வெள்ளி, ஜூன் 10, 2011

பட்டினத்தார் பாடல்கள்

 


உடல் கூற்று வண்ணம்


ஒரு மடமாது மொருவனுமாகி இன்பசுகந் தரும் 
அன்புபொருந்தி உணர்வுகலங்கி ஒழுகிய விந்து 
ஊறுசுரோனித மீதுகலந்து

 பனியிலோர் பாதிசிறு துளிமாது பண்டியில்வந்து 
புகுந்துதிரண்டு பதும அரும்பு கமடமிதென்று 
பார்வைமெய் வாய்செவி கால்கைகள் என்ற 

உருவமுமாகி உயிர்வளர் மாதமொன்பதும் ஒன்றும் 
நிறைந்துமடந்தை உதரமகன்று புவியில்விழுந்து
யோகமும் வாரமும் நாளுமறிந்து

மகளிர்கள் சேனை தரவணையாடை மண்பட உந்தி 
உதைந்துகவிழ்ந்து மடமயில் கொங்கை அமுதமருந்தி 
ஓரறிவீரறி வாகிவளர்ந்து

ஒளிநகைஊறல் இதழ்மடவாரும் உவந்துமுகந்திட 
வந்துதவழ்ந்து மடியிலிருந்து மழலைபொழிந்து
வாவிருபோவென நாம விளம்ப 

உடைமணியாடை அறைவடமாட உன்பவர்தின்பவர்தங்
களொடுஉண்டு தெருவிலிருந்தபுழுதி அளைந்துதேடியபால
ரோடோடி நடந்து ஐவயதாகி விளையாடியே 

உயர்தருஞான குருபதேசம் முத்தமிழின் கலையும்
கரைகண்டு வளர்பிரைஎன்று பலரும்விளம்ப 
வாழ்பதினாறு ப்ராயமுவந்து 

மயிர்முடிகோதி அருபதநீல வண்டிமிர் தண்தொடை 
கொண்டைபுனைந்து மணிபொனிலங்கு பணிகலணிந்து
மாதகர் போதகர் கூடிவணங்க

மதன சொரூபன் இவனென மோகமங்கையர் கண்டு
மருண்டு திரண்டு வரிவிழிகொண்டு சுழியஎறிந்து
மாமலர் போல் அவர்போவது கண்டு 

மனது பொறாமல் அவர்பிறகோடி மங்கலசெங்கல 
சந்திகழ் கொங்கை மருவமயங்கி இதழமுதுண்டு 
தேடியமாமுதல் சேரவழங்கி     

ஒருமுதலாகி முதுபொருளாய் இருந்ததனங்களும் 
வம்பிலிழந்து மதனசுகந்த விதனமிதென்று
வாலிபகோலமும் வேறுபிரிந்து

வளமையுமாறி இளமையுமாறி வன்பல்விழுந்து இருகண்   
களிருண்டு வயது முதிர்ந்து நரைதிரை வந்து வாதவிராத 
குரோதமடைந்து செங்கையினிலோர் தடியுமாகியே 

வருவதுபோவது ஒருமுதுகூனு மந்தி எனும்படி 
குந்தி நடந்து மதியுமழிந்து செவிதிமிர் வந்து 
வாயறியாமல் விடாமல் மொழிந்து 

துயில்வரும் நேரமிருமல் பொறாது தொண்டையும் நெஞ்சமும் 
உலர்ந்துவறண்டு துகிலுமிழந்து சுனையுமழிந்து 
தோகையர் பாலர்கள் கோரணி கொண்டு 

கலியுகமீதிலிவர் மரியாதை கண்டிடுமென்பவர்  
சஞ்சலமிஞ்ச கலகல வென்று மலசலம் வந்து 
கால்வழி மேல்வழி சாரநடந்து

தெளிவுமிராமல் உரைதடுமாறி சிந்தையும் நெஞ்சமும் 
உலைந்துமருண்டு திடமும்உலைந்து மிகவுமலைந்து
தேறிநல் ஆதரவேதன நொந்து    

மறையவன் வேதன் எழுதியவாறு வந்தது கண்டமுமென்று 
தெளிந்து இனியென  கண்டம் இனியென தொந்தம்
மேதினி வாழ்வு நிலாதினி நின்ற 

கடன்முறை பேசுமென உரைநாவுறங்கி விழுந்துகை கொண்டு
மொழிந்து கடைவழி கஞ்சியொலுகிட வந்து பூதமும்நாலு
சுவாசமும் நின்று நெஞ்சுதடுமாறி வரும்நேரமே 

வளர்பிறை போலெயிறுமு ரோமமும்சடையும் சிறு 
குஞ்சியும்விஞ்ச மனதுமிருண்ட வடிவமுமிலங்க
மாமலைபோல் எமதூதர்கள் வந்து 

வலைகொடுவீசி உயிர்கொடுபோக மைந்தரும்வந்து 
குனிந்தழ நொந்து மடியில்விழுந்து மனைவிபுலம்ப
மாழ்கினரே இவர் காலமறிந்து 

பழையவர்காணும் எனுமயலார்கள் பஞ்சுபறந்திட
நின்றவர் பந்தரிடுமென வந்துபறையிட முந்தவே 
பிணம் வேக விசாரியுமென்று 

பலரையும் ஏவி முதியவர் தாமிருந்தசவம் கழுவும் 
சிலரென்று பணிதுகில் தொங்கல் களபமனிந்து
பாவகமே செய்து நாறும் உடம்பை  

வரிசை கெடாமல் எடுமென ஓடி வந்திளமைந்தர்
குனிந்து சுமந்து கடுகிநடந்து சுடலை அடைந்து
மானிட வாழ்வென வாழ்வென நொந்து 

விறகிடமூடி அழல்கொடு போடவெந்து விழுந்து முறிந்து 
நிணங்கள் உருகி எலும்புகருகி அடங்கி ஓர்பிடிநீறு
 மிலாத உடம்பை நம்புமடியேனை இனியாளுமே.

                    ஒரு மனிதன் கருவில் உருவாகி பிறந்து வாழ்ந்து இறந்து போவது வரை ஐயா பட்டினத்தார் மிக அழகாக சொல்லி இருக்கிறார். ஓர் பிடி நீறும் இல்லாத உடம்பில் எத்தனை ஆசைகள். இந்த பாடல் படித்து பார்த்த உடனே எளிதில் புரிந்து கொள்ளக் கூடிய பாடல் . இவ்வளவுதான் மனித வாழ்வு இந்த வாழ்வினிலே நம்மால் முடிந்த அளவு நன்மை செய்ய முடியாவிட்டாலும் தீமை செய்யாமலிருப்போம் எந்நேரமும் சிவசிந்தனையிலே இருப்போம் .சிவசிந்தனை ஒன்றுதான் நம்பிறப்பறுக்கக் கூடியது .

  சிவத்தைப் போற்றுவோம் !! சித்தர்களைப் போற்றுவோம் !!

      தொகுப்பு திருவடி முத்துகிருஷ்ணன் 












  
  







வெள்ளி, ஜூன் 03, 2011

அத்திரி மகரிஷி


                                           


            அத்திரி மகரிஷி ,அனுசுயா தேவி ,ஸ்ரீதத்தாத்ரேயர் ,பதஞ்சலி 




                    உலகம் தோன்றிய காலத்திலேயே அவதரித்த சப்த ரிஷிகளில் அத்திரியும் ஒருவர். சிருஷ்டி கர்த்தாவான பிரம்மதேவரின் மானசபுத்திரர் இவர். இவருடைய மனைவி அனுசூயா. பதிவிரதையான அனுசூயாவால் அத்திரி முனிவருக்கும், அத்திரி முனிவரால் அனுசூயாவுக்கும் பெருமை. தவசக்தியில் இருவருமே சளைத்தவர்கள் அல்ல. வேத புராண இதிகாசங்கள் எல்லாவற்றிலும் இத்தம்பதிகள் உயர்வாகப் பேசப்பட்டுள்ளனர். ராமாயணத்தில் அத்திரி முனிவரின் ஆஸ்ரமத்திற்கே ராமனும் சீதையும் முதன்முதலில் சென்றனர். சித்திரகூட பர்வதத்திலிருந்து காட்டிற்குள் சென்ற ராமனும் சீதையும், அத்திரி முனிவர் ஆஸ்ரமத்தில் ஒருநாள் தங்கினர். அப்போது ராமசீதா தம்பதிகளிடம் அத்திரி முனிவர் தன் மனைவி அனுசூயாவை காட்டி, ராமா! அனுசூயா கோபம் என்பதையே அறியாதவள். அசூயை என்னும் சொல்லுக்கு மனதில் சிறிதும் விருப்பம் இல்லாதவள் எனப்பொருள். இவள் மண்ணுயிர்கள் எல்லாம் போற்றி வணங்கும் பெருமை கொண்டவள். குணவதி, தர்மவதி, பதிவிரதா தர்மத்தில் தலைசிறந்தவள். தர்மமும் புண்ணியமும் நிறைந்த அனுசூயாவிடம் ஆசிபெறுவீர்களாக!, என்று சொன்னார். ஒரு சந்தர்ப்பத்தில் நாட்டில் மழையே பெய்யவில்லை. தொடர்ந்து பத்து ஆண்டுகளாக வறட்சி நிலவியது. எங்கும் தண்ணீர் பஞ்சம். வாயில்லா ஜீவன்களுக்கு பசும்புல் கூட கிடைக்கவில்லை. இந்தக் காட்சியைக் கண்ட அனுசூயாவிற்கு உள்ளம் உருகியது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக தான் செய்த தவசக்தியால் கங்கையை வரவழைத்தாள். எல்லா குளங்களையும் நிறைத்தாள். தண்ணீர் பெற்று, பயிர்கள் செழித்து வளர்ந்தன. எங்கும் பசுமை உண்டானதைக் கண்டு மகிழ்ந்தாள். ஒருமுறை அனுசூயாவின் தோழியைச் சந்தர்ப்ப வசத்தால் சபித்தார் ஒரு முனிவர். பொழுது விடிந்தால் நீ விதவையாவாய் என்பதே அந்த சாபம். என்ன செய்ய முடியும்? அபலையாய் ஓடி வந்து அனுசூயாவிடம் வந்து நின்றாள் அவள். விஷயத்தை சொன்னாள். சாபவிமோசனம் என்பது யார் சாபமிட்டார்களோ அவர்களே தரவேண்டியது என்பதை அறியாதவர்கள் யார்? இருந்தாலும், நட்புக்கு கை கொடுக்க முன்வந்த அனுசூயா தன் தோழியிடம், விடிந்தால் தானே நீ விதவையாவாய்! விடியலே இல்லாமல் செய்து விடுகிறேன் என்று ஆறுதல் சொன்னாள்.
ஒரு நாள் இருநாள் அல்ல. பத்து நாட்கள் விடியாமல் இரவாகவே கழிந்தது. உலகமே திகைத்தது. தேவர்கள் கூடினர். அனுசூயாவிடம் வேண்டிக் கொண்டனர். மீண்டும் பகல்வேளை வரவேண்டுமானால் என் தோழி சுமங்கலியாக வாழ வேண்டும், என்று நிபந்தனையிட்டாள் அனுசூயா. தேவர்களும் அவ்வாறே வாக்களித்தனர். நினைத்ததைச் சாதித்து தன் தோழியைக் காப்பாற்றினாள். இத்தகைய மகாஉத்தமி அனுசூயாவின் கணவர் அத்தரிமுனிவர் என்ன சாமான்யமானவரா? அவரும் புகழிலும், தவத்திலும் யாருக்கும் இணையில்லாதவர். உலகிற்கே ஒளிதரும் சூரியனுக்கே வாழ்வு தந்த வள்ளல் அத்திரிமுனிவர். ஒருமுறை அசுரர்களில் ஒருவனான ஸ்வர்பானு தன்னைக் காட்டிக் கொடுத்த சூரியதேவன் மீது கோபம் கொண்டான். இவனே கிரகங்களில் நிழல் கிரகங்களான ராகுகேதுவாக மாறினான். தன் பகையைத் தீர்த்துக் கொள்ள எண்ணியவன் சூரியனைக் கிரகணமாகப் பிடித்தான். ராகுவின் பாதிப்புக்கு உள்ளாகி ஒளியை இழந்து நின்ற சூரியனுக்கு மீண்டும் ஒளி கொடுத்து காப்பாற்றியவர் அத்திரி முனிவரே.
சூரியன் காலையில் கிழக்கில் உதிக்கிறான். மாலையில் மறைந்து விடுகிறான். உலகமே சூரியனின் வருகைக்காகக் காத்துக் கிடக்கிறது. இரவுநேரத்தில் வெளிச்சம் இல்லாமல் சிரமப்படுவதை எண்ணி வருந்தினார் அத்திரி. அதற்கு ஒரு முடிவு கட்ட எண்ணினார். ஆழமான சமுத்திரத்தின் அடிப்புறத்தில் போய் அமர்ந்தார். தவத்தில் ஆழ்ந்தார். மனுஷ வருஷங்கள் அல்ல. பல தேவவருஷங்கள்  தவத்தைத் தொடர்ந்தார். தவக்கனல் அதிகரித்தது. அவருடைய கண்களில் அபார ஜோதி தோன்றியது. கடல் நீரையும் கிழித்துக் கொண்டு அந்த ஜோதி பூமியையும் விட்டு வேகமாக கிளம்பிச் சென்றது. பூமியை விட்டு நெடுந்தூரம் சென்ற ஜோதியைக் கண்ட படைப்புக் கடவுள் பிரம்மா, அதை அப்படியே நிலை நிறுத்தும்படி திசைகளுக்கு கட்டளையிட்டார். பிரம்மாவே நேரில் வந்து, அந்த ஜோதியைத் தன் தேரில் ஏற்றிக்கொண்டு 21 முறை பூமியை வலம் வந்தார். பிரம்மா செய்த ஏற்பாட்டினை இன்றளவும் அந்த ஜோதி செய்து கொண்டிருக்கிறது. அந்த ஜோதியினைத் தான் இரவில் நிலாவாக வான மண்டலத்தில் காண்கிறோம். இரவி<லும் பூமிக்கு ஒளி தரும் சந்திரனைத் தந்த பெருமை அத்திரி முனிவருடையதே.
யாகம் ஒன்றிற்கு அத்திரி சதுரஹம் என்று பெயர். முதன்முதலில் இந்த யாகத்தைச் செய்தவர் இவர் என்பதால் அவர் பெயராலேயே அழைக்கப்பட்டு வருகிறது. மனதில் எண்ணிய எண்ணங்களுக்கு செயல்வடிவம் தரும் மகத்தான யாகம் இது. இந்த யாகத்தை செய்பவர்கள்  வேண்டிய பலனைப் பெற்று வாழ்வர் என்று வேதம் சொல்கிறது. ஆயுர்வேத சாஸ்திரம், ஜோதிடம் போன்ற கலைகளில் அத்திரிமுனிவர் மிகவும் கை தேர்ந்தவர். வைத்திய சாஸ்திரத்தி<லும், ஜோதிட சாஸ்திரத்தி<லும் இவரின் பங்களிப்பு சிறப்பானதாகும். பிரம்மதேவரின் நகங்களில் இருந்து தோன்றிய விகநஸ மகரிஷி அத்திரியின் மாணவர்.இந்த உலகம் தோன்றிய போதே அவதரித்த இவர், தன் தவவலிமையால் பல்லாயிரம் புத்திரர்களை பெற்றெடுத்தார். அவர்கள் தங்களை ஆத்ரேய கோத்திரம் என்று வழங்குகின்றனர். மழை பெய்ய மறுக்கும் இந்த சமயத்தில், மக்களுக்காக அன்று மழையை வரவழைத்த அத்திரி அனுசூயா தம்பதிகளை நினைவில் இருத்தி பிரார்த்திப்போம்

தத்தாத்ரேயர்


                                                                                            


அத்ரி மஹரிஷி, இவரது மனைவி அனுசுயா தேவி . இவர்கள் தமக்கு புத்திர பாக்கியம் வேண்டி தவமிருந்தனர். அப்போது மும்மூர்த்திகளும் அவர்கள் முன்பு தோன்றி, தாங்கள் மூவரும் அத்ரி-அனுசூயைக்கு மகனாகப் பிறப்பதாக வரமளிக்கின்றனர்.ஒரு சமயம்  பதிவிரதையான அனுசுயா தேவியை சோதிக்க பிரம்மா, விஷ்ணு, சிவனை மும்மூர்த்திகளும் அனுசுயையிடம் சென்று யாசகம் வேண்டினார்கள் உடலில் உடை ஏதும் இல்லாமல் யாசகம் அளிக்க வேண்டும் என்றனர் . இக்கட்டான இந்த சூழ்நிலையில் அனுசுயை தனது கணவனான அத்ரிமகரிஷியை மனதால் தியானித்து அவரது கமண்டல நீரை மும்மூர்த்திகளின் மீது தெளித்தாள், உடனே மூவரும் பச்சிளம் குழந்தையாக மாறினார்கள். அதன்பின் உடையற்ற தன்மடி மீது அந்த குழந்தைகளை கிடத்தி பாலூட்டினாள். வெளியே சென்றிருந்த அத்ரிமகரிஷி வீடு திரும்பியதும் மூன்று குழந்தைகளையும் அவர் பாதத்தில் கிடத்தினாள். மகரிஷியும் குழுந்தைகளை வாரி அணைத்தார். அணைத்த உடனே அந்த 3 குழந்தைகளும் இரண்டு கால்கள், ஒரு உடல், மூன்று தலைகள் மற்றும் 6 கைகளுடன் கூடிய உருவமாக மாறின. இந்த உருவமே தத்தாத்ரேயர் எனப்பட்டது. நமது விருப்பத்தை  பூர்த்தி செய்யவே மும்மூர்த்திகளும் இவ்வாறு வந்தனர் எனக் கூறி மகரிஷி அனுசுயையை ஆசிர்வதித்தார்.
 அவ்வாறு தோன்றியவரே தத்தாத்ரேயர். மும்மூர்த்திகளும் தானே வந்து அத்ரி-அனுசூயைக்கு மகனாக பிறந்தமையால் 'த(3)த்த' என்ற பெயர் வந்ததாகச் சொல்வர். இவரது இன்னொரு பெயர் ஆத்ரேயர், அதாவது அத்ரியின் புதல்வர். ஆகவே தத்தாத்ரேயர் என்று இரண்டும் சேர்த்துக் வழங்கப் பெறுகிறார். இவர் பிறந்தது மார்கழி மாதத்து பெளர்ணமி, மிருகசீர்ஷ நக்ஷத்திரம். இந்த அவதாரம் நடந்த ஸ்தலம் சுசீந்திரம் என்றும் கூறப்படுகிறது. ஸ்தானுமாலையனாக இறைவன் இங்கே இருக்கிறார்.

யாயாதி ராஜ வம்சத்தில் வந்த கர்த்தவீர்யார்ஜுனன் தத்தரது சிஷ்யர்களுள் ஒருவன். இவனது குல-குரு கர்க்க மஹரிஷியின் மூலம் தத்தாத்ரேயரைப் பற்றி அறிந்து அவரை நோக்கித் தவமிருந்து வரங்களைப் பெறுகிறான். வரங்களை அளித்து அவனுக்கு தர்மோபதேசமும் செய்விக்கிறார் தத்தாத்ரேயர். இந்த கர்த்தவீர்யார்ஜுனனே பின்னாளில் பரசுராமனால் அழிக்கப்படுபவர். இன்றும் களவு போன பொருட்கள் கிடைக்க கர்த்த வீர்யார்ஜுன மந்திரம் என்ற மந்திரத்தை ஜபம் செய்வர். இந்த மந்திரத்தின் ரிஷி தத்தாத்ரேயரே. தத்தாத்ரேயருக்கு ஆத்ம ஞானமாக விளங்குபவள் அன்னை திரிபுரசுந்தரியே. அவளே தத்தாத்ரேயரின் மூன்று முகங்களாக விளங்குகிறாள். தத்தாத்ரேயர் தான் குருவாக இருந்து பரசுராமருக்கு ஸ்ரீவித்யா உபாசனையை அளித்தவர்.


பரபிரம்ம வஸ்துவே மும்மூர்த்திகளாக அருள் புரிகிறது என்பது வேதாந்த சித்தாந்தம். மூன்றாகத் தோன்றிய ஒன்றே ஞான வைராக்கிய சம்பன்னரான ஸ்ரீ தத்தாத்ரேயர். அவதூதரான இவருக்கு தண்டம், கமண்டலம், காஷாய வஸ்த்ரம் போன்றவை கிடையாது. பாரத்தின் பல இடங்களிலும் பாதுகைகளில் இவரை தியானித்து வணங்கக் கோவில்கள் இருக்கிறது. உத்ரப்பிரதேசத்தில் "குரு மூர்த்தி" என்றாலேயே அது தத்தரைக் குறிப்பதாக இருக்கிறதாம். பிரயாகையில் இவரது கோவில் இருப்பதாக தெரிகிறது. அதேபோல இமாலயத்தில், ஆத்ரேய மலைப்பகுதியில் ஒரு குகையில் பலகாலம் தத்தர் தவம் செய்ததாகவும், அந்த குகையின் பெயரே தத்த குகை என்றும் படித்திருக்கிறேன். இதேபோல ஸஹ்யமலையில் காவிரி உற்பத்தி ஸ்தானத்திற்கு அருகிலும், சித்ரதூர்க்கா மலையிலும், குல்பர்கா அருகில் கங்காப்பூர் என்னும் இடத்திலும் இவர் தவம் செய்த குகைகள் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. 

தமிழகத்தில் சேந்தமங்கலத்தில் சுயம்பிர்காச அவதூத ஸ்வாமிகள் ஸ்ரீ தத்தரைப் பிரதிஷ்ட்டை செய்து வழிபட்டிருக்கிறார், இன்று அந்த இடமே, தத்தகிரி குகாலயம் என்று வழங்கப்படுகிறது. இங்கே விமர்சையாக தத்த வழிபாடு நடக்கிறது. புதுக்கோட்டையில் சாந்தானந்த ஸ்வாமிகள் புவனேஸ்வரி அதிஷ்ட்டானத்திலும், ஸ்கந்தகிரி (சேலம் அருகே) தத்தருக்கு சன்னதி அமைத்திருக்கிறார். இதேபோல செங்காலிபுரத்தில் ராமானந்த பிரம்மேந்திரர் என்னும் யதி, ஸ்ரீ தத்தருக்கு ஆலயம் அமைத்திருப்பதாகத் தெரிகிறது.

தொகுப்பு திருவடி முத்துகிருஷ்ணன் 



வியாழன், ஜூன் 02, 2011

சித்தர் படங்கள்



 ஸ்ரீ அகத்தியர் 



சித்தர் போகர் 


சித்தர் திருமூலர் 



இடைக்காட்டு சித்தர் 

சித்தர் வால்மீகி 


குதம்பை சித்தர் 


சித்தர் கருவூரார் 


சித்தர்  கொங்கனவர் 

சித்தர் சுந்தரானந்தர் 


சித்தர் கமலமுனி 


சித்தர் தன்வந்தரி 


 பாம்பாட்டி சித்தர் 


 

சித்தர் சிவவாக்கியர் 


சித்தர் பதஞ்சலி 


சித்தர் சட்டைமுனி 



சித்தர் புண்ணாக்கீசர் 


சித்தர் தேரையர் 


சித்தர் ராமதேவர் 


சித்தர் மச்சமுனி 


சித்தர் புலஸ்தியர் 


சித்தர் புலிபாணி


சித்தர் காலாங்கி 


சித்தர் கோரக்கர் 


சித்தர் அழகன்னர் 



பொக்கிஷங்களை பகருவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன் 

திருவடி முத்து கிருஷ்ணன் 




கம்பளி சட்டை முனி ஞானம்



காணப்பா பூசைசெய்யும் முறையைக் கேளாய் 
   கைம்முறையாய்ச் சுவடிவைத்துப் பூசைசெய்வார் 
பூணப்பா சிலபேர்தான் தீபம் வைத்துப் 
புகழாகப் பூசை செய்வார் பெண்ணை வைத்தும் 
நாளப்பா சக்கரத்தைப் பூசை செய்வார் 
நம்முடைய பூசையென்ன மேருப்போலே 
ஓதப்பா நாற்பத்துமுக் கோணம் வைத்தே 
உத்தமனே பூசைசெய்வார் சித்தர் தானே .

தானென்ற மேருவைத்தான் பூசை செய்வார் 
சாபமிட்டால் அண்டரண்டம் தீயா வேகும் 
தேனென்ற மேருவுக்குத் தீட்சை வேண்டும் 
சிறுபிள்ளை யாமொருவன் தீண்டப்போகா
வானென்ற மேருவைத்தான் பூசை செய்தோர் 
வாய்திறந்தே உபதேசம் சொன்னாராகிற் 
கோனென்ற வாதசித்தி கவனசித்தி 
கொள்ளையிட்டான் அவன்சீடன் கூறினானே

கூறியதோர் வாலையின்மூன் றெலுத்தைக் கேளாய் 
குறியறிந்து பூசைசெய்து பின்பு கேளாய் 
மாறியதோர் திரிபுரையெட் டெலுத்தைக் கேளாய் 
மைந்தனே இவளை நீ பூசை பண்ணத் 
தேறியதோர் புவனைதனின் எழுத்தைக் கேளாய் 
திறமாகப் புவனையை நீ பூசை பண்ணு 
ஆறியதோர் யாமளையோ றெலுத்தைக் கேளாய்
அவளுடைய பதம் போற்றிப் பூசை பண்ணே

பண்ணியபின் யாமளையைந்த் தெழுத்தைக் கேளாய் 
பண்பாகத் தீட்சையைந்தும் முடிந்த பின்பு 
வண்ணியதோர் வாசியென்ற யோகத்துக்கு 
மைந்தனே வைத்துப்ராணா யாமந் தீரும் 
கண்ணியதோர் இத்தனையும் அறிந்திருந்தாற்
காயசித்தி விக்கினங்கள் இல்லையில்லை 
உண்ணியதோர் உலகமென்ன சித்தரென்ன
உத்தமனே விட்டகுறை எடுக்கும் கானே  


கம்பளி சட்டை முனி ஞானம் - முற்றிற்று 

இவரைப் பற்றி போகர் தன்னுடைய போகர் ஏழாயிரம் என்ற நூலில் 

பாலனாம் சிங்கள தேவதாசி 
பாசமுடன் பயின்றெடுத்த புத்திரன்தான் 
சீலமுடன் சட்டைமுனி என்று சொல்லி 
சிறப்புடனே குவலயத்தில் பேருண்டாச்சு

   இவ்வாறு குறிப்பிடுகிறார் 

தொகுப்பு திருவடி முத்துகிருஷ்ணன் 






ஆன்மீக சிந்தனைகள்

                                             தாயுமானவர்


                               

                                     வாழ்வில் உயர 

* நல்லவராக அனைவரும் விரும்புவதால் எதிர்காலத்தை நோக்கி காத்திருக்கின்றனர். பசித்தவன் இப்போதே சாப்பிட விரும்புவது போல், கடவுள் அருள் கிடைக்க இதுவே சரியான நேரம் என்பதால் முழு மனதுடன் முயற்சிக்க வேண்டும்.

* உலகில் அனைத்தும் அழியும் தன்மையுடையது. குறிப்பாக, நமக்கு வேண்டப்பட்டவர்கள், நண்பர்கள், செல்வம் போன்றவை அழிந்துவிடும். ஆனால், உண்மை மட்டும் உறுதியாக நிற்கிறது. அந்த உண்மையும் இறைவனும் ஒன்றாகும்.

* தளர்வும், சோர்வும், சலிப்பும் முதுமையை விளைவிக்கிறது என்றால், உறுதியும், ஊக்கமும், உழைப்பும் இளமையைப் பாதுகாக்கிறது.

* உயர்வைத் தேடி அலைகிறவனுக்கு அது கிடைப்பதில்லை. உயர்வு என்பது தன்னை அடையும் தகுதியுடையவனைத் தேடிச் சென்று அவனை உயர்த்துகிறது.

* உள்ளத்தில் தோன்றும் தீய எண்ணங்களை அகற்றினால் மனதிலுள்ள கெட்ட நோய் அகன்று வெளியுலகில் நல்ல தொடர்பு கிடைக்கும்

                          ஆனந்தம் என்பது எதில் இருக்கிறது  


இறைவனே! ஆனந்தத்தின் மொத்தவடிவம். ஆனந்தம் பெறவே உயிர்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றன. உழைப்பதும், உண்பதும், ஒருவரை ஒருவர் அன்பு கொண்டு வாழ்வதும் எல்லாம் ஆனந்தத்தின் பொருட்டே. நம்மால் என்றுமே ஆனந்ததை விடுத்து வாழவே முடியாது.எங்கும் ஆனந்தமே. எதிலும் ஆனந்தமே! இதற்காகவே, இறைவனும்
சிற்சபையில் ஆனந்த நடமிடுபவனாக இருக்கிறான்.இறைவன் எல்லா திசைகளிலும் நிறைந்திருக்கிறான். நம் இதயத்தாமரையாகிய மனத்தில் தேனாக இருந்து தித்திக்கும் இனிமை உடையவன் இறைவன். அவனையே எப்போதும் சிந்திப்போமாக.பொருளின் மீது நாட்டம் கொண்டவனுக்கு அருட்செல்வம் என்றும்எட்டாக்கனியாகும். திருவோட்டையும், செல்வமாகிய நிதியையும் ஒன்று போல காணும் உத்தமர்களின் நெஞ்சத்தை தன் இருப்பிடமாக கொண்டிருப்பவன் இறைவன். குழந்தையின் மனதில் தான் என்னும் அகங்காரம் இல்லை. இவர் நல்லவர், கெட்டவர், வேண்டியவர், வேண்டாதவர் என்ற பேதங்கள் தெரிவதில்லை. மனிதனும் குழந்தை போல வெள்ளை உள்ளம் கொண்டால் அவனே ஞானியாவான்.வாழ்வில் எத்தகைய துன்பம் நேர்ந்தாலும் மனம் எதைப் பற்றியும் கவலை கொள்ளாது கடவுளின் கழலடிகளையே வழிபட வேண்டும்.அவன் திருவடிகளே ஆனந்தம் தரும் .


                        மனம் என்னும் மாயக்கண்ணாடி 


 உலகில் அனைத்துமே நல்லதாகத்தான் இருக்கிறது. ஆனால், அதைப்பார்ப்பவர்களின் கோணத்தில்தான் அதில் வேறுபாடு தெரிகிறது. வெள்ளை நிறப்பொருளை எந்த நிறத்தில் கண்ணாடி அணிந்து கொண்டு பார்த்தாலும், அதன் நிறத்தில்தான் அது தெரியும். இதைப்போலவே கடவுளை, மனம் எனும் கண்ணாடி வழியாக பார்ப்பவர்களின் தன்மைக்கு ஏற்றவாறு அவர் காட்சி கொடுக்கிறார். மனதுக்குள் மாயக் கண்ணாடி அணியாமல், பரிசுத்தமானதான, உள்ளதை உள்ளபடி பிரதிபலிக்கக் கூடியதாக அணிந்து கொள்ள வேண்டும்.

* மனதை எப்போதும் மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ளுங்கள். மகிழ்ச்சியான மனமே புத்துணர்வுடனும், செயலாக்கம் மிக்கதாகவும் இருக்கும். சோர்வடைந்த உள்ளத்தால் எவ்வித பயனும் இல்லை. அவர்களால் அடுத்தவருக்கும் நன்மைகள் செய்ய முடிவதில்லை. அத்துடன் உடன் இருப்பவர்களுக்கும் துன்பம்தான் விளைகிறது. சோர்வுடன் இருக்கும் ஒருவரைக் காணும் மற்றொருவர், தனக்கும் துன்பம் வந்துவிட்டது போலவே கவலை கொள்கிறார். எனவே, துன்பத்துடன் இருப்பவர்கள், யாரையும் சந்திக்காமல் தனிமையில் இருப்பதே நல்லது. அந்த வேளையில் தனக்கு துன்பம் நேர்ந்ததற்கான காரணத்தை அவர் ஆராய்ந்து பார்க்க வேண்டும். சிறிது நேரம் தனிமையில் அதற்கான காரணத்தை சிந்தித்து விட்டாலே, அதனால் பயன் ஒன்றுமில்லை என்பது புலப்பட்டுவிடும். ஆகவே, ஒன்றுமில்லாத சோர்வை விரட்டி, மகிழ்ச்சியுடன் இருங்கள்.

                             யாரிடம் விலகி இருப்பது

உங்களிடம் சிலர் நல்ல முறையில் பேசலாம். ஆனால் மனதிற்குள் கள்ளம் இருக்கும். இப்படிப்பட்ட பேச்சைக் கண்டு ஏமாறாதீர்கள். ஒழுக்கமாக இவ்வுலகில் யார் நடக்கிறார்கள் என கருதுகிறீர்களோ அவர்களுடன் மட்டும் உறவு கொள்ளுங்கள். பேச்சுக்கும் நடத்தைக்கும் சம்பந்தம் இல்லாதவர்களுடன் உறவு கொள்வது பிழையாகும்.
* மனம் சலிக்காமல் இறைநெறியில் ஆழ்ந்து வருபவனுக்கு செல்வம் சேரும். புத்திரர்களும், உறவினர்களும் பக்கபலமாக இருப்பார்கள். நல்ல பதவி கிடைக்கும். எமன் கூட அணுகாத நிலை ஏற்படும். உடல்நலம் நன்றாக இருக்கும். கல்வி ஞானமும், மெய்ஞ்ஞானமும் கைகூடும்.
* பாசி மூடியிருக்கும் நீர்நிலையின்மீது கல்லை எறிந்தால் பாசி கலைந்து நல்லநீர் கண்ணுக்குப் புலப்படும். அதுபோல நல்லவர்கள் சொல்லும் சொற்களின் உண்மைப் பொருளை ஆராய்ந்து அறிந்தால் அறிவு தெளிவடையும்.




தொகுப்பு திருவடி முத்துகிருஷ்ணன்

புதன், ஜூன் 01, 2011

நந்தியின் குறுக்கே செல்வதை தடுப்பது ஏன்?




சிவன் கோயில் வாசலில் கொடி மரத்தை அடுத்து நந்தி மண்டபம் காணப்படும். பிரதோஷ காலத்தில் இவருக்கே முக்கியத்துவம் தருவர். நந்தியிவன் குறுக்கே செல்லக் கூடாது எனவும் தடை விதிப்பர். இதற்கு காரணம் உண்டு. நந்தி கர்ப்பக்கிரகத்திலுள்ள சிவனைப் பார்த்தவாறு இருக்கும். இது சிவனின் வாகனம். வாகனம் எதுவாயினும் அது ஜீவாத்மாவைக் குறிக்கும். ஜீவாத்மா கருவறையிலுள்ள பரமாத்மாவைக் (இறைவன்) பார்த்த வண்ணம் உள்ளது. ஜீவாத்மாவின் குறிக்கோள் இறைவனை சென்றடைய வேண்டும் என்பது தான். அந்த கோட்பாட்டை விளக்கும் பொருளாக நந்திதேவர் சிவனை நோக்கி இருக்கிறார். ஆகவே பக்தர்கள் நந்தியின் குறுக்கே செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இது கடவுளை அடைய நினைப்பவர்களை தடுக்கும் செயலுக்கு ஒப்பாகும். சன்னதியை மறைத்து நிற்காதீர்கள் என சொல்வதும் இதனால் தான். மேலும் நந்தீஸ்வரரை வணங்கி அவரது அனுமதி பெற்றே நாம் கோயிலுக்குள் நுழைய வேண்டும். மீறிச் செல்பவர்கள் ஏதோ கோயிலுக்குள் போய் வந்ததாக கணக்கில் கொள்ளப்படுமே தவிர, இறைவனின் அருள் அவர்களுக்கு கிட்டாது. அது மட்டுமல்ல, இறைவனின் முதல்வன் விநாயகர். கோயிலில் முதல்வன் நந்தீஸ்வரர். எனவே தான் விநாயகருக்குரிய அருகம்புல் மாலை நந்தீஸ்வரருக்கும் அணிவிக்கப்படுகிறது.