செவ்வாய், ஜனவரி 28, 2014

       

             மாணிக்கவாசகர் காலம்

தொடர்ச்சி.....
            மாணிக்கவாசகர் இரண்டாம் வரகுணன் காலத்தில் வாழ்ந் தவர் என்று வரலாறு சுட்டுகிறது. முதல் வரகுணன் (768-811) குரு சரிதம் கொண்டாடிய பரம வைணவனாவான். அவன் பேரனான இரண்டாம் வரகுணன் (863-911) சிறந்த சிவபக்தன் என்பதைப் பாண்டியர் செப்பேடுகளும், மாணிக்கவாசகரின் திருக்கோவை யாரும், பட்டினத்து அடிகளின் பாடல்களும், பாண்டிய குலோதயா வடமொழிக் காவியமும் உறுதி செய்கின்றன. மாணிக்கவாசகர் "வரகுணனாம் தென்னவன் ஏத்தும் சிற்றம்பலம்" என்றும், "சிற்றம் பலம் புகழும் மயல் ஓங்கு இருங்களியானை வரகுணன்" என்றும் நிகழ்காலத்தில் வரகுணனைப் பற்றித் திருக்கோவையாரில் கூறுவது ஆய்வுக்கு அணி கூட்டுகிறது. திருநாவுக்கரசரும், திருஞானசம்பந்தரும், சுந்தரமூர்த்தி சுவாமிகளும் வாழ்ந்த காலத்தில் தில்லை நடராஜப்பெருமான் ஆலத்திற்குள் திருமாலுக்கு என்று திருமேனி இல்லை. தேவாரங்களில் தில்லையில் திருமால் வழிபாடு இருந்ததாகக் கூறப்படவில்லை. பிற் காலத்தில் நந்திவர்மன் காலத்தில் தில்லைத் திருச்சித்திர கூடம் எடுக்கப்பட்டது. இராஜசிம்மன் என்னும் இரண்டாம் நரசிம்மவர்மனின் மூத்த மகனாகிய மூன்றாம் மகேந்திரவர்மன் இளமையில் இறந்தான். இரண்டாம் நரசிம்மவர்மன் 728 இல் காலமானான்.அவனது இரண்டாம் மகனான பரமேஸ்வரவர்மன் சில ஆண்டுகளே ஆட்சி புரிந்து மறைந்தனன். பரமேஸ்வரவர்மனுக்கு வாரிசுகள் இல்லாததால், பல்லவரின் கிளையில் வந்த நந்திவர்மன் கி.பி. 730 இல் பன்னிரண்டாவது வயதில் முடிசூட்டப்பட்டான். இவன் 65 ஆண்டுகள் ஆட்சிபுரிந்து 795 இல் மறைந்தனன்.(See Note 9 above.) நந்திவர்மனின் காலத்தில் வாழ்ந்தவர்கள் திருமங்கை ஆழ்ழாரும், குலசேகர ஆழ்வாரும் ஆவர். வைணவர்களின், குருபரம்பரை, திருமுதியடைவு ஆகியவை களின் கூற்றுப்படி திருமங்கையாழ்வார் கி.பி. 776 இல் அவதரித்தவர். குலசேகர ஆழ்வார் கி.பி. 767 இல் அவதரித்தவர். (For the dates of Alwars - See Swamikannu Pillai, Indian Ephemeris Volume I Part I Page 489.) கும்பகோணம் அருகே உள்ள நதான் கோவில் என்னும் திருமால் தலம் நந்திவர்மனால் எடுப்பிக்கப்பட்டு நந்திபுர விண்ணகரம் என்று அழைக்கப்பட்டது. "நந்தி பணிசெய்த நகர் நந்திபுர விண்ணகரம்" என்று திருமங்கை ஆழ்வாரும் மங்களா சாசனம் செய்து அருளினர். தில்லைத் திருச்சித்திர கூடத்தில் பல்லவ மன்னன் திருமாலை எழுந்தருள்வித்தான். "பைம்பொன்னும் முத்தும் மணியும் கொணர்ந்து புடைமன்னவன் பல்லவர் கோன் பணிந்த செம்பொன் மணி மாடங்கள் சூழ்ந்த தில்லைத் திருச் சித்திர கூடம்" என்று திருமங்கையாழ்வாரால் அருளப்பட்டது. எனவே தில்லைத் திருச்சித்திர கூடத்தில் திருமாலை எழுந்தருள்வித்தவன் நந்திவர்மனே (730-795) என்னும் செய்தி உறுதிப்படுகிறது. "தில்லை நகர்த் திருச்சித்திர கூடந் தன்னுள் அந்தணர்கள் ஒரு மூவாயிரவர் ஏத்த ....." என்று குலசேகர ஆழ்வாரும் தில்லைத் திருமால் மீது பாடியிருப்பதும் கணிக்கத்தக்கது. எட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தில்லையில் திருமாலின் திருமேனி வைக்கப்பட்டது என்னும் இச்செய்தி மிக முக்கியமானது. திருமங்கையாழ்வாருக்கும், குலசேகர ஆழ்வாருக்கும் காலத் தால் பிற்பட்டவர் மாணிக்கவாசகர். தில்லையில் திருமாலின் திருக் கோலத்தைத் திருக்கோவையாரில் மாணிக்கவாசகர் குறிப்பதும் நம் ஆய்வுக்குத் துணை நிற்கும். "வரங்கிடந்தான் தில்லையம்பல முன்றிலில் அம் மாயவனே" என்பது மாணிக்கவாசகரின் அருள் வாக்கு.
                      திருச்சிற்றம்பலம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக