விவேகானந்தரின் பொன் மொழிகள்
செல்வம் படைத்தவன் செல்வம் இல்லாதவன் மேல் செலுத்தும் ஆதிக்கத்தைத் தவிர்க்க வேண்டும். அறிவுடையவன் அறிவு குறைந்தவன் மேல் செலுத்தும் ஆதிக்கத்தைத் தவிர்க்க வேண்டும்.
முப்பத்து முக்கோடிப் புராண தெய்வங்களிடத்தும், மேலும் அவ்வப்போது நம்மிடையே அன்னிய நாட்டவர் புகுத்தியிருக்கும் இதர தெய்வங்களிடத்தும், நம்பிக்கை இருந்தாலும் கூட, ஒருவனிடத்தில் தன்னம்பிக்கை இல்லாவிட்டால் அவனுக்குக் கதி மோட்சமில்லை.
பாவம் என்ற ஒன்று உண்டென்றால், அது நான் பலவீனமானவன், மற்றவர்கள் பலவீனமானவர்கள் என்று சொல்வது ஒன்றுதான்.
சுதந்திரமானவனாக இரு. எவரிடமிருந்தும் எதையும் எதிர்பார்க்காதே. உனது கடந்த கால வாழ்க்கையை நீ பின்னோக்கித் திரும்பிப் பார்ப்பாயானால், நீ வீணாக எப்போதும் மற்றவர்களிடமிருந்து உதவியைப் பெற முயற்சி செய்ததையும் அப்படி எதுவும் வராமற் போனதையும் தான் காண்பாய். வந்த உதவிகள் எல்லாம் உனக்குள் இருந்து வந்ததாக தான் இருக்கும்.
நம்பிக்கை! நம்பிக்கை! நம்மிடத்தில் நம்பிக்கை! கடவுளிடத்தில் நம்பிக்கை! இதுவே மகிமை பெறுவதன் ரகசியமாகும்.
நீ எதை நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய். நீ உன்னைப் பலவீனன் என்று நினைத்தால் பலவீனனாகவே ஆகிவிடுகிறாய்.
இவனை நம்பு அல்லது அவனை நம்பு என்று மற்றவர்கள் சொல்கிறார்கள். ஆனால், நான் சொல்கிறேன். முதலில் உன்னிடத்திலேயே நீ நம்பிக்கை வை. அதுதான் வாழ்க்கைக்கு வழி.
அடக்கப்படாமல் சரியான வழியில் செலுத்தப்படாத மனம், நம்மை மேலும் மேலும் என்றென்றைக்கும் கீழே இழுத்துச் சென்றுவிடும். சரியான வழியில் செல்கின்ற மனம் என்றென்றைக்கும் காத்து ரட்சிக்கும்.
மக்களுக்குச் செய்யும் தொண்டே மகேசனுக்குச் செய்யும் தொண்டு.
நாத்திகனுக்கு தர்மசிந்தனை இருக்கலாம். ஆனால், மதகோட்பாடு இருக்க இயலாது. மதத்தில் நம்பிக்கை வைத்தவனுக்கு தர்மசிந்தை அவசியம் இருக்க வேண்டும்.
குருவாகப் பிறந்த ஆன்மாக்களைத் தவிர, மற்றவர்களும் குருவாவதற்கு விரும்பி அழிந்தும் போகின்றனர்.
நாம் செல்வச் செழிப்போடு வாழ்ந்தாலும், இறந்துவிட்டபின் இவை நம்முடன் வருமா? நாம் அழியும் செல்வத்தைச் சேர்க்க நினைப்பதைவிட அழியாத ஒன்றைப் பெறுவதுதான் ஆண்மைக்கு அழகு.
செல்வத்தைக் கொண்டு ஒரு மனிதனை மதிப்பவனைவிட, அரசனையும், ஆண்டியையும் ஒன்றாக நினைத்துவாழும் துறவிகளின் வாழ்வே சிறந்தது.
மரணத்தை வென்று, அதற்கு மேல் உள்ள மெய்ப்பொருள் என்ன என்பதனைத் தெரிந்து கொள்ளத் துடிக்கும் துறவற வாழ்க்கையே மேல்.
இந்த உலகில் மிருகங்களை மட்டுமின்றி மிருகத்தனம் கொண்ட எதையும், பயத்தை உண்டுபண்ணுகிற எதையும் எதிர்த்து நிற்க வேண்டும். அவற்றுடன் போராட வேண்டும். பயந்து ஓடலாகாது.
மக்கள் எவராயினும் சகிப்புத் தன்மையோடு, பிறருடைய சமயங்களில் பரிவு காட்டவேண்டும்.
மதங்கள் எல்லாமே உண்மையானவை தாம்! ஆனால், ஒரு மதத்திலிருந்து வேறொரு மதத்திற்கு மக்களை மாறச்செய்வது பொருளற்றது. ஒவ்வொருவருக்கும் தம் தம் மதங்களில் முன்னேற்றம் அடையவேண்டும் என்பதே குறிக்கோளாக இருக்க வேண்டும்
இளைஞர்களே! பெருஞ்செயல்களை செய்து முடிப்பதில் எப்போதும் முன்னேறிச் செல்லுங்கள். ஏழைகளிடமும், சமுதாயத்தில் ஒடுக்கப்பட்டவர்களிடமும் இரக்கம் காட்டுங்கள். நமக்கு மரணமே வாய்த்தாலும்கூட அவர்களுக்கு இரக்கம் காட்டுவது நமது லட்சியம் ஆகும்.
என்னுடைய லட்சியத்தை உண்மையில் சில சொற்களில் சொல்லி முடித்துவிடலாம். அதாவது, மக்களுக்கு அவர்களுடைய தெய்வீகத் தன்மையை எடுத்துச் சொல்வதும், வாழ்க்கையின் ஒவ்வொரு இயக்கத்திலும் அதை எப்படி வெளிப்படுத்திக் காட்டுவது என்பதை எடுத்துச் சொல்வதும்தான் அது.
எழுந்திருங்கள். விழித்திருங்கள். நீங்களும் விழித்திருங்கள், மற்றவர்களையும் விழிக்கச் செய்யுங்கள். உங்களுடைய இந்த உலக வாழ்க்கை முடிவடைவதற்கு முன்னால், மனிதப்பிறவியினால் பெறுவதற்கரிய பெரிய நன்மையை அடையுங்கள்.
லட்சியத்தை அடையும் வரையில் நில்லாமல் முன்னேறிச் செல்லுங்கள்.உயர்ந்த லட்சியம் கொண்ட மனிதன் ஒருவன் ஆயிரம் தவறுகள் செய்தால், லட்சியம் ஒன்றுமில்லாமல் வாழ்பவன் ஐம்பதாயிரம் தவறுகள் செய்வான் என்று நான் உறுதியாக சொல்வேன்.
லட்சியத்தை அடையும் வரையில் நில்லாமல் முன்னேறிச் செல்லுங்கள்.உயர்ந்த லட்சியம் கொண்ட மனிதன் ஒருவன் ஆயிரம் தவறுகள் செய்தால், லட்சியம் ஒன்றுமில்லாமல் வாழ்பவன் ஐம்பதாயிரம் தவறுகள் செய்வான் என்று நான் உறுதியாக சொல்வேன்.
மக்கள் உன்னை புகழ்ந்தாலும் சரி, இகழ்ந்தாலும் சரி, கடவுள் உனக்கு அருள் புரியட்டும், அல்லது புரியாமல் போகட்டும். உன் உடல் இன்றைக்கே வீழ்ந்து போகட்டும். ஆனால் நீ, உண்மை என்னும் பாதையிலிருந்து மட்டும் அணுவளவேனும் பிறழ்ந்து செல்லாமல் இருப்பதில் கவனமாக இரு. மனிதன் எந்த அளவுக்கு உயர்ந்தவன் ஆகிறானோ, அந்த அளவுக்கு அவன் கடுமையான சோதனைகளை கடந்தாக வேண்டும் .
எழுங்கள், விழியுங்கள் என்ற அச்சமற்ற செய்தியை அறைகூவிச் சொல்வதற்காகவே நான் பிறந்திருக்கிறேன். இந்தப் பணியில் நீங்கள் என்னுடைய உதவியாளர்களாக இருங்கள்.
தொடர்ந்து மனதில் புனிதமான எண்ணங்களையே சிந்தியுங்கள். யாருக்காவது உங்களால் சிறு நன்மையாவது செய்ய முடியுமா என்று எண்ணி உங்கள் கடமைகளைச் செய்யுங்கள்.
பிரதிபலன் எதையும் கருதாமல் நாம் உலகிற்குச் செலுத்தும் ஒவ்வொரு நல்லெண்ணமும் நமக்குள் சேகரித்து வைக்கப்படுகிறது. இந்த நல்லெண்ணமே பாவ புண்ணிய பலன்களில் இருந்து நம்மை விடுவிக்கிறது.
சூழ்நிலைக்கு ஏற்ப வாழ்க்கையை அனுசரித்து அமைத்துக் கொள்வது தான் வெற்றிகரமான வாழ்க்கைக்குரிய முழு ரகசியம். இந்த உண்மையைப் புரிந்து கொண்டவர்கள் வாழ்வில் மலர்ச்சி உண்டாகும்.
சமநிலையில் இருந்து பிறழாதவர்கள், நெஞ்சில் சாந்தகுணம் கொண்டவர்கள், இதயத்தில் இரக்கமும் அமைதியும் உடையவர்கள், பிறர் சொல்வதை ஆராய்ந்து ஏற்பவர்கள் ஆகியோர் தங்களுக்கு தாங்களே நன்மையைத் தேடிக்கொள்கிறார்கள்.
வீர இளைஞர்களே! முன்னேறிச் செல்லுங்கள். கட்டுண்டு கிடக்கச் செய்யும் தடைகளை வெட்டி வீழ்த்தவும், எளியவர்களின் துயரச்சுமையை குறைக்கவும், இருண்ட உள்ளங்களில் ஒளியேற்றவும் முன்னேறிச் செல்லுங்கள்.
- விவேகானந்தர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக