வியாழன், ஆகஸ்ட் 04, 2011

சித்தர் பாடல்கள் (திருமூலர் அருளிய திருமந்திரம் ) 1

திருமூலர் அருளிய திருமந்திரம் 

               
        விநாயகர் காப்பு
ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தின் இளம் பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன் தனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்தடி போற்று கின்றேனே.

                        பாயிரம்
                 1கடவுள் வாழ்த்து
ஒன்று அவன் தானே, இரண்டு அவன் இன் அருள்,
நின்றனன் மூன்றின் உள், நான்கு உணர்ந்தான், ஐந்து
வென்றனன், ஆறு விரிந்தனன், ஏழ் உம்பர்ச்
சென்றனன், தான் இருந்தான் உணர்ந்து எட்டே.



போற்றி இசைத்து இன் உயிர் மன்னும் புனிதனை
நால் திசைக்கும் நல்ல மாதுக்கு நாதனை
மேல் திசைக்குள் தென் திசைக்கு ஒரு வேந்தனாம்
கூற்று உதைத்தானை யான் கூறுகின்றேனே.



ஒக்க நின்றானை உலப்பு இலி தேவர்கள்
நக்கன் என்று ஏத்திடு நாதனை நாள் தொறும்
பக்க நின்றார் அறியாத பரமனைப்
புக்கு நின்று உன்னி யான் போற்றி செய்வேனே.



சிவனொடு ஒக்கும் தெய்வம் தேடினும் இல்லை
அவனொடு ஒப்பார் இங்கு யாவரும் இல்லை
புவனம் கடந்து அன்று பொன் ஒளி மின்னும்
தவனச் சடைமுடித் தாமரை யானே.



அவனை ஒழிய அமரரும் இல்லை
அவன் அன்றிச் செய்யும் அரும் தவம் இல்லை
அவன் அன்றி மூவரால் ஆவது ஒன்று இல்லை
அவன் அன்றி ஊர் புகுமாறு அறியேனே.



முன்னை ஒப்பாய் உள்ள மூவர்க்கு மூத்தவன்
தன்னை ஒப்பாய் ஒன்றும் இல்லாத் தலைமகன்
தன்னை அப்பா எனில் அப்பனும் ஆய் உளன்
பொன்னை ஒப்பு ஆகின்ற போதகத் தானே.



தீயினும் வெய்யன் புனலினும் தண்ணியன்
ஆயினும் ஈசன் அருள் அறிவார் இல்லை
சேயினும் நல்லன் அணியன் நல் அன்பர்க்குத்
தாயினும் நல்லன் தாழ்சடை யோனே.



பொன்னால் புரிந்திட்ட பொன் சடை என்னப்
பின்னால் பிறங்க இருந்தவன் பேர் நந்தி
என்னால் தொழப் படும் எம் இறை மற்று அவன்
தன்னால் தொழப் படுவார் இல்லை தானே.



அயலும் புடையும் எம் ஆதியை நோக்கில்
இயலும் பெரும் தெய்வம் யாதும் ஒன்று இல்லை
முயலும் முயலில் முடிவும் மற்று ஆங்கே
பெயலும் மழை முகில் பேர் நந்தி தானே



பிதற்றுகின்றேன் என்றும் பேர் நந்தி தன்னை
இயற்றுவன் நெஞ்சத்து இரவும் பகலும்
முயற்றுவன் ஓங்கு ஒளி வண்ணன் எம்மானை
இயல் திகழ் சோதி இறைவனும் ஆமே.



கண் நுதலான் ஒரு காதலின் நிற்கவும்
எண் இலிதேவர் இறந்தார் எனப்பலர்
மண் உறுவார்களும் வான் உறுவார்களும்
அண்ணல் இவன் என்று அறிய கிலார்களே.



மண் அளந்தான் மலரோன் முதல் தேவர்கள்
எண் அளந்து இன்ன நினைக்கிலார் ஈசனை
விண் அளந்தான் தன்னை மேல் அளந்தார் இல்லை
கண் அளந்து எங்கும் கடந்து நின்றானே.



கடந்து நின்றான் கமலம் மலர் ஆதி
கடந்து நின்றான் கடல்வண்ணன் எம் மாயன்
கடந்து நின்றான் அவர்க்கு அப்புறம் ஈசன்
கடந்து நின்றான் எங்கும் கண்டு நின்றானே.



ஆதியும் ஆய் அரனாய் உடல் உள் நின்ற
வேதியும் ஆய் விரிந்து ஆர்த்து இருந்தான் அருள்
சோதியும் ஆய்ச் சுருங்காதது ஓர் தன்மையுள்
நீதியும் ஆய் நித்தம் ஆகி நின்றானே.



கோது குலாவிய கொன்றைக் குழல் சடை
மாது குலாவிய வாள்நுதல் பாகனை
யாது குலாவி அமரரும் தேவரும்
கோது குலாவிக் குணம் பயில்வாரே.



காயம் இரண்டும் கலந்து கொதிக்கினும்
ஆயம் கத்தூரி அது மிகும் அவ்வழி
தேசம் கலந்து ஒரு தேவன் என்று எண்ணினும்
ஈசன் உறவுக்கு எதிர் இல்லை தானே.



அதிபதி செய்து அளகை வேந்தனை
நிதிபதி செய்த நிறை தவ நோக்கி
அதுபதி ஆதரித்து ஆக்கம் அது ஆக்கின்
இதுபதி கொள் என்ற எம் பெருமானே.



இதுபதி ஏலம் கமழ் பொழில் ஏழும்
முதுபதி செய்தவன் மூது அறிவாளன்
விதுபதி செய்தவன் மெய்த்தவம் நோக்கி
அதுபதி ஆக அமருகின்றானே.



முடிவும் பிறப்பையும் முன்னே படைத்த
அடிகள் உறையும் அறன் நெறி நாடில்
இடியும் முழக்கமும் ஈசர் உருவம்
கடிமலர்க் குன்ற மலையது தானே.



மன்னிய வாய்மொழியாலும் மதித்தவர்
இன்னிசை உள்ளே எழுகின்ற ஈசனைப்
பின்னை உலகம் படைத்த பிரமனும்
உன்னும் அவனை உணரலும் ஆமே.



வானப் பெரும் கொண்டல் மால் அயன் வானவர்
ஊனப் பிறவி ஒழிக்கும் ஒருவனைக்
கானக் களிறு கதறப் பிளந்த எம்
கோனைப் புகழுமின் கூடலும் ஆமே.



மனத்தில் எழுகின்ற மாய நல் நாடன்
நினைத்தது அறிவன் எனில் தான் நினைக்கிலர்
எனக்கு இறை அன்பு இலன் என்பர் இறைவன்
பிழைக்க நின்றார் பக்கம் பேணி நின்றானே.



வல்லவன் வன்னிக்கு இறை இடை வாரணம்
நில் எயன நிற்பித்த நீதியுள் ஈசனை
இல் என வேண்டா இறையவர் தம் முதல்
அல்லும் பகலும் அருளு கின்றானே.



போற்றி இசைத்தும் புகழ்ந்தும் புனிதன் தன்னடி
தேற்றுமின் என்றும் சிவன் அடிக்கே செல்வம்
ஆற்றியது என்று மயல் உற்ற சிந்தையை
மாற்றி நின்றார் வழி மன்னி நின்றானே.



பிறப்பு இலி பிஞ்ஞகன் பேர் அருளாளன்
இறப்பு இலி யாவர்க்கும் இன்பம் அருளும்
துறப்பு இலி தன்னைத் தொழுமின் தொழுதால்
மறப்பு இலி மாயா விருத்தமும் ஆமே.



தொடர்ந்து நின்றானைத் தொழுமின் தொழுதால்
படர்ந்து நின்றான் பரி பாரகம் முற்றும்
கடந்து நின்றான் கமலம் மலர் மேலே
உடந்து இருந்தான் அடிப் புண்ணியம் ஆமே.



சந்தி எனத் தக்க தாமரை வாள் முகத்து
அந்தம் இல் ஈசன் அருள் நமக்கே என்று
நந்தியை நாளும் வணங்கப் படும் அவர்
புந்தியின் உள்ளே புகுந்து நின்றானே.



இணங்கி நின்றான் எங்கும் ஆகி நின்றானும்
பிணங்கி நின்றான் பின் முன்னாகி நின்றானும்
உணங்கி நின்றான் அமரா பதி நாதன்
வணங்கி நின்றார்க்கே வழித்துணை ஆமே.



காண நில்லாய் அடியேற்கு உறவு ஆர் உளர்
நாண நில்லேன் உன்னை நான் தழுவிக் கொளக்
கோண நில்லாத குணத்து அடியார் மனத்து
ஆணியன் ஆகி அமர்ந்து நின்றானே.



வான் நின்று அழைக்கும் மழைபோல் இறைவனும்
தான் நின்று அழைக்கும்கொல் என்று தயங்குவார்
ஆன் நின்று அழைக்கும் அதுபோல் என் நந்தியை
நான் நின்று அழைப்பது ஞானம் கருதியே.



மண் அகத்தான் ஒக்கும் வான் அகத்தான் ஒக்கும்
விண் அகத்தான் ஒக்கும் வேதகத்தான் ஒக்கும்
பண் அகத்து இன் இசை பாடல் உற்றானுக்கே
கண் அகத்தே நின்று காதலித் தேனே.



தேவர் பிரான் நம்பிரான் திசை பத்தையும்
மேவு பிரான் விரி நீர் உலகு ஏழையும்
தாவும் பிரான் தன்மை தான் அறிவார் இல்லை
பாவு பிரான் அருள் பாடலும் ஆமே.



பதி பல ஆயது பண்டு இவ் உலகம்
விதி பல செய்து ஒன்று மெய்ம்மை உணரார்
துதி பல தோத்திரம் சொல்ல வல்லாரும்
மதி இலர் நெஞ்சினுள் வாடுகின்றாரே.



சாந்து கமழும் கவரியின் கந்தம் போல்
வேந்தன் அமரர்க்கு அருளிய மெய்ந் நெறி
ஆர்ந்த சுடர் அன்ன ஆயிரம் நாமமும்
போந்தும் இருந்தும் புகழுகின்றேனே.



ஆற்று கிலா வழியாகும் இறைவனைப்
போற்றுமின் போற்றிப் புகழ்மின் புகழ்ந்திடில்
மேல்திசைக்கும் கிழக்குத் திசை எட்டொடு
மாற்றுவன் அப்படி ஆட்டவும் ஆமே.



அப்பனை நந்தியை ஆரா அமுதினை
ஒப்பு இலி வள்ளலை ஊழி முதல்வனை
எப் பரிசு ஆயினும் ஏத்துமின் ஏத்தினால்
அப் பரிசு ஈசன் அருள் பெறலாமே.



நானும் நின்று ஏத்துவன் நாள் தொறும் நந்தியைத்
தானும் நின்றான் தழல் தான் ஒக்கும் மேனியன்
வானில் நின்றார் மதிபோல் உடல் உள் உவந்து
ஊனில் நின்று ஆங்கே உயிர்க்கின்ற ஆறே.



பிதற்று ஒழியேன் பெரியான் அரியானைப்
பிதற்று ஒழியேன் பிறவா உருவானைப்
பிதற்று ஒழியேன் எங்கள் பேர் நந்தி தன்னைப்
பிதற்று ஒழியேன் பெருமைத்தவன் யானே.



வாழ்த்த வல்லார் மனத்து உள் உறு சோதியைத்
தீர்த்தனை அங்கே திளைக்கின்ற தேவனை
ஏத்தியும் எம் பெருமான் என்று இறைஞ்சியும்
ஆத்தம் செய்து ஈசன் அருள் பெறலாமே.



குறைந்து அடைந்து ஈசன் குரை கழல் நாடும்
நிறைந்து அடை செம் பொனின் நேர் ஒளி ஒக்கும்
மறைஞ் சடம் செய்யாது வாழ்த்த வல்லார்க்குப்
புறம் சடம் செய்வான் புகுந்து நின்றானே.



சினம் செய்த நஞ்சு உண்ட தேவர் பிரானைப்
புனம் செய்த நெஞ்சு இடை போற்ற வல்லார்க்குக்
கனம் செய்த வாள் நுதல் பாகனும் அங்கே
இனம் செய்த மான்போல் இணங்கி நின்றானே.



போய் அரன் தன்னைப் புகழ்வார் பெறுவது
நாயகன் நான் முடி செய்ததுவே நல்கு
மாயகம் சூழ்ந்து வர வல்லார் ஆகிலும்
வேய் அன தோளிக்கு வேந்து ஒன்றும்தானே.



அரன் அடி சொல்லி அரற்றி அழுது
பரன் அடி நாடியே பாவிப்ப நாளும்
உரன் அடி செய்து அங்கு ஒதுங்க வல்லார்க்கு
நிரன் அடி செய்து நிறைந்து நின்றானே.



போற்றி என்பார் அமரர் புனிதன் அடி
போற்றி என்பார் அசுரர் புனிதன் அடி
போற்றி என்பார் மனிதர் புனிதன் அடி
போற்றி என் அன்புள் பொலிய வைத்தேனே.



விதிவழி அல்லது இவ் வேலை உலகம்
விதிவழி இன்பம் விருத்தமும் இல்லை
துதிவழி நித்தலும் சோதிப் பிரானும்
பதிவழி காட்டும் பகலவன் ஆமே.



அந்தி வண்ணா அரனே சிவனே என்று
சிந்தை செய் வண்ணம் திருந்து அடியார் தொழ
முந்தி வண்ணா முதல்வா பரனே என்று
வந்து இவ்வண்ணன் எம் மனம் புகுந்தானே.



மனை உள் இருந்தவர் மாதவர் ஒப்பர்
நினைவு உள் இருந்தவர் நேசத்து உள் நிற்பர்
பனையுள் இருந்த பருந்து அது போல
நினையாதவர்க்கு இல்லை நின் இன்பம் தானே.



அடியார் பரவும் அமரர் பிரானை
முடியால் வணங்கி முதல்வனை முன்னிப்
படியார் அருளும் பரம்பரன் எந்தை
விடியா விளக்கு என்று மேவி நின்றேனே.



பரை பசு பாசத்து நாதனை உள்ளி
உரை பசு பாசத்து ஒருங்க வல்லார்க்குத்
திரை பசு பாவச் செழும் கடல் நீந்திக்
கரை பசு பாசம் கடந்து எய்தலாமே.



சூடுவன் நெஞ்சு இடை வைப்பன் பிரான் என்று
பாடுவன் பன்மலர் தூவிப் பணிந்து நின்று
ஆடுவன் ஆடி அமரர் பிரான் என்று
நாடுவன் யான் இன்று அறிவது தானே.



        2. மும் மூர்த்திகளின் முறைமை


அளவு இல் இளமையும் அந்தமும் ஈறும்
அளவு இயல் காலமும் நாலும் உணரில்
தளர்வு இலன் சங்கரன் தன் அடியார் சொல்
அளவு இல் பெருமை அரி அயற்கு ஆமே.



ஆதிப் பிரானும் அணிமணி வண்ணனும்
ஆதிக் கமலத்து அலர் மிசையானும்
சோதிக்கில் மூன்றும் தொடர்ச்சியில் ஒன்று எனார்
பேதித்து உலகம் பிணங்கு கின்றார்களே.



ஈசன் இருக்கும் இருவினைக்கு அப்புறம்
பீசம் உலகில் பெரும் தெய்வம் ஆனது
ஈசன் அது இது என்பார் நினைப்பு இலார்
தூசு பிடித்தவர் தூர் அறிந்தார் களே.



சிவன் முதல் மூவரோடு ஐவர் சிறந்த
அவை முதல் ஆறு இரண்டு ஒன்றோடு ஒன்று ஆகும்
அவை முதல் விந்துவும் நாதமும் ஓங்கச்
சவை முதல் சங்கரன் தன் பெயர் தானே.



பயன் அறிந்து அவ்வழி எண்ணும் அளவில்
அயனொடு மால் நமக்கு அன்னியம் இல்லை
நயனங்கள் மூன்று உடை நந்தி தமர் ஆம்
வயனம் பெறுவீர் அவ் வானவராலே.



ஓலக்கம் சூழ்ந்த உலப்பிலி தேவர்கள்
பால் ஒத்த மேனி பணிந்து அடியேன் தொழ
மாலுக்கும் ஆதிப் பிரமற்கும் ஒப்பு நீ
ஞாலத்து நம் அடி நல்கிடு என்றானே.



வானவர் என்றும் மனிதர் இவர் என்றும்
தேன் அமர் கொன்றைச் சிவன் அருள் அல்லது
தான் அமர்ந்து ஓரும் தனித் தெய்வம் மற்று இல்லை
ஊன் அமர்ந்தோரை உணர்வது தானே.



சோதித்த பேர் ஒளி மூன்று ஐந்து என நின்ற
ஆதிக் கண் ஆவது அறிகிலர் ஆதர்கள்
நீதிக்கண் ஈசன் நெடுமால் அயன் என்று
பேதித்து அவரைப் பிதற்றுகின்றாரே.



பரத்திலே ஒன்றாய் உள்ளாய்ப் புறம் ஆகி
வரத்தினுள் மாயவனாய் அயன் ஆகித்
தரத்தினுள் தான் பல தன்மையன் ஆகிக்
கரத்தினுள் நின்று கழிவு செய்தானே.



தான் ஒரு கூறு சதாசிவன் எம் இறை
வான் ஒரு கூறு மருவியும் அங்கு உளான்
கோன் ஒரு கூறு உடல் உள் நின்று உயிர்க்கின்ற
தான் ஒரு கூறு சலம் அயன் ஆமே.



               3. வேதச் சிறப்பு


வேதத்தை விட்ட அறம் இல்லை வேதத்தின்
ஓதத் தகும் அறம் எல்லாம் உள தர்க்க
வாதத்தை விட்டு மதிஞர் வளம் உற்ற
வேதத்தை ஓதியே வீடு பெற்றார்களே.



வேதம் உரைத்தானும் வேதியன் ஆகிலன்
வேதம் உரைத்தானும் வேதா விளங்கிட
வேதம் உரைத்தானும் வேதியர் வேள்விக்காய்
வேதன் உரைத்தானும் மெய்ப் பொருள் காட்டவே.



இருக்கு உருவாம் எழில் வேதத்தின் உள்ளே
உருக்கு உணர் வாய் உணர் வேதத்துள் ஓங்கி
வெருக்கு உருவாகிய வேதியர் சொல்லும்
கருக்கு உருவாய் நின்ற கண்ணனும் ஆமே.



இருக்கில் இருக்கும் எண் இலி கோடி
அருக்கின்ற மூலத்துள் அங்கே இருக்கும்
அருக்கனும் சோமனும் ஆர் அழல் வீச
உருக்கிய ரோமம் ஒளிவிடும் தானே.



திரு நெறி ஆவது சித்த சித்து அன்றிப்
பெரு நெறி ஆய பிரானை நினைந்து
குரு நெறி ஆம் சிவமா நெறி கூடும்
ஒரு நெறி ஒன்று ஆக வேதாந்தம் ஓதுமே.



ஆறு அங்கமாய் வரு மாமறை ஓதியைக்
கூறு அங்கம் ஆகக் குணம் பயில்வார் இல்லை
வேறு அங்கம் ஆக விளைவு செய்து அப்புறம்
பேறு அங்கம் ஆகப் பெருக்கு கின்றாரே.



பாட்டும் ஒலியும் பரக்கும் கணிகையர்
ஆட்டும் அறாத அவனியின் மாட்டாதார்
வேட்டு விருப்பார் விரதம் இல்லாதவர்
ஈட்டும் இடம் சென்று இகலல் உற்றாரே.



                              4. ஆகமச் சிறப்பு 


அஞ்சன மேனி அரிவை ஓர் பாகத்தன்
அஞ்சொடு இருபத்து மூன்று உள ஆகமம்
அஞ்சலி கூப்பி அறுபத்து அறுவரும்
அஞ்சா முகத்தில் அரும் பொருள் கேட்டதே.



அண்ணல் அருளால் அருளும் சிவா ஆகமம்
எண்ணில் இருபத்து எண் கோடி நூறு ஆயிரம்
விண்ணவர் ஈசன் விழுப்பம் உரைத்தனர்
எண்ணி நின்ற அப் பொருள் ஏத்துவன் யானே.



அண்ணல் அருளால் அருளும் திவ்யா கமம்
விண்ணில் அமரர் தமக்கும் விளங்க அரிது
எண்ணில் எழுபது கோடி நூறு ஆயிரம்
எண்ணிலும் நீர்மேல் எழுத்தது ஆகுமே.



பரனாய்ப் பரா பரம் காட்டி உலகில்
அரனாய்ச் சிவ தன்மம் தானே சொல் காலத்து
அரனாய் அமரர்கள் அர்ச்சிக்கும் நந்தி
உரன் ஆகி ஆகமம் ஓங்கி நின்றானே.



சிவம் ஆம் பரத்தினில் சத்தி சதாசிவம்
உவமா மகேசர் உருத்திர தேவர்
தவ மால் பிரமீசர் தம்மில் தாம் பெற்ற
நவ ஆகமம் எங்கள் நந்தி பெற்றானே.



பெற்ற நல் ஆகமம் காரணம் காமிகம்
உற்ற நல் வீரம் உயர் சித்தம் வாதுளம்
மற்று அவ் வியாமளம் ஆகும்கால் ஓத்தரந்து
உற்ற நல் சுப்பிரம் சொல்லு மகுடமே.



ஆகமம் ஒன்பான் அதில் ஆன நால் ஏழு
மேகம் இல் நால் ஏழு முப்பேதம் உற்று உடன்
வேகம் இல் வேதாந்த சித்தாந்த மெய்ம்மை ஒன்று
ஆக முடிந்த அரும் சுத்த சைவமே.



              5. அந்தணர் ஒழுக்கம்


அந்தணர் ஆவோர் அறு தொழில் பூண்டு உளோர்
செந்தழல் ஓம்பி முப்போதும் நியமம் செய்
நம்தவ நல் கருமத்து நின்று ஆங்கு இட்டுச்
சந்தியும் ஓதிச் சடங்கு அறுப்போர்களே.



காயத்திரியே கருது சாவித்திரி
ஆய்தற்கு உவப்பர் மந்திரம் ஆங்கு உன்னி
நேயத் தேர் ஏறி நினைவு உற்று நேயத்தாய்
மாயத்துள் தோயா மறையோர்கள் தாமே.



பெருநெறி ஆன பிரணவம் ஓர்ந்து
குரு நெறியால் உரை கூடி நால் வேதத்து
இரு நெறி ஆன கிரியை இருந்து
சொருபம் அது ஆனோர் துகள் இல் பார்ப்பாரே.



சத்தியமும் தவம் தான் அவன் ஆதலும்
எய்த் தகும் இந்தியம் ஈட்டியே வாட்டலும்
ஒத்த உயிர்கள் உண்டாய் உணர்வு உற்றுப்
பெத்தம் அறுத்தலும் ஆகும் பிரமமே.



வேத அந்தம் கேட்க விரும்பிய வேதியர்
வேத அந்தம் கேட்டும் தம் வேட்கை ஒழிந்திலர்
வேத அந்தம் ஆவது வேட்கை ஒழிந்து இடம்
வேத அந்தம் கேட்டவர் வேட்கை விட்டாரே.



நூலும் சிகையும் நுவலில் பிரமமோ
நூல் அது கார்ப் பாச நுண்சிகை கேசம் ஆம்
நூல் அது வேதாந்தம் நுண் சிகை ஞானம் ஆம்
நூல் உடை அந்தணர் காணும் நுவலிலே.



சத்தியம் இன்றித் தனி ஞானம் தான் இன்றி
ஒத்த விடையம் விட்டோரும் உணர்வு இன்றிப்
பத்தியும் இன்றிப் பரன் உண்மை இன்றிப்
பித்து ஏறும் மூடர் பிராமணர் தாம் அன்றே.



திருநெறி ஆகிய சித்த சித்து இன்றிக்
குருநெறி யாலே குருபதம் சேர்ந்து
கரும நியம் ஆதி கை விட்டுக் காணும்
துரிய சமதி ஆம் தூய் மறை யோர்க்கே.



மறையோர் அவரே மறைவர் ஆனால்
மறையோர் தம் வேத அந்த வாய்மையில் தூய்மை
குறையோர் தன் மற்று உள்ள கோலாகலம் என்று
அறிவோர் மறை தெரிந்த அந்தணர் ஆமே.



அம் தண்மை பூண்ட அருமறை அந்தத்துச்
சிந்தை செய் அந்தணர் சேரும் செழும்புவி
நந்துதல் இல்லை நரபதி நன்று ஆகும்
அந்தியும் சந்தியும் ஆகுதி பண்ணுமே.



                6. ஆகுதி வேட்டல்


வசை இல் விழுப் பொருள் வானும் நிலனும்
திசையும் திசை பெறு தேவர் குழாமும்
விசையம் பெருகிய வேத முதல் ஆம்
அசை இலா அந்தணர் ஆகுதி வேட்கிலே.



ஆகுதி வேட்கும் அருமறை அந்தணர்
போ கதி நாடிப் புறம் கொடுத்து உண்ணுவர்
தாம் விதி வேண்டித் தலைப்படு மெய்ந்நெறி
தாம் அறிவாலே தலைப் பட்ட வாறே.



அணை துணை அந்தணர் அங்கியுள் அங்கி
அணை துணை வைத்து அதன் உள் பொருள் ஆன
இணை துணை யாமத்து இயங்கும் பொழுது
துணை அணை ஆயது ஓர் தூய் நெறியாமே.



தானே விடும் பற்று இரண்டும் தரித்திட
யானே விடப் படும் ஏது ஒன்றை நாடாது
பூ மேவு நான் முகன் புண்ணிய போகனாய்
ஓ மேவும் ஓர் ஆகுதி அவி உண்ணவே.



நெய் நின்று எரியும் நெடும் சுடரே சென்று
மை நின்று எரியும் வகை அறிவார் கட்கு
மை நின்று அவிழ் தருமத்தின் ஆம் என்றும்
செய் நின்ற செல்வம் தீ யதுவாமே.



பாழி அகலும் எரியும் திரிபோல் இட்டு
ஊழி அகலும் உறுவினை நோய் பல
வாழி செய்து அங்கி உதிக்க அவை விழும்
வீழி செய்து அங்கி வினை சுடும் ஆமே.



பெரும் செல்வம் கேடு என்று முன்னே படைத்த
வரும் செல்வம் தந்த தலைவனை நாடும்
வரும் செல்வத்து இன்பம் வர இருந்து எண்ணி
அரும் செல்வத்து ஆகுதி வேட்க நின்றாரே.



ஒண் சுடரானை உலப்பு இலி நாதனை
ஒண் சுடர் ஆகி என் உள்ளத்து இருக்கின்ற
கண் சுடரோன் உலகு ஏழும் கடந்த அத்
தண் சுடர் ஓமத் தலைவனும் ஆமே.



ஓமத்துள் அங்கியின் உள் உளன் எம் இறை
ஈமத்துள் அங்கி இரதம் கொள்வான் உளன்
வேமத்துள் அங்கி விளைவு வினைக் கடல்
கோமத்துள் அங்கி குரை கடல் தானே.



அங்கி நிறுத்தும் அரும் தவர் ஆரத்து
அங்கி இருக்கும் வகை அருள் செய்தவர்
எங்கும் நிறுத்தி இளைப்பப் பெரும்பதி
பொங்கி நிறுத்தும் புகழ் அது ஆமே.



                7. அரசாட்சி முறை


கல்லா அரசனும் காலனும் நேர் ஒப்பர்
கல்லா அரசனில் காலன் மிக நல்லன்
கல்லா அரசன் அறம் ஓரான் கொல் என்பான்
நல்லாரைக் காலன் நணுக நில்லானே.



நாள் தோறும் மன்னவன் நாட்டில் தவ நெறி
நாள் தோறும் நாடி அவன் நெறி நாடான் ஏல்
நாள் தோறும் நாடு கெடுமூட நண்ணும் ஆல்
நாள் தோறும் செல்வம் நரபதி குன்றுமே.



வேட நெறிநில்லார் வேடம் பூண்டு என்பயன்
வேட நெறி நிற்போர் வேடம் மெய் வேடமே
வேட நெறி நில்லார் தம்மை விறல் வேந்தன்
வேட நெறி செய்தால் வீடு அது ஆமே.



மூடம் கெடாதோர் சிகை நூல் முதல் கொள்ளில்
வாடும் புவியும் பெரு வாழ்வு மன்னனும்
பீடு ஒன்று இலன் ஆகும் ஆதலால் பேர்த்து உணர்ந்து
ஆடம் பர நூல் சிகை அறுத்தால் நன்றே.



ஞானம் இலாதார் சடை சிகை நூல் நண்ணி
ஞானிகள் போல நடிக் கின்றவர் தம்மை
ஞானி களாலே நரபதி சோதித்து
ஞான் உண்டு ஆக்குதல் நலம் ஆகும் நாட்டிற்கே.



ஆவையும் பாவையும் மற்ற அறவோரையும்
தேவர்கள் போற்றும் திரு வேடத்தாரையும்
காவலன் காப்பவன் காவாது ஒழிவனேல்
மேவும் மறுமைக்கு மீளா நரகமே.



திறம் தரு முத்தியும் செல்வமும் வேண்டின்
மறந்தும் அற நெறியே ஆற்றல் வேண்டும்
சிறந்த நீர் ஞாலம் செய் தொழில் யாவையும்
அறைந்திடில் வேந்தனுக்கு ஆறில் ஒன்று ஆமே.



வேந்தன் உலகை மிக நன்று காப்பது
வாய்ந்த மனிதர்கள் அவ்வழியாய் நிற்பர்
பேர்ந்து இவ் உலகைப் பிறர் கொள்ளத் தாம் கொள்ளப்
பாய்ந்த புலி அன்ன பாவகத் தானே.



கால் கொண்டு கட்டிக் கனல் கொண்டு மேல் ஏற்றிப்
பால் கொண்டு சோமன் முகம் பற்றி உண்ணாதோர்
மால் கொண்டு தேறலை உண்ணும் மருளரை
மேல் கொண்டு தண்டம் செய் வேந்தன்கடனே.



தம் தம் சமயத் தகுதி நில்லாதாரை
அத்தன் சிவன் சொன்ன ஆகம நூல்நெறி
எத் தண்டமும் செய்யும் அம்மை இல் இம்மைக்கே
மெய்த் தண்டம் செய்வது அவ் வேந்தன் கடனே. 



                                          8. வானச் சிறப்பு


அமுது ஊறும் மா மழை நீர் அதனாலே
அமுது ஊறும் பல் மரம் பார் மிசை தோற்றும்
கமுகூறு தெங்கு கரும்பொடு வாழை
அமுது ஊறும் காஞ்சிரை ஆங்கு அது ஆமே.



வரை இடை நின்று இழி வான் நீர் அருவி
உரை இல்லை உள்ளத்து அகத்து நின்று ஊறு
நுரை இல்லை மாசு இல்லை நுண்ணிய தெண்ணீர்க்
கரை இல்லை எந்தை கழுமணி யாறே.



              9. அறம் செய்வான் திறம்


ஆர்க்கும் இடுமின் அவர் இவர் என்னன் மின்
பார்த்து இருந்து உண்மின் பழம்பொருள் போற்றன் மின்
வேட்கை உடையீர் விரைந்து ஒல்லை உண்ணன்மின்
காக்கை கரைந்து உண்ணும் காலம் அறிமினே.



தாம் அறிவார் அண்ணல் தாள் பணிவார் அவர்
தாம் அறிவார் அறம் தாங்கி நின்றார் அவர்
தாம் அறிவார் சில தத்துவர் ஆவர்கள்
தாம் அறிவார்க்குத் தமர்பரன் ஆமே.



யாவர்க்கும் ஆம் இறைவற்கு ஒரு பச்சிலை
யாவர்க்கும் ஆம் பசுவுக்கு ஒரு வாய் உறை
யாவர்க்கும் ஆம் உண்ணும் போது ஒரு கைப்பிடி
யாவர்க்கும் ஆம் பிறர்க்கு இன்னுரைதானே.



அற்று நின்றார் உண்ணும் ஊணே அறன் என்னும்
கற்றன போதம் கமழ்பவர் மானிடர்
உற்றுநின்று ஆங்கு ஒரு கூவல் குளத்தினில்
பற்றி வந்து உண்ணும் பயன் அறியாரே.



அழுக்கினை ஓட்டி அறிவை நிறையீர்
தழுக்கிய நாளில் தருமமும் செய்யீர்
விழித்து இருந்து என் செய்வீர் வெம்மை பரந்து
விழக் கவன்று என் செய்வீர் ஏழை நெஞ்சீரே.



தன்னை அறியாது தான் அல என்னாது இங்கு
இன்மை அறியாது இளையர் என்று ஓராது
வன்மையில் வந்திடும் கூற்றம் வரு முன்னம்
தன்மையின் நல்ல தவம் செய்யும் நீரே.



துறந்தான் வழிமுதல் சுற்றமும் இல்லை
இறந்தான் வழிமுதல் இன்பமும் இல்லை
மறந்தான் வழிமுதல் வந்திலன் ஈசன்
அறிந்தான் அறியும் அளவு அறிவாரே.



தான் தவம் செய்வதாம் செய் தவத்து அவ்வழி
மான் தெய்வம் ஆக மதிக்கும் மனிதர் காள்
ஊன் தெய்வம் ஆக உயிர்க்கின்ற பல் உயிர்
நான் தெய்வம் என்று நமன் வருவானே.



திளைக்கும் வினைக் கடல் தீருறு தோணி
இளைப்பினை நீக்கும் இரு வழி உண்டு
கிளைக்கும் தனக்கும் அக்கேடு இல் புகழோன்
விளைக்கும் தவம் அறம் மேல் துணை ஆமே.



பற்று அதுவாய் நின்ற பற்றினைப் பார்மிசை
அற்றம் உரையான் அற நெறிக்கு அல்லது
உற்று உங்களால் ஒன்றும் ஈந்த அதுவே துணை
மற்று அண்ணல் வைத்த வழி கொள்ளும் ஆறே.



                         10. அறம் செயான் திறம் 


எட்டிப் பழுத்த இரும் கனி வீழ்ந்தன
ஒட்டிய நல் அறம் செய்யாதவர் செல்வம்
வட்டி கொண்டு ஈட்டியே மண்ணின் முகந்திடும்
பட்டிப் பதகர் பயன் அறியாரே.



ஒழிந்தன காலங்கள் ஊழியும் போயின
கழிந்தன கற்பனை நாளும் குறுகிப்
பிழிந்தன போலத் தம் பேர் இடர் ஆக்கை
அழிந்தன கண்டும் அறம் அறியாரே



அறம் அறியார் அண்ணல் பாதம் நினையும்
திறம் அறியார் சிவலோக நகர்க்குப்
புறம் அறியார் பலர் பொய்ம் மொழிகேட்டு
மறம் அறிவார் பகை மன்னி நின்றாரே



இருமலும் சோகையும் ஈளையும் வெப்பும்
தருமம் செய்யாதவர் தம் பாலது ஆகும்
உரும் இடி நாகம் உரோணி கழலை
தருமம் செய்வார் பக்கல் தாழ கிலாவே.



பரவப் படுவான் பரமனை ஏத்தார்
இரவலர்க்கு ஈதலை ஆயினும் ஈயார்
கரகத்தால் நீராட்டிக் காவை வளர்க்கார்
நரகத்தில் நிற்றிரோ நாள் எஞ்சினீரே.



வழி நடப்பார் இன்றி வானோர் உலகம்
கழி நடப்பார் நடந்து ஆர் கருப்பாரும்
அழி நடக்கும் வினை மாசு அற ஓட்டிட
வழி நடக்கும் அளவு வீழ்ந்து ஒழிந்தாரே.



கனிந்தவர் ஈசன் கழல் அடி காண்பர்
துணிந்தவர் ஈசன் துறக்கம் அது ஆள்வர்
மலிந்தவர் மாளும் துணையும் ஒன்று இன்றி
மெலிந்த சினத்தின் உள் வீழ்ந்து ஒழிந்தாரே



இன்பம் இடர் என்று இரண்டு உற வைத்தது
முன்பு அவர் செய்கையினாலே முடிந்தது
இன்பம் அது கண்டும் ஈகிலாப் பேதைகள்
அன்பு இலார் சிந்தை அறம் அறியாரே



கெடுவதும் ஆவதும் கேடு இல் புகழோன்
நடுவு அல்ல செய்து இன்ப நாடவும் ஒட்டான்
இடுவதும் ஈவதும் எண்ணுமின் இன்பம்
படுவது செய்யில் பசு அது ஆமே.



செல்வம் கருதிச் சிலர் பலர் வாழ்வு எனும்
புல்லறி வாளரைப் போற்றிப் புலராமல்
இல்லம் கருதி இறைவனை ஏத்துமின்
வில்லி இலக்கு எய்த வில் குறி ஆமே.



               11. அவையடக்கம்


ஆர் அறிவார் எங்கள் அண்ணல் பெருமையை
ஆர் அறிவார் இந்த அகலமும் நீளமும்
பேர் அறியாத பெரும் சுடர் ஒன்றதின்
வேர் அறியாமை விளம்பு கின்றேனே.



பாடவல்லார் நெறிபாட அறிகிலேன்
ஆடவல்லார் நெறி ஆட அறிகிலேன்
நாடவல்லார் நெறி நாட அறிகிலேன்
தேடவல்லார் நெறி தேட கில்லேன்.






தற்சிறப்புப் பாயிரம்
 குரு பாரம்பரியம்

நந்தி அருள் பெற்ற நாதரை நாடிடின்
நந்திகள் நால்வர் சிவயோக மாமுனி
அன்று தொழுத பதஞ்சலி வியாக் ரமர்
என்று இவர் என்னோடு எண்மரும் ஆமே

நந்தி அருளாலே நாதனாம் பேர் பெற்றோம்
நந்தி அருளாலே மூலனை நாடினோம்
நந்தி அருளாவது என் செயும் நாட்டினில்
நந்தி வழிகாட்ட யான் இருந்தேனே.

நால்வரும் நாலு திசைக்கொன்று நாதர்கள்
நால்வரும் நானாவிதப்பொருள் கைக்கொண்டு
நால்வரும் யான் பெற்றது எல்லாம் பெறுகவென
நால்வரும் தேவராய் நாதர் ஆனார்களே.

மந்திரம் பெற்ற வழிமுறை மாலாங்கன்
இந்திரன் சோமன் பிரமன் உருத்திரன்
கந்துருக் காலாங்கி கஞ்ச மலையனோடு
இந்த எழுவரும் என் வழி யாமே.

மொழிந்தது மூவர்க்கும் நால்வர்க்கும் ஈசன்
ஒழிந்த பெருமை இறப்பும் பிறப்பும்
செழும்சுடர் மூன்று ஒளியாகிய தேவன்
கழிந்த பெருமையைக் காட்ட கிலானே.

தத்துவ ஞானம் உரைத்தது தாழ்வரை
முத்திக்கு இருந்த முனிவரும் தேவரும்
ஒத்துடன் வேறாய் இருந்து துதிசெயும்
பத்திமையால் இப்பயன் அறியாரே.

         2. திருமூலர் வரலாறு

நந்தி இணை யடியான் தலை மேல் கொண்டு
புந்தியின் உள்ளே புகப் பெய்து போற்றிசெய்து
அந்திமதி புனை அரனடி நாள்தொறும்
சிந்தை செய்து ஆகமம் செப்பல் உற்றேனே.

செப்பும் சிவாகமம் என்னு மப்பேர் பெற்றும்
அப்படி நல்கும் அருள் நந்திதாள் பெற்றுத்
தப்பு இலா மன்றில் தனிக் கூத்துக் கண்ட பின்
ஒப்பு இல் எழுகோடி யுகம் இருந்தேனே.

இருந்த அக்காரணம் கேள் இந்திரனே
பொருந்திய செல்வப் புவனா பதி யாம்
அருந்தவச் செல்வியைச் சேவித்து அடியேன்
பரிந்து உடன் வந்தனன் பத்தியினாலே.

மாலாங்கனே இங்கு யான் வந்த காரணம்
நீலாங்க மேனியாள் நேரிழையாள் ஒடு
மூலாங்கம் ஆக மொழிந்த திருக் கூத்தின்
சீலாங்க வேதத்தைச் செப்ப வந்தேனே.

நேரிழை ஆவாள் நிரதிச ஆனந்தப்
பேருடையாள் என் பிறப்பறுத் தாண்டவள்
சீருடையாள் சிவன் ஆவடு தண் துறை
சீருடையாள் பதம் சேர்ந்து இருந்தேனே.

சேர்ந்திருந்தேன் சிவ மங்கை தன் பங்கனைச்
சேர்ந்திருந்தேன் சிவன் ஆவடு தண் துறை
சேர்ந்திருந்தேன் சிவ போதியின் நீழலில்
சேர்ந்திருந்தேன் சிவநாமங்கள் ஓதியே.

அகலிடத்தார் மெய்யை அண்டத்து வித்தைப்
புகலிடத்து எம்மெய்யைப் போத விட்டானைப்
பகலிடத்தும் இரவும் பணிந்து ஏத்தி
இகலிடத்தே இருள் நீங்கி நின்றேனே.

இருந்தேன் இக்காயத்தே எண்ணிலி கோடி
இருந்தேன் இராப் பகல் அற்ற இடத்தே
இருந்தேன் இமையவர் ஏத்தும் பதத்தே
இருந்தேன் என் நந்தி இணை அடிக் கீழே.

ஞானத் தலைவிதன் நந்தி நகர் புக்கு
ஊனமில் ஒன்பது கோடி உகம் தனுள்
ஞானப்பால் ஆட்டி நாதனை அர்ச்சித்து
யானும் இருந்தேன் நல் போதியின் கீழே.

செல்கின்ற ஆறு அறி சிவ முனி சித்தசன்
வெல்கின்ற ஞானத்து மிக்கோர் முனிவராய்ப்
பல்கின்ற தேவர் அசுரர் நரர் தம்பால்
ஒல்கின்ற வான் வழி ஊடு வந்தேனே.

சித்தத்தி னுள்ளே சிறக்கின்ற நூல்களில்
உத்தம மாகவே வோதிய வேதத்தின்
ஒத்த உடலையும் உள் நின்ற உற்பத்தி
அத்தன் எனக்கு இங்கு அருளால் அளித்ததே.

நேர்ந்திடு மூல சரியை நெறி இது என்று
ஆய்ந்திடும் காலாங்கி கஞ்ச மலையமான்
ஓர்ந்திடும் கந்துரு கேண்மின்கள் பூதலத்து
ஓர்ந்திடுஞ் சுத்த சைவத்து உயிர் அதே.

யான் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம்
வான் பற்றி நின்ற மறைப் பொருள் சொல்லிடின்
ஊன் பற்றி நின்ற உணர் உறு மந்திரம்
தான் பற்றப் பற்றத் தலைப்படும் தானே.

பிறப்பிலி நாதனைப் பேர் நந்தி தன்னைச்
சிறப்பொடு வானவர் சென்று கை கூப்பி
மறப்பிலர் நெஞ்சினுள் மந்திர மாலை
உறைப் பொடும் கூடிநின் றோதலும் ஆமே

சதாசிவம் தத்துவம் முத்தமிழ் வேதம்
மிதாசனியாது இருந்தேன் நின்ற காலம்
இதாசனியாது இருந்தேன் மன நீங்கி
உதாசனியாது உடனே உணர்ந்தேமால்

அங்கி மிகாமை வைத்தான் உடல் வைத்தான்
எங்கும் மிகாமை வைத்தான் உலகே ழையும்
தங்கி மிகாமை வைத்தான் தமிழ்ச் சாத்திரம்
பொங்கி மிகாமை வைத்தான் பொருள் தானுமே.

பண்டிதர் ஆவார் பதினெடடுப் பாடையும்
கண்டவர் கூறும் கருத்தறிவார் என்க
பண்டிதர் தங்கள் பதினெட்டுப் பாடையும்
அண்ட முதலான் அறம் சொன்ன வாறே.

பின்னை நின்று என்னே பிறவி பெறுவது
முன்னை நன்றாக முயல் தவம் செய்கிலர்
என்னை நன்றாக இறைவன் படைத்தனன்
தன்னை நன்றாகத் தமிழ்செய் யுமாறே.

பெற்றமும் மானும் மழுவும் பிறிவற்ற
தற்பரன் கற்பனை ஆகும் சராசரத்து
அற்றம் நல்கி அடியேன் சிரத்தினில்
நற்பதம் அளித்தான் எங்கள் நந்தியே.

ஞேயத்தை ஞானத்தை ஞாதுரு வத்தினை
மாயத்தை மாமாயை தன்னில் வரும் பரை
ஆயத்தை அச்சிவன் தன்னை அகோசர
வீயத்தை முற்றும் விளக்கி இட்டேனே.

விளக்கிப் பரமாகும் மெய்ஞ் ஞானச் சோதி
அளப்பில் பெருமையன் ஆனந்த நந்தி
துளக்கறும் ஆனந்தக் கூத்தன் சொல் போந்து
வளப்பில் கயிலை வழியில் வந்தேனே.

நந்தி யருளாலே மூலனை நாடிப்பின்
நந்தி யருளாலே சதாசிவன் ஆயினேன்
நந்தி யருளாலே மெய்ஞ் ஞானத்துள் நண்ணினேன்
நந்தி யருளாலே நான் இருந்தேனே.



                    பாயிரம் முற்றிற்று 

                                                                                                 
      



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக