திங்கள், ஏப்ரல் 14, 2014

தேவாரப் பாடல்களில் இருந்து ....


திருஞான சம்பந்தர் அருளி செய்த


                                         
தேவாரத் தேனிலிருந்து



                               சில தேன் துளிகள்


ஓடே கலணுண் பதுமூ ரிடுபிச்சை
காடே யிடமா வதுகல் லானிழற்கீழ்
வாடா முலைமங் கையுந்தா னுமகிழ்ந்
தீடா வுறைகின் றவிடை மருதீதோ.

சிவன் உண்ணும் பாத்திரம் பிரம கபாலமாகும் . உண்ணும் உணவோ ஊர் மக்கள் இடும் பிச்சையாகும், அவர் வாழும் இடமோ இடுகாடாகும். அத்தகைய சிவபிரான் ஆலமரத்தின் நல்ல நிழலில் உலகம்மை தாயாரோடு தானும் மிகவும் மனம் மகிழ்ந்து விரும்பி இருந்து விட்ட திருத்தலம் திருவிடை மருதூர் இது தானோ .




முற்றாதது ஒரு பால்மதி சூடும் முதல்வன்,
நல் தாமரையானொடு மால் நயந்து ஏத்த,
பொன்-தோளியும் தானும் பொலிந்து அழகு ஆக
எற்றே உறைகின்ற இடை மருதீதோ.


முழுமை பெறாத வளரும் பால் போன்ற இளம்பிறையை தன் செஞ்சடைதனில் சூடிய  முதல்வன் ,  தாமரை மலரமர்ந்த நான்முகனும் , திருமாலும் விரும்பித் தொழப்படும் தெய்வம் சிவபெருமான் , உமையம்மையும் தானுமாய் பேரழகோடு வீற்றிருக்கும் திருவிடை மருதூர் இதுவோ .

மருந்தவன் வானவர் தானவர்க்கும்
பெருந்தகை பிறவினொ டிறவுமானான்
அருந்தவ முனிவரொ டால்நிழற்கீழ்
இருந்தவன் வளநக ரிடைமருதே.

பிறவிப் பிணி தீர்க்கும் அருமருந்தாக விளங்குபவனும் ,தேவருக்கும் மூவருக்கும் தலைவனாய் இருப்பவனும் , உயிர்களின் பிறப்பு இறப்பிற்குக் காரணமானவனும், அரிய தவம் உடைய சனகாதி முனிவர்களோடு ஆலமர நிழலில் எழுந்தருளியிருந்து அவர்களுக்கு ஞானத்தை உபதேசம் செய்தவனுமான எம் ஈசன் இருக்கும் செழிப்புமிக்க நகரம் திருவிடை மருதாகும்.


     என்றும் இறை பணியில் 

                    - திருவடிமுத்துகிருஷ்ணன் 

                  சிவமேஜெயம் !!

சிவத்தை போற்றுவோம் !! சித்தர்களை போற்றுவோம் !!   


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக