம் பிடி மாதர்
புயனுறப் புல்லிப் புணர்ந்தவர் எய்தும்
மயலுறும் வானவர் சார் இது என்பார்
அயலுறப் பேசி அகன்று ஒழிந்தாரே.



வையகத்தே மடவா ரொடும் கூடி என்
மெய் யகத்தோர் உளம் வைத்த விதியது
கையகத்தே கரும்பாலையின் சாறுகொள்
மெய்யகத்தே பெறும்வேம் பதுவாமே.



கோழை ஒழுக்கம் குளம் மூடு பாசியில்
ஆழ நடுவார் அளப்பு உறுவார்களைத்
தாழத் துடக்கித் தடுக்க இல்லா விடில்
பூழை நுழைந்தவர் போகின்ற வாறே.



10. நல்குரவு


புடைவை கிழிந்தது போயிற்று வாழ்க்கை
யடையப் பட்டார்களும் அன்பிலரானார் கொடை
யில்லை கோளில்லை கொண்டாட்டமில்லை
நடையில்லை நாட்டில் இயங்கு கின்றார் கட்கே.



பொய்க்குழி தூர்ப்பான் புலரி புலருது என்று
அக்குழி தூர்க்கும் அரும் பண்டம் தேடுவீர்
எக்குழி தூர்த்தும் இறைவனை ஏத்துமின்
அக்குழி தூரும் அழுக்கு அற்ற போதே.



கல்குழி தூரக் கனகமும் தேடுவர்
அக்குழி தூர்க்கை யாவர்க்கும் அரியது
அக்குழி தூர்க்கும் அறிவை அறிந்தபின்
அக்குழி தூரும் அழுக்கு அற்றவாறே.



தொடர்ந்தெழு சுற்றம் வினையினும் தீய
கடந்தோர் ஆவி கழிவதன் முன்னே
உடந்தொரு காலத்துணர் விளக்கு ஏற்றித்
தொடர்ந்து நின்றவ்வழி தூர்க்கலு மாமே.



அறுத்தன ஆறினும் ஆன் இனம் மேவி
அறுத்தனர் ஐவரும் எண் இலி துன்பம்
ஒறுத்தன வல்வினை ஒன்று அல்ல வாழ்வை
வெறுத்தனன் ஈசனை வேண்டி நின்றானே.



11. அன்புடைமை


அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்
அன்பே சிவமாவது யாவரும் அறிகிலார்
அன்பே சிவமாவது யாவரும் அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்து இருந்தாரே.



பொன்னைக் கடந்திலங்கும் புலித்தோலினன்
மின்னிக் கிடந்து மிளிரும் இளம் பிறை
துன்னிக் கிடந்த சுடு பொடி ஆடிக்குப்
பின்னிக் கிடந்ததென் பேரன்பு தானே.



என்பே விறகா இறைச்சி அறுத்து இட்டுப்
பொன் போல் கனலில் பொரிய வறுப்பினும்
அன்போடு உருகி அகம் குழைவார்க் கன்றி
என் போல் மணியினை எய்த ஒண்ணாதே.



ஆர்வம் உடையவர் காண்பார் அரன் தன்னை
ஈரம் உடையவர் காண்பார் இணை யடி
பாரம் உடையவர் காண்பார் பவம் தன்னைக்
கோர நெறிகொடு கொங்கு புக்காரே.



என் அன்பு உருக்கி இறைவனை ஏத்துமின்
முன் அன்பு உருக்கி முதல்வனை நாடுமின்
பின் அன்பு உருக்கி பெரும் தகை நந்தியும்
தன் அன்பு எனக்கே தலை நின்ற வாறே.



தானொரு காலம் சயம்பு என்று ஏத்தினும்
வானொரு காலம் வழித்துணை யாய் நிற்கும்
தேனொரு பால் திகழ் கொன்றை அணி சிவன்
தானொரு வண்ணம் என் அன்பில் நின்றானே.



முன் படைத்து இன்பம் படைத்த முதல் இடை
அன்பு அடைத்து எம் பெருமானை அறிகிலார்
வன்பு அடைத்து இந்த அகல் இடம் வாழ்வினில்
அன்பு அடைத்தான் தன் அகல் இடத் தானே.



கருத்துறு செம்பொன் செய்காய் கதிர்ச்சோதி
இருத்தியும் வைத்தும் இறைவன் என்றேத்தியும்
அருத்தியுள் ஈசனை ஆரருள் வேண்டில்
விருத்தி கொடுத்திடும் விண்ணவர் கோனே.



நித்தலும் துஞ்சும் பிறப்பையும் செய்தவன்
வைத்த பரிசு அறிந்தேயும் மனிதர்கள்
இச்சை உளே வைப்பர் எந்தைபிரான் என்று
நச்சியே அண்ணலை நாடு கிலாரே.



அன்பின் உள்ளான் புறத்தான் உடலாய் உளான்
முன் பின் உள்ளான் முனிவர்க்கும் பிரான் அவன்
அன்பினுள் ஆகி அமரும் அரும் பொருள்
அன்பின் உள்ளார்க்கே அணை துணை யாமே.



12. அன்பு செய்வாரை அறிவன் சிவன் 

இகழ்ந்ததும் பெற்றதும் ஈசன் அறியும்
உகந்து அருள் செய்திடும் உத்தம நாதன்
கொழுந்து அன்பு செய்து அருள் கூரவல்லார்க்கு
மகிழ்ந்து அன்பு செய்யும் அருள் அதுவாமே.

இன்பப் பிறவிக்கு இயல்வது செய்தவன்
துன்பப் பிறவித் தொழில் பல என்னினும்
அன்பில் கலவி செய்து ஆதிப் பிரான் வைத்த
முன்பு இப் பிறவி முடிவது தானே.

அன்பு உறு சிந்தையின் மேல் எழும் அவ் ஒளி
இன்பு உறு கண்ணியொடு ஏற்க இசைந்தன
துன்பு உறு கண்ணி ஐந்து ஆடும் துடக்கு அற்று
நண்பு உறு சிந்தையை நாடுமின் நீரே.

புணர்ச்சியுள் ஆயிழை மேல் அன்பு போல
உணர்ச்சியுள் ஆங்கே ஒடுங்க வல்லாருக்கு
உணர்ச்சி இல்லாது குலாவி உலாவி
அணைத்தலும் இன்பம் அது இது ஆமே.

உற்று நின்றாரொடு அத்தகு சோதியைச்
சித்தர்கள் என்றும் தெரிந்து அறிவார் இல்லை
பத்திமையாலே பணிந்து அடியார் தொழ
முத்தி கொடுத்து அவர் முன்பு நின்றானே.

கண்டேன் கமழ் தரு கொன்றையினான் அடி
கண்டேன் கரி உரியான் தன் கழல் இணை
கண்டேன் கமல மலர் உறைவான் அடி
கண்டேன் கழல் அது என் அன்பினுள் யானே.

நம்பனை நானா விதப் பொருள் ஆகும் என்று
உம்பரில் வானவர் ஓதும் தலைவனை
இன்பனை இன்பத்து இடை நின்று இரதிக்கும்
அன்பனை யாரும் அறிய கிலாரே.

முன்பு பிறப்பும் இறப்பும் அறியாதார்
அன்பில் இறைவனை யாம் அறிவோம் என்பர்
இன்பப் பிறப்பும் இறப்பும் இலான் நந்தி
அன்பில் அவனை அறிய கிலாரே.

ஈசன் அறியும் இராப் பகலும் தன்னைப்
பாசத்துள் வைத்துப் பரிவு செய்வார்களைத்
தேசு உற்று அறிந்து செயல் அற்று இருந்திடில்
ஈசன் வந்து எம் இடை ஈட்டி நின்றானே.

விட்டுப் பிடிப்பது என் மே தகு சோதியைத்
தொட்டுத் தொடர்வன் தொலையாப் பெருமையை
எட்டும் என் ஆர் உயிராய் நின்ற ஈசனை
மட்டுக் கலப்பது மஞ்சனம் ஆமே.

13. கல்வி

குறிப்பு அறிந்தேன் உடல் உயிர் அது கூடிச்
செறிப்பு அறிந்தேன் மிகு தேவர் பிரானை
மறிப்பு அறியாது வந்து உள்ளம் புகுந்தான்
கறிப்பு அறியா மிகும் கல்வி கற்றேனே.

கற்று அறிவாளர் கருதிய காலத்துக்
கற்று அறிவாளர் கருத்தில் ஓர் கண் உண்டு
கற்று அறிவாளர் கருதி உரை செய்யும்
கற்று அறி காட்டக் கயல் உள ஆக்குமே.

நிற்கின்ற போதே நிலை உடையான் கழல்
கற்கின்ற செய்மின் கழிந்து அறும் பாவங்கள்
சொல் குன்றல் இன்றித் தொழுமின் தொழுதபின்
மற்று ஒன்று இலாத மணி விளக்கு ஆமே.

கல்வி உடையார் கழிந்து ஓடிப் போகின்றார்
பல்லி உடையார் பாம்பு அரிந்து உண்கின்றார்
எல்லியும் காலையும் ஏத்தும் இறைவனை
வல்லியுள் வாதித்த காயமும் ஆமே.

துணை அதுவாய் வரும் தூய நல் சோதி
துணை அதுவாய் வரும் தூய நல் சொல் ஆம்
துணை அதுவாய் வரும் தூய நல் கந்தம்
துணை அதுவாய் வரும் தூய நல் கல்வியே.

நூல் ஒன்று பற்றி நுனி ஏற மாட்டாதார்
பால் ஒன்று பற்றினால் பண்பின் பயன் கெடும்
கோல் ஒன்று பற்றினால் கூடா பறவைகள்
மால் ஒன்று பற்றி மயங்குகின்றார்களே.

ஆய்ந்து கொள்வார்க்கு அரன் வெளிப்படும்
தோய்ந்த நெருப்பு அது தூய் மணி சிந்திடும்
ஏய்ந்த இளமதி எட்ட வல்லார் கட்கு
வாய்ந்த மனம் மல்கு நூல் ஏணி ஆமே.

வழித்துணையாய் மருந்தாய் இருந்தார் முன்
கழித்துணையாய் கற்று இலாதவர் சிந்தை
ஒழித் துணை யாம் உம்பராய் உலகு ஏழும்
வழித்துணை ஆம் பெரும் தன்மை வல்லானே.

பற்று அது பற்றில் பரமனைப் பற்றுமின்
முற்றது எல்லா முதல்வன் அருள் பெறில்
கிற்ற விரகில் கிளர் ஒளி வானவர்
கற்றவர் பேர் இன்பம் உற்று நின்றாரே.

கடல் உடையான் மலையான் ஐந்து பூதத்து
உடல் உடையான் பல ஊழிதொறு ஊழி
அடல் விடை யேறும் அமரர்கள் நாதன்
இடம் உடையார் நெஞ்சத்தில் இருந்தானே.

14. கேள்வி கேட்டு அமைதல்

அறம் கேட்டும் அந்தணர் வாய்மொழி கேட்டும்
மறம் கேட்டும் வானவர் மந்திரம் கேட்டும்
புறம் கேட்டும் பொன் உரை மேனி எம் ஈசன்
திறம் கேட்டும் பெற்ற சிவ கதி தானே.

தேவர் பிரான் தனைத் திவ்விய மூர்த்தியை
யாவர் ஒருவர் அறிவார் அறிந்தபின்
ஓதுமின் கேள்மின் உணர்மின் உணர்ந்த பின்
ஓதி உணர்ந்தவர் ஓங்கி நின்றாரே.

மாயன் பணி கேட்பது மா நந்தி வேண்டின்
அயன் பணி கேட்பது அரன் பணியால் ஏ
சிவன் பணி கேட்பவர் தேவரும் ஆவர்
பயன் பணி கேட்பது பற்று அதுவாமே.

பெருமான் இவன் என்று பேசி இருக்கும்
திருமானிடர் பின்னைத் தேவரும் ஆவர்
வரு மாதவர்க்கு மகிழ்ந்து அருள் செய்யும்
அருமாதவத்து எங்கள் ஆதிப் பிரானே.

ஈசன் அருளும் இறப்பும் பிறப்பையும்
பேசி இருந்து பிதற்றி மகிழ்வு எய்தி
நேசமும் ஆகும் நிகழ் ஒளியாய் நின்று
வாச மலர்க் கந்தம் மன்னி நின்றானே.

விழுப்பமும் கேள்வியும் மெய் நின்ற ஞானத்து
ஒழுக்கமும் சிந்தை உணர்கின்ற போது
வழுக்கி விடாவிடில் வானவர் கோனும்
இழுக்கு இன்றி எண் இலி காலம் அது ஆமே.

சிறியார் மணல் சோற்றில் தேக்கு இடுமாப் போல்
செறிவால் அனுபோகம் சித்திக்கும் என்னில்
குறியாதது ஒன்றைக் குறியாதார் தம்மை
அறியாது இருந்தார் அவர் ஆவர் அன்றே.

உறு துணை ஆவது உயிரும் உடம்பும்
உறு துணை ஆவது உலகு உறு கேள்வி
செறி துணை ஆவது சிவன் அடிச் சிந்தை
பெறு துணை கேட்கில் பிறப்பு இல்லை தானே.

புகழ நின்றார்க்கும் புராணன் எம் ஈசன்
இகழ நின்றார்க்கும் இடும்பைக்கு இடமாம்
மகிழ நின்று ஆதியை ஓதி உணராக்
கழிய நின்றார்க்கு ஒரு கல் பசுவாமே.

வைத்து உணர்ந்தான் மனத்தோடும் வாய் பேசி
ஒத்து உணர்ந்தான் உரு ஒன்றோடு ஒன்று ஒவ்வாது
அச்சு உழன்று ஆணி கலங்கினும் ஆதியை
நச்சு உணர்ந்தார்க்கே நணுகலும் ஆமே.

15. கல்லாமை

கல்லாதவரும் கருத்து அறி காட்சியை
வல்லார் எனில் அருள் கண்ணான் மதித்து உளோர்
கல்லாதார் உண்மை பற்றா நிற்பர் கற்றோரும்
கல்லாதார் இன்பம் காணு கிலாரே.

வல்லார்கள் என்றும் வழி ஒன்றி வாழ்கின்றார்
அல்லாதவர்கள் அறிவுபல என்பார்
எல்லா இடத்தும் உளன் எங்கள்தம் இறை
கல்லாதவர்கள் கலப்பு அறியாரே.

நில்லா நிலையை நிலையாக நெஞ்சத்து
நில்லாக் குரம்பை நிலை என்று உணர்வீர்காள்
எல்லா உயிர்க்கும் இறைவனே ஆயினும்
கல்லாதார் நெஞ்சத்துக் காண ஒண்ணாதே.

கில்லேன் வினை துயர் ஆக்கும் மயல் ஆனேன்
கல்லேன் அரன் நெறி அறியாத் தகைமையின்
வல்லேன் வழங்கும் பொருளே மனத்தின் உள்
கல்லேன் கழிய நின்று ஆட வல்லேனே.

நில்லாது சீவன் நிலை அன்று என எண்ணி
வல்லார் அறத்தும் தத்துவத்து உளும் ஆயினோர்
கல்லா மனித்தர் கயவர் உலகினில்
பொல்லா வினைத் துயர் போகம் செய்வாரே.

விண்ணினின் உள்ளே விளைந்த விளங்கனி
கண்ணினின் உள்ளே கலந்து அங்கு இருந்தது
மண்ணினின் உள்ளே மதித்து மதித்து நின்று
எண்ணி எழுதி இளைத்து விட்டாரே.

கணக்கு அறிந்தார்க்கு அன்றிக் காண ஒண்ணாது
கணக்கு அறிந்தார்க்கு அன்றிக்கை கூடா காட்சி
கணக்கு அறிந்து உண்மையைக் கண்டு அண்ட நிற்கும்
கணக்கு அறிந்தார் கல்வி கற்று அறிந்தாரே.

கல்லாத மூடரைக் காணவும் ஆகாது
கல்லாத மூடர் சொல் கேட்கக் கடன் அன்று
கல்லாத மூடர்க்குக் கல்லாதார் நல்லராம்
கல்லாத மூடர் கருத்து அறியாரே.

கற்றும் சிவஞானம் இல்லாக் கலதிகள்
சுற்றமும் வீடார் துரிசு அறார் மூடர்கள்
மற்றும் பல திசை காணார் மதி இலோர்
கற்று அன்பில் நிற்போர் கணக்கு அறிந்தார்களே.

ஆதிப் பிரான் அமரர்க்கும் பரஞ்சுடர்
சோதி அடியார் தொடரும் பெரும் தெய்வம்
ஓதி உணர வல்லோம் என்பர் உள் நின்ற
சோதி நடத்தும் தொடர் அறியாரே.

16. நடுவு நிலைமை

நடுவு நின்றார்க்கு அன்றி ஞானமும் இல்லை
நடுவு நின்றார்க்கு நரகமும் இல்லை
நடுவு நின்றார் நல்ல தேவரும் ஆவர்
நடுவு நின்றார் வழி யானும் நின்றேனே.

நடுவு நின்றான் நல்ல கார் முகில் வண்ணன்
நடுவு நின்றான் நல்ல நால் மறை ஓதி
நடுவு நின்றார் சிலர் ஞானிகள் ஆவோர்
நடுவு நின்றார் நல்ல நம்பனும் ஆமே

நடுவு நின்றார் சிலர் ஞானிகள் ஆவர்
நடுவு நின்றார் சிலர் தேவரும் ஆவர்
நடுவு நின்றார் சிலர் நம்பனும் ஆவர்
நடுவு நின்றாரொடு யானும் நின்றேனே.

தோன்றிய எல்லாம் துடைப்பன் அவன் அன்றி
ஏன்று நின்றார் என்றும் ஈசன் இணை அடி
மூன்று நின்றார் முதல்வன் திரு நாமத்தை
நான்று நின்றார் நடு ஆகி நின்றாரே.

17. கள்ளுண்ணாமை

கழுநீர்ப் பசுப் பெறில் கயம் தொறும் தேரா
கழுநீர் விடாய்த்துத் தம் காயம் சுருக்கும்
முழுநீர்க் கள் உண்போர் முறைமை அகன்றோர்
செழுநீர்ச் சிவன் தன் சிவ ஆனந்தத் தேறலே.

சித்தம் உருக்கிச் சிவம் ஆம் சமாதியில்
ஒத்த சிவ ஆனந்தத்து ஓவாத தேறலைச்
சுத்த மது உண்ணச் சுவ ஆனந்தம் விட்டிடா
நித்தல் இருத்தல் கிடத்தல் கீழ்க் காலே.

காமமும் கள்ளும் கலதி கட்கே ஆகும்
மா மலமும் சமயத்துள் மயல் உறும்
போ மதி ஆகும் புனிதன் இணை அடி
ஓமய ஆனந்தத் தேறல் உணர்வு உண்டே.

வாமத்தோர் தாமும் மது உண்டு மாள்பவர்
காமத்தோர் காமக் கள் உண்டே கலங்குவர்
ஓமத்தோர் உள் ஒளிக்கு உள்ளே உணர்வார்கள்
நாமத்தோர் அன்றே நணுகுவர் தாமே.

உள் உண்மை ஓரார் உணரார் பசு பாசம்
வள்ளன்மை நாதன் அருளினின் வாழ்வு உறார்
தெள் உண்மை ஞானச் சிவயோகம் சேர் உறார்
கள் உண்ணும் மாந்தர் கருத்து அறியாரே.

மயக்கும் சமய மலம் மன்னு மூடர்
மயக்கும் மது உண்ணும் மா மூடர் தேரார்
மயக்கு உறு மா மாயையை மாயையின் வீடு
மயக்கில் தெளியின் மயக்கு உறும் அன்றே.

மயங்கும் தியங்கும் கள் வாய்மை அழிக்கும்
இயங்கும் மடவார் தம் இன்பமே எய்தி
முயங்கும் நயம் கொண்ட ஞானத்து முந்தார்
இயங்கும் இடை அறா ஆனந்தம் எய்துமே.

இராப் பகல் அற்ற இடத்தே இருந்து
பராக்கு அற ஆனந்தத் தேறல் பருகார்
இராப் பகல் அற்ற இறை அடி இன்பத்து
இராப் பகல் மாயை இரண்டு இடத்தேனே.

சத்தியை வேண்டிச் சமயத்தோர் கள் உண்பர்
சத்தி அழிந்தது தம்மை மறத்தலால்
சத்தி சிவ ஞானம் தன்னில் தலைப்பட்டுச்
சத்திய ஞான ஆனந்தத்தில் சார்தலே.

சத்தன் அருள் தரில் சத்தி அருள் உண்டாம்
சத்தி அருள் தரில் சத்தன் அருள் உண்டாம்
சத்தி சிவம் ஆம் இரண்டும் தன் உள் வைக்கச்
சத்தியம் எண் சித்தித் தன்மையும் ஆமே.

தத்துவம் நீக்கி மருள் நீக்கித் தான் ஆகிப்
பொய்த்தவம் நீக்கி மெய்ப் போகத்துள் போகியே
மெய்த்த சகம் உண்டு விட்டுப் பரானந்தச்
சித்தி அது ஆக்கும் சிவ ஆனந்தத் தேறலே.

யோகிகள் கால் கட்டி ஒண் மதி ஆனந்தப்
போத அமுதைப் பொசித்தவர் எண் சித்தி
மோகியர் கள் உண்டு மூடராய் மோகம் உற்று
ஆகும் மதத்தால் அறிவு அழிந்தாரே.

                                      முதல் தந்திரம் முற்றிற்று 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக