திங்கள், நவம்பர் 18, 2024

சிவ தாண்டவ ஸ்தோத்திரம்


ஜடா டவீ கலஜ் ஜல ப்ரவாஹ பாவித ஸ்தலே
கலே வலம்ப்ய லம்பிதாம் புஜங்க துங்க மாலிகாம்
டமட் டமட் டமட்டமன் னினாதவட் டமர் வயம்
சகார ச்சண்ட தாண்டவம் தனோத்து னஃ ஷிவஃ ஷிவம்  1

சிவனின், அடர்ந்த காடு போன்ற ஜடாமுடியிலிருந்து புனித கங்கை அவன் கழுத்து வழியாக வழிந்து பூமியில் பட்டு பூமி புனிதமடைகின்றது. அந்த புனித பூமியில் சிவன் ஆனந்த தாண்டவம் புரிகிறான்.
கம்பீரமான ராஜ நாகம் அவன் கழுத்தை மாலை போல் அலங்கரிக்கின்றது.
அவன் உடுக்கையிலிருந்து டமட் டமட் டமட் எனும் நாதம் தொடர்ச்சியாகக் கிளம்பி எங்கும் பரவிக் கொண்டிருக்க, அதன் மத்தியில் சிவன் தாண்டவம் ஆடிக்கொண்டிருக்கிறான். எம் இறைவனே! உன் அருள் மழையை எங்கள் அனைவரின் மீதும் பொழிவாயாக!


ஜடா கடாஹ ஸம்ப்ரம ப்ரமன் னிலிம்ப னிர்ஜரீ
விலோல வீச்சி வல்லரீ விராஜமான மூர்தனி
தகத் தகத் தகஜ் ஜ்வலல் லலாட்ட பட்ட பாவகே
கிஷோர சந்த்ர ஸேகரே ரதிஃ ப்ரதிக்ஷணம் மம   2

சிவனின் நீண்ட ஜடாமுடி அனல் கக்கும் எரிமலை போல அங்கும் இங்கும் புனித கங்கையோடு சேர்ந்து சுழல்கின்றது.
அடர்ந்த கொடிகளைப் போன்ற அவனின் கேசமானது பேரலைகளைப் போல் ஆர்ப்பரிக்கின்றன. நெற்றியோ பேரொளியாய்ப் பிரகாசிக்கின்றது.
நெற்றிப் பரப்பிலிருந்து தக தக தகவென்று எரியும் நெருப்பு புறப்பட்டுச் சென்று திசையெங்கும் பரவுகிறது.
தலை உச்சியில் இளம்பிறை ஜொலிக்க எம் இறைவனான சிவபெருமான் ஆனந்த தாண்டவம் ஆடிக்கொண்டிருக்கிறான்.


தரா தரேந்த்ர நந்தினீ விலாஸ பந்து பந்துர
ஸ்புரத் திகந்த ஸந்ததி ப்ரமோதமான மானஸே |
க்றுபா கடாக்ஷ தோரணீ னிருத்த துர்த ராபதி
க்வசித் திகம்பரே மனோ வினோதமேது வஸ்துனி   3

அழகிய உமையாளை, பர்வத ராஜனின் மகளான பார்வதியை ஒரு பாகமாகக் கொண்டு, உலகை இரட்சித்துத் திருவிளையாடல் புரிகின்றான்.
முழு உலகும் சிவ தாண்டவத்தால் அதிர்கின்றது. அவனிலிருந்து சூட்சமமான அலைகள் புறப்பட்டு எங்கும் பரவி நிலவுலகம் முழுவதும் ஆனந்தமயமாகின்றது.அவன் தன் கருணைப்பார்வையால் கடும் துன்பத்தையும் நீக்கி அருள்கின்றான்.திகம்பரனான சிவன் (பற்றற்ற, ஆகாயத்தையே ஆடையாகக் கொண்ட) சில நேரங்களில் பக்தர்களிடம் திருவிளையாடல் புரிய மனதில் எண்ணம் கொள்கின்றான்.


ஜடா புஜங்க பிங்கள ஸ்புரத் பணா மணி ப்ரபா
கதம்ப குங்கும த்ரவ ப்ரலிப்த திக்வதூ முகே
மதா ந்த ஸிந்துர ஸ்புரத் த்வக் உத்தரீய மேதுரே
மனோ வினோத மத்புதம் பிபர்து பூத பர்தரி  4

அவன் கழுத்தில் கொடி போல் படர்ந்திருக்கின்ற நாகங்கள் எல்லாம் படமெடுத்தவாறு தங்களின் ஒளிரும் மாணிக்க் கற்கள் தெரியும்படி ஆடிக்கொண்டிருக்கின்றன.அந்த மாணிக்கங்களின் ஒளியில் திசைகள் அனைத்தும் குங்குமப்பூவைக் கரைத்து ஊற்றிய வண்ணத்தில் அழகிய மணப்பெண் போல ஜொலி ஜொலிக்கின்றது.மத யானையின் தோலாலான எம் இறைவனின் மேலாடை அவனோடு சேர்ந்து ஒளிர்ந்து கொண்டு அசைந்தாடுகின்றது.அனைத்து உயிர்களையும் காப்பவனாகிய சிவபெருமானின் இந்தத் திரு நடனத்தால் எனது உள்ளம் ஆனந்த வெள்ளத்தில் திளைக்கின்றது.

ஸஹஸ்ர லோச்சன ப்ரப்றுத்ய ஸேஷ லேக சேகர
ப்ரஸூன தூளி தோரணீ விதூஸரா ம்க்ரி பீட பூஃ
புஜங்க ராஜ மாலயா னிபத்த ஜாட ஜூடக
ஸ்ரியை சிராய ஜாயதாம் சகோரபந்து சேகரஃ  5

ஆயிரம் கண்களையுடைய இந்திரனும், மற்ற பிற தேவர்கள் அனைவரும் சிவபெருமானின் அருள் பெற மண்டியிட்டு வணங்குகிறார்கள்.
அவர்கள் அனைவருக்கும், இடைவிடாமல் புழுதி பறக்க ஆடிக்கொண்டிருக்கும் எம் இறைவனின் திருப்பாதம் அருளை வாரி வழங்குகின்றது.
அள்ளி முடிந்த ஜடாமுடியை ராஜ நாகத்தால் கட்டி
அதன் மீது சகோராவின் (சகோரா - நிலவொளியைக் குடிக்கும் ஒரு பறவை) தோழியான ஒளிரும் தூய வெண்மதியைச் சூடியுள்ளான். அது அவன் அருள் போன்ற பாலொளியைச் சிந்திக்கொண்டிருக்கின்றது.


லலாட்ட சத்வர ஜ்வலத் தனஞ்ஜய ஸ்புலிங்க பா
நிபீத பஞ்ச ஸாயகம் நமன் னிலிம்ப நாயகம்
ஸுதா மயூக லேகயா விராஜமான சேகரம்
மஹா கபாலி ஸம்பதே ஸிரோ ஜடாலம் அஸ்து னஃ  6

சிவனின் நெற்றிக் கண்ணிலிருந்து புறப்படும் ஜுவாலை தன் ஒளியை திசையெங்கும் பரப்பிக் கொண்டிருக்கிறது.
அந்த ஜுவாலையால் ஐந்து அம்புகளையும் (காம தேவனின்) எரித்து (இறுதியில்) காமனையும் எரித்து சாம்பலாக்கினான்.
அமுதைச் சுரக்கும் பிறை நிலவைச் சூடியிருக்கும்
மஹா கபாலியின் ஜடாமுடியிலிருந்து, நாம் அனைவரும் சகல செல்வ சம்பத்துக்களையும் பெற்று வாழ்வோமாக!


கரால பால பட்டிகா தகத் தகத் தகஜ் ஜ்வலத்
தனஞ்ஜயாம் ஹுதீ க்றுத ப்ரசண்ட பஞ்ச ஸாயகே
தரா தரேந்த்ர நந்தினீ குசாக்ர சித்ர பத்ரக
ப்ரகல்பனை (ஏ)க ஸில்பினி த்ரிலோச்சனே மதிர் மம  7

மிரள வைக்கும் தன் நெற்றிக் கண்ணிலிருந்து புறப்படும் தக தக தகவென்ற அக்னியால்
மன்மதனின் ஐந்து அம்புகளையும் எரித்து முடிவில் அவனையும் சாம்பலாக்கிய எம் இறைவன்
தன் அற்புதத் தாண்டவமாடும் திருவடிகளால் உலகில் அதாவது மலை மகளின் (பார்வதி தேவி) உடலில் பல்வேறு ஓவியங்களை (பல்வேறு வகையான படைப்புகள்) வரைகிறான்.
அவனே அனைத்து படைப்புகளையும் உருவாக்கும் ஒரே சிற்பியாக (ஏக இறைவனாக) இருக்கின்றான்.  முக்கண் பெருமானின் இந்த தாண்டவத்தால் என்னுள்ளம் பூரிப்படைகிறது.


நவீன மேக மண்டலீ னிருத்த துர்தர ஸ்புரத்
குஹூ நிஸிதினீ தமஃ ப்ரபந்த பந்து கண்தரஃ
நிலிம்ப னிர்ஜரீ தரஸ் தனோது க்றுத்தி ஸிந்துரஃ
கலா நிதான பந்துரஃ ஸ்ரியம் ஜகத் துரந்தரஃ  8

சிவன் தன் தாண்டவத்தின் அதிர்வுகளால் கட்டுப்படுத்தவே முடியாத புதிய மேகங்களை (கர்ம வினைகளை) அடக்கி வைக்கின்றான்.
மேலும் அந்த அதிர்வுகளால் இருள் சூழ்ந்த இரவின் கரு நிறத்தைத் தன் கண்டத்தில் கட்டி வைத்துள்ளான்.
புனித கங்கையை தன் சடையில் தாங்கியவனே! யானைத் தோலை உரித்து ஆடையாகக் கட்டியவனே! சிவந்த மேனியனே!
பிறை சூடனே! அண்ட சராசரங்களைத் தாங்குபவனே! உன் அருளால் எங்கள் அனைவரையும் இரட்சிப்பாயாக!


ப்ரபுல்ல நீல பங்கஜ ப்ரபஞ்ச காலிம ப்ரபா
வலம்பி கண்ட கந்தலீ ருச்சி ப்ரபத்த கந்தரம் |
ஸ்மர ச்சிதம் புர ச்சிதம் பவ ச்சிதம் மக ச்சிதம்
கஜ ச்சி தாந்தக ச்சிதம் தம (அ)ந்தக ச்சிதம் பஜே || 9 ||

உலக பாவங்களின் கரிய வடிவமாகிய ஆலகால விஷம் அவன் கழுத்தில் மலர்ந்துள்ள அழகிய நீல நிறத் தாமரை போல தோற்றமளிக்கிறது.
அதை அவன் தன் வலிமையால் அடக்கி கழுத்தில் ஆபரணமாக அணிந்துள்ளான்.
காமனை எரித்தவனே! திரிபுரங்களை எரித்தவனே! உலகப் பற்றுகளை அறுத்தவனே! (தட்சனின்) யாகத்தை வீழ்த்தியவனே!
கஜாசூரனை அழித்தவனே! அந்தகன் எனும் அசுரனை அழித்தவனே! யமனை அழித்த எங்கள் இறைவனான சிவபெருமானே! உன்னை வணங்குகின்றேன்.


அகர்வ ஸர்வ மங்களா கலா கதம்ப மஞ்ஜரீ
ரஸ ப்ரவாஹ மாதுரீ விஜ்றும்பணா மது வ்ரதம் |
ஸ்மராந்தகம் புராந்தகம் பவாந்தகம் மகாந்தகம்
கஜாந் தகா (அ)ந்தகாம்தகம் தம (அ)ந்தகாம் தகம் பஜே || 10 ||

என்றென்றும் வற்றாத, ஆரா அமுதத்தை அனைவருக்கும் அளிப்பவன் ! வண்டுகள் மொய்க்கும் தேன் நிறைந்த கதம்ப மாலையைச் சூடியிருப்பவன்!
அவன் தாண்டவத்தில் ஊற்றெடுக்கும் அமுதம் பொங்கி வழிந்து, அவனால் உருவாக்கப்பட்ட அனைத்து ஜீவராசிகளையும் உய்விக்கின்றது.
மன்மத நாசனே! மும்மலங்களை எரித்தவனே! அனைத்து வகையான உலகாய தன்மைகளையும் கடந்தவனே! (தட்சனின்) யாகத்தை முடிவுக்குக் கொண்டு வந்தவனே!
கஜாசூரனை சம்ஹாரம் செய்தவனே! அந்தகாசூரனை வீழ்த்தியவனே! காலனை அழித்த கருணா மூர்த்தியே! உன்னைப் பாடித் துதிக்கின்றேன்.


ஜயத் வத ப்ரவிப்ரம ப்ரமத் புஜங்கம ஸ்வஸத்
த்வினிர்கமத் க்ரம ஸ்புரத் கரால பால ஹவ்ய வத் |
திமித் திமித் திமித்வனன் ம்ருதங்க துங்க மங்கள
த்வனி க்ரம ப்ரவர்தித ப்ரச்சண்ட தாண்டவஃ ஷிவஃ || 11 ||

சிவனின் புருவங்கள் இரண்டும் துடிப்பது அண்ட சராசரங்களின் மேல் அவனுக்கு இருக்கும் முழு ஆளுமையைக் காட்டுவதாய் உள்ளது. அவனின் உடலசைவோடு சேர்ந்து கழுத்தில் சுற்றியுள்ள நாகமும் சீறிக்கொண்டு அசைந்தாடுகிறது.
அவனுடைய நெற்றிக்கண், நேர்ச்சைப் பொருட்களை ஏற்கும் பலிபீடம் (ஹோம குண்டம்) போல் இடைவிடாமல் நெருப்பை உமிழ்ந்து கொண்டே இருக்கின்றது.
மிருதங்கமானது  தொடர்ச்சியாக டிமிட் டிமிட் டிமிட் என்று தெய்வீக ஒலியை திசையெங்கும் பரப்பிப் கொண்டிருக்க. .
அந்தத் தாள லயத்தோடு சேர்ந்து, எம் இறைவனான சிவபெருமான் ஆனந்த தாண்டவம் ஆடிக்கொண்டிருக்கிறான்.


//சகல உயிர்கள் மற்றும் வஸ்துக்களிலும் சதாசிவனே உறைந்திருப்பதால், உலகின் இருமை நிலைகளைக் கடந்து ஒருமை நிலையை எய்த இறைஞ்சும் விதமாக 12 வது ஸ்லோகம் அமைந்துள்ளது//

த்றுஷத் விசித்ர தல்பயோர் புஜங்க மௌக்திக ஸ்ரஜோர்
கரிஷ்ட ரத்ன லோஷ்டயோஃ ஸுஹ்றுத் விபக்ஷ பக்ஷயோஃ |
த்றுணா (அ)ரவிந்த சக்ஷுஷோஃ ப்ரஜா மஹீ மஹேந்த்ரயோஃ
ஸமம் ப்ரவர்திகஃ கதா சதாஷிவம் பஜே || 12 ||

இறைவனே! என்று நான் அழகிய வேலைப்பாடுள்ள மெத்தையையும், கட்டாந்தரையையும் ஒன்றாக உணரப் போகிறேன்?
என்று நான் நாக ரத்தினத்தால் செய்யப்பட்ட அழகிய மாலையையும் குப்பைக் கூழத்தையும் ஒன்றாக உணரப் போகிறேன்?
ஈசனே! என்று நான் புல்லைப் போன்ற சாதாரண கண்களையும் (சாதாரண பார்வை), தாமரையை ஒத்த அழகிய கண்களையும் (ஞானப் பார்வை) ஒன்றாக உணரப் போகிறேன்? என்று நான் சாதாரண குடிமகனையும், அரசனையும் வேறுபாடில்லாமல் உணரப் போகிறேன்?
என்று நான் சதாசிவனையே எங்கும் கண்டு அவனையே அடையும் நாள் வருமோ?


கதா நிலிம்ப னிர்ஜரீ னிகுஞ்ஜ கோட்டரே வஸன்
விமுக்த துர்மதிஃ ஸதா ஸிரஃ ஸ்த மஞ்ஜலிம் வஹன் |
விமுக்த லோல லோச்சனோ லலாம பால லக்னகஃ
ஷிவேதி மந்த்ர முச்சரன் கதா ஸுகீ பவாம் யஹம் || 13 ||

மஹேஷ்வரனே! என்று நான் புனித கங்கைக் கரையின் அடர்ந்த வனத்தின் நடுவிலுள்ள குகையை வந்தடைந்தடையப்போகிறேன்?
மனதின் தீய எண்ணங்கள் எல்லாம் நீங்கி, இரு கரங்களையும் சிரசின் மேல் தூக்கி உன்னை வணங்கித் துதிக்கும் நாள் என்று வருமோ?
கண்கள் அலைபாய்வதை விடுத்து, நெற்றியில் நீரோடு சிவ நாமத்தை ஜெபித்தபடி ஆனந்தம் பொங்க உன்னில் நான் கலந்திடும் காலம் என்று வரப் போகிறது?


இமம் ஹி நித்ய மேவ மு(உ)க்த மு(உ)த்தமோத்தமம் ஸ்தவம்
படன் ஸ்மரன் ப்ருவன் னரோ விஸுத்தி மேதி ஸந்ததம் |
ஹரே குரௌ ஸுபக்திம் (ஆ)ஸு யாதி னான்யதா கதிம்
விமோஹனம் ஹி தேஹினாம் ஸு ஷங்கரஸ்ய ச்சிந்தனம் || 14 ||

இங்ஙனம் மேலினும் மேலான சிவ பாசுரம் பாடப் பட்டுள்ளது.
இதை அனுதினமும் மனத் தூய்மையுடனும், ஈசன் மேல் தாளாத பக்தியுடனும் பாடித் துதிப்பவர்களுக்கு
இறைவனே குருவாக வந்தருள்வான். ஈசனை அடைய இதைவிட சிறந்த உபாயம் இல்லை.
இவ்வாறு பாடித் தியானிப்பவர்களின் அறியாமையை நீக்கி ஸ்ரீ சங்கரன் அருள் புரிவான்.


பூஜா வஸான ஸமயே தஸ வக்த்ர கீதம் யஃ
ஷம்பு பூஜன பரம் பட்ததி ப்ரதோஷே |
தஸ்ய ஸ்திராம் ரத கஜேந்த்ர துரங்க யுக்தாம்
லக்ஷ்மீம் ஸதைவ ஸு முகிம் ப்ரததாதி ஷம்புஃ || 15 ||

தினமும் பூஜை முடியும் நேரம், பத்து தலைகளைக் கொண்ட இராவணனின் இந்தப் பாடலைப் பாராயணம் செய்பவர்களுக்கும்,
பிரதோஷ காலங்களில் (சூரியன் அஸ்தமித்த பின்பு) இப்பாடலைப் பாடித் துதித்து
சிவ சிந்தனையில் நிலைத்திருப்பவர்களுக்கும், இறைவன் தேர், யானை, குதிரையோடு (சகல செல்வங்களையும்) அருளுவான்.
லட்சுமி தேவியும் தன் திரு முகத்தைக் காட்டி அருள் புரிவாள். மஹாதேவனும் கேட்ட வரங்களை அருளுவான்.

மகான் ஸ்ரீ பட்டினத்தார் தியான நிலையம் 
ஸ்ரீ பட்டினத்தார் குடில் 
6/400 வண்ணார் பேட்டை 
தாளமுத்து நகர் 
தூத்துக்குடி 2 
9944091910 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக