செவ்வாய், ஏப்ரல் 21, 2015



காரைக்கால் அம்மையார் வரலாறு





            காரைக்கால் எனும் ஊரை பிறப்பிடமாகக் கொண்டதால் புனிதவதி தாயார் காரைக்கால் அம்மை என்று அழைக்கப் படுகிறார் .

                       வளங்கள் மிகுந்த காரை நகர்தனில் தனதத்தர் என்னும் பெரும் வணிகர் இருந்தார் . பெயருக்கு ஏற்றாற்போல செல்வம் அவரிடம் மிகுந்து இருந்தது . குறைவில்லாது இருந்த அவருக்கு அனைத்து செல்வங்களையும் அருளும் திருமகளே வந்து பிறந்ததைப் போன்று அழகிய பெண்குழந்தை பிறந்தது புனிதவதி என்று திருநாமம் சூட்டி மகிழ்ந்தனர் .

அந்தக் குழந்தையும் ஈசனின் நாமத்தை தவிர வேறு ஒன்றும் தெரியாது என்பது போல  சிவபெருமான் மேல் மிக்க பற்று கொண்டு வளர்ந்து வந்தது . தக்க பருவம் வந்ததும் நாகப்பட்டினத்தில் ஒரு பெரிய வணிகரின் மகனான பரமதத்தனுக்கு மணம் முடித்து வைத்தார்கள்.மணமக்கள் இருவரும் ஒருவர் மீது ஒருவர் அன்பு கொண்டு இல்லறத்தை நல்லறமாக நடத்தி வந்தார்கள் . அம்மையும் நடராஜ பெருமானுக்கும் அவன் அடியார்களுக்கும் தொண்டு செய்து தன் பக்தியினின்று விலகாது இல்லறம் நடத்தி வந்தார் . 
  
.        பரமதத்தனை வணிகம் பொருட்டு சந்திக்க வந்தவர் இரண்டு மாங்கனிகளை அவரிடம் கொடுத்தார்  அவரும் அக்கனிகளை வீட்டிற்கு அனுப்பி வைத்தார் . அம்மையார் அக்கனிகளை தன் நாயகனுக்கு பரிமாறும் பொருட்டு அதை வீட்டிற்குள் வைத்து விட்டு தன் வேலைகளை செய்து கொண்டிருக்கும் வேளையில் மிகுந்த பசியோடு ஒரு சிவனடியார் வந்தார் . உணவு தயாராகவில்லை மிகுந்த வேதனை அடைந்த அம்மையாருக்கு மாங்கனி நினைவு வரவே மகிழ்வு கொண்டு அடியாருக்கு மாங்கனியை படைத்து அடியாரின் பசி போக்கினார் . சிவனடியார் பசி தீர்ந்து அம்மையாரை வாழ்த்தி விட்டு சென்றார்  


   சிறிது நேரத்தில் பரமதத்தன் பகல் உணவு உண்ண வீடு வந்தவன் குளித்து விட்டு சாப்பிட உட்கார்ந்தான். கணவனுக்கு அறுசுவை உணவுகளோடு மீதமிருந்த ஒரு மாங்கனியையும் வைத்தார். பரமதத்தன் அக்கனியை ஆவலோடு சாப்பிட்டான். அக்கனி மிகவும் ருசியாக இருந்ததால் மற்றொரு கனி யையும் கொண்டு வரும்படி கேட்டான். இதை எதிர்பாராத அம்மையார் அதை எடுத்துக் கொண்டு வருபவர் போல உள்ளே சென்றாள். திடும் என்று இன்னொரு மாங் கனிக்கு என்ன செய்வதென்று தெரியாமல் திகைக்கிறாள். துன்பம் வரும் சமயத்தில் விடையேறும் பெருமானையன்றி யார் உதவுவார் என்று தெளிந்து அவரைத் தியானித்தாள். என்ன அதிசயம்! விடையேறும் பெருமான் அருளால் அவள் கையில் அதிமதுர மங்கனி ஒன்று வந்தது. வந்த மாங்கனியைக் கொண்டு வந்து கணவனுக்குக் கொடுத் தாள். அந்த மாங்கனியை உண்ட பரமதத்தன் அது முந்திய மாங்கனியை விடப் பலமடங்கு ருசியாக இருப் பதை உணர்ந்தான்.

                    இந்த மாங்கனி நான் கொடுத்து அனுப்பிய கனி அல்ல இதன் ருசி வேறாக இருக்கிறது. மூன்று உலகங்களிலும் இது போன்ற மாங்கனி கிடைப்பதரிது. இதை எங்கே வாங்கினாய்?” என்று கேட்க புனிதவதி திகைத்துப் போனாள். என்றாலும் நடந்ததை நடந்தபடி சொல்வது தன் கடமை என்று உணர்ந்து உண்மையைச் சொன்னாள்.ஆனால் பரமதத்தன் இதை நம்பத் தயாராக இல்லை. ”இக்கனி ஈசன் அருளால் கிடைத்த தென்றால் இதே போன்ற இன்னொரு கனியை வரவழைத்துக் கொடு பார்க்கலாம் "என்றான். இதைக் கேட்ட புனிதவதி, இது என்ன சோதனை? என்று கலக்கமடைந்தாள். என்றாலும் சிவபெருமானை வணங்கி, “ஐயனே! நீர் மாங்கனியை அளித்தருளவில்லை யென்றால், நான் சொன்ன வார்த்தைகள் பொய் வார்த்தைகளாகி விடுமே!” என்று வேண்ட, ஐயன் அருளால் ஒரு மாங்கனி வர, அம்மையார் அந்த மாங்கனியை பரமதத்தனிடம் கொடுத்தார் .

                     கனியை வாங்கிய பரமதத்தன் ஆச்சரியமும் அதிர்ச்சியும் திகைத்து நின்றான். இது வரை தான் பார்த்து வந்த புனிதவதி சாதாரண பெண்மணி அல்ல. இவள் ஒரு தெய்வத் தன்மை வாய்ந்த பெண்மணி என்று உணர்ந்தான். தன் கையில் இருந்த கனி மறையவும் இன்னும் திகைப்பில் இருந்தவரை அம்மையார் கனியை பார்க்கலாம் என்று சொன்னீர்கள் ஆதலால் பார்க்க மட்டுமே என் அப்பன் அருள் செய்தான் . என்றதும் அம்மையாரிடம் தன் மனையாள் என்ற நினைப்பு நீங்கப் பெற்று பெரும் அடியார் தெய்வப் பிறவி என்று எண்ணி அவரை நீங்க முடிவெடுத்தார் .

பெரும் செல்வம் ஈட்டும் பொருட்டு ஒரு வேலை இருப்பதாகவும் தான் வர சில நாட்கள் ஆகும் என்று போனவர் பாண்டிய நாட்டில் குலசேகர பட்டினம் என்னும் வந்தடைந்து வணிகம் செய்து பெரும் பொருள் ஈட்டி அவ்வூரில் உள்ள ஒரு வணிகரின் மகளை திருமணம் புரிந்து இல்லறம் நடத்தி வந்தார் . அவருக்கும் ஒரு பெண் குழந்தை பிறந்தது அக்குழந்தைக்கு புனிதவதி என்று அம்மையாரும் பெயரினையே சூட்டி மகிழ்ந்தார் .  இங்கே புனிதவதியார் மிகவும் மனம் நொந்து தன் கணவனை பிரிந்து தேடுவதற்கு ஆட்களை அனுப்பி வைத்தார்கள் . தேடியவர்கள் பரமதத்தனை பாண்டிய நாட்டில் கண்டோம் என்று சொன்னதும் அம்மையார் உடனே புறப்பட்டு தாய் தந்தை மற்றும் உறவினர்களோடு  குலசேகர பட்டினத்தை வந்தடைந்தார்கள் .  

                இந்த செய்தியை கேள்விப்பட்ட பரமதத்தரும் அம்மையாரை எதிர்கொண்டு தன் மனைவியோடும் மகளோடும் அம்மையார் திருப்பதத்தில் விழுந்தார் . அம்மையார் அதிர்ச்சியில் உறைந்து இருக்கையில் அனைவரும் திகைத்து இது என்ன செயல் மனைவியை வணங்குவதா " என்று வினவ  அவரும் இல்லை புனிதவதியை வணங்குவதில் தவறில்லை மானிடப் பிறவி இல்லை இவள் தெய்வப் பிறவி ஆதலால் தவறேதும் இல்லை என்று விளக்கம் அளித்தார்.

            பரமதத்தன் புனிதவதியின் பெருமகைளை சொல்ல கேட்ட உறவினர்கள் திகைத்து நின்றார்கள் . அம்மையாரும் கணவனுக்கு இல்லாத இந்த இளமையை இந்த உடலும் எதற்கு என்று திருவாலங்காட்டாரிடம் வேண்டி எனக்கு இந்த உடலை சுமப்பது பாராம் அப்பனே இதை நீங்கி பேய் வடிவம் தாரும் என்று இறைஞ்சி வேண்ட , என்ன ஆச்சர்யம் ! அப்பனும் , அம்மையாரின் எழிலுடம்பை நீக்கி பேய் வடிவம் கொடுத்து அருள் செய்தார் . தேவர்கள் மலர் மாரி பொழிந்து வாழ்த்தினர் இதையெல்லாம் கண்ட அவரின் உறவினர்கள் அச்சம் கொண்டு அம்மையாரை வணங்கிவிட்டு சென்றனர் . 

              பேய் வடிவம் தாங்கிய அம்மையார் நடமாடும் பெம்மானை " அற்புதத் திருவந்தாதி " என்னும் நூறு பாடல்கள் பாடி துதித்தார். பின் “திருஇரட்டை மணிமாலை” என்னும் பிரபந்தத்தையும் பாடியருளினார். புனிதவதியாரின் பேயுருவத்தைக் கண்டவர்கள் அதிசயமும் அச்சமும் அடைந்தார்கள். ஆனால் அவரோ

அண்டர் நாயகர் என்னை அறிவரேல்,
அறியா வாய்மை
எண்டிசை மாக்களுக்கு யான்
எவ்வுருவாய் என்?          
         என்று பாடினார் . 
                      
                            அம்மையார் பேயுருவோடு வட திசையிலுள்ள பல இடங்களுக்கும் யாத்திரையாகச் சென்றார். எல்லா இடங்களையும் கடந்த பின் விடையேறும் நாயகன்  வீற்றிருக்கும் கயிலை மலையை காண ஆவல் கொண்டார் . அப்பன் வீற்றிருக்கும் மலையைக் காலால் மிதிக்கலாகாது என்று காலால் நடப்பதை விட்டுத்  தலையால் நடந்து கயிலை  மலை ஏறும் போது உமையாள் அப்பனிடம் பேய் உருவம் தாங்கி தலையால் மலை ஏறும் இவர் யார் என்று கேட்க , உமையே வரும் இவர் நம்மைப் பேணும் அம்மை காண் என்று பதில் சொல்லி புனிதவதியாரை அம்மா என்று அன்போடு அழைத்தார் .
             

                        காரை அம்மையாரும் அப்பனே என்று அவன் பாதத்தில் வீழ , புரமெரித்தவன் அம்மையே என்ன வேண்டும் என்று கேட்க ,

பிறவாமை வேண்டும் மீண்டும்
பிறப்புண்டேல் உன்னை என்றும்
மறவாமை வேண்டும், இன்னும்
வேண்டும் நான் மகிழ்ந்து பாடி
அறவா, நீ ஆடும் போது உன்அடியின் கீழிருக்க”

 பிறவாமை வேண்டும். அப்படிப் பிறக்க நேர்ந்து விட்டால், ஐயனே உன்னை என்றும் மறவாமல் இருக்கும் படி செய்ய வேண்டும். இன்னும் ஒன்று வேண்டும்யாதெனில் ,  அரவம் சூடிய ஐயனே நீ ஆடும்போது அடியேன் உன்திருவடிநீழலில் இருக்க வேண்டும் எப்பொழுதும் உன்னைப் போற்றிப் பாட வேண்டும் என்றார் .

             
               அம்மையின் வேண்டுகோளைக் கேட்ட ஐயன், அம்மை கேட்ட வரங்களை அருளினான். மேலும் ”திருவாலங்காட் டில் நாம் ஆடும் ஆடலைக் கண்டு ஆனந்தமடைந்து எப்போதும் நம்மைப் பாடுவாய்” என்றும் அருள் செய்தான். காரைக்கால் அம்மையும் கைலாச மலையிலிருந்து தலை யாலே நடந்து வந்து திருவாலங்காட்டில் ஊர்த்வதாண்டவ மூர்த்தியைத் தரிசித்து அவருடைய எடுத்த பாதத்தின் கீழ் சிவானந்தத்தை அனுபவித்துக் கொண்டிருந்தார்.. இன்றும் அனுபவித்துக் கொண்டிருக்கிறார். ஐயனின் ஊர்த்வதாண்டவத்தைக்கண்டதும் “கொங்கை திரங்கி” என்று தொடங்கும் திருவாலங்காட்டுப் பதிகம் பாடினார்.
                           
                                 அப்பனே அம்மை என்று அழைத்த காரைக்கால் அம்மையாரை வணங்கி நாமும் அவன் அருள் பெறுவோம் . 

                              
                      சிவமேஜெயம் - திருவடி முத்துகிருஷ்ணன் 


          சிவத்தை போற்றுவோம் !! சித்தர்களை போற்றுவோம் !!
                         

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக