திங்கள், ஆகஸ்ட் 25, 2014

திருமாணிக்க வாசக பெருமான் அருளிய 

             திருவாசகத் தேனிலிருந்து ........





                  மெய்யான பக்தியே முக்திக்கு வித்து .


மெய்தான் அரும்பி விதிர்விதிர்த் துன்விரை யார்கழற்கென்
கைதான் தலைவைத்துக் கண்ணீர் ததும்பி வெதும்பியுள்ளம்
பொய்தான் தவிர்ந்துன்னைப் போற்றி சயசய போற்றியென்னுங்
கைதான் நெகிழ விடேனுடை யாயென்னைக் கண்டுகொள்ளே.

எம்பெருமானே உனது நறுமணம் கமழும் திருவடிகளை நினைக்கையிலே என்னுடைய உடல் புல்லரித்து நடு நடுங்கி என் இரு கைகளையும் தலையின் மேல் வைத்து கண்களில் கண்ணீர் பெருகி மனம் வாடி பொய்யை விட்டு இறைவா உன்னை துதித்து பாடும் ஒழுக்கத்தை கை விடேன். உடையவனே அடியேனைக் கண்டு கொள்ள வேண்டுமையா. 

கொள்ளேன் புரந்தரன் மாலயன் வாழ்வு குடிகெடினும்
நள்ளேறன் நினதடி யாரொடல் லால்நர கம்புகினும்
எள்ளேன் திருவரு ளாலே யிருக்கப் பெறின்இறைவா
உள்ளேன் பிறதெய்வம் உன்னையல் லாதெங்கள் உத்தமனே.

எம் இறைவனே இந்திரன் , திருமால் , நான்முகன் அவர்களின் வாழ்வையும் பதவியையும் ஒரு பொருட்டாக நினையேன் . என் குடி கெடுவதாக இருந்தாலும் உன்னடியாரை தவிர்த்து பிறர் நட்பை விரும்பேன் . உன் திருவருளாலே நரகத்தில் இருக்கப் பெற்றாலும் அதனை இகழேன் . உத்தமனே அடியேன் நினைப்பதற்கு உன்னை அல்லால் மற்ற தெய்வம் ஏது .

தவமே புரிந்திலன் தண்மலர் இட்டுமுட் டாதிறைஞ்சேன்
அவமே பிறந்த அருவினை யேன்உனக் கன்பருள்ளாஞ்
சிவமே பெறுந்திரு எய்திற் றிலேன்நின் திருவடிக்காம்
பவமே அருளுகண் டாய்அடி யேற்கெம் பரம்பரனே.

எம் பெருமானே அடியேன் தவம் புரிந்திடேன் , இடைவிடாது குளிர்ந்த மலர்கள் கொண்டு உம் பதத்தை அர்ச்சித்து வணங்கிடேன் , வீண் பிறப்பெடுத்த தொலையா தீவினையேன் , உனக்கு அன்பு செய்யும் மெய்யடியார் கூட்டத்தில் இருக்கும் பெரும் பேறை அடைந்திலேன் . ஆயினும் அடியேனுக்கு உன் திருவடிக்கு ஆளாகும் பிறப்பையே அருள வேண்டும் ஐயா எம் பரம்பொருளே .


                        என்றும் இறை பணியில் 

                                                திருவடி முத்துகிருஷ்ணன் 

                                 சிவமேஜெயம் !!

சிவத்தை போற்றுவோம் !! சித்தர்களை போற்றுவோம் !!
        

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக