திங்கள், ஏப்ரல் 14, 2014

 தேவாரப் பாடல்களில் இருந்து 

   
                     திரு மாணிக்கவாசக பெருமான் அருளிய

                                                  

                                       
திருவாசகத் தேனிலிருந்து

                                    சில துளிகள்  

அம்மையே! அப்பா! ஒப்பு இலா மணியே! அன்பினில் விளைந்த ஆர் அமுதே!
பொய்ம்மையே பெருக்கி, பொழுதினைச் சுருக்கும், புழுத் தலைப் புலையனேன் தனக்கு,
செம்மையே ஆய சிவபதமளித்த செல்வமே! சிவபெருமானே!
இம்மையே, உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்; எங்கெழுந் தருளுவதினியே?


தாயும் தந்தையுமானவனே , ஒப்புவமை இல்லாத மாணிக்கமே, என் அன்பெனும் கடலில் உருவான  அருமையான அமுதமே,பொய்மையான செயல்களையே அதிகமாகச் செய்து வீணாகக் காலத்தைக் கழிக்கின்ற, புழு உறையும் இடத்தை உடம்பாகக் கொண்ட கீழ் பிறப்பெடுத்த  கீழானவனுக்கு , பேசற்கரிய மிகவும் உயர்ந்து போற்றும் மேன்மையான , சிவபதத்தினை எனக்கு
 அருட்செய்த  அருட்செல்வமே, சிவபெருமானே , இப்பிறப்பினில் என் அன்பும் பக்தியும் கொண்டு உன்னை உறுதியாகப் பற்றினேன், இனி நீ வேறு எங்கு செல்ல முடியும் .

பாச வேர் அறுக்கும் பழம் பொருள்! தன்னைப் பற்றும் ஆறு, அடியனேற்கு அருளி,
பூசனை உகந்து, என் சிந்தையுள் புகுந்து, பூம் கழல் காட்டிய பொருளே!
தேசு உடை விளக்கே! செழும் சுடர் மூர்த்தீ! செல்வமே! சிவபெருமானே!
ஈசனே! உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்; எங்கெழுந் தருளுவ தினியே?


 பற்றுகளின் வேரை அடியோடு அழித்திடும் , யாவர்க்கும் முன்னமாய்  உள்ள பழமையான பொருளை,  பற்றும் வழியை அடியவனாகிய  எனக்கு அருள் புரிந்து , நான் செய்யும் வழிபாட்டினை விரும்பி, என் சித்தத்துள் புகுந்து , தாமரை மலர் போன்ற திருவடியைக் காட்டிய மெய்ப்பொருளே,அளவற்ற பேரொளியை உடைய விளக்கே , விளக்கினுள் தோன்றும் சோதி மயமானவனே , அருட்செல்வமே, சிவபெருமானே , ஈசனே ,  உன்னை இறுக்கமாகப்  பற்றினேன் . என் அன்புப் பிடியில் இருந்து இனி எங்கும் செல்ல முடியாது .

அறவையேன் மனமே கோயிலாக் கொண்டு, ஆண்டு, அளவு இலா ஆனந்தம் அருளி,
பிறவி வேர் அறுத்து, என் குடி முழுது ஆண்ட பிஞ்ஞகா! பெரிய எம் பொருளே!
திறவிலே கண்ட காட்சியே! அடியேன் செல்வமே! சிவபெருமானே!
இறவிலே, உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்; எங்கெ ழுந்தருளுவதி னியே?


ஆதரவு அற்றவனாகிய என்னுடைய மனத்தையே , கோயிலாகக் கொண்டு, என்னை  ஆட்கொண்டு, எல்லையற்ற பேரின்பத்தை அளித்து , என் பிறவி வேரை அறுத்து ,  என் குடும்பம் முழுவதையும் ஆட்கொண்ட , தலை ஒட்டு மாலை அணிந்தவனே  , அனைத்தினும் பெரியவனே பரம்பொருளே  வெட்ட  வெளியிலே நான் கண்ட காட்சியே  அடியேனது அருட்செல்வமே , சிவபெருமானே , என் வாழ்வின் இறுதியிலே  உன்னை உறுதியாகப் பற்றினேன் ,  நீ இனிமேல் எங்கே எழுந்தருளிச் செல்வது .


                                           என்றும் இறை பணியில் 

                                                                திருவடி முத்துகிருஷ்ணன் 

                                                    சிவமேஜெயம் !!

சிவத்தை போற்றுவோம் !!! சித்தர்களை போற்றுவோம் !!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக