வெள்ளி, ஆகஸ்ட் 04, 2023

சித்தர் பாடல்களில் இருந்து ....

                  மஹான் ஸ்ரீ பட்டினத்து சுவாமிகள் பாடல் .




வெட்டாத சக்கரம் பேசாத மந்திரம் வேறொருவர்க்கு’
எட்டாத புட்பம் இறையாத தீர்த்தம் இனிமுடிந்து
கட்டாத லிங்கம் கருதாத நெஞ்சம் கருத்தினுள்ளே
முட்டாத பூசையன் றோகுரு நாதன் மொழிந்ததுவே 

வெட்டாத சக்கரம்
பேசாத மந்திரம்
வேறொருவர்க்கு எட்டாத புட்பம்
இறையாத தீர்த்தம்
இனி முடிந்து கட்டாத லிங்கம்
கருதாத நெஞ்சம்
கருத்தினுள்ளே முட்டாத பூசை 
அன்றோ குருநாதன் மொழிந்ததுவே .



உடலில் உள்ள மூலாதாரம் முதலான ஆறு சக்கரங்கள் , தியானத்தில் கிடைக்கும் பேசா நிலை நிற்சிந்தனை இன்றி இருக்கும் பெரும் மௌனம் , தியானத்தில் தோன்றும் துரிய மலர், உள்ளே அண்ணாக்கில் சுரக்கும் அமுதம் , துணி முடிந்து கட்டாத அண்டம் என்னும் லிங்கம், எண்ணத்தில் அலைபாயாத நெஞ்சம், கருத்தில் செய்யும் பூசை ஆகியவற்றை எல்லாம் உரைத்தார் என் குருநாதர் என்கிறார் பட்டினத்தார் .  

                 சிவமேஜெயம் - திருவடி முத்துகிருஷ்ணன் 

சிவத்தை போற்றுவோம் !!! சித்தர்களை போற்றுவோம் !!!



  

வியாழன், பிப்ரவரி 09, 2023

 அம்பாள் வாலையரசி  பூசை .....


வாலையைப் பூசிக்க சித்தரானார் 

வாலைக் கொத்தாசையாய் சிவகர்த்தரானார் 

வேலையைப் பார்த்தல்லோ கூலி வைத்தார் 

இந்த விதம் தெரியுமோ வாலைப்பெண்ணே !

                        -கொங்கணச்சித்தர் வாலைக்கும்மி .

    

                  அண்டமத்தனையும் இயக்கும் சக்தி வாலையே , எல்லா உயிர்க்கும் புவனம் அனைத்திற்கும் இயக்கத்திற்கு காரணமாய் இருப்பவளும் அவளே அன்பிலே குழந்தை வடிவாய் ஆற்றலிலே மனோன்மணியாய் அனைத்துயிர்கட்கும் அருள்பவள் என் அன்னை வாலையே .

     ஆதிசக்தியின் குழந்தை வடிவமே வாலை இவளை பூசிக்காமல் சித்தி என்பது சத்தியமாய் சாத்தியமில்லை . பத்து வயது சிறுமியாய் இவளை பூஜித்து பூசையை ஆரம்பித்து படிப்படியாக சித்தி பெற்று பின் அன்னை மனோன்மணி தெய்வமாக பூசை முடித்து அவள் அருளாலே அப்பன் அருள் பெற்று மெய்யான நிலையை அடைந்தார்கள் சித்தர் பெருமக்கள் .


                 வாலையே அனைத்திற்கும் ஆதாரமாய் இருக்கும் ஆதிசக்தி அவளை அறிந்து அகப்பூசை செய்து சித்தி , முத்தி பெற்றவர்கள் சித்தர்கள் . வாலையை பூசிக்காத சித்தர் இல்லை . எல்லா சித்தர்களும் அவளை பூசித்து பாடல் பாடி பாடலிலே மறைபொருளாக அவளை வைத்து பாடியிருக்கிறார்கள் . நாமும் அன்னையை வணங்கி மாயையை வென்று அவளை நமக்குள் உணர்ந்து அவளின் அருளைப்பெறுவோம் . 

         இன்றைக்கிருப்பதும் பொய்யல்லவே - வீணே 
         நம் வாழ்க்கையென்பதும் பொய்யல்லவே 
         அன்றைக்கெழுத்தின் படி முடியும் - வாலை 
        ஆத்தாளைப் போற்றடி ஞானப்பெண்ணே !
                                             -  கொங்கணச்சித்தர் .

                       சிவமேஜெயம்   - திருவடி முத்துகிருஷ்ணன் 


         சிவத்தை போற்றுவோம் !!!     சித்தர்களை போற்றுவோம் !!!


 

 

 

வெள்ளி, ஜனவரி 13, 2023

                                  அடியேன் எழுதிய பாடல்கள் ....








                                          சிவமேஜெயம்


குருவே துணை       பட்டினத்தாரே சரணம்      குருவே சரணம்

                                 
                                   குரு வணக்கம்

காசினிமுற்றாகி னுங்கைக்குள் வந்தாலுந்தூ சேனுவாராதென்று
ஊசியாலுலக நிலையாமையுணர்ந்த உத்தமராமெம் குருநாதர்
பட்டினத்தார் பதமதை நாயேன் கருத்தில் நிறுத்தி யெங்கள்
பட்டில்பெரு மானுக்கு பாடல் யானியற்றுவனே . 

                             
                                  வில்வேஸ்வரர் வணக்கம்

வணங்குகிறேன் வானுமண்ணும ளந்தவன்காணாத் திருவடியை
வணங்குகிறேன் அண்டம்பலக டந்துமயன்காணாச் சடைமுடியை
வணங்குகிறேன் தொண்டருள்ளத் துறைந்தருளும் வில்வேஸ்வரனை
வணங்கி பட்டில்பெருமானுக்கு பாடலியற்றுவனே .


                               வாலை துதி

காலை கதிரவன் கண்ணியவளொரு கண்ணாம்
மாலை வருமதியும் மாதவள் மறு கண்ணாம்
மேலை யொருகண்ணோடு கண்மூன்று டையவளாம்
வாலை திரிபுரையின் பொற்பதமது காப்பு .


                             விநாயகர் வணக்கம்

மதயானை முகத்தவன் மனத்தால் நினைக்க வருபவன்
முதல்வீட்டி லருள்பவனருகம் புல்லிலகமகிழ் பவன்வினை
யகற்றிடும் நாயகன்மூஷிக மேறிடும் விநாயகன்பதம் பணிந்தீ
தகற்றிடும் திருவாகீசனுக்கு பாடலியற்றுவனே .


                                 சுப்ரமண்யர் வணக்கம்

அருணகிரி நாதருக்கு முதலடி யெடுத்துக் கொடுத்தானப்பன்
பரமனுக்கு பிரணவவிளக் கங்கொடுத்தா னலையாழிமால்
மருகனழகு முருகன்சுப்ர மன்யன்குகனை நாயேன்பணிந்து
திருவாகீச பெருமானுக்குப் பாடலியற்றுவனே .

                     திருவாகீசன் பாடல்கள்


அருவானவ னெங்குநிறைந்து அருவுருவானவன் கற்ப
தருவானவன் நிலையான இன்பந் தருவானவன் குருவுக்குங்
குருவானவன் மெய்யன்பரழைக்க வுடன் வருவானவன் தானே
உருவானவன் தன்னிகரில்லாத வனெங்களீசனே .

அஞ்சுபுலனை யுமடக்கும்வகை யறியேன்பஞ்ச பூதநாயகா
செஞ்சடையை நினையேன் பஞ்சனையை மறவேன் மாயையில்
துஞ்சிவீழ்ந் தின்னுமோர் கருப்பைக்கிருப் பவனைவில்வேசா
அஞ்சேலென் றபயமளித்தாட் கொள்ள வேண்டுமையா .

ஆற்றை யணிந்த தும்பை தலையன்
நீற்றை புணைந்த செந்நிற மேனியன்
கூற்றை பணிகொள் கூத்தன் பேரின்ப
பேற்றை யளிப்பவன் திருவாகீசனே .

வில்லடி பட்டான்பாசுபத மளித்திட்டா னன்பால்
கல்லடி பட்டான்கருணை பொழிந்திட்டா னற்றமிழால்
சொல்லடி பட்டான் கவர்ந்த பொருட் கொடுத்திட்டான்
அல்லற் படுமேழைக் கென்செய் வானோ ஒற்றியூரான்  .

மாயவன் தங்கைக்கு தன்னில் பாதி கொடுத்த
தூயவன் பிறந்திறந் தல்லற்படுத்துந்  தீராபெரும்
நோயதை தீர்ப்பவன் காலனுக்குங் காலனால
வாயன் வீற்றருள் செய்யும் விஜயாபதி .


             அண்டம் படைத்தவனாம்  - என் அப்பன்
                ஆலகால விடமுண்டவனாம்
           இன்னல் தவிர்ப்பவனாம்    - என் அப்பன்
                ஈடு இணை இல்லாதவனாம்
            உமையொரு பாகனாம்     -  என் அப்பன்
              ஊழ் வினை அறுப்பவனாம்
          எங்கும் நிறைந்தவனாம்     - என் அப்பன்
                     ஏகமாக நின்றவனாம்
            ஐயம் தீர்ப்பவனாம்           -  என் அப்பன்
                    ஒளிர்கின்ற மெய்ச் சுடராம்
           ஓங்காரப் பரம்பொருளாம் - என் அப்பன்
                   ஔடதமாய் பிணி தீர்ப்பவனாம்
             அஃகாது அவனருளை அளிப்பான் வில்வேஸ்வரன்  .

தங்கத்தை பழித்திடுஞ் செஞ்சடைதன்னில் வளர்பிறையுங்
கங்கையுஞ் சூடியகோல மென்ன ! சுட்டெரிக்கும் செந்தீயை
தங்கையி லேந்தியாடிடும் நின்நடமென்ன !பிற வாநிலையருளும்
எங்கள்குல தெய்வமேதிரு வாகீசா ஏழையெம்மை கண்டுகொள்ளே .

வேண்டேன்  சிந்தைதனில் உனையன்றி வேறோர் சிந்தனையை
வேண்டேன் யான்கைதொழ உனையன்றி வேறோர் தெய்வத்தை
வேண்டேன் நின்னடியார்நட் பல்லாமல்வே றோர்நட்பையென்றும்
வேண்டுவேன் திருவாகீசன் மலரடியை  யணைந்திருக்க .

ஒன்றான தன்னுள்ள யனைத்தையு மடக்கினான்
நன்றாக தொழுவோர்தம் தீவினையை முடுக்கினான்
குன்றாத பெருஞ்சுடரா யனைத்துங்கடந் துநின்றான்பத
மொன்றாத மூடனெனக் கருள்வானோ திருவாகீசன் .

ஒப்பிலொ ருவனைவுமை யொருபாகனைவே டன்கண்ணெடுத்
தப்பியபின் னருள்செய்தவ னைதாருவனமு னிவர்களேவிய
கப்பியகரி வுரிபோர்த்தவனை பட்டிலூரானை திருவாகீசனை
அப்பினில் உப்பெனவே கலந்திரு நன்னெஞ்சே .

விளக்கிட விலகிடுந் துன்பமெல்லாங் கதிர்பட்ட பனிபோற்றிறு
விளக்கிட அகன்றிடுந் தீவினையெல்லாம் பட்டிலூரானுக்குத்திரு
விளக்கிட குறைவிலாது பெருகிடுஞ்செல்வ மெலாம்வாகீசனுக்கு
விளக்கிடு மடியவர் வழியெலாம் வாழுமிது சத்தியமே .

திருப்பணி பலசெய்தான் வீரராஜேந்திரன் பட்டிலூர்பதிக்கு
திருப்பணி செய்திடுமடியவர் குறைதீருமென்றான் வாகீசனுக்கு
திருப்பணி செய்பவர்வம் சந்தழைத்தோங்கு மென்றான் பட்டிலூருக்கு
திருப்பணி செய்பவர்பதந் தன்தலைமேலென்று செப்பேடு செய்தானே .


                  

                        - திருவடி முத்து கிருஷ்ணன்

                       

                            
                                அடியேன் எழுதிய பாடல்கள் ...






                     சோதிக் கண்ணிகள்

அண்டம் படைத்த சோதி ஆதியந்த மில்லா சோதி
தாயுந் தந்தையுமான சோதி தாயுந்தந்தையுமில்லா சோதி

தானே உருவான சோதி தனக்கு நிகரற்ற சோதி
கண்டம் கருத்த சோதி அண்டமெல்லாம் நிறைந்த சோதி

அருவுருவாய் நின்ற சோதி குருவுக்குங் குருவான சோதி
பட்டிலூர் ஆளும் சோதி பட்டினத்தார்க் கருளிய சோதி

கழுமர மெரித்த சோதி கடுவெளி நின்ற சோதி
வறுமையை யகற்றும் சோதி பொறுமையை அளிக்கும் சோதி

பிள்ளையாய் வந்த சோதி தொல்லை தனை தீர்த்த சோதி
வொற்றியூர் உறைந்த சோதி குருநாதர் கலந்த சோதி

பிறவா நிலையருளும் சோதி பிறவிக்கு மருந்தான சோதி
வில்லடி பட்ட சோதி வில்வேஸ்வரனாய் நின்ற சோதி

கல்மிதக்க வைத்த சோதி கல்லடி பட்ட சோதி
பிள்ளைக்கறி கேட்ட சோதி தில்லையுள் ளெழுந்த சோதி

அயனு மாலுமறியா சோதி மயக்கம் தீர்க்கும் மகா சோதி
ஆலகால முண்ட சோதி ஆலமரத்தமர் அருஞ் சோதி

ஆனையுரி போர்த்த சோதி அயன்தலை பறித்த சோதி
கங்கை யணிந்த சோதி சங்கடங்கள் தீர்க்கும் சோதி

மூன்று புரமெரித்த சோதி முக்கண்ணுடைய முதற் சோதி
வளர் பிறையை பூண்ட சோதி மலர்கொன்றை சூடிய சோதி

எலிக்கருள் செய்த சோதி புலித்தோல் தரித்த சோதி
நந்திவிலக பணித்த சோதி நந்தனார்க் கருளிய  சோதி

நவகோள்கள் நடுங்கும் சோதி நடு நாயகமாய் நின்ற சோதி
பிட்டுக்கு மண்சுமந்த சோதி பட்டிலூ ரருளும் பரஞ்சோதி

வானுமண்ணுங் கடந்த சோதி ஆணும்பெண்ணுமான சோதி
வன்றொண்டர் போற்றும் சோதி தொண்டர்க்கு தூது சென்ற சோதி

திருவாசகம் எழுதிய சோதி திருவாகீசனாய் நின்ற சோதி
நரியை பரியாக்கிய சோதி உரிதிருடிக் கருளிய  சோதி

வேடன்கண் வாங்கிய சோதி வேடனை கண்ணப்பராக்கிய சோதி
முனிமைந்தனுக் கருளிய சோதி கூற்றுவனை யுதைத்த சோதி

காமத்தை கடந்த சோதி காமனை எரித்த சோதி
ஐம்பூதமாய் ஆன சோதி ஐம்புலன்களை அடக்கும் சோதி

சித்தம்தெளிய அருளும் சோதி சித்தருக்கருளிய சோதி
தொட்டிலூரை தடுக்கும் சோதி பட்டிலூர் உறைந்த சோதி

பந்தபாச மறுக்கும் சோதி வந்தவினை போக்கும் சோதி
குயவனை சோதித்த சோதி குவலயத்துள் நற்பேறளித்த சோதி

வெள்ளை விடையேறும் சோதி கொள்ளை பாவம்போக்கும் சோதி
கடையேனுக் கருளும் சோதி திருவிடைமருதூ ரமர்ந்த சோதி

திங்கள்முடி சூடிய சோதி எங்கள் பட்டிலூர் அமர்ந்த சோதி
வடலூர் வாழும் சோதி வள்ளலார் பார்த்த சோதி

முன்னை எரிக்கும் சோதி பின்னை தவிர்க்கும் சோதி
ஆடிப் படைக்குஞ் சோதி ஆடிக் காத்தழிக்கும் சோதி

தக்கன் வேள்வி தகர்த்த சோதி ஒக்கயெதுவும் இல்லா சோதி
வேதன் தலை பறித்த சோதி வேத நாயகனாய் நின்ற சோதி

அண்டமெல்லாம் கடந்த சோதி அண்டமெல்லா மாளும் சோதி
தொண்டருள்ளம் உறையும் சோதி விண்டவர் காணா சோதி

செல்வமெல்லாம் அருளும் சோதி பட்டிலூர் உறைந்த சோதி
வினையெல்லாம் தீர்க்கும் சோதி திருவாகீசனா யமர்ந்த சோதி .


  - திருவடி முத்து கிருஷ்ணன்

 

வியாழன், ஜனவரி 27, 2022


சித்தர் பாடல்களில் இருந்து ...

ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் அருளிய குமாரஸ்தவம் 


1. ஓம் ஷண்முக பதயே நமோ நமஹ

2. ஓம் ஷண்மத பதயே நமோ நமஹ

3. ஓம் ஷட்க்ரீவ பதயே நமோ நமஹ

4. ஓம் ஷட்க்ரீட பதயே நமோ  நமஹ

5. ஓம் ஷட்கோண பதயே நமோ நமஹ

6. ஓம் ஷட்கோஷ பதயே நமோ நமஹ

7. ஓம் நவநிதி பதயே நமோ நமஹ

8. ஓம் சுபநிதி பதயே நமோ நமஹ

9. ஓம் நரபதி பதயே நமோ நமஹ

10. ஓம் ஸுரபதி பதயே நமோ நமஹ 

11. ஓம் நடச்சிவ பதயே நமோ நமஹ 

12. ஓம் ஷடக்ஷர பதயே நமோ நமஹ

13. ஓம் கவிராஜ பதயே நமோ நமஹ 

14. ஓம் தபராஜ பதயே நமோ நமஹ

15. ஓம் இகபர பதயே நமோ நமஹ

16. ஓம் புகழ்முனி பதயே நமோ நமஹ

17. ஓம் ஜயஜய பதயே நமோ நமஹ

18. ஓம் நயநய பதயே நமோ நமஹ

19. ஓம் மஞ்சுள பதயே நமோ  நமஹ 

20. ஓம் குஞ்சரீ பதயே நமோ நமஹ

21. ஓம் வல்லீ பதயே நமோ நமஹ 

22. ஓம் மல்ல பதயே நமோ நமஹ

23. ஓம் அஸ்த்ர பதயே நமோ நமஹ

24. ஓம் சஸ்த்ர பதயே நமோ  நமஹ

25. ஓம் ஷஷ்டி பதயே நமோ நமஹ

26. ஓம் இஷ்டி பதயே நமோ நமஹ 

27. ஓம் அபேத பதயே நமோ நமஹ

28. ஓம் ஸுபோத பதயே நமோ நமஹ

29. ஓம் வியூஹ பதயே நமோ  நமஹ

30. ஓம் மயூர பதயே நமோ நமஹ

31. ஓம் பூத பதயே நமோ நமஹ

32. ஓம் வேத பதயே நமோ நமஹ

33. ஓம் புராண பதயே நமோ நமஹ

34. ஓம் ப்ராண பதயே நமோ  நமஹ

35. ஓம் பக்த பதயே நமோ நமஹ

36. ஓம் முக்த பதயே நமோ நமஹ

37. ஓம் அகார பதயே நமோ நமஹ

38. ஓம் உகார பதயே நமோ நமஹ 

39. ஓம் மகார பதயே நமோ நமஹ

40. ஓம் விகாச பதயே நமோ நமஹ

41. ஓம் ஆதி பதயே நமோ நமஹ

42. ஓம் பூதி பதயே நமோ நமஹ

43. ஓம் அமார பதயே நமோ நமஹ

44. ஓம் குமார பதயே நமோ  நமஹ

     பாம்பன் சுவாமிகள் அருளிய இந்த நாற்பத்தி நான்கு வரிகளை தினமும் காலையில்  குளித்துவிட்டு பூஜை அறையில் முருகப்பெருமானின் திருவுருவ படத்திற்கு முன்பு ஒரு தீபம் ஏற்றி வைத்துவிட்டு மனதார இந்த வரிகளை பார்த்து வாயார ஒரே ஒரு முறை உச்சரித்தாலே போதும். உங்கள் வாழ்க்கையில் வெற்றிதான் தவிரவும் துஷ்ட சக்திகள் உங்களைக் கண்டு அஞ்சும் வேல் வழிபாடு மிகவும் சக்தி வாய்ந்தது அன்னை பார்வதி தேவியின் அம்சம் அல்லவா வேல் அதைக் கொண்டு சூரர்களை அழித்து தர்மத்தை நிலைநாட்டினார் முருகப்பெருமான் . நாமும் தினமும் குமாரஸ்தவம் படித்து எதிர்மறை எண்ணங்களையும் துர்சக்திகளையும் சம்ஹாரம் செய்வோம் முருகன் அருள் கொண்டு .


   

                    என்றும் இறைபணியில் 

                        சிவமேஜெயம் - திருவடி முத்துகிருஷ்ணன் 


சிவத்தை போற்றுவோம் !!! சித்தர்களை போற்றுவோம் !!!





வெள்ளி, மே 18, 2018

ஆன்மீக தகவல்கள்

திருமுருக கிருபானந்த வாரியார் சொற்பொழிவில் இருந்து ...
தன்னிடம் கேள்வி கேட்டவரிடம் வாரியார் சுவாமிகள் கூறிய விளக்கம் 

கடவுளைக் கண்ணால் காண முடியுமா....?'' என்று ஒருவர் கேள்வி கேட்க வாரியார் சுவாமிகள் "உன் கேள்விக்குப் பதில் சொல்வதற்கு முன் ....,
ஒரு கேள்வி, தம்பீ......!
இந்த உடம்பை நீ கண்ணால் பார்க்கின்றாயா...?''
எனக்கென்ன கண் இல்லையா.......?
இந்த உடம்பை எத்தனையோ காலமாகப் பார்த்து வருகிறேன்.'' ...!!
"தம்பீ......!
கண் இருந்தால் மட்டும் போதாது......!!
கண்ணில் ஒளியிருக்க வேண்டும்......!!
காது இருந்தால் மட்டும் போதுமா.....?
காது ஒலி கேட்பதாக அமைய வேண்டும்.....!!
அறிவு இருந்தால் மட்டும் போதாது.......!!
அதில் நுட்பமும் திட்பமும் அமைந்திருக்க வேண்டும்...!!
உடம்பை நீ பார்க்கின்றாய்....!!
இந்த உடம்பு முழுவதும் உனக்குத் தெரிகின்றதா....?''
"ஆம். நன்றாகத் தெரிகின்றது.''
"அப்பா...! அவசரப்படாதே.....!!
எல்லாம் தெரிகின்றதா....?''
"என்ன ஐயா....!
தெரிகின்றது..., தெரிகின்றது..., என்று எத்தனை முறை கூறுவது....?
எல்லாம்தான் தெரிகின்றது....?''
"அப்பா....!
எல்லா அங்கங்களும் தெரிகின்றனவா...?''
"ஆம்! தெரிகின்றன.''.....!!
"முழுவதும் தெரிகின்றதா...?''
அவன் சற்று எரிச்சலுடன் உரத்த குரலில்,
"முழுவதும் தெரிகின்றது'' என்றான்....!!
"தம்பீ...!
உன் உடம்பின் பின்புறம் தெரிகின்றதா....?''
மாணவன் விழித்தான்.
"ஐயா...! பின்புறம் தெரியவில்லை.'' "என்றான்.
தம்பீ...! முதலில் தெரிகின்றது.. தெரிகின்றது.. என்று பலமுறை சொன்னாய்....!!
இப்போது பின்புறம் தெரியவில்லை என்கின்றாயே....!!
சரி, முன்புறம் முழுவதுமாவது தெரிகின்றதா...?''
"முன்புறம் முழுவதும் தெரிகின்றதே.'...!!
நிதானித்துக் கூறு....!!.''
"எல்லாப் பகுதிகளையும் காண்கின்றேன்....!!
எல்லாம் தெரிகின்றது.'...!!'
"தம்பீ...! முன்புறத்தின் முக்கியமான, " முகம் தெரிகின்றதா".....?
மாணவன் துணுக்குற்றான்.
பின்பு தணிந்த குரலில் பணிந்த உடம்புடன்,
"ஐயனே...! முகம் தெரியவில்லை....!'' என்றான்.
"குழந்தாய்...!
இந்த ஊன உடம்பில் பின்புறம் முழுதும் தெரியவில்லை.....!!
முன்புறம் முகம் தெரியவில்லை......!!
நீ இந்த உடம்பில் சிறிது தான் கண்டிருக்கிறாய்.....!!
இருப்பினும் கண்டேன் கண்டேன் என்று பிதற்றுகின்றாய்....!!
அன்பனே...!
இந்த உடம்பு முழுவதும் தெரிய வேண்டுமானால்,
இருநிலைக் கண்ணாடிகளின் இடையே நின்றால் உடம்பு இருபுறங்களும் தெரியும்.'' ...!!
இந்த ஊன் உடம்பை முழுவதும் காண்பதற்கு,
இருநிலைக் கண்ணாடிகள் தேவைப்படுவது போல்,
ஞானமே வடிவாய் உள்ள கடவுளைக் காண்பதற்கும் இரு கண்ணாடிகள் வேண்டும்.''
ஒரு கண்ணாடி.....
திருவருள்....!!
மற்றொன்று....
குருவருள்.......!!
திருவருள், குருவருள் என்ற இரு கண்ணாடிகளின் துணையால்,
"ஞானமே வடிவான இறைவனைக் காணலாம்"....!!
"தம்பீ.....!
"திருவருள் எங்கும் நிறைந்திருப்பினும்"......,
அதனைக் "குருவருள் மூலமே பெறமுடியும்".....!!
" திருவருளும் குருவருளும் இறைவனைக் காண இன்றியமையாதவை.''.....!!!
அந்த மனிதன் தன் தவறை உணர்ந்து அவரின் காலில் விழுந்தான்.....!!

               சிவமேஜெயம் - திருவடிமுத்துகிருஷ்ணன் 

சிவத்தை போற்றுவோம் !!! சித்தர்களை போற்றுவோம் !!!




திங்கள், மே 07, 2018

ஆன்மீக சிந்தனைகள்

படித்ததில் பிடித்தது.... 


                 ஆன்மீக சிந்தனை



சிறுவனை அழைத்துக்கொண்டு அவனது தந்தை ஒரு காட்டிற்குச் சென்றார். 

அப்போது மகனுக்கு ஒரு சவாலை முன்வைத்தார். 

''மகனே, இப்போது உனக்கு முன் ஒரு பெரிய சவால் உள்ளது. அதில் வெற்றி பெற்றால், நீ பெரிய வீரனாகி விடுவாய். இன்று இரவு முழுவதும் நீ தனியாக இந்தக் காட்டிலேயே இருக்க வேண்டும். உன் கண்கள் கட்டப்படும். ஆனாலும் நீ பயப்படக்கூடாது; வீட்டிற்கு ஓடிவந்துவிடவும் கூடாது'' என்றார். 

சிறுவன் ஆர்வத்துடன் சவாலை சந்திக்கத் தயாரானான். 

அவனது கண்களைத் தந்தை துணியால் இறுகக் கட்டினார். பிறகு, தந்தை திரும்பிச் செல்லும் காலடி ஓசை, மெல்ல மெல்ல மறைந்தது. அதுவரை தந்தை அருகில் இருக்கிறார் என்ற தைரியத்தில் இருந்த அவனுக்கு, தூரத்தில் ஆந்தை கத்துவதும் நரி ஊளையிடுவதும் நடுக்கத்தைக் கொடுத்தது. 

காட்டு விலங்குகள் வந்து தாக்கிவிடுமோ என்ற அச்சத்தில் அவனது இதயத்துடிப்பு வழக்கத்தைத் தாண்டி எகிறியது. மரங்கள் பேயாட்டம் ஆடின. மழைவேறு தூறத் தொடங்கியது. கடுங்குளிர் ஊசியாய் உடலைத் துளைத்தது. 

‘’அய்யோ! இப்படி நிர்க்கதியாய்த் தவிக்க விட்டு தந்தை போய்விட்டாரே! யாராவது வந்து என்னைக் காப்பாற்றுங்களேன்’’ என்று பலமுறை கத்திப் பார்த்தான். பயனில்லை. 

சிறிது நேரத்தில், இனி கத்திப் பயனில்லை என்பது அவனுக்குப் புரிந்தது. திடீரென்று அவனுக்குள் ஒரு துணிச்சல். என்னதான் நடக்கும், பார்ப்போமே என்று சுற்றுப்புறத்தில் கேட்கும் ஓசைகளை ஆர்வத்துடன் கவனிக்கத் தொடங்கினான். 

இப்படியே இரவு கழிந்தது. விடியற்காலையில் லேசாகக் கண்ணயர்ந்தான். சூரியன் உடம்பைச் சுட்டபோதுதான், கண்கட்டைத் திறந்துப் பார்த்தான். 

கண்ணைக் கசக்கிக்கொண்டு எதிரே பார்த்தபோது, அவனுக்கு ஆச்சரியம்! ஆனந்தம்! அழுகையே வந்துவிட்டது. ‘’அப்பா’’ என்று கூவி அருகில் அமர்ந்திருந்த தன் தந்தையைப் பாய்ந்து தழுவிக் கொண்டான். 

‘’அப்பா நீங்க எப்போ வந்தீங்க?’’ என்று ஆவலாகக் கேட்டான். சோர்வும் மகிழ்ச்சியும் கொண்டிருந்த அந்தத் தந்தை, ''நான் எப்போது மகனே உன்னை விட்டுப் போனேன்’’ என்றார். 

இரவு இங்குதான் இருந்தீங்களா? பிறகு ஏன் நான் பயந்து அலறியப் போதெல்லாம் என்னைக் காப்பாற்றவில்லை? ஏன் என்னிடம் எதுவும் பேசவில்லை?’’ என்று கேட்டான். 

‘’உன் மனோதிடம் வளர வேண்டும். நீ எதற்கும் அஞ்சாத வீரனாக வேண்டும் என்பதற்காக மெளனம் காத்தேன். ஏனென்றால் அச்சத்தின் உச்சத்தை எட்டும்போது, துணிச்சல் தானே வரும்’’ என்றார் தந்தை. மகனுக்கு தந்தையின் நோக்கம் புரிந்தது. 

கடவுளும் அந்தத் தந்தையைப் போலத்தான், நம்மோடு இருக்கிறார். துன்பத்திலும் சோகத்திலும் தவிக்கும்போது துவண்டுவிடாமல், நாம் தீரர்களாக வேண்டும் என்பதற்காகவே பல நேரங்களில் மெளனம் காத்து வெறும் பார்வையாளரைப் போல் இருக்கிறார். 

            என்னால் இங்காவது ஏதுமில்லை என்று அவனை சரணடைந்து இருந்தால் நம்மை அவன் வழிநடத்துவான் . நம் துன்பங்களை எல்லாம் பகலவன் கண்ட பணியென கரைத்து விடுவான் . ஆகவே எத்துணை துன்பம் நேரினும் சங்கரராமேஸ்வரனை மறவாமல் இருப்பதே நாம் கேட்கும் வரமாக இருக்க வேண்டும் .


             சிவமேஜெயம் - திருவடி முத்துகிருஷ்ணன் 

சிவத்தை போற்றுவோம் !!!   சித்தர்களை போற்றுவோம் !!!

வியாழன், மார்ச் 22, 2018

மகான்களின் வாழ்வில்

மகான்களின் வாழ்வில் .....

மகான் ரிபு முனிவர் 


                                                       முனிவர்க்கெல்லாம் முனிவரான ரிபு முனிவர் தன் சீடன் நிதாங்கனை அழைத்தார் . " நிதாங்கா " நீ உன்னுடைய ஊருக்கு திரும்பி சென்று உலக வாழ்க்கை அனுபவத்தை உணர்ந்து வா என்று பணித்தார் . குரு பக்தியில் சிறந்து விளங்கிய நிதாங்கன் குருவை வணங்கி , உங்களை விட்டு நீங்கி எப்படி சுவாமி அடியேன் ஞானம் பெற முடியும் என்று வினவி நான் இந்த குருகுலத்தை விட்டு செல்ல மாட்டேன் என்று பிடிவாதமாய் இருந்தான் .

                ரிபு முனிவர் தன் சீடனிடம் , நிதாங்கா நான் கூறுவதைக் கேள் நான் எப்பொழுதும் உன்னுடன் இருக்கிறேன் கவலை கொள்ளாதே நீ சில அனுபவம் பெறவே உன்னை போகச் சொல்லுகிறேன் சென்று வா உன்னை நான் விரைவில் வந்தடைவேன் என்றார் . அவரை பணிவுடன் வணங்கி குரு வார்த்தைக்கு கட்டுப்பட்டு தன் ஊருக்கு திரும்பினான் . இயல்பு வாழ்க்கையில் ஈடுபட்டான் காலங்கள் பல கடந்தது . 

                      ஒரு நாள் அந்த நாட்டு அரசன் தன்னுடைய பட்டது யானை மீது ஊர்வலம் வந்தான் அங்கு மக்கள் மேளதாளத்துடன் ஆடிப்பாடி மகிழ்ச்சியுடன் வந்தனர் அவ்வழியே வந்த நிதாங்கன் அக்காட்சியை கண்டு ரசித்துக்கொண்டிருந்தான் . அப்போது ஒரு கை அவனுடைய தோளைத் தொட்டது . உடனே திரும்பி பார்த்தான் அழுக்கு ஆடையும் , கலைந்த கேசமுமாக ஒரு பெரியவர் நிதாங்கனை பார்த்து தம்பி , இங்கே என்ன கூட்டமாக இருக்கிறது என்று கேட்டார் . நிதாங்கன் அந்த பெரியவரின் தோற்றத்தை பார்த்து ஏளனமாய் சிந்தித்து இவருடன் என்ன சொல்ல என்று , அதுவா .. ராஜ யானை மேலே ஊர்வலம் போறார் என்று வேண்டா வெறுப்பாக சொல்லி நகர்ந்தான் .                        
                              ஓஹோ என்று இழுத்த பெரியவரை பரிதாபமாக பார்த்து , என்ன ஓஹோ .. நான் சொன்னது புரிஞ்சுதா என்று கேட்டான் . அதற்கு அந்த பெரியவர் ஹ்ம் புரியுது தம்பி ஊர்வலம் வருது சரிதான் இதுல எது ராஜா ? எது யானை ? என்று கேள்வி கேட்டார் . இதைக் கேட்டு சற்றே திகைத்த நிதாங்கன் என்னய்யா இது கூடவா தெரியவில்லை மேலே இருப்பவர் ராஜா கீழே இருப்பது யானை என்றான் . இந்த பதிலைக் கேட்ட கிராமத்துப் பெரியவர் சந்தோசமாய் கைகளை தட்டி குதூகலமாய் சிரித்து ஆர்ப்பரித்தார் . நிதாங்கன் இப்படியும் ஒரு மனிதனா என்று வேறுபக்கம் செல்ல ஆயத்தமானான் . அந்த பெரியவர் இவனை திரும்பவும் சீண்டுவது போல் தம்பி எனக்கொரு சந்தேகம் என்றார் .

                           மிகவும் கோபத்துடன் திரும்பிய நிதாங்கனை பார்த்து தம்பி , ராஜாவும் , யானையும் யாருன்னு எனக்கு புரியுது ஆனா மேலே , கீழே ன்னு சொன்னீங்களே அதுதான் புரியலை என்றார் . பெரியவர் தன்னை வம்புக்கு இழுப்பதாக எண்ணிக்கொண்டு அவர் எதிர்பார்க்காத வேளையில் சட்டென அவர் தோள் மீது ஏறி  அமர்ந்து கொண்டு சொன்னான் நீ எனக்கு கீழே , நான் உமக்கு மேலே இப்போது புரிகிறதா என்றான் . உடனே பெரியவர் புரியுது தம்பி மேல் , கீழ் இரண்டும் நன்கு விளங்கிற்று . நீ , நான் அப்படின்னு சொன்னீங்களே அந்த நீ , நான்  என்ன அதை மட்டும் விளக்குங்கள் போதும் என்றார் .  முதலில் ' நான் ' என்பது என்ன அதை சொல்லிவிட்டு பின்பு ' நீ ' பத்தி சொல்லுங்க என்றார் . 


                                   கேள்வியின் ஆழத்தில் தன்னை மறந்து சிந்திக்க தொடங்கினான் நிதாங்கன் . " நான் " என்பது என்ன ?  நிதாங்கன் என்பதா இல்லை அது எனது பெயர் ... இந்த உடலாக இருக்குமோ ? இருக்காது தூக்கத்தில் அந்த உணர்வு இருப்பது இல்லையே ... அப்படியானால் நான் என்பது .....? இவ்வாறாக சிந்தித்துக் கொண்டிருக்கும் போது அவனுக்குள் ஒரு ஒளிக்கீற்று ஊடுருவியதை உணர்ந்தவனாக வந்திருந்த பெரியவரை நோக்கினான் . அவர் இவனையே பார்த்துக்கொண்டிருந்தார் சட்டென்று அவர் காலில் நெடுஞ்சாண்கிடையாக விழுந்தான் . கண்ணீர் பெருக சுவாமி நீங்கள் எனக்குள் மிகப்பெரிய தெளிவை கொடுத்து விட்டீர்கள் .  என் குருநாதரை தவிர வேறு யாரும் அடியேனுக்கு இந்த உபதேசம் கொடுக்க முடியாது என்று கூறினான் . 
                       வந்திருந்த அந்த பெரியவர் தன் சுய உருவத்திற்கு வந்திருந்தார் வேறு யார் சாட்ஷாத் ரிபு முனிவர் தான் தன்னுடைய சீடன் தெளிவு பெற வேண்டும் என்று இந்த நாடகத்தை நடத்தி உள்ளார் . நிதாங்கனை தன்னுடன் அனைத்துக் கொண்டார் மகரிஷி ரிபு . அன்று முதல் அத்வைத பாடத்தை நிதாங்கனுக்கு போதித்தார் .  

                       சிவமேஜெயம் - திருவடி முத்துகிருஷ்ணன் 
சிவத்தை போற்றுவோம் !! சித்தர்களை போற்றுவோம் !!




புதன், மார்ச் 07, 2018

சித்தர்கள் மூல மந்திரம்






















நந்தீசர் மூல மந்திரம்
ஓம் ஸ்ரீம் லம் ஸ்ரீ நந்தீச சித்த சுவாமியே போற்றி!

அகத்தியர் மூல மந்திரம்
ஓம் ஸ்ரீம் க்ரீம் ஸ்ரீ அகத்திய சித்த சுவாமியே போற்றி!

திருமூலர் மூல மந்த்திரம்
ஓம் ஸ்ரீம் கெம் ஸ்ரீ மூலநாத சித்த சுவாமியே போற்றி!

போகர் மூல மந்திரம்
ஓம் ஆம் ஊம் ஸ்ரீ மகாபோகர் சித்த சுவாமியே போற்றி!

கோரக்கர் மூல மந்திரம்
ஓம் ஸ்ரீம் க்லம் ஸ்ரீ கோரக்க சித்த சுவாமியே போற்றி!

தேரையர் மூல மந்திரம்
ஓம் ஸ்ரீம் லபம் நசீம் ஸ்ரீ தேரைய சித்த சுவாமியே போற்றி!

சுந்தரானந்தர் மூல மந்திரம்
ஓம் ஸ்ரீம் ஆம் ஊம் ஸ்ரீ சுந்தரானந்த சித்த சுவாமியே போற்றி!

புலிப்பாணி மூல மந்திரம்
ஓம் ஸ்ரீம் கிலீம் ஸ்ரீ புலிப்பாணி சித்த சுவாமியே போற்றி!

பாம்பாட்டி சித்தர் மூல மந்திரம்
ஓம் ஸ்ரீம் வசி ஸ்ரீ பாம்பாட்டி சித்த சுவாமியே போற்றி!

காக புசண்டர் மூல மந்திரம்
ஓம் ஸ்ரீம் லம் ஸ்வம் ஸ்ரீ காக புசண்ட சித்த சுவாமியே போற்றி!

இடைக்காடர் மூல மந்திரம்
ஓம் ஸ்ரீம் ருணம் ஸ்ரீ இடைக்காட்டு சித்த சுவாமியே போற்றி!

சட்டைமுனி மூல மந்திரம்
ஓம் ஸ்ரீம் சம் வம் சட்டைமுனி சுவாமியே போற்றி!

அகப்பேய் சித்தர் மூல மந்திரம்
ஓம் ஸ்ரீம் சௌம் ஸ்ரீ அகப்பேய் சித்த சுவாமியே போற்றி!

கொங்கணவர் மூல மந்திரம்
ஓம் ஸ்ரீம் நசீம் ஸ்ரீ கொங்கண சித்த சுவாமியே போற்றி!

சிவவாக்கியர் மூல மந்திரம்
ஓம் ஸ்ரீம் லம் ஸ்ரீ சிவவாக்கிய சித்த சுவாமியே போற்றி!

உரோமரிஷி மூல மந்திரம்
ஓம் ஸ்ரீம் கிலம் ஸ்ரீ உரோம ரிஷி சுவாமியே போற்றி!

குதம்பை சித்தர் மூல மந்திரம்
ஓம் ஸ்ரீம் சம் ஸ்ரீ குதம்பைச் சித்த சுவாமியே போற்றி!

கருவூரார் மூல மந்திரம்
ஓம் ஸ்ரீம் வம் லம் ஸ்ரீ கருவூர் சித்த சுவாமியே போற்றி!

இந்த கலி யுகத்தில் நம்மை காப்பாற்றுவதற்கும் , பேறு நிலையை அடையச்செய்வதற்கும் சித்த பெருமக்களால் மட்டுமே முடியும் . ஆதலினால் சித்தர்களை வழிபடுவோம் . 


சிவமேஜெயம் - திருவடி முத்துகிருஷ்ணன் 

சிவத்தை போற்றுவோம் !!! சித்தர்களை போற்றுவோம் !!!




அருணகிரி நாதர் வரலாறு 


                                                             நினைத்தாலே முக்தி அளிக்கும் திருவண்ணாமலையில் 15ஆம் நூற்றாண்டில் பிறந்தவர் அருணகிரிநாதர். இவரது தந்தையார் பெயர் திருவெங்கட்டார் என்றும் தாயார் பெயர் முத்தம்மை  இளமையிலேயே தாய் தந்தையாரை இழந்த அருணகிரிநாதரை, அவரது மூத்த சகோதரி ஆதியம்மை அவர்கள் தாயாகவும், தந்தையாகவும் இருந்து திருமணம் செய்துக்கொள்ளாமல் தம்பியை தன் மகனாகவே பாவித்து அன்போடு வளர்த்தார். அருணகிரிநாதர் இளமையில் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கினார். இருப்பினும், மாயா நெறியில் அகப்பட்டு, பெண்ணாசை கொண்டவராய் இருந்தார். இவரது தமக்கையார் அருணகிரிநாதர் நாளடைவில் திருந்துவார் என்று எண்ணி இவருக்கு மணமுடித்து வைத்தார். இருந்தும், அருணகிரிநாதர் பெண்ணாசை கொண்டு பரத்தையரின் பால் மனதை பறிகொடுத்து, தாசிகள் வீட்டிலேயே இருந்து வந்தார். அதனால் சிறிது சிறிதாக தமது சொத்துக்களை இழந்து வந்தார். காமத்திலேயே மூழ்கி திளைத்ததன் பயனாக, அருணகிரிநாதருக்கு பெருநோய் ஏற்பட்டது. இவரது நடத்தையினால் அவரது மனைவியும் அவரை வெறுத்து நீங்கினார்.

                                        தமது சொத்துக்கள் அனைத்தும் அழிந்த போதும், உடல் குஷ்ட நோயால் பெரும்பிணியுற்று வருந்திய போதும், அருணகிரிநாதரால் பெண்ணாசையை கட்டுப்படுத்த இயலவில்லை. பரத்தையின் பால் செல்ல தமது தமக்கையாரிடம் பொருள் கேட்டார். தமக்கையார் தன்னிடம் ஏதும் இல்லாத நிலையில், "உனது இச்சையை தீர்க்க ஒரு பெண் தானே வேண்டும். நானும் ஒரு பெண் தான், உனது இச்சையை என்னிடம் தீர்த்துக் கொள்" என வருத்தத்துடனும், கோபத்துடனும் கூறினார். தமக்கையார் கூறிய வார்த்தைகள், அவரது இதயத்தை தைத்தன. பெண்ணாசையால் தமது வாழ்க்கையை வீணடித்ததோடு, தமது குடும்ப மானமே பறிபோனதை எண்ணி பதைபதைத்தார். அக்கணமே வீட்டை விட்டு வெளியேறி, கால் போன போக்கில் சென்றார். அவரை வழியில் கண்ட முதியவர் ஒருவர், அவரது நிலையை அறிந்து, முருகப்பெருமானின் பெருமைகளை எடுத்துரைத்து, ஆறேழுத்து மந்திரத்தை உபதேசித்து, முருகனை வழிபடுமாறு கூறிச் சென்றார். 

                                              அவரது உபதேசத்தின்பேரில் முருகப்பெருமானை வழிபட்டு வந்தார். ஆயினும், முருகனை நினைத்து தியானத்தில் அமர்ந்த போது, தியானம் கை கூடவில்லை. உடல் பிணி ஒரு புறம், தமக்கை கூறிய கொடுஞ்சொல் மறுபுறம் என அவரது உள்ளம் குழப்பமடைகிறது. வாழ்கையே வெறுத்த நிலையில், தம் உயிரை விடுவதே ஒரே வழி என்று எண்ணி, திருவண்ணாமலை கோபுர உச்சிக்கு சென்று, அங்கிருந்து கீழே குதித்தார். முருகப்பெருமான் அடியவர் கோலத்தில் வந்து அவரை கீழே விழாமல் தாங்கி பிடித்தார். அவருக்கு மந்திர உபதேசம் அளித்து மறைந்தார். மந்திர உபதேசம் பெற்ற அருணகிரிநாதர், தியானத்தில் அமர்ந்தார். தியான நிலையிலேயே 12 ஆண்டுகள் கழித்தார். இறை அருளால், அவரது பிணி நீங்கி வஜ்ர தேகம் பெற்றிருந்தார். முருகப்பெருமான் அவர் முன் காட்சி அளிக்க, தியான நிலையில் இருந்து விடுபட்டு மெய்சிலிர்க்க ஆறுமுகக்கடவுளை வணங்கி நின்றார். முருகப்பெருமான் தன்னுடைய வேலால் அருணகிரிநாதர் நாவில் எழுதி, திருப்புகழை பாடுமாறு பணித்தார். அருணகிரிநாதர் தயங்கி நிற்க, முருகக்கடவுளே "முத்தைத்தரு பத்தித் திருநகை" என்று அடியை எடுத்துக் கொடுக்க, அருணகிரிநாதர் மடை திறந்த வெள்ளம் போல், திருப்புகழை பாடினார். பின்னர், வயலூர் வருமாறு பணித்து மறைந்தருளினார். 

வயலூரை அடைந்த அருணகிரிநாதர், பொய்யாக் கணபதி சன்னதி முன், "கைத்தல நிறைகனி" என்ற திருப்புகழை பாடித் துதித்தார். பின்னர், அறுபடை வீடுகளையும் தரிசித்து, தலந்தோறும், திருப்புகழ் பாடினார். அருணகிரிநாதர் பாடிய திருப்புகழ் யாவும் கருத்தாழமும், சொல்லாழமும், இனிய சந்தமும் நிறைந்தது. இவ்வாறு, தலந்தோறும் சென்று வரும் வேளையில், திருச்செந்தூரில், முருகப்பெருமானின் நடனத்தை கண்டு களிப்புற்றார். சுவாமி மலையில், அவருடைய தமக்கை ஆதியம்மையாரை சந்திக்க நேர்ந்தது. ஆதியம்மையார் அருணகிரிநாதரை வணங்கி, தம்மை முருகனடி சேர்க்குமாறு வேண்டினார். அருணகிரிநாதரும், முருகனை துதித்து பாடினார். முருகப்பெருமான் காட்சி அளித்து, ஆதியம்மையாரை தமக்குள் ஐக்கியமாக்கி மறைந்தார். பின்னர், விராலி மலையில் காட்சி அளித்த முருகப்பெருமான், அருணகிரிநாதருக்கு அட்டமாசித்திகளை அளித்து அருள் புரிந்தார்.

வக்கபாகை எனும் ஊரில் வாழ்ந்து வந்த வில்லிபுத்தூரார் என்ற பெரும் புலவர், பல புலவர்களிடம் புலமை போட்டியில் ஈடுபட்டு வந்தார். போட்டியின் போது, வில்லிபுத்தூரார் கைகளில் துரட்டு ஒன்று வைத்திருப்பார். அந்த துரட்டு, போட்டிக்கு வந்த புலவரின் காதில் மாட்டப்பட்டிருக்கும். வில்லிபுத்தூரார் கேட்கும் கேள்விகளுக்கு புலவர் பதில் கூற வேண்டும், தவறினால், தமது கைகளில் உள்ள துரட்டினை இழுத்து காதுகளை அரிந்து விடுவார். இந்த போட்டியில், பல புலவர்கள் வில்லிபுத்தூராரை வெல்ல இயலாமல் தமது காதுகளை இழந்தனர். இதை அறிந்த அருணகிரிநாதர், இந்த கொடுமையை தடுக்க எண்ணி வில்லிபுத்தூராரிடம் சென்று, போட்டியில் ஈடுபட்டார். அப்போது அருணகிரிநாதர் தமது கைகளிலும் துரட்டு அளிக்கப்பட வேண்டும் எனவும், தாம் பாடும் அந்தாதி ஒன்றிற்கு, வில்லிபுத்தூரார் பொருள் கூறினால், தாம் தோல்வியை ஒப்புக் கொள்வதாகவும் தமது காதுகளை வில்லிபுத்தூரார் அரியலாம் என்றும், தவறினால் வில்லிபுத்தூராரின் காதுகளை, தமது துரட்டினால் அரிய நேரிடும் என்றும் நிபந்தனை விதித்தார். வில்லிபுத்தூராரும் அதற்கு ஒப்புக் கொண்டார். இருவரது கைகளிலும் துரட்டு வழங்கப்பட்டு, எதிராளியின் காதுகளில் துரட்டினை பூட்டினர். அருணகிரிநாதர் பின்வரும் பாடலை பாடினார்.

திதத்தத்தத் தித்தத் திதிதாதை தாததுத் தித்தத்திதா
திதத்தத்தத் தித்த திதித்தித்த தேதுத்து தித்திதத்தா
திதத்தத்தத் தித்தத்தை தாததி தேதுதை தாததத்து
திதத்தத்தத் தித்தித்தி தீதீ திதிதுதி தீதொத்ததே 


இதற்கு பொருள் கூற முடியாமல், வில்லிபுத்தூரார் தோல்வியை ஒப்புக் கொண்டார். தோல்வி அடைந்த போதும், வில்லிபுத்தூராரின் காதுகளை அரியாமல், இந்தப் புலமை போட்டியை இத்துடன் நிறுத்திக் கொள்ளுமாறு வில்லிபுத்தூரார்க்கு அறிவுரை வழங்கினார். வில்லிபுத்தூராரும் தமது தவறினை உணர்ந்து அருணகிரிநாதரை வணங்கினார். இதனால், "கருணைக்கு அருணகிரி" என்று அருணகிரிநாதர் போற்றப்பட்டார். வில்லிபுத்தூரார் தமது தவறிற்கு பரிகாரமாக மகாபாரதத்தை, "வில்லிபாரதம்" என்ற பெயரில் தமிழில் எழுதினார்.

சில காலம் கழித்து, அரசன் பிரபுடதேவனின் கண்பார்வை பாதிப்படைந்தது. அருணகிரிநாதரை வஞ்சம் தீர்க்க சமயம் பார்த்திருந்த சம்பந்தாண்டான், மன்னனிடம், சொர்க்க லோகத்தில் உள்ள பாரிஜாத மலரை கொண்டு வந்தால் இழந்த பார்வையை மீண்டும் பெறலாம் என்றும், பாரிஜாத மலரை இறையருள் பெற்ற அருணகிரிநாதரை அன்றி வேறு எவராலும் கொண்டு வர இயலாது எனவும் கூறினான். மன்னனும், அருணகிரிநாதரிடம் சென்று, தமக்கு மீண்டும் பார்வை கிடைக்க சொர்க்க லோகம் சென்று பாரிஜாத மலரை கொண்டு வர வேண்டும் என 
வேண்டினான். அருணகிரிநாதரும் அவ்வாறே செய்வதாக மன்னனிடம் உறுதி கூறினார். சம்பந்தாண்டான் தன்னுடைய சகாக்களை அழைத்து, மானிட உருவில் சொர்க்க லோகம் செல்ல இயலாது என்றும், அட்டமா சித்திகளை பெற்ற அருணகிரிநாதர், கூடு விட்டு கூடு பாய்ந்து வேறு உருவில் சொர்க்க லோகம் செல்வார் என்றும், அவ்வாறு செல்லும் வேளையில், அவரது உயிரற்ற உடலை தம்மிடம் கொண்டு வருமாரும் கூறினான். அருணகிரிநாதர் சொர்க்க லோகம் செல்ல, திருவண்ணாமலை திருக்கோவிலில் உள்ள பேய்க்கோபுரத்தின் மேல்நிலைக்கு சென்று, தம்முடைய உடலிலிருந்து உயிரை பிரித்து, அங்கு இறந்திருந்த கிளியின் உடலில் தம்முடைய உயிரை செலுத்தி அங்கிருந்து சொர்க்க லோகம் நோக்கி சென்றார். 

                                                                    அருணகிரிநாதரை பின் தொடர்ந்து வந்திருந்த சம்பந்தாண்டானின் சகாக்கள், அருணகிரிநாதரின் உடலை எடுத்துக் கொண்டு சம்பந்தாண்டானிடம் கொண்டு சேர்த்தனர். சம்பந்தாண்டான், மன்னனிடம் அருணகிரிநாதர் சொர்க்கம் செல்லும் முயற்சியில் இறந்து விட்டார் என்று நம்ப வைத்து, அருணகிரிநாதரின் உடலை எரித்து விட்டான். கிளி வடிவில் சொர்க்கம் சென்று பாரிஜாத மலரை கொண்டு வந்து பூலோகம் திரும்பிய அருணகிரிநாதர், தமது உடலை காணாது திகைத்தார். தமது உடல் அழிக்கப்பட்டு விட்டதை அறிந்து அருணகிரிநாதர், கிளி உருவிலேயே மன்னனிடம் சென்று பாரிஜாத மலரை சேர்பித்தார். முருகனை நினைத்து துதித்தார். முருகப்பெருமான், அருணகிரிநாதரிடம் "கவலை வேண்டாம். இந்த கிளி உருவிலேயே கவி பாடுமாறு" அருளினார். பாரிஜாத மலரால் பார்வை பெற்ற மன்னன், கிளி உருவில் வந்தது அருணகிரிநாதரே என்பதை உணர்ந்து போற்றினான். திருவண்ணாமலை கோபுரத்தில் இருந்து கிளி உருவில் அருணகிரிநாதர் பாடிய பாடலே கந்தர் அனுபூதியாகும். கிளி வடிவிலேயே இருந்த அவரை அவ்வடிவிலேயே முருகன் ஆட்கொண்டான். அவர் கிளி உருவில் வந்து அமர்ந்த கோபுரம் தற்போதும் கிளிக்கோபுரம் என்ற அழைக்கப்படுகிறது.

                              சிவமேஜெயம் - திருவடி முத்துகிருஷ்ணன் 

சிவத்தை போற்றுவோம் !!! சித்தர்களை போற்றுவோம் !!!